முன்னோக்கு

ராவுல் காஸ்ட்ரோ மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டும் கியூபாவிற்கு எதிரான சி.ஐ.ஏ பயங்கரவாதத்தின் வரலாற்றுப் பதிவும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

1961 இல் கியூபாவின் பன்றிகள் வளைகுடாவில் (Bay of Pigs) சிறைபிடிக்கப்பட்ட பிரிகேட் 2506 படைப்பிரிவின் உறுப்பினர்கள்

அமெரிக்கா கியூபாவில் தனது இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்து, 1902-ல் கியூபா குடியரசு முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 124 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், மே மாதம் 20ம் திகதியன்று, ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவுக்கு எதிராக இதுவரை இல்லாதளவில் மிகவும் அப்பட்டமான அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

கியூபாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு மியாமியை தளமாகக் கொண்டு இயங்கும் சகோதரர்கள் மீட்பு குழு என்பதன் இரண்டு விமானங்கள் 1996 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத் தொடர்பில், 94 வயதான ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக, கொலை மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக பொதுப் பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ராவுல் காஸ்ட்ரோ, இதற்கு முன்பு கியூபாவின் ஜனாதிபதியாகவும் அதன் ஆளும் கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1959-ல் ஆட்சிக்கு வந்த, அவரது சகோதரர் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கொரில்லா இராணுவத்தின் தளபதிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூப மக்களுக்கு நேரடியாக உரையாற்றும் வகையில், ஸ்பானிய மொழியில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கியூபாவின் ஆட்சி மாற்றத்தைக் கோரியதோடு, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் வாஷிங்டன் அரசு பின்பற்றி வரும் மறு-காலனியாதிக்கக் கொள்கையை ஆதரித்துப் பேசினார்.

கடந்த புதன்கிழமை மியாமியில் இந்தக் குற்றச்சாட்டு வெளியிடப்பட்ட நிகழ்வானது, ஒரு சட்ட நடவடிக்கையை போலன்றி, டொனால்ட் ட்ரம்பை உற்சாகப்படுத்தவும், கியூபாவிற்கு எதிரான நேரடி அமெரிக்க இராணுவத் தலையீட்டின் சாத்தியக்கூற்றைக் கைதட்டி வரவேற்கவும் வாஷிங்டனின் எதிர்-புரட்சிகர முகவர்கள் கூடியிருந்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைப் போலவே காட்சியளித்தது.

ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பது, பத்து மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு வறிய தேசத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு அருவருப்பான நயவஞ்சகச் செயலும், ஏகாதிபத்திய பிரச்சாரமுமாகும்.

இந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று தசாப்த காலத்திற்கு முந்தைய சம்பவம், பிப்ரவரி 24, 1996 அன்று புளோரிடா நீரிணைப் பகுதியில் சகோதரர்கள் மீட்பு அமைப்பின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. பில் கிளிண்டன் காலம் முதற்கொண்டு அதற்குப் பின் வந்த ஒவ்வொரு அமெரிக்க அரசாங்கத்தினாலும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட முறையில் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. கிளிண்டன் நிர்வாகம், குடியரசுக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் என அனைத்தும், சிவில் விமானங்களுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சர்வதேசச் சட்டங்களை மேற்கோள் காட்டி, இச்சம்பவத்தை “இரக்கமற்ற கொலை” என்று கண்டித்தன. தப்பிப்பிழைத்த விமானத்தின் விமானியான ஜோஸ் பசல்டோவும் மற்றவர்களும் பணம் பெற்ற அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் அல்ல என்று சி.ஐ.ஏ வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இதில் எதுவுமே உண்மையில்லை. அமெரிக்காவிலுள்ள கியூபா தூதரகம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சகோதரர்கள் மீட்பு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பிராந்திய எல்லை மீறல்களை கியூபா அதிகாரப்பூர்வமாகக் கண்டித்திருந்ததை நினைவு கூர்ந்தது—எனினும் இந்த எதிர்ப்புகளை வாஷிங்டன் நிர்வாகம் திட்டமிட்டுப் புறக்கணித்திருந்தது.

சகோதரர்கள் மீட்பு அமைப்பானது, ஒரு மனிதநேய அமைப்பு என்பதற்கு முற்றிலும் மாறாக, கியூபா எல்லைக்குள் மீண்டும் மீண்டும் விரோதப் போக்குடன் கூடிய வான்வழிப் பறப்புகளை மேற்கொள்வதற்கே தனது விமானங்களைப் பயன்படுத்தி வந்தது. சில சமயங்களில் கியூபாவின் தலைநகர் ஹவானா மீது மிகத் தாழ்வாகப் பறந்து, அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுமாறு கியூப மக்களுக்கு அழைப்பு விடுக்கின்ற துண்டுப் பிரசுரங்களையும் அது வான்வழியாக வீசியது. பன்றிகள் விரிகுடாவில், சி.ஐ.ஏ-வால் ஏற்பாடு செய்யப்பட்ட படையெடுப்பில் பங்கேற்ற முன்னாள் சிப்பாயான பசல்டோ, பனாமாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாத நுட்பங்களில் பயிற்சி பெற்றதாகத் தற்பெருமை பேசியிருந்தார். ஒரு படகிலிருந்து ஹவானா ஹோட்டல் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் பங்கேற்ற அவர், பின்னர் நிக்கரகுவாவில் உள்ள கொன்ட்ரா பயங்கரவாத இயக்கத்திற்கு சி.ஐ.ஏ-வின் வழிகாட்டுதலின்படி ஆதரவையும் வழங்கினார்.

அவரது குழுவின் இத்தகைய நடவடிக்கைகள், கியூபா மீது அமெரிக்க இராணுவத் தாக்குதலைத் தூண்டுவதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ஆத்திரமூட்டல் நடவடிக்கையாக இருந்தன. இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது அமெரிக்காவின் ஆதரவுடன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் தாக்குதலுக்கு எதிரான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும்.

கிளிண்டன் நிர்வாகம் இதற்குப் பதிலடியாக, இராணுவ ரீதியான தாக்குதலை நடத்தவில்லை என்றபோதிலும், அது ஹெல்ம்ஸ்-பர்ட்டன் (Helms-Burton) மசோதாவிற்கு எதிராகத் தான் கொண்டிருந்த எதிர்ப்பை மாற்றிக்கொண்டது. இந்த மசோதா கியூபாவுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான புதிய தடைகளை விதித்ததுடன், கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்குவதையும் முற்றிலுமாகத் தடை செய்தது.

போருக்கான சாக்குப்போக்காக இந்தக் குற்றச்சாட்டு

இப்போது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ட்ரம்ப் நிர்வாகம் ராவுல் காஸ்ட்ரோவைக் குற்றவாளியாக்குவதற்காக எல்லையற்ற சிடுமூஞ்சித்தனத்துடன் இந்த ஜோடிக்கப்பட்ட சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளது. ஜனவரி 3 அன்று, வெனிசுவேலாவின் தலைநகர் காரகாஸ் மீது அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்படுவதற்கு முன்னதாக, அவர் மீது ஜோடிக்கப்பட்ட போதைப்பொருள்-பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதே நடைமுறையைத்தான் இந்தக் குற்றச்சாட்டும் துல்லியமாகப் பின்பற்றுகிறது.

கியூபாவின் அதிகாரிகளுக்கு எதிராக பரந்த அளவில் வழக்குகளைத் தொடர்வதற்காக, புளோரிடாவின் தெற்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் ஜேசன் ரெடிங் குவினோன்ஸால் மார்ச் மாதம் அமைக்கப்பட்ட ஒரு பணிக்குழுவால் இதற்கான குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. கியூப அகதிக்கு பிறந்தவரான ஜேசன் ரெடிங், அமெரிக்க இராணுவம் மற்றும் விமானப்படையில் நீண்டகாலமாக பணியாற்றிய பிறகு, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்ட முதல் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உள்ளார்.

அவர் கடந்த மாதம் ரிசர்வ் படைக்கு கேர்னலாகப் பதவி உயர்வு பெற்றது மட்டுமன்றி, ஈரான் மீதான போர் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் நடத்தப்பட்டு வரும் போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (U.S. Central Command) “மூத்த ரிசர்வ் சட்ட ஆலோசகராகவும்” தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தக் குற்றச்சாட்டுப் பத்திரத்தை, பல மாதங்களாக நடந்து வரும் போருக்கான ஒரு காரணத்தைத் திட்டமிட்டு உருவாக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் பரந்த அளவிலான நடவடிக்கைகளோடு இணைத்தே பார்க்க வேண்டும். இரகசிய உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி, பெயர் குறிப்பிடப்படாத வெள்ளை மாளிகை அதிகாரிகளை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கியூபா வாங்கியுள்ளதாகவும், குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மற்றும் புளோரிடாவின் கீ வெஸ்ட் ஆகியவற்றைத் தாக்குவதற்கான திட்டங்கள் குறித்து “விவாதித்து வருவதாகவும்” ஆக்சியோஸ் பத்திரிகையின் அறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியது.

கியூபா தூதரகம் இந்த அறிக்கையின் உள்ளார்ந்த அபத்தத்தை அம்பலப்படுத்தியது: “ஆக்ஸியோஸ் ஒரு ‘ட்ரோன் அச்சுறுத்தல்’ குறித்து இட்டுக்கட்டியுள்ளது. ஆனால் அதன் அறிக்கையின் இறுதிப் பகுதியில், ‘கியூபா தீவிரமாகத் தாக்குவதற்குத் திட்டமிடுவதாக அமெரிக்க அதிகாரிகள் நம்பவில்லை’ என்று ஒப்புக்கொள்கிறது.” கியூபா அரசாங்கம் மேலும் கூறுகையில், “கியூபாதான் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நாடு,” என்று குறிப்பிட்டது. இது, கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராகத் தண்டனைக்குரிய வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி, ஜனவரியில் அமெரிக்கா விதித்த எரிசக்தித் தடையைக் குறிக்கிறது. இந்தத் தடையால் அந்தத் தீவின் மின்சாரக் கட்டமைப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் பயங்கரவாதமும் ஆக்கிரமிப்பின் வரலாற்றுப் பதிவும்

நவீன வரலாற்றிலேயே மிகவும் நீடித்த மற்றும் இரக்கமற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒன்றான, கியூபாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு மே 20 ஒரு பொருத்தமான தேதியாக இருக்கும்.

ஸ்பானிய-அமெரிக்கப் போரின் முடிவைத் தொடர்ந்து, 1902-இல் கியூபா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டதை மே 20ம் திகதி குறிக்கிறது. அந்தப் போரின் போது கியூபா, புவேர்ட்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஸ்பானியாவின் காலனிகளை அமெரிக்கா கைப்பற்றியது.

அதன்பின் அமெரிக்க கடற்படையினர் 1917 மற்றும் 1923 க்கு இடையில் கியூபாவை ஆக்கிரமித்து, வேலைநிறுத்தங்களை ஒடுக்கியதுடன் அமெரிக்க பெருநிறுவனங்களின் நலன்களைப் பாதுகாத்தனர்.

அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் முறையான முடிவானது, பிளாட் திருத்தச் சட்டத்தைத் (Platt Amendment) திணிப்பதன் மூலம் நிகழ்ந்தது. இது வாஷிங்டனுக்கு, தான் பொருத்தமாக கருதும் போதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் கியூபா விவகாரங்களில் இராணுவ ரீதியாக தலையிடுவதற்கான தடையற்ற “உரிமையை” வழங்கியது. 1902-ஆம் ஆண்டின் “சுதந்திரம்” என்பது குடியரசு வேடத்தில் அமைந்த ஒரு காலனித்துவ ஏற்பாடு என்பதை அங்கீகரிக்கும் விதமாக, பிடெல் காஸ்ட்ரோ அரசாங்கம் மே 20-ஐ அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து நீக்கியது.

கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா 66 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து நடத்தி வரும் பயங்கரவாதமும், தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கான தீவிரமடைந்து வரும் உந்துதலும், 1959 க்கு முன்னர் நிலவிய பிளாட் சட்டத் திருத்தம் மற்றும் புல்ஜென்சியோ பாட்டிஸ்டாவின் சர்வாதிகாரத்தின் கீழ் இருந்த அதே போன்றதொரு உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதற்குக் குறுக்கே நிற்கும் அனைத்து தடைகளையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்க வங்கிகளும் பெரு நிறுவனங்களும் கியூபாவின் நிலம், பொதுப் பயன்பாடுகள், இரயில்வே மற்றும் சர்க்கரைத் தொழில் ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதித்த அதே பழைய காலனித்துவ பாணி உறவை மீண்டும் கொண்டு வருவதே இதன் நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் அடிக்கடி வந்து சென்ற சூதாட்ட விடுதிகள் (Casinos) மற்றும் விபச்சார விடுதிகளை நடத்துவதற்கு மாஃபியாக்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. இந்த பழைய ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக பாட்டிஸ்டா 20,000ம் மக்களைக் கொன்று தள்ளினார்.

1959-இல், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற புல்ஜென்சியோ பாட்டிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ வீழ்த்தியபோது, வாஷிங்டனின் எதிர்வினை உடனடியாக இருந்தது. கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கைகள், காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துடன் இணைவதற்கு முன்பே தொடங்கிவிட்டன என்பதை பகிரங்கப்படுத்தப்பட்ட சி.ஐ.ஏ ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன — அதாவது, இந்தத் தாக்குதல்கள் பனிப்போர் சித்தாந்தத்தை விட, அந்தத் தீவில் அமெரிக்க பெருநிறுவனங்கள் கொள்ளையடித்ததைப் பாதுகாப்பதற்கே அதிகத் தொடர்புடையதாக இருந்தன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நடத்திய பயங்கரவாத தாக்குதலின் வரலாறு நவீன கால வரலாற்றிலேயே மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது மார்ச் 1960-இல் லா கூப்ரே என்ற பிரெஞ்சு கப்பல் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இருந்து தொடங்குகிறது. ஆயுதங்களை விற்க அமெரிக்கா மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து ஆயுதங்களை வாங்க கியூபா தள்ளப்பட்ட நிலையில், அந்த ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல் இதுவாகும். முதல் குண்டுத் தாக்குதலுக்குப் பின் மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை அடுத்தடுத்து இலக்கு வைக்கும் வகையில் இந்த வெடிகுண்டுகள் திட்டமிட்டு அடுத்தடுத்து வெடிக்குமாறு நேரம் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மிகப்பெரிய தலையீடு என்பது, ஏப்ரல் 1961-இல் நடந்த பன்றி வளைகுடாவில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இது சி.ஐ.ஏ-ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்ட சுமார் 1,400 கியூப நாடுகடத்தப்பட்ட கூலிப்படையினரைக் கொண்டு நடத்தப்பட்டது. இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவப் பேரழிவாக அமைந்த இந்த நடவடிக்கையை, கியூபா தோற்கடித்தது. இந்தத் தாக்குதலில் 176 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதன்பிறகு, மார்ச் 1962-இல் கூட்டுப் படைத் தளபதிகள், நோர்த்வுட்ஸ் இராணுவ நடவடிக்கை என்ற திட்டத்தை வரைந்தனர். இது, கியூபா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான சாக்குப்போக்குகளை உருவாக்குவதற்காக, அமெரிக்க நகரங்களில் போலிப் பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், அமெரிக்க விமானங்களைக் கடத்தவும் திட்டமிடப்பட்ட சதியாகும். பின்னர் இதன் இரகசியத்தன்மை நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

1975-ஆம் ஆண்டின் சேர்ச் கமிட்டி (Church Committee), 1960 மற்றும் 1965-க்கு இடையில் பிடெல் காஸ்ட்ரோவைக் படுகொலை செய்ய சி.ஐ.ஏ மேற்கொண்ட எட்டு முயற்சிகளை ஆதாரங்களுடன் நிரூபித்தது. இதில் வெடிக்கும் கடல் கிளிஞ்சல்கள், நச்சு சுருட்டுகள், விஷம் கலந்த பேனாக்கள் மற்றும் மாஃபியா புள்ளிகளுடனான கூட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதை அது ஆவணப்படுத்தியது. கியூபாவின் எதிர்-உளவுத்துறை ஒட்டுமொத்தமாக 638 தனித்தனி படுகொலைத் திட்டங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஒரு கொடூரமான சதித்திட்டத்தில், 1971-இல் ஏற்பட்ட ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவலுக்கும், 101 குழந்தைகள் உட்பட 158 பேரைக் கொன்ற 1981-ஆம் ஆண்டின் டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் தொற்றுக்கும், அமெரிக்காவுடன் தொடர்புடைய திட்டமிட்ட பரவல்களே காரணம் என்று கியூபா குற்றம் சாட்டுகிறது.

கியூபாவின் அரசாங்கப் பதிவுகள் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்களிலிருந்து தொகுக்கப்பட்ட —கீத் போலெண்டர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களால் தொகுக்கப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்ட பதிவுகளில் உள்ள தனித்தனி சம்பவங்களுடன் விரிவாக ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது— ஆவணப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 1959 முதல் கியூபாவிற்கு எதிராக அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட அல்லது அமெரிக்காவுடன் தொடர்புடைய பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-க்கும் அதிகம் என்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,100 என்றும் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றங்களைச் செய்த ஒருவரைக் கூட அமெரிக்க அரசாங்கம் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பாக்கவில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை ஒழுங்கமைத்து, நிதியளித்து, வழக்குத் தொடரப்படுவதிலிருந்து பாதுகாத்த வலையமைப்புகள், சி.ஐ.ஏ மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசாலும் கட்டமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

லூயிஸ் பொசாடா காரிலெஸின் வாழ்க்கை வரலாறு இதற்கு மிகத் தெளிவான ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. கியூபாவில் பிறந்து, ஜோர்ஜியாவின் பென்னிங் கோட்டையில் சி.ஐ.ஏ-ஆல் பயிற்றுவிக்கப்பட்ட பொசாடா, பன்றி வளைகுடா ஆக்கிரமிப்பை ஒருங்கிணைக்க உதவினார். அதன் பின்னர், மேற்கு அரைக்கோளத்தின் (Western Hemisphere) வரலாற்றிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாதிகளில் ஒருவராக அவர் மாறினார். அமெரிக்க உளவுத்துறையின் அறிவு, பாதுகாப்பு மற்றும் சில நேரங்களில் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் பல தசாப்தங்களாக அவர் இயங்கி வந்தார். 1976-இல் நடந்த கியூபானா ஏர்லைன்ஸ் விமானம் 455 குண்டுவெடிப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் இவரே ஆவார். செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களில் நடந்த மிக மோசமான விமானப் பயங்கரவாதச் செயல் இதுவாகும். இதில் கியூபாவின் தேசிய ஜூனியர் வாள்வீச்சு அணி உட்பட விமானத்தில் இருந்த 73 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

1976-ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு எங்கு திட்டமிடப்பட்டதோ மற்றும் லூயிஸ் பொசாடா எங்கு குடியுரிமை பெற்ற குடிமகனாக இருந்தாரோ, அந்த வெனிசுவேலா நாடு இந்தத் தாக்குதல் தொடர்பாக அவரைக் கைது செய்தது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, 1985-இல் சிறையிலிருந்து தப்புவதற்கு முன்பு வரை பல ஆண்டுகள் அவரை சிறையிலடைத்து வைத்திருந்தது.

1997-இல் இடம்பெற்ற ஹவானா ஹோட்டல் மீதான குண்டுவெடிப்பு தாக்குதலையும் இவரே ஒருங்கிணைத்தார். இதில் இத்தாலிய சுற்றுலாப் பயணி பாபியோ டி செல்மோ கொல்லப்பட்டார். பின்னர், நவம்பர் 2000-இல், பிடெல் காஸ்ட்ரோவுக்கு எதிரான ஒரு சதியில் 200 பவுண்டு வெடிபொருட்களுடன் பனாமா நகரில் அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் கீழ் 2004 இல் பதவியிலிருந்து விலகிய பனாமா ஜனாதிபதி மிரேயா மோஸ்கோசோவால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ச்சியான சர்வதேச அழுத்தத்தின் கீழ், புஷ் நிர்வாகம் பொசாடாவைக் கைது செய்தது, ஆனால் வெனிசுவேலா மற்றும் கியூபாவின் ஒப்படைப்பு கோரிக்கைகளை அது நிராகரித்தது. வெனிசுலாவேவின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வாஷிங்டன் வழக்கறிஞர் ஜோஸ் பெர்டியரா கடுமையான முரண் நகையுடன், “கியூபாவில் சித்திரவதை நடந்ததற்கான ஒரே சான்றாக நான் பார்த்தது குவாண்டனாமோ குடாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்திலிருந்து மட்டுமே” என்று குறிப்பிட்டார்.

பொசாடா மீது அமெரிக்க அரசாங்கம் இறுதியாக சுமத்திய ஒரே குற்றச்சாட்டு, குடியுரிமை வழங்கும் விசாரணையின் போது ஹவானா ஹோட்டல் குண்டுத் தாக்குதல்களில் தனது பங்கு குறித்து குடிவரவு அதிகாரிகளிடம் பொய் சாட்சி கூறியதுதான். 2011-ல், எல் பாசோவில் உள்ள ஒரு மத்திய அரசின் நடுவர் மன்றம் அந்த குற்றச்சாட்டிலிருந்தும் அவரை விடுவித்தது. பொசாடா காரில்ஸ் 2018-ல், தனது 90-வது வயதில், புளோரிடாவில் உள்ள ஒரு முன்னாள் இராணுவத்தினர்களுக்கான பராமரிப்பு இல்லத்தில் அமைதியான முறையில் காலமானார்.

இப்போது, இந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் முற்றிலும் ஆராயாமல், பொசாடாவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரால் வழிநடத்தப்பட்ட ஒரு வலைப்பின்னலால் இயக்கப்பட்ட விமானங்களை இடைமறிக்க உத்தரவிட்டதற்காக, அதே அமெரிக்க அரசாங்கம் ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக ஒரு குற்றவியல் குற்றச்சாட்டினை அறிவிக்கிறது.

கியூபாவிற்கு எதிராக இப்போது நடப்பவை ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வல்ல. இது அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எதிரான ஒவ்வொரு சவாலையும் அழிப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த உந்துதலின் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாகும் — குறிப்பாக, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவின் அழிவு, காஸாவில் நடக்கும் இனப்படுகொலை, ஈரானின் மீதான முற்றுகை மற்றும் வெனிசுவேலாவின் மதுரோவைக் கடத்தியமை ஆகியவற்றை உருவாக்கிய அதே உந்துதல் தான் இதுவும் ஆகும்.

மே 14 அன்று, கியூப அரசாங்கம் சி.ஐ.ஏ இயக்குநர் ஜோன் ராட்க்ளிப்பை ஹவானாவில் வரவேற்றது. அங்கு அவர், முன்னாள் ஜனாதிபதியின் பேரனான ராவுல் கில்லெர்மோ “ரவுலிட்டோ” ரோட்ரிக்ஸ் காஸ்ட்ரோ மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடனான சந்திப்பில் “அடிப்படை மாற்றங்களை” கோரினார். இந்தச் சந்திப்பானது, தேசியவாத மூலோபாயம் அதன் வரலாற்று ரீதியான முட்டுச்சந்திற்கு வந்து சேர்ந்துள்ளதைக் காட்டுகிறது. ஆறு தசாப்த கால சி.ஐ.ஏ பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பிழைத்த காஸ்ட்ரோயிசத்தின் தலைமை, இப்போது அதே சி.ஐ.ஏ இயக்குனருக்கு எதிரே அமர்ந்து, தனது சொந்த சரணடைதலுக்கான நிபந்தனைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறது. கியூபாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இதிலிருந்து அவசியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில், மெக்சிகோ, பிரேசில் மற்றும் கொலம்பியாவிலுள்ள “இடது” தேசியவாத அரசாங்கங்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கையிலும், கியூபாவை பட்டினியால் வாட்டும் எரிபொருள் முற்றுகையிலும் முழுமையாக உடந்தையாக இருந்து வருகின்றன.

அமெரிக்க, கியூப மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலில்தான் முன்னேறிச் செல்வதற்கான வழி அடங்கியுள்ளது: ஏகாதிபத்தியப் போரையும், பயங்கரவாதத்தையும் அரசியல் வாழ்வின் வரையறுக்கும் அம்சங்களாக ஆக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, துறைமுகத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், எண்ணெய் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள், இந்த முற்றுகையை அமல்படுத்த மறுத்து, கியூபா மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்க வேண்டும்.

Loading