இலங்கை: அரசாங்கத்தின் மே தினக் கூட்டங்கள் பொய்களையும் சிக்கன நடவடிக்கைகளையும் சர்வாதிகார ஆட்சியையும் ஊக்குவிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) தனது 18 மாத கால ஆட்சியால் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெருகிவரும் கோபம் மற்றும் விரக்திக்கு மத்தியில், கடந்த வாரம் நடத்திய மே தின கூட்டங்களில் தங்களை மக்களின் பாதுகாவலர்கள் என்று பொய்யாகக் காட்டிக்கொண்டது.

கடந்த ஆண்டு, மக்கள் மத்தியில் இன்னும் நிலவி வந்த மாயைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்கில், ஜே.வி.பி./தே.ம.ச. தனது பிரதான மே தின கூட்டத்தை மத்திய கொழும்பின் காலிமுகத் திடலில் நடத்தியது. இருப்பினும், இந்த ஆண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தியதால் தனக்கு எதிராக பெருகிவரும் மக்கள் அதிருப்தியை மூடிமறைக்கும் முயற்சியில், அது தனது கூட்டங்களை பரவலாக்கி, மாவட்ட அளவில் 21 கூட்டங்களை நடத்தியது.

கொழும்பு மே தின கூட்டத்தில் திசாநாயக உரையாற்றிய போது [Photo: Facebook/Anura Kumara Dissanayake]

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, கொழும்புக்கு அருகிலுள்ள மஹரகமவிலும், தீவின் பிரதான பெருந்தோட்டப் பகுதியான நுவரெலியா நகரிலும் கூட்டங்களில் உரையாற்றினார். அமெரிக்க மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில், ஈரான் மீது போர் தொடுத்து ட்ரம்ப் நிர்வாகத்தால் மேலும் மோசமாக்கப்பட்டுள்ள பூகோள முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி குறித்து அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

மாறாக, திசாநாயக பின்வருமாறு பெருமிதம் கொண்டார்: “நாங்கள் இரண்டு வகையான முடிவுகளை எடுத்தோம்: மக்களுக்கான முடிவுகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சலுகைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட முடிவுகள்.” தனது நிர்வாகம் “ஒரு தொழிலாளர் அரசாங்கம்” என்று அவர் மீண்டும் மீண்டும் அறிவித்ததுடன் “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் தொழிலாள வர்க்கத்தின் நலனுக்காகவே எடுக்கப்பட்டன” என்றும் கூறினார்.

அவரது பொய் கூற்றுகளால் மிகச் சிலரே ஏமாறக்கூடும். நாடு 2022 ஆம் ஆண்டு கடன் தவணைத் தவறியைதைத் தொடர்ந்து பெறப்பட்ட 3 பில்லியன் டொலர் அவசரகாலக் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளைச் செயல்படுத்துவதை அதற்கு நிரூபித்துக்காட்ட துடிக்கும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கே திசாநாயக தலைமை தாங்குகிறார். அது, அதிக வரிகளை விதிப்பது, விலை மானியங்களைக் குறைப்பது மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் முழுமையான மறுசீரமைப்பைத் துரிதப்படுத்துவது உட்பட கடுமையான தாக்குதல்களைத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது முன்னெடுத்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கத் தலைமையிலான குற்றவியல் போர் தொடங்கியதிலிருந்து, மக்கள் மீது புதிய சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. பூகோள எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், அரசாங்கம் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலைகளை உயர்த்தியுள்ளது, இது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கிறது. ஜே.வி.பி./தே.ம.ச. செய்த அனைத்தும், பெருநிறுவன உயரடுக்கினதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்கும், உழைக்கும் மக்களின் நேரடிச் செலவில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்குமானவை ஆகும்.

அரசாங்கம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவத்தை அன்றி, ஊழலையே மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. திசாநாயக்கவின் உரை, குறிப்பாக முன்னாள் அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு, ஊழல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சாரங்களில் கவனம் செலுத்தியது.

'ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் மற்றும் திருடர்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட ஆண்டாக 2026 இலங்கையின் வரலாற்றில் பதியப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,' என்று அவர் அறிவித்தார். 'இந்த மே மாதத்தில் மட்டும் பத்து வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. நேற்று, தீர்ப்புக்கான ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு மே மாதத்தில் வழங்கப்படும்,” என்று அவர் அறிவித்தமை, நீதிமன்றங்களில் அரசாங்கம் தலையிடுகின்றது என்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணமாகியது.

உண்மையில், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ ஆட்சியில் ஊழல் என்பது ஒரு உள்ளார்ந்த பிரச்சனையாகும். கடுமையாக மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியை 'தூய்மையான அரசாங்கம்' மூலம் தீர்க்க முடியும் என்ற மாயையை ஊக்குவிப்பதற்காக ஜே.வி.பி. இந்தப் பிரச்சனையைச் சுரண்டிக்கொள்ளும் அதேநேரம், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களின் உண்மையான தோற்றுவாய் இலாப முறைமையே என்பதை மூடிமறைக்கின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட வீட்டுவசதி, கல்வி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை கோடிட்டுக் காட்டிய அவர், ​​அரசாங்கத்தை 'பல தசாப்தங்களுக்கு அசைக்க முடியாது' என்று அச்சுறுத்தும் வகையில் அறிவித்தார். இந்தக் கருத்து வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்குகளைச் சுட்டிக்காட்டுகிறது. பெருகிவரும் சமூக எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள ஜே.வி.பி./தே.ம.ச. தலைமை, தனது ஆட்சியை நிரந்தரமானதாகவும், கேள்விக்குட்படுத்த முடியாததாகவும் அதிகளவில் தூக்கிப்பிடிக்கின்றது.

களுத்துறை மாவட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவும், நாடு 'மீண்டும் கட்டமைக்கப்பட்டு' அதன் நீண்டகால இலக்குகள் அடையப்படும் வரை ஜே.வி.பி./தே.ம.ச. தொடர்ந்து ஆட்சி செய்யும் என்று அறிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களையும், எதிர்க்கட்சிகளின் மிதமான விமர்சனங்களையும் சுட்டிக்காட்டிய சில்வா, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விட, தொழிலாளர் வர்க்கத்தையே நேரடியாகக் குறிவைத்து ஒரு மறைமுகமான அச்சுறுத்தலை விடுத்தார். 'இந்த அரசாங்கத்திற்குப் பிறகு வேறு அரசாங்கங்கள் வராது என்பதை மட்டுமே நாங்கள் அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம்.' கடந்த ஆண்டு மே தினக் கூட்டத்திலும் அவர் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோதத் தன்மை அதிகரித்து வருவதற்கான ஓர் எச்சரிக்கையாகும். ஜே.வி.பி.க்கு அரசியல் வன்முறை மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் நீண்டகால வரலாறு உண்டு. 1980களின் பிற்பகுதியில், தீவின் தமிழ் உயரடுக்கிற்கு வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், தாய்நாட்டைப் பாதுகாக்கும் பெயரில், தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் எதிரிகளைப் படுகொலை செய்வதற்காகத் தனது துப்பாக்கிதாரிகளை அனுப்பி, அது ஒரு பாசிசப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

2022இல் கடன் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில், 2024இல் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தது. இலட்சக்கணக்கான மக்களின் மாபெரும் எழுச்சி, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறவும் பதவி விலகவும் கட்டாயப்படுத்தியது. அவருக்குப் பின் வந்த ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதன் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த முயன்றபோது, பெரும் எதிர்ப்பைச் சந்தித்தார்.

முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு தீவிர முயற்சியாக, ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள், அதுவரை ஆட்சிக்கு வந்திராத ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வர ஆதரவளித்தன. ஜே.வி.பி., அனைத்து பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகள் மீதான வெகுஜன எதிர்ப்பையும், தனது குட்டி முதலாளித்துவ தீவிரவாதப் பின்னணியையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு 2024 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் நிபந்தனைகளை மறுபேச்சுவார்த்தை செய்வதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அது உடனடியாகக் கைவிட்டதுடன், தனது சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டது. கடந்த மாதம், ஈரான் மீதான போர் மற்றும் உலகளாவிய நெருக்கடியால் ஏற்பட்ட புதிய சுமைகளுடன், மீதமுள்ள சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

2024 அக்டோபரில், தே.ம.ச. சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ் வேலைநிறுத்தங்கள் 'கடந்த கால விஷயமாகிவிடும்' என்று அறிவித்து, தொழிலாளர்கள் தங்கள் குறைகளை அரசாங்கத்துடன் 'கலந்துரையாடினால்' மட்டும் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை அதிகளவில் கையாண்டு வருகிறது.

பிரதான துறைகள் முழுவதும் வேலைநிறுத்தங்களைக் குற்றமாக்குவதற்காக அரசாங்கம் அத்தியாவசிய சேவைகள் சட்டங்களைப் பயன்படுத்தியுள்ள அதேநேரம், அரசின் அடக்குமுறை அதிகாரங்களைப் பெருமளவில் விரிவுபடுத்தும் வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் (PSTA) அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலாளர்களின் தொழிற்துறை போராட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, 15 சேவைகளை உள்ளடக்கிய அத்தியாவசிய சேவைகள் உத்தரவுகளையும் அது பிறப்பித்தது, அவை மார்ச் மாதம் வரை தொடர்ந்தன.

தித்வா புயலைத் தொடர்ந்து 2025 டிசம்பர் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட கடுமையான அவசரகால விதிமுறைகளை நீட்டிப்பதற்கு, மே 7 அன்று அரசாங்கம் பாராளுமன்ற ஒப்புதலைப் பெற்றது. அரசாங்கம் தொடர்ச்சியாக அவசரகால சட்டத்தை நீட்டிக்கின்றமை, தொழிலாளர்கள் சகிக்க முடியாத நிலைமைகளை எதிர்கொள்வதால், 2022 கிளர்ச்சி மீண்டும் நிகழுமோ என்பதையிட்டு அதன் ஆழ்ந்த அச்சத்தை வெளிப்படுத்துகின்றன.

2022 ஐக் குறிப்பிட்டு, ஈரான் மீதான அமெரிக்கப் போரினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து மார்ச் 11 அன்று திசாநாயக்க பாராளுமன்றத்தை எச்சரித்தார்: “ஒரு பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, எதுவும் அப்படியே இருப்பதில்லை; அனைத்தும் ஸ்தம்பித்துவிடுகின்றன. எனவே, ஒரு பொருளாதாரத்தின் வீழ்ச்சி சமூகக் கட்டமைப்பிற்கு எவ்வளவு அழிவுகரமானதாக இருக்கும் என்பது குறித்த கசப்பான சமீபத்திய அனுபவம் நம் அனைவருக்கும் உண்டு,” என்றார்.

தொழிலாளர் வர்க்கம் தனது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைத் தனது சொந்த வழிமுறைகளின் அடிப்படையில் பாதுகாக்கத் தயாராக வேண்டும். தொழிலாளர்கள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் அரசியல் ரீதியாக விலகி, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்த, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை அடிப்படையாக் கொண்டு தங்களின் சொந்த சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மே தினப் பேரணியைக் காணுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading