ஆர்ஜென்டினாவின் வறுமை விகிதம் 60 சதவீதத்தை நெருங்கும் போது IMF, வெள்ளை மாளிகையானது மிலேயின் "அதிர்ச்சி சிகிச்சை"யைப் பாராட்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் (Javier Milei) கீழ் வர்க்கப் போராட்டத்தின் கொள்கைகள் மில்லியன் கணக்கானவர்களை வறுமை மற்றும் ஏழ்மையில் மூழ்கடித்திருப்பதால்,
நாடு முழுவதும் பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தன்னிச்சையான போராட்டங்கள், கேசரோலாசோஸ் (cacerolazos - பானைகள் மற்றும் மற்றும் பிற பாத்திரங்களைக்கொண்டு சத்தம் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்துதல்) மற்றும் வெகுஜன கூட்டங்கள் குறித்து கிட்டத்தட்ட நாளாந்தம் அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஆர்ஜென்டினாவின் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி ஜேவியர் மிலே, டிசம்பர் 10, 2023 ஞாயிற்றுக்கிழமை, ஆர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸில் (Buenos Aires) காங்கிரஸுக்கு வெளியே பேசுகிறார். [AP Photo/Gustavo Garello]

ஜனவரி 24 அன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆர்ஜென்டினா மக்கள் நாடு முழுவதும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பு (General Confederation of Workers - CGT) தொழிற்சங்கத்தின் மூலம் அழைப்புவிடப்பட்ட 12 மணிநேர தேசிய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து நீதிமன்றங்கள், ஆளுநர்கள் மற்றும் காங்கிரஸுக்கு அவர்களின் முறையீடுகளை விடுப்பதனூடாக பெரோனிஸ்ட் (Peronist) தலைமையிலான தொழிற்சங்க அதிகாரத்துவம் வேலைநிறுத்தங்களை ஒரு நேரத்தில், சில மணிநேரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுப்படுத்த முயன்றது.

மார்ச் 4, திங்கட்கிழமை நாட்டின் பெரும்பாலான பள்ளி ஆண்டு தொடக்கத்தை வரவேற்பதற்காக CGT 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இது ஏற்கனவே வகுப்புகளைத் தொடங்கியுள்ள ஆசிரியர்களின் மட்டுப்படுத்தப்பட்ட மாகாண வேலைநிறுத்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடக்கிறது.

புதனன்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தின் போது விமான நிலைய தொழிலாளர்கள் நாடெங்கிலும் அனைத்து விமானப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தனர், ஏனெனில் அரசாங்கம் மிகவும் தாராளமாகக் கண்ட முதலாளிகளின் ஒப்பந்தத்தைத் தடுக்கத் தலையிட்டது. 

பிப்ரவரி 26 திங்கட்கிழமை அன்று, கப்பல்துறை தொழிலாளர்கள் தேசிய அளவில் ஒரு ஷிப்ட் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர் மற்றும் அன்று நடந்த சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் இணைந்தனர். பிப்ரவரி 21 அன்று இரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம், மார்ச் 5 அன்று தேசிய அளவில் மற்றொரு பொதுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எந்த ஊதிய உயர்வையும் வழங்க முதலாளிகள் மறுத்துவிட்டனர்.

உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் பல பத்தாண்டுகளாக வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான ஆழமான தாக்குதல்களை நடத்துவதற்கு உதவுகிறது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் விலைகள் 211.4 சதவீதம் அதிகரித்தன, அதே நேரத்தில் ஊதியங்கள் 152.7 சதவீதம் உயர்ந்தன. ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக உதவி ஆகியவை பெரும்பாலும் முடக்கப்பட்டிருக்கின்றன அல்லது சிறியளவு அதிகரிக்கப்பட் நிலையில் மிலேயின் நாணயத்தின் மீதான கொடூரமான மதிப்பிறக்கத்தைத் தொடர்ந்து, ஜனவரியில் விலைகள் 20.6 சதவீதம் (ஆண்டுதோறும் 254 சதவீதம்) மேலும் அதிகரித்துள்ளன.

தொழிலாளர் மற்றும் பொருளாதார கண்காணிப்பு (Labour and Economy Tracker) இன் கூற்றுப்படி, டிசம்பர் மாத இறுதியில், உண்மையான சராசரி ஊதியம் நவம்பர் 2015 இல் அதன் அளவை விட 40 சதவீதம் குறைந்துள்ளது, இது வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழே உள்ளது. அதன்பிறகு ஜனவரியில் தனியார் முறையான ஊதியங்கள் 23 சதவீதம் அதிகமாகக் குறைந்துள்ளன.

நிலைமை பேரழிவுகரமானதாக இருக்கிறது. ஆஜென்டினாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (UCA) மதிப்பிட்டுள்ள வறுமை விகிதம் ஜனவரியில் 49.5 சதவீதத்தில் இருந்து 57.4 சதவீதமாக உயர்ந்து, 3.5 மில்லியனுக்கும் அதிகமான புதிய ஏழைகளைச் அதில் சேர்த்துள்ளது. தீவிர வறுமை 15 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

ஏற்கனவே 2022 இல், UCA மதிப்பிட்டுள்ளபடி, 44 சதவீத குழந்தைகள் “உணவுப் பாதுகாப்பின்மையால்” பாதிக்கப்படுகின்றனர் மற்றும் 60 சதவீதம் பேர் அரசாங்கத்தின் ஊட்டச்சத்து ஆதரவைச் சார்ந்துள்ளனர். ஜனவரி 2024 முதல், சில்லறை விற்பனை கடைகளில் உணவு விற்பனை 37 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது பசி அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் துழாவுவதும், பிச்சை எடுப்பதும் அடிக்கடி பார்க்கும் காட்சியாக மாறி வருகிறது.

மனித முதலீடு அமைச்சகத்திற்கு (Ministry of Human Capital) வெளியே நடந்த ஒரு போராட்டத்தின் போது, 20 வயது தொழிலாளியான இவானா ஜுன்கோசா எல் பைஸ் (El País) ஊடகத்திற்கு கூறினார்: “நாங்கள் எட்டு உடன்பிறப்புகள், மிலே பொறுப்பேற்றதிலிருந்து நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறோம். என் தந்தை ஒரு உரிமம் பெற்ற எலக்ட்ரீஷியன் அவர் பெருந்தொற்றுநோய் ஏற்பட்டபோது இறந்துவிட்டார். இப்போது நாங்கள் அனைவரும் வேலைக்குச் செல்கிறோம், 15 வயதுடைய எனது இளைய சகோதரர் கூட ஒரு காய்கறிக் கடையில் வேலை செய்கிறார்”.

மிலே நிர்வாகம் காயத்தின் மீது அதன் விரலை ஆழமாக அழுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகமான தொழிலாளர்கள் வந்தாலும், அது உணவு தயாரிக்கும் சமையலறைத் திட்ட உதவிகளுக்கான நிதியைத் நிறுத்திவிட்டது. சமூக உதவி மற்றும் ஓய்வூதியங்களுக்கான அரசாங்கச் செலவுகள் ஒரு மாதத்தில் 30 சதவீதம் குறைந்துள்ளதால், இலட்சக்கணக்கான நலத் திட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன.

விலைவாசிகள் மேலும் அதிகரித்திருக்கின்றது, இறக்குமதி மீதான புதிய கட்டணங்கள் மத்தியில் பொது போக்குவரத்து, எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் 64 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ வறுமை விகிதத்தைக் குறிக்கும் ஒரு குடும்பத்திற்கான பிரதான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 597,000 பெசோக்கள் (pesos) (700 அமெரிக்க டாலர்) தேவையாக இருக்கும்போது, நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக குறைந்தபட்ச ஊதியமாக 180,000 பெசோக்கள் (pesos) (200 அமெரிக்க டாலர்) மட்டுமே என ஆணையிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களிடையே பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் ஆழ்ந்த மந்தநிலை இந்த ஏழ்மையை நிறைவேற்றுவதற்கு ஒரு பெரும் வெட்டுக்களுக்கு வழிவகுத்துள்ளது. அனைத்து புதிய பொதுப் பணிகளும் நிறுத்தப்பட்டிருப்பது ஏற்கனவே கட்டுமானப் பணிகளில் 100,000 வேலையிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது, அதே நேரத்தில் 50,000 அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ததில் மிலே மகிழ்ச்சி அடைந்துள்ளார். சுபுட் (Chubut) மாகாணத்திற்கு பணம் அனுப்புவதற்கான நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆட்குறைப்புகளைத் தூண்டி, எதிர்க்கட்சிப் பிரமுகர்களால் ஆளப்படும் மாகாணங்களிலிருந்து நிதியைக் குறைத்துள்ளார்.

நுகர்வு வீழ்ச்சியடைந்ததால், Toyota போன்ற தொழிற்சாலைகள், அதே போல் ஷூ தயாரிப்பாளர்கள் Bicontinentar மற்றும் Topper ஆகியவை நூற்றுக்கணக்கான வேலை நீக்கங்களை அறிவித்துள்ளன, அதே நேரத்தில் நாட்டின் மிகப் பெரிய உலோகவியல் நிறுவனமான Acindar சமீபத்தில் 30 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

தேசிய பல்கலைக்கழக அதிகாரிகள் கடந்த ஆண்டு முதல் பட்ஜெட் முடக்கப்பட்டால் அவை மூடப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

ஒரு மாதத்தில், இந்த வெட்டுக்கள் மூலம் 2012 க்குப் பிறகு முதல் அரசாங்க பட்ஜெட் உபரியை பெற்றிருக்கின்றது, இது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகளைக் கூட மிஞ்சியிருக்கிறது. பெப்ரவரி பிற்பகுதியில் “பரந்த-பொருளாதார (பருவினப்-பொருளாதார - macro-economic) நிலையற்ற தன்மையை மீட்டெடுப்பதில் முதற்கட்ட முன்னேற்றத்தை” பாராட்டுவதற்கு உயர்மட்டக் குழுவை அனுப்பியிருந்தது.

வியாழன் அன்று, நிதி மற்றும் பணவியல் கொள்கையில் “முக்கியமான நடவடிக்கைகளை” அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லனும் (Janet Yellen) பாராட்டினார். இது புவெனஸ் அயர்ஸுக்கு (Buenos Aires) வெளியுறவுச் செயலர் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, அவர் மிலேயுடன் “நாங்கள் சந்தித்த சந்திப்பில் ஜனாதிபதி பைடென் சார்பாக மிகவும் மகிழ்ச்சியடைய முடியாது” என்று கூறினார். IMF கடன் மற்றும் லித்தியம் (lithium) சலுகைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், யெல்லென் மற்றும் IMF பிரதிநிதிகள் “பாதிக்கப்படுபவர்களுக்கு” ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினர் மற்றும் அமெரிக்க இன்டர்-அமெரிக்கன் டெவலப்மென்ட் வங்கியின் (Inter-American Development Bank) நிர்வாகத் துணைத் தலைவர் ஜோர்டான் ஸ்வார்ட்ஸ் (Jordan Schwartz) “வெற்றிகரமாக, சமூக நெருக்கடி என்பது கடக்க வேண்டிய எல்லையாக இருக்கிறது” என்று கருத்துத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அவர்கள் பாராட்டும் மற்றும் வடிவமைப்பாளருக்கு உதவிய “அதிர்ச்சி சிகிச்சை” கண்டிப்பாக உழைப்பை மலிவாக்குவதற்கும் பொதுக் கருவூலம், இயற்கை வளங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய நிதிகளைக் கொள்ளையடிப்பதற்கும் “வலியை” ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆளும் வட்டங்களிலும் வோல் ஸ்ட்ரீட்டிலும் உள்ள கவலைகள் துயரத்தைப் பற்றியது அல்ல, மாறாக இலத்தீன் அமெரிக்காவின் முன்னால் பணக்கார நாட்டை ஒரு மலிவுக்கூலி நிலைமைக்கு மாற்றுதல் மற்றும் சமூக வெடிப்பைத் தடுப்பது பற்றியதாக இருக்கிறது. இறுதியில், நாணய மதிப்பு மற்றும் பணவீக்கத்தின் மையமான முதலீடுகளை ஈர்க்கும் ஆளும் உயரடுக்கின் முழுத் திட்டமும் வெடிமருந்து மீது அமர்ந்துகொண்டு வெடிப்பதைத் தவிர்ப்பதில் தங்கியுள்ளது.

மிலேயை சந்தித்த பிறகு, IMF பிரதிநிதிகள், தொழிற்சங்கம் மற்றும் இராணுவத் தலைவர்களைச் சந்தித்தனர், மேலும் “ஒரு சமூக அல்லது நாசகார எழுச்சி அல்லது வெடிப்பு ஏற்பட்டால் மட்டுமே இராணுவம் தலையிட வேண்டும்” என்று ஒரு தூதரக இரகசிய அதிகாரபூர்வ அறிக்கை கூறுகிறது.

பெப்ரவரி தொடக்கத்தில் தனது பயணத்தின் போது, மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான (Western Hemisphere Affairs) உதவி செயலாளரான பிரையன் ஏ. நிக்கோல்ஸ் (Brian A. Nichols), அமெரிக்க தூதரகத்தில் CGT தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்து, “ஒரு நல்ல பொருளாதாரம் மற்றும் ஜனநாயக சமூக வளர்ச்சியில் தொழிற்சங்கங்களின் முக்கிய பங்கை எடுத்துக்கூறியுள்ளார்”.

இன்று, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அலுவலகங்களில் இருந்து ஆர்ஜென்டினா ஆளப்படுகிறது.

மேலும், ஏகாதிபத்திய பூகோள நிதியானது ஆர்ஜென்டினாவை ஒரு முக்கிய போர்க்களமாகவும், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரின் வியத்தகு விரிவாக்கத்தை முன்னெடுப்பதற்கான பரிசோதனைத் தளமாகவும் தேர்ந்தெடுத்துள்ளது. மேற்கத்திய ஊடகங்களில் மிலேயின் பதவி உயர்வு, பைடென் நிர்வாகத்தால் அவருக்கு அரவணைப்பு மற்றும் டாவோஸ், இஸ்ரேல் மற்றும் ரோம் மற்றும் வாஷிங்டனில் டிரம்பின் CPAC பேரணி ஆகிய இடங்களில் அவரது ராக்ஸ்டார் வரவேற்புகள் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.

வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போருக்குத் தொழிலாளர்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்த சமூகத் தாக்குதல்களில் தங்கியுள்ளது.

இந்தப் பின்னணியில், அரசாங்கம், IMF மற்றும் வாஷிங்டனுடன் பிந்தைய சதித்திட்டங்களைப் போல, பெரோனிஸ்ட் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்கள் ஒரு “ஒற்றுமையில்” ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் போலி-இடதுகளால் முன்னெடுக்கப்படும் தேசியவாத வேலைத்திட்டம், பேரழிவுக்கான ஒரு செயல்முறையாகும். 

போலி-இடது தொழிலாளர் கட்சி (PO) “தொழிற்சங்கங்களுடன் [முறைசாரா மற்றும் வேலையற்ற தொழிலாளர்களின்] மறியல் செய்பவர்கள் (piquetero) இயக்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத் திட்டத்தை” வலியுறுத்துகிறது, இது இரண்டு நிகழ்வுகளிலும் பெரோனிஸ்டுகளால் வழிநடத்தப்படுகிறது. இதற்கிடையில், பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில் உள்ள வெகுஜனக் கூட்டங்களில், புவெனஸ் அயர்ஸ் (Buenos Aires) முழுவதும் தன்னிச்சையாக வளர்ச்சியடைந்துவரும், அவர்களை பெரோனிசத்தின் பின்னால் திருப்பி விடுவதற்கு சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PTS) தலையிடுவதில் கவனம் செலுத்துகிறது, அதன் தேசிய தலைமையின் ஒப்பந்தங்களின் அரசியல் சுருக்கமாக கூறுவதில், “பெரோனிசம் தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் மையங்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் மகத்தான வலிமையைப் பெறுவதற்கான வழிமுறையாக, இந்த முன்முயற்சிகளில் சேர அவர்களின் அணிகளை அழைக்கவும், அவர்கள் மீது போராட்ட நடவடிக்கைகளை சுமத்தவும்…” PTS தனது ஆதரவாளர்களை இந்த கூட்டங்களில் சேர அழைப்பு விடுக்கிறது.

இடது மற்றும் தொழிலாளர் முன்னணி-ஒற்றுமை (FIT-U) தேர்தல் கூட்டணியை வழிநடத்தும் PO மற்றும் PTS, “புரட்சிகர பாராளுமன்றவாதத்தை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறும்போது, காங்கிரஸிலிருந்து தனது சர்வவல்லமை மசோதாவை இழுக்க மிலே முடிவு செய்ததை இருவரும் ஒரு பெரிய “வெற்றியாக” முன்வைத்துள்ளனர் அதாவது மில்லியன் கணக்கானவர்கள் பட்டினி கிடக்கும்போதும், பல்லாயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்படும்போதும் ஒரு “வெற்றி” என முன்வைத்துள்ளனர்.

மிலேயைப் பொறுத்தவரை, இது ஒரு தந்திரோபாய சூழ்ச்சியாக இருந்தது, அதைத் தொடர்ந்து சில மிகக் கொடூரமான சமூக வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை ஆணையின் மூலம் சுமத்தியுள்ளது.

போலி-இடதுகளின் மனநிறைவான பதில் அதன் தலைமையின் சமூகத் தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பெரோனிஸ்ட் தொழிற்சங்க அதிகாரத்துவம், காங்கிரஸ், தேசிய சீர்திருத்தவாதம் மற்றும் முதலாளித்துவ அரசியல் ஆகியவற்றில் மாயைகளை வேண்டுமென்றே உருவாக்க முற்படும் நடுத்தர வர்க்கத்தின் இணக்கமான அடுக்குகளுக்காக இந்த அமைப்புகள் பேசுகின்றன.

குறிப்பாக ஒரு அறிக்கையில், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அவர் உற்சாகப்படுத்தினார். “ஒரு புனிதமான உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, சைகைகள் மற்றும் மாயவாதம் நிறைந்தது, ஆனால் நடைமுறையான மூலோபாயம் இல்லாமலிருக்கிறது என்று மிலேயின் இஸ்ரேல் பயணத்தைப்பற்றி PTS வெளியீடான La Izquierda Diario இல் எழுதியிருக்கிறது.

மிகவும் திவாலான அரசியல் முன்னோக்கு மட்டுமே அத்தகைய அறிக்கைக்கு வழிவகுக்கும், இது சர்வதேச மற்றும் வரலாற்று கேள்விகளுக்கு முற்றிலும் குருட்டுத்தனமாக இருக்கிறது. இந்த சக்திகள் வரலாற்றிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை மற்றும் கற்றுக் கொள்ளவும் முடியாது.

மிலேயின் பயணம் முதலில் “நடைமுறை மூலோபாயத்தைப்”பின்பற்றியது, அதாவது சடத்துவரீதியான கணக்கீடுகளின் அடிப்படையில் ஆகும். உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல்:

ஆர்ஜென்டினா ஆளும் வர்க்கம், இஸ்ரேலிய முதலாளித்துவத்துடனான தனது வரலாற்று எதிர்ப்புரட்சிகர உறவை, மிகவும் சுறுசுறுப்பான அடிப்படையில், புதுப்பிப்பதற்கான வழிமுறையாக காஸா மக்களின் இரத்தத்தால் கைகளை நனைத்துக் கொண்டிருக்கிறது.

இது குறிப்பாக 1976-1983 ஆர்ஜென்டினா இராணுவ சர்வாதிகாரத்தின் போது 30,000 இடதுசாரி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் படுகொலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

முக்கிய ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கும் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ சர்வாதிகாரத்தின் பாரம்பரியத்தை ஒரு அவசியமான “போர்” என்று மிலே பாதுகாத்துள்ளார். போலி-இடதுகள் 1970களில் தங்களின் சொந்த முன்னோடிகளின் கொள்கைகளை மீண்டும் கூறுவதுடன், ஆளும் வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரத்தின் மற்றொரு திருப்பத்திற்கு முன்னால் தொழிலாளர்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்குகிறது.

அதன்மூலம் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் பேரணிக் கூட்டங்கள் மூலம், தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தை கோருகிறது. சீர்திருத்தங்கள் செய்ய அழுத்தம் கொடுப்பதன் அடிப்படையில் பட்டினி, வறுமை மற்றும் வேலை வெட்டுக்களை எதிர்த்துப் போராட முடியாது என்று ஆர்ஜென்டினாவில் உள்ள தொழிலாளர்கள் பரந்தளவில் முடிவு செய்து வருகின்றனர். பல ஆண்டுகால மூலதன வெளியேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணவீக்கம் போன்றவைகளால் சலுகைளைப் பெறுவதற்கு இடமில்லை என்பதைக் காட்டுகிறது.

இது போலி-இடதுகள் வலியுறுத்துவது போல் ஊதிய உயர்வுக்கான தொழிற்சங்கப் போராட்டம் அல்ல, மாறாக ஆர்ஜென்டினா முதலாளித்துவம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் சிக்கன நடவடிக்கை, போர், இனப்படுகொலை மற்றும் சர்வாதிகார வேலைத்திட்டத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் என்பதை தொழிலாளர்கள் உணர வேண்டும். உலகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது.

பெரோனிசத்துடனான துரோக “ஒற்றுமை” மற்றும் FIT-U இன் போலி இடதுகளைத் தீர்க்கமாக நிராகரிக்கப்பட வேண்டும், அதற்குப் பதிலாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களுக்கு திரும்ப வேண்டும். இந்த திருப்பம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் திரட்டப்பட்ட வரலாற்று மற்றும் தத்துவார்த்த ஆயுதக் களஞ்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், அது இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.