மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த ஞாயிறன்று, ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக பாசிச தொலைக்காட்சி பிரபலமான ஜேவியர் மிலே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிர்ச்சியூட்டும் வகையில், தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக உள்ள பெரோனிச வேட்பாளர் செர்ஜியோ மாஸாவுக்கு எதிராக, அவர் 11 சதவீத பரந்த வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் அரசியல் மற்றும் உலகளாவிய தாக்கங்களைக் கொண்டுள்ளது.
புவனோஸ் அயர்ஸின் ஒரு சில பிரிவுகளைத் தவிர, ஒவ்வொரு முக்கிய நகரமும், 23 மாகாணங்களில் 20 மாகாணங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் உத்தியோகபூர்வ அரசியலில் நுழைந்த மிலேக்கு வாக்களித்தன. அரசாங்க செலவினங்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான ஆத்திரமூட்டும், தீவிர ஹிட்லரிய தன்மையான பேச்சுக்களும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேல் மீதான அவரது வழிபாடும் மற்றும் இறந்த தனது நாயிடமிருந்து ஆலோசனை பெறுவதாகக் கூறப்படும் கூற்றுக்கள் உட்பட அவரது இருண்ட மூடநம்பிக்கைகளுக்காக மிலே அறியப்படுகிறார்.
ஆர்ஜென்டினா ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் முன்னணி பிரிவுகள் பெருமளவில் மிலேயின் பின்னால் அணிவகுத்து நின்று, சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல்கள், அத்துடன் இராணுவ மற்றும் துணை இராணுவ ஒடுக்குமுறைப் படைகளைக் கட்டியெழுப்புவதற்கான அவரது திட்டமிட்ட 'அதிர்ச்சி சிகிச்சை'யில் இறங்கியுள்ளன.
எடுத்துக்காட்டாக, 'நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையானதை ஒரு பைத்தியக்காரனால் மட்டுமே இதனை செய்ய முடியும்' என்று கூறிய ஒரு ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த தொழிலதிபரை ப்ளூம்பெர்க் மேற்கோள் காட்டியது. முன்னாள் ஜனாதிபதி மௌரிசியோ மாக்ரி, மிலேயின் ஆட்சிக்கு உதவுதற்காக தனது கட்சியை வழங்க முன்வந்துள்ளார். பாசிச கும்பல்களை உருவாக்குவதற்கான ஒரு அப்பட்டமான வேண்டுகோளாக, அவரது கொள்கைகளை எதிர்க்கும் 'மிருகங்கள்' மீது நடவடிக்கை எடுக்குமாறு மிலேவின் 'இளைஞர்களின் புரட்சிகர மையக்கரு' (“revolutionary nucleus of youth”) அமைப்பிற்கு தேசிய தொலைக்காட்சியில் அழைப்பு விடுத்தார்.
தற்போதைய துணை ஜனாதிபதியும் பெரோனிசத்தின் நடைமுறைத் தலைவருமான கிறிஸ்டினா கிர்ச்னர், இத்தாலிக்கான பயணத்தை இரத்து செய்து, தனது பாசிச வாரிசான விக்டோரியா வில்லாரூயல்லை புதன்கிழமை சந்தித்து இந்த மாற்றம் குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பை 'அனைத்து ஆர்ஜென்டினா மக்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது' என்று விவரித்தார்.
டிசம்பர் 10 அன்று மிலேயும் வில்லாரூயல்லும் அதிகாரத்திற்கு வருவது உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஏனெனில் நான்கு தசாப்தங்களுக்கு முன்பு ஆட்சி செய்த கொடூரமான அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பிறகு, ஆர்ஜென்டினா சமூகம் பாசிசத்திற்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்று விடுபட்டுள்ளது என்ற எந்தவொரு கருத்தையும் அகற்றுகிறது.
பத்திரிகையாளர் எமிலியோ குல்லோ சுருக்கமாகக் கூறுகையில்: 'ஆனால் ஒளிரும் நியான் அடையாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு ட்ரோஜன் குதிரையைப் போல, இராணுவக் கட்சி... ஜனநாயக முறையில் ஒரு அரசாங்கத்தில் நுழைந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட 30,000 பேரின் அடையாள எண்ணிக்கையை மறுப்பதோடு, பிளாசா டி மாயோவின் தாய்மார்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், வில்லாரூயல் என்பவர் தண்டனை பெற்ற சிப்பாய்களின் மகள் மற்றும் மருமகள் ஆவார், மேலும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்திரவதையாளர்களின் ஆதரவையும் கொண்டுள்ளார்.'
பாசிசத்தின் ஆபத்து என்பது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், இதை குறைத்து மதிப்பிடப்பட முடியாது. மிலே போல, அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் பிரேசிலில் போல்சனாரோ, இத்தாலியில் மெலோனி மற்றும் நெதர்லாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்ட் வில்டர்ஸ் போன்ற நபர்களை ஆளும் வட்டாரங்கள் ஊக்குவிப்பதில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமின்றி, மிலேயும் ஆர்ஜென்டினாவின் ஆளும் வர்க்கமும் காஸாவில் இஸ்ரேலிய படுகொலைக்கு பைடென் நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவை ஒரு உத்வேகமாகவும், உள்நாட்டில் வறிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இனப்படுகொலை வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான எதிர்கால ஆதரவின் அடையாளமாகவும் பார்க்கின்றன.
இருப்பினும், பாசிசம் என்பது வெறுமனே மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் அதிதீவிர தேசியவாத அல்லது மதவெறித்தனமான சொல்லாட்சிகளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல. பாசிசம், முதலாளித்துவ ஆட்சியின் ஒரு முறையாகும், இது அனைத்து தொழிலாளர் அமைப்புகளையும் தலைவர்களையும் அழிக்க முயல்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்ட அலையின், வரலாற்றுரீதியான மற்றும் விரக்தியூட்டும் தோல்வியின் விளைவாக மட்டுமே இதனை செயல்படுத்த முடியும்.
ஆர்ஜென்டினாவில் இத்தகைய தோல்வி நடைபெறவில்லை. உண்மையில், உலகளவில் முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாளர்களின் எழுச்சியின் ஒரு பகுதியாக, ஆர்ஜென்டினாவில் மிலேயின் தேர்தல் வெற்றிக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில், 2022 இல் வரலாறு காணாத எண்ணிக்கையிலான தெரு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன உத்தரவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு எதிரான திடீர் வேலைநிறுத்தங்களின் அலை ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களின் மையங்களான சான்டா குரூஸ், சால்டா, ஜுஜூய், மிசியோன்ஸ் மற்றும் சுபுட் போன்றவைகளும், புவனோஸ் அயர்ஸில் பல வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கிய முறைசாரா துறை மற்றும் சமூக உதவியை சார்ந்துள்ள குறிப்பாக வறிய மற்றும் இளம் தொழிலாளர்களின் அடுக்குகளும் மிலேக்கு பரந்த வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்தன.
இத்தகைய முரண்பாடான சமூக-அரசியல் நிகழ்வை, ஆர்ஜென்டினா தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முற்போக்கான புறநிலையான இயக்கமாக 'இடது' என்று அழைக்கப்படுவதன் தற்போதைய எந்த கட்சியிலும் அரசியல் வெளிப்பாட்டைக் காண முடியாது என்ற
உண்மையால் மட்டுமே விளக்க முடியும். மாறாக, தொழிலாளர்கள் இந்த அனைத்து கட்சிகளுடனும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ அமைப்புமுறையுடனும் பெருகிய முறையில் மோதலில் உள்ளனர்.
மிலேயால் முன்மொழியப்பட்ட அபத்தமான 'அராஜக-முதலாளித்துவ' பொருளாதார தீர்வுகளில், தொழிலாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய எந்தவொரு பிரமைகளும் வரவிருக்கும் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டுவரும் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிரான வெகுஜன போராட்டங்களின் தீவிரத்தில் சிதறடிக்கப்படும்.
அரசியல் குழப்பம் ஒருபுறமிருக்க, பாசிசவாத வேட்பாளருக்கான வெகுஜன வாக்கு அவரது தீவிர, கட்டுப்பாடற்ற முதலாளித்துவ சுரண்டல் வேலைத்திட்டத்திற்கு ஆர்ஜென்டினா தொழிலாளர்களின் ஒப்புதலை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அது அழுகிய முதலாளித்துவ ஸ்தாபகத்திற்கு எதிரான எதிர்ப்பு வாக்கெடுப்பாக இருந்தது, முதன்மையாக பெரோனிசத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
போலி-இடதுகள் கூறுவது போல மிலே வெறுமனே 'சித்தப்பிரமை பிடித்தவர்' அல்ல. முறையே 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய பின்னர் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் பிரதான அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கும் ட்ரம்ப் மற்றும் போல்சனாரோ தொடர்பாகவும் அவர்கள் இதையே கூறினார்கள். அவரது சகாக்களைப் போலவே, மிலேயும் மிகவும் திட்டவட்டமான வரலாற்று மற்றும் பொருளியல் நிலைமைகளிலிருந்து வெளிப்படுகிறார்.
முதலாவதாக, இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் முன்னோடியாக இருந்த பெரோனிசத்திற்கு வெகுஜன விசுவாசத்தில் எதுவுமே மீதமிருக்கவில்லை. 1946 இல் அவர் முதன்முதலில் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, ஜுவான் டொமிங்கோ பெரோன் தலைமையிலான அரசியல் இயக்கம் தொழிலாளர் உரிமைகள், சுகாதாரம் மற்றும் கல்வியின் உலகளாவியமயமாக்கல், பின்னர் எவிட்டா நிகழ்வு மற்றும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலன்கள் என்னும் அரசாங்கக் கொள்கையின் குறிக்கோள் என்ற அதன் பாசாங்கு ஆகியவற்றுடன் அதன் தொடர்பை வளர்த்துக் கொண்டது. இன்று, தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பெரோனிச எந்திரம் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கட்டளைகளை செயல்படுத்த சதி செய்யும் ஊழல் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவ குண்டர்களின் கும்பலால் ஆனதாகும்.
இந்தக் கொந்தளிப்பான அரசியல் அபிவிருத்திகளை அடிப்படையாக உந்தித் தள்ளுவது, பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடிகளில் ஒன்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. மில்லியன் கணக்கான ஆர்ஜென்டினா மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கும் உயர்பணவீக்கம், போர், கோவிட்-19 பெருந்தொற்று நோய், அதிக வட்டி வீதங்கள் என்பன, உலக சந்தைகளுக்கு ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும் பிற அதிர்ச்சிகளால் குறிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் விளைபொருளாக உள்ளன.
உலகளாவிய புறநிலை நிலைமையின் தற்போதைய மாற்றம், வர்க்கப் பகைமைகளை சுமூகமாக்க ஏகாதிபத்தியம் நம்பியிருக்கும் அனைத்து முதலாளித்துவ தேசியவாத, சமூக-ஜனநாயக மற்றும் பிற தேசிய-சீர்திருத்த இயக்கங்களின் 'ஒரு கல்லை மற்றொன்றின் மீது விட்டுவைக்கவில்லை (தகர்த்து சிதைக்கிறது).' கடந்த கால் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவில் தோன்றிய 'இளஞ்சிவப்பு அலை' (“pink tide”) அரசாங்கங்கள் மற்றும் கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றின் தவிர்க்க முடியாத தலைவிதியும் இதுவாகும்.
அதன் அரசியல் வீழ்ச்சியுடன், பெரோனிசம் ஆர்ஜென்டினா போலி-இடதுகளின் அனைத்து அமைப்புகளையும் தன்னுடன் இழுக்கிறது. 1970 களின் முற்பகுதியில் இருந்து எந்தவொரு கணிசமான சமூக சீர்திருத்தங்களையும் திறம்பட கைவிட்டு, தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் காட்டிக்கொடுத்த பின்னர், அவர்களின் தீய சேவைகள் இல்லாமல், ஆர்ஜென்டினாவின் அரசியல் வாழ்க்கையில் பெரோனிசம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியாது.
சோசலிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் பல சக்திகள் பெரோனிச எந்திரத்திற்கு ஒரு இடது மறைப்பை வழங்குவதில் முன்னணி பாத்திரம் வகித்துள்ளன. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பின்னர், இந்த போக்குகளில் மிக முக்கியமானது மறைந்த நஹுவேல் மொரேனோவால் ஸ்தாபிக்கப்பட்டது, அவர் 1963ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) முறித்துக் கொண்டபோது இலத்தீன் அமெரிக்காவில் பல ட்ரொட்ஸ்கிச அமைப்புக்களை கலைக்கத் தலைமை தாங்கினார்.
1950 களில் இருந்து, மொரேனோயிசப் போக்கானது தேசிய சந்தர்ப்பவாதத்தை நோக்கிய ஒரு பிற்போக்குத்தனமான நோக்குநிலையை வெளிப்படுத்தியது, இது 1976 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு வரை தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கங்களில் பெரோனிசத்திற்கு மறைவில்லாத கீழ்படிதலின் வடிவத்தை எடுத்தது. பெரோனிச முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்த பின்னர், மொரேனோ 'இலத்தீன் அமெரிக்காவில் மிகவும் ஜனநாயகமானது' என்று அவர் அழைத்த சிஐஏ ஆதரவு சர்வாதிகாரத்தை செயலற்ற முறையில் ஏற்றுக்கொண்டார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றபோது, மொரேனோ தனது சோசலிச தொழிலாளர் கட்சியின் (PST) உறுப்பினர்களிடம் கவலைப்பட வேண்டாம் என்றும் திறந்த வேலையைத் தொடருமாறும் கூறினார். இதனால் சுமார் 100 PST போராளிகள் 'காணாமல் போயினர்' மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
இன்று, மொரேனோவின் வாரிசுகளும் இடது மற்றும் தொழிலாளர் முன்னணி (FIT-U) என்று அழைக்கப்படுவதிலுள்ள அவர்களின் கூட்டணி பங்காளிகளும் அதே பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
முதலாளித்துவ நெருக்கடியின் வெடிப்பும் பெரோனிசத்தின் வீழ்ச்சியும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு உண்மையான புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்பும் வரலாற்றுக் கடமையை நனவாக்குவதற்கான வழியைத் திறக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கானது மிலேயின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும், ஏகாதிபத்திய மையங்களிலும் அதற்கு அப்பாலும் உள்ள சாமானிய தொழிலாளர்களுடன் அரசியல் ஒருங்கிணைப்பில் அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தை தயாரிப்பதற்கும் பெரோனிச தொழிற்சங்கம் மற்றும் அரசியல் எந்திரத்திற்கு எதிரான சுயாதீனமான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும்.
மொரேனோயிச மற்றும் பப்லோவாத எதிரிகளுக்கு, ட்ரொட்ஸ்கிசத்தின் சமரசமற்ற எதிர்ப்பில் மட்டுமே இந்த வரலாற்றுப் பணியை அபிவிருத்தி செய்ய முடியும். அவைகள் தேசிய முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துடனான ஒரு எதிர்ப்புரட்சிகர கூட்டணியில் முன்னெப்போதையும் விட வெளிப்படையாக இணைகின்றன.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை அவர்கள் எவ்வாறு ஆதரித்துள்ளனரோ, அதே போல், FIT-U குழுக்கள் பெரோனிச வேட்பாளர் செர்ஜியோ மாஸாவின் பின்னால் அணிதிரண்டன. மொரேனோயிஸ்டுகளால் 'அமெரிக்க தூதரகத்தின் வேட்பாளர்' என்று விவரிக்கப்பட்ட அவர், காஸாவில் சியோனிச இனப்படுகொலையின் தீவிர ஆதரவாளராக இருக்கின்றார்.
இப்போது FIT-U இல் உள்ள கட்சிகள் சர்வாதிகார அபாயத்தைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை அடக்க முயற்சிக்கின்றன. அதேநேரத்தில், விளைவு முந்தைய அரசாங்கங்களை விட வேறுபட்டதாக இருக்காது என்று தங்களைத் தாங்களே உறுதிபடுத்திக் கொண்டு, பெரோனிச தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துர்நாற்றம் வீசும் சடலத்தின் மீது தங்கள் நம்பிக்கைகளை வைக்கின்றன.
ட்ரொட்ஸ்கிசம் இந்த முன்னோக்கை ஒரு சாபக்கேடாக வன்மையாக நிராகரிக்கிறது. லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட மற்றும் 1917ல் ரஷ்யப் புரட்சியை உயிர்ப்பித்த நிரந்தரப் புரட்சி கோட்பாடானது, பெரோனிசம் மற்றும் ஏனைய அனைத்து முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் திவால்தன்மையால் முழுமையாக நிரூபணமாகியுள்ளது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்ராலினிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற வடிவங்களில் கரைப்பதற்கான பப்லோவாத திருத்தல்வாத முயற்சிகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பாதுகாக்கப்பட்ட இந்த முன்னோக்கு, ஒரு பின்தங்கிய நாட்டில், ஏகாதிபத்தியம் மற்றும் பிற ஜனநாயக கடமைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்பதை நிறுவியது.
ஆர்ஜென்டினாவிலும், சர்வதேச அளவிலும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியின் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு, மரபுகள் மற்றும் வேலைத்திட்டத்தை கவனமாக உள்வாங்கி கற்றுக் கொள்வதன் மூலமே, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர முன்னணிப்படை உருவாகும். நேரம் முக்கியமானது, உடனே நடவடிக்கைகள் தேவையாகும்.