இலங்கை அரசாங்கம் கொடூரமான அவசரகால நிலையை நீட்டிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

திசாநாயக 2024 செப்டம்பரில் வணிக மன்றத்தில் உரையாற்றுகிறார் [Photo: NPP Facebook]

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவால், கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, முதலில் அறிவிக்கப்பட்ட அடக்குமுறை அவசரகால நிலையை மேலுமொரு மாதாத்துக்கு நீட்டிப்பதற்கு மே 7 அன்று இலங்கை பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆறாவது நீட்டிப்பாகும்.

அதே நாளில், அரச துறையின் பிரதான பிரிவுகளை உள்ளடக்கிய அத்தியாவசிய பொதுச் சேவைகள் (EPS) விதிமுறைகளுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போர்க்குணம் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்காக, திசாநாயகவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் 2025 செப்டெம்பரில் அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகள் முதன்முதலில் விதிக்கப்பட்டன. டிட்வா புயல் நாட்டைத் தாக்கிய பின்னர், மேலும் பல சேவைகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்த இரண்டு அறிவிப்புகளும் இலங்கை ஜனாதிபதிக்கு பரந்த சர்வாதிகார அதிகாரங்களைவழங்குகின்றன. பொதுப் மக்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள அவசரநிலைப் பிரகடனம், இருக்கின்ற சட்டங்களை மீறிச் செயல்படும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. ஜனாதிபதி திசாநாயகவால் அவசரகால நிலை கட்டளைகள் மூலம் இராணுவத்தையும் பொலிசையும் விசேட அதிகாரங்களுடன் நிலைநிறுத்தி, கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, சாதாரண நீதித்துறை நடைமுறைகள் இன்றி தனிநபர்களைக் கைது செய்ய அனுமதி கொடுத்து, தணிக்கையை அமுல்படுத்தி மற்றும் வேலைநிறுத்தங்களைத் தடை செய்வதன் ஊடாக ஆட்சிசெய்ய முடியும்.

அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ், பொதுச் சேவைகளில் உள்ள தொழிலாளர்கள் எந்தவொரு தொழில்துறை போராட்ட நடவடிக்கையிலும் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களோ அல்லது அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் அல்லது ஊடகங்கள் உட்பட எந்தவொரு அமைப்போ அத்தகைய நடவடிக்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்யவோ, 'தூண்டிவிடவோ' அல்லது 'உற்சாகமூட்டவோ' முடியாது. தண்டனை நடவடிக்கைகளில் கடுமையான சிறைத் தண்டனைகளும் அபராதங்களும் அடங்கும்.

அவசரகால நிலையின் சமீபத்திய நீட்டிப்பை பாராளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைத்த பிரதமர் ஹரினி அமரசூரிய, “பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் விநியோகங்களில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டும், அரசாங்கம் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்…” என்று அறிவித்தார்.

அவசரகாலச் சட்டங்கள் “அரசியல் அடக்குமுறைக்காக அல்ல, மாறாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவே” என்று அமரசூரிய கூறுவது முற்றிலும் பாசாங்குத்தனமானது. அடக்குமுறை சார்ந்த அவசரநிலைச் சட்டங்கள் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதற்காக, அவை அரசியல் அடக்குமுறைக்குப் பயன்படுத்தப்படாது என்று அர்த்தமல்ல.

அல்லது, அவசரகால அதிகாரங்களின் இந்த நீட்டிப்புக்கும் மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. டிட்வா புயல் தாக்கி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், பலர் இன்னும் தற்காலிக முகாம்களிலோ அல்லது உறவினர்களுடனோ வசித்து வருகின்றனர். பேரிடரால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

டிட்வா புயலால் சேதமடைந்த வீடு

இந்த வாரம், இன்னும் உதவி பெறாத பலருக்கு இழப்பீட்டை எவ்வாறு விநியோகிப்பது அல்லது குறைப்பது என்பது குறித்து அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக, திசாநாயக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தனிப்பட்ட முறையில் கலந்துகொண்டு வருகிறார்.

வேகமாக ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளிடையே வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு மத்தியிலுமே இந்தக் கொடூரமான விதிமுறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

'மத்திய கிழக்கில் நிலவும் மோதல் விநியோகங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்' குறித்த அமரசூரியவின் கருத்து, ஜனாதிபதியின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கான பிரதான காரணங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. 'மோதல்' என்பது ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போராக இருந்தாலும், திசாநாயகவின் அரசாங்கத்தால் அதை அதன் உண்மையான பெயரால் அழைக்க முடியாது. ஏனெனில் அது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேலுடன் முழுமையாக அணிசேர்ந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு மேலாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் பொருளாதாரச் சுமையை அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மீது சுமத்தத் தொடங்கியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, திசாநாயக அரசாங்கம் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களை முறையே 40, 31 மற்றும் 32 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. உரங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. வாழ்க்கைச் செலவு சுட்டெண் மார்ச் மாதத்தில் 2.2 சதவிகிதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவிகிதமாக உயர்ந்தது.

வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு முன் உரையாற்றிய திசாநாயக, போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலைகள் ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இந்தச் சுமையை அரசாங்கத்தால் தொடர்ந்து தாங்க முடியாது என்றும் எச்சரித்தார். இது, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.

ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும், ஒட்டுமொத்த இலங்கை ஆளும் வர்க்கமும், 2022இல் அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறவும் பதவி விலகவும் கட்டாயப்படுத்திய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் நான்கு மாத கால வெகுஜன இயக்கத்தை நன்கு உணர்ந்துள்ளன.

எந்தவொரு வெகுஜன இயக்கமும் வெடிப்பதைத் தடுப்பதில் உறுதியாக இருந்த இலங்கையின் பாராளுமன்ற எதிர்க்கட்சிகள், டிட்வா புயல் நாட்டைத் தாக்கியபோது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து, பரந்த அடக்குமுறை அதிகாரங்களுடன் தன்னைத் தொடர்ந்து ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்காக திசாநாயகவிற்கு ஆதரவளிக்கின்றன.

மே 7 அன்று, 42 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) உட்பட எதிர்க்கட்சிகள், அவசரகால நிலைக்கு எதிராக வாக்களிப்பதைத் வஞ்சத்தனமாகப் புறக்கணித்ததன் மூலம், அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தன. கொழும்பால் திணிக்கப்பட்ட அவசரகால மற்றும் 'பயங்கரவாத எதிர்ப்பு' சட்டங்களின் கீழ் பல தசாப்தங்களாக அடக்குமுறையை எதிர்கொண்ட தமிழ் மக்களின் சீற்றத்திற்கு அஞ்சி, தமிழ் கட்சிகளின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த நீட்டிப்புக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், அவர்கள் அனைவரும் அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகளின் நீட்டிப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மீதான அரசாங்கத்தின் சிக்கனத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் கொடுங்கோல் சட்டங்களான அவசரகால நிலை நீட்டிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் விதிமுறைகள் குறித்து இலங்கையின் தொழிற்சங்க அமைப்பு முற்றிலும் மௌனம் காத்து வருகிறது.

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு ஒன்றுபட்ட போராட்டத்தையும் தடுப்பதில் தொழிற்சங்கங்கள் பல தசாப்தங்களாக ஒரு துரோகப் பாத்திரத்தை வகித்து வருகின்றன. தே.ம.ச. அரசாங்கத்தின் கீழ், தொழிலாளர் எதிர்ப்பை நசுக்குவதற்கு அவை விரைவாகச் செயல்பட்டுள்ளன. முன்னர் ரயில், தபால், மின்சார சபை மற்றும் சுகாதாரத் துறை தொழிலாளர்களின் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்த தொழிற்சங்கங்கள், விட்டுக்கொடுப்புகள் நிறைந்த பேச்சுவார்த்தைகளை 'வெற்றிகளாக' சித்தரித்து, அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட முடக்கியுள்ளன. நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக அச்சுறுத்திய தபால் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களால் பேச்சுவார்த்தைகளுக்குள் இழுக்கப்பட்டனர். இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சுருக்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கைக்கான அழைப்புகளை ஒடுக்கப்பட்டன.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், இலங்கை மின்சார சபை இணைந்த தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர்கள் திசாநாயகவைச் சந்தித்து, எந்தவொரு தொழிற்துறை போராட்ட நடவடிக்கையையும் தொடங்கப் போவதில்லை என்று உறுதியளித்தனர். கூட்டணியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் 'மத்திய கிழக்கு மோதலால் எழும் சவால்களையும், அவற்றுக்கு அரசாங்கத்தின் பதிலையும் புரிந்துகொண்டதாக' தெரிவித்ததாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் 'தடை செய்ய மாட்டோம்' என்றும் தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த பிரபாத் ஊடகங்களிடம் கூறினார்.

அரசியல் எதிர்ப்பையும் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்குவதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இலங்கைக்கு நீண்ட வரலாறு உண்டு. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாதப் போரின்போது பேணப்பட்டு வந்த அவசரகால விதிமுறைகளின் கீழ், எதேச்சதிகாரமான கைதுகள், தணிக்கை, இராணுவ அடக்குமுறை மற்றும் ஜனநாயக உரிமைகளின் பரவலான மீறல்களுக்கு வழிவகுக்கப்பட்டன.

கடந்த 18 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் திசாநாயக அரசாங்கம், தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்காக இராணுவத்தையும் பொலிசையும் அணிதிரட்ட அத்தியாவசிய சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் உள்ள அதன் சகாக்களைப் போலவே, திசாநாயக்க நிர்வாகமும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் தற்போது தீவிரமடைந்துள்ள, ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடிக்கு, தனது அடக்குமுறை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் பிரதிபலித்து வருகிறது.

தங்கள் வாழ்க்கைத்தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்க, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் விலகி முற்றிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் உருவாக்க வேண்டும்.

அவசரகால ஆட்சி, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ ஆட்சியை வீழ்த்துவதன் மூலமும், பெருவணிகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் இலாபங்களுக்காக அல்லாமல் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைப்பதன் மூலமும், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

Loading