மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எதிர்க்கட்சியின் ஊழல், வலதுசாரி பண்பை பயன்படுத்திக்கொள்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தியர்கள், ஏழு கட்ட தேசியத் தேர்தலின் முதல் கட்டமாக, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 39 தொகுதிகளும் உட்பட 100க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வாக்களிக்கவுள்ளனர். ஜூன் 1 அன்று, வாக்களிப்புகள் முடிவடைய உள்ளன. இந்தியாவின் இருசபை நாடாளுமன்றத்தின்,  கீழ்சபை மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சபையான, 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை என்பவற்றின் தேர்தல் முடிவுகள், ஜூன் 4 அன்று அட்டவணைப்படுத்தப்படும்.

பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்த ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் உட்பட, முழு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்குவதற்கான அவசரத்தை இந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 9 ஏப்ரல் 2024 செவ்வாய்க் கிழமை, சென்னையில் தேசியத் தேர்தல் பிரச்சாரத்தின் வீதி ஊர்வலத்தின் போது பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) சின்னமான தாமரையைக் காட்டுகிறார். [AP Photo/AP Photo]

தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்தும் மூன்றாவது முறையாக ஐந்தாண்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, 30க்கும் மேற்பட்ட கட்சிகளைக் கொண்ட, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி அல்லது இந்தியா (INDIA) என அழைக்கப்படும் ஒரு குழப்பமான எதிர்க்கட்சித் தேர்தல் கூட்ணிக்கு தலைமை தாங்குகிறது.

மோடியும் அவரின் இந்து மேலாதிக்க பா.ஜ.க.யும் “ஜனநாயகத்தை அழிப்பதில்” இருந்து தடுப்பதற்கான ஒரே வழி, தமது இந்தியா என்ற கூட்டணி அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதுதான் என்று, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் உட்பட அவர்களது கூட்டாளிகள் கூறி வருகின்றனர். ஒரு “ஜனநாயக அரண்” என்பதை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா கூட்டணியின் அரசாங்கம் ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாக இருப்பதுடன், அது “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தம் மற்றும் சீனாவிற்கு எதிரான “இந்தோ-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை” என்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் செயல்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லும்போது, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுடன் நேருக்கு நேர் மோதலுக்கு வரும். 

ஆசியாவின் முதல் மற்றும் இரண்டாவது பணக்காரர்களான முகேஷ் அமாபானி மற்றும் கெளதம் அம்பானி உட்பட இந்திய பெருவணிகத்திடமிருந்தும் பெருநிறுவன ஊடகங்களிலிருந்தும் பா.ஜ.க. அரசாங்கம் வலுவான ஆதரவைப் பெறுகிறது. தனியார்மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும், தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களில் எஞ்சியிருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கும், வெகுஜன எதிர்ப்பின் மத்தியில் ஏனைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், உலக அரங்கில் தங்களின் பெரும் அதிகார இலட்சியங்களை முன்நகர்த்துவதற்குமான சிறந்த வழிமுறையாகக் அவர்கள் மோடி அரசாங்கத்தை கருதுகின்றனர்.

மோடி அரசாங்கம், அதன் 10 ஆண்டு கால ஆட்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க சர்வாதிகாரத் தன்மையை எடுத்துள்ளது. அது, அதன் பாசிச சக்திகளின் தளத்தை அணிதிரட்டி, பெருகிவரும் சமூக கோபம் மற்றும் விரக்தியை பிற்போக்கு வழியில் திசைதிருப்புகின்ற மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துகின்ற நோக்கத்துடன், தொடர்ச்சியான வகுப்புவாத தூண்டுதலில் ஈடுபட்டுள்ளது. 2019 அரசியலமைப்பு சதியின் மூலம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரை சுயாட்சி அந்தஸ்தை பறித்தமை, ஜனநாயக நெறிமுறைகளை மீறுகின்றமை, பெரும்பாலும் பாராளுமன்றத்தை புறக்கணித்து செயல்படுகின்றமை, இடதுசாரி அரசியல் எதிரிகளை சோடிக்கப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கின்றமை போன்றவற்றில் அது இன்னும் வெட்கக்கேடான ஆட்சியாகிவிட்டது. ஜனவரியில், ஒரு வரலாற்றுக் குற்றத்தை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை வெளிப்படையாக மீறி .பா.ஜ.க. தூண்டிவிட்ட இந்து வெறியர்களால் இடித்துத் தள்ளப்பட்ட 16ஆம் நூற்றாண்டு மசூதியான, முன்னாள் பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்து தேசியவாதக் கோவிலை மோடி திறந்துவைத்ததை தேசியக் காட்சியாக ஆக்கியது. 

2002 முஸ்லீம்-விரோத குஜராத் படுகொலையைத் தூண்டிவிட்டு அதற்கு தலைமை தாங்கியதன் காரணமாகவே முதன்முதலில் தேசிய முக்கியத்துவம் பெற்ற மோடியை, இந்து “பலசாலி” மற்றும் புராண இந்துக் கடவுளான ராமனின் தீவிர பக்தராக தூக்கிப் பிடிப்பதைச் சுற்றியே பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரம் சுழல்கிறது.

இந்தியாவின் தொழில்வாய்ப்பு நெருக்கடி

எதிர்க்கட்சிகளை “ஊழல்”, “தேசவிரோத” மற்றும் முஸ்லீம் “தந்திரவாதிகள்” என்று சாடாத சந்தர்ப்பங்களில், மோடியும், அவரது முக்கிய உதவியாளரான உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவர்களது அடியாட்களும் இந்தியாவின் “உலகை வெல்லும்” பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் உலக விவகாரங்களில் இந்தியாவின் அந்தஸ்து அதிகரித்து வருவது பற்றியும் பிரச்சாரப் பாதையில் பெருமை கொள்கிறார்கள்.

இவற்றில் பெரும்பாலானவை தேசியவாத மேடைப் பேச்சு மட்டுமே. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியானது தனியார் முதலீட்டைக் காட்டிலும் தாங்க முடியாத நிதி-பற்றாக்குறையான மாநில உள்கட்டமைப்பு செலவினங்களால் பெரும்பாலும் இயக்கப்படுகிறது. கொள்வனவு சக்தி சமநிலை அடிப்படையில் பார்த்தால் இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது அதேவேளை, உலகளவில் ஒருங்கிணைந்த உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரியல் பொறியியல் மற்றும் பிற நவீன துறைகளுடன் பார்க்கும் போது, பல விஷயங்களில் பின்தங்கிய நிலையில் உள்ள அந்த நாடு, சிறிய உற்பத்தி மற்றும் மிக-பழமையான தொழில்நுட்ப அடிப்படையிலான பிரமாண்ட “முறைசாரா” பொருளாதாரத்தில் தங்கியிருக்கின்றது.

கடந்த தசாப்த பா.ஜ.க. ஆட்சியிலும், இந்திய முதலாளித்துவம் அதன் தோல்வியடைந்த சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசு தலைமையிலான வளர்ச்சி மூலோபாயத்தை கைவிட்டு, அமெரிக்கா தலைமையிலான உலக முதலாளித்துவ ஒழுங்கில் முழுமையாக ஒருங்கிணைப்பதற்கு ஆதரவாக மாறிய கடந்த 33 ஆண்டுகளிலும், இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், அதன் பலன்கள் ஆளும் உயரடுக்கினாலும் அவர்களின் உயர்-நடுத்தர வர்க்கத்தினராலும் ஏறக்குறைய முழுவதுமாக ஏகபோகமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சமூக சமத்துவமின்மையானது தெற்காசியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்தில் காணப்பட்ட உயர்ந்த மட்டத்தை விட, சமகாலத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டுகளில், மக்கள்தொகையில் முதல் 1 சதவிகிதத்தினர் இந்தியர்கள் சம்பாதித்த மொத்த வருமானத்தில் 22.6 சதவிகிதத்தை விழுங்கியிருப்பதோடு அனைத்து சொத்துக்களிலும் 40.1 சதவிகிதத்தை தம்வசம் கொண்டுள்ளனர். அதே நேரம், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதமானோர், இந்தியாவின் வருவாயில் 15 சதவீதத்தையே சம்பாதித்துள்ளதுடன், வெறும் 6.4 சதவீத பங்கு சொத்தையே பகிர்ந்துகொள்வதுடன், இந்தியாவின் பரந்த பெரும்பான்மையினர் வறுமையிலும், ஏதேனும் துரதிர்ஷ்டம் (வேலை இழப்பு, குடும்பத்தில் நோய் போன்றவை) ஏற்பட்டு பொருளாதாரப் படுகுழியில் தள்ளப்படுவோமா என்ற அச்சத்திலும் வாழ்கின்றனர். அது போலவே, கோடிக்கணக்கான இந்தியர்கள் ஊட்டச் சத்தின்மையாலும், கடும் வறுமையினாலும் பீடிக்ப்பட்டு அவதிப்படுகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில், முந்தைய தசாப்தத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட “வேலையின்மை அதிகரிப்பு” பிரச்சனை, இன்னும் கூர்மையாகியுள்ளது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின்படி, 2023இல் இந்தியாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 45.5 சதவீகிதம் ஆகும்.

இந்தியாவின் வேலையில்லா நெருக்கடியின் மற்றொரு அறிகுறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் பகுதியினரின் அதிகரிப்பு ஆகும். கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் மோடி அரசாங்கத்தால் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு கைவிடப்பட்ட இந்தியாவின் நகரங்களை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அநேகமானோர், விவசாய வருமானம் பெரும்பாலும் தேக்கநிலையில் இருந்தாலும், திரும்பி வரவில்லை. வளரும் நாட்டில் விரைவான முதலாளித்துவ வளர்ச்சியின் நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்படுவதற்கு முற்றிலும் மாறாக, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சதவீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது 2018-19 இல் 42.5 சதவீதத்திலிருந்து 2022-23இல் 45.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனான போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் அதற்கு ஒரு பிராந்திய அரசாக இந்தியா

உலக அரங்கில் இந்தியாவின் உயர்ந்த நிலையைப் பற்றிய மோடி மற்றும் பா.ஜ.க.யின் கூற்றுகளைப் பொறுத்தவரை, உலக புவிசார் அரசியலில் புது டெல்லி வகிக்கும் முற்றிலும் பிற்போக்கு வகிபாகத்தை தவிர, அவர்கள் வேறு எதையும் உறுதிப்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான அதன் முன்னோடிகளால் உருவாக்கப்பட்ட இந்திய-அமெரிக்க கூட்டணியை கட்டியெழுப்பி, பா.ஜ.க. அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற, அனைத்து பக்க இராணுவ மூலோபாயத் தாக்குதலில் இந்தியாவை ஒரு களமுனை நாடாக மாற்றியுள்ளது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் சீனச் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றுவது; அமெரிக்கா மற்றும் அதன் மிக முக்கியமான ஆசிய பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் விரிவாக்க வலையில் இந்தியாவை ஒருங்கிணைப்பது; இந்தியாவை அமெரிக்க ஆயுத உற்பத்தியின் மையமாக மாற்றுவது; மற்றும் அமெரிக்க-சீனா போர் ஏற்பட்டால், இந்தியாவின் இராணுவம் அமெரிக்காவிற்கு எவ்வாறு உதவுவது என்பது பற்றிய வாஷிங்டனின் கோரிக்கையின்படி திட்டங்களை வரைதலும் இதில் அடங்கும்.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய வெற்றிகளின் மீது இந்திய வணிக மற்றும் புவிசார் அரசியல் உறவுகளை விரிவுபடுத்தும் அதன் நம்பிக்கை உட்பட, இந்தியாவின் புதிய “தகமைக்கு” இணங்க, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இனப்படுகொலை போருக்கு ஆதரவளிப்பதில் வாஷிங்டன் மற்றும் பிற மேற்கத்திய சக்திகளுடன் புது டெல்லி இணைந்துள்ளது. பல மாதங்கள் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளின் பின்னரே மோடி அரசாங்கம் ஐ.நா.வில் அர்த்தமற்ற போர்நிறுத்த தீர்மானத்திற்கு வாக்களித்தது.

தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மத்தியில் வெகுஜன சமூக அதிருப்தியின் பல சமிக்ஞைகள் காணப்படுகின்றன. 2022-23 மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போன்ற பல நீடித்த வேலைநிறுத்தப் போராட்டங்களும் இதில் அடங்கும்.

பா.ஜ.க.யின் மக்கள் ஆதரவின் வலிமை பற்றிய அனைத்து அறிவிப்புகளுக்கு மத்தியிலும், மோடி, ஷா மற்றும் பா.ஜ.க.யும் வெகுஜன எதிர்ப்பு திடீரென வெடிக்கக் கூடிய வாய்ப்பைக் கண்டு அஞ்சுகின்றனர். அவர்கள் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படைகளை அணிதிரட்டியதும் மற்றும் பொலிஸ் அரச வழிமுறைகளைப் பயன்படுத்தியதும் இதனாலேயே ஆகும்.

தங்கள் அரசியல் ஆதிக்கத்தைத் தக்கவைக்க பணம், வன்முறை, வளைந்து கொடுக்கும் ஊடகம், வெறித்தனமான வகுப்புவாதம் மற்றும் பிற வகையான வாய்வீச்சு மற்றும் சூழ்ச்சிகளில் தங்கியிருப்பதைப் பற்றி தான் விழிப்புடன் இருப்பதாலேயே, பா.ஜ.க. தனது முதலாளித்துவ அரசியல் எதிரிகளுக்கு எதிராக தனது வசம் உள்ள எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைவிதி இதற்கு ஒரு உதாரணம் ஆகும். டெல்லியின் முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய பங்காளிகளில் ஒன்றான ஆம் ஆத்மி கட்சியின் (AAP, Common Man’s Party) முதன்மைத் தலைவருமான கெஜ்ரிவால், மார்ச் 21 அன்று முதல் அரசியல் ரீதியாக புனையப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வலதுசாரி பொறி

இந்தியாவின் உழைக்கும் மக்களைப் பற்றிய மோடி அரசாங்கத்தின் பீதியையும், அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளின் மீதான தங்களின் விரோதத்தையும் எதிர்க்கட்சிகள் பகிர்ந்து கொள்கின்றன.

தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பதவியில் இருக்கும் போது, இந்திய ஸ்டாலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் அதன் சிறிய, சிரேஷ்ட சகோதர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உட்பட, இந்தியா கூட்டணியை உள்ளடக்கிய அனைத்து கட்சிகளும், “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகளை செயல்படுத்தியுள்ளன. இதேபோல், அவர்கள் அனைவரும் இந்தியா வாஷிங்டனை தழுவிக்கொண்டதற்கும், சீன-விரோத இந்திய-அமெரிக்க கூட்டணியை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடித்தளமாக மாற்றுவதற்கும் ஒத்துழைத்துள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக நேரு-காந்தி குடும்பத்தால் வழிநடத்தப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி, 2014ல் தேசிய பதவியிலிருந்து வீழ்ந்ததில் இருந்து அடுத்தடுத்து தேர்தல் தோல்வியில் விழுந்துள்ள, காங்கிரஸ்- பெரும் வணிக ஊழல் மீதான வெகுஜனக் கோபத்தை, ஆட்சிக்கு வந்ததும் பா.ஜ.க.யால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால், அதைவிட முக்கியமாக, அதிகரித்து வரும் வேலையின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மையின் மீதான கோபம் மற்றும் நவ-தாராளவாத “சீர்திருத்தத்திற்கு” ஒரு மனிதாபிமான முகத்தை கொடுக்க முடியும் என்ற காங்கிரஸின் வாக்குறுதியின் தோல்வியில் இருந்தும் அது பயனடைந்தது.

இந்தியா கூட்டணியானது வெகுஜன கோபத்திற்கு, குறிப்பாக வேலைவாய்ப்பு நெருக்கடியை குவிமையப்படுத்தி அறைகூவல் விடுக்கின்றது. அதன் உறுப்புக் கட்சிகள், தொழில் உருவாக்கம் மற்றும் ஊதியத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுக்கின்றன. (இந்தியா கூட்டணி என்பது தேர்தல் களத்தில் இல்லை.)

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் வலதுசாரி சரித்திரத்தை கருத்தில் கொண்டால், இந்த அறைகூவல்கள் வெகுஜனங்களை ஈர்க்கத் தவறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர்கள் உண்மையில் முற்றிலும் மோசடியானவர்கள் மற்றும் வெளிப்படையாகவே அப்படி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது, பெரும் வணிகர்களின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட வாக்குறுதிகளுடன் சேர்த்து, பொதுத்துறை மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் (PSUs) தொழில் ஒப்பந்தம் செய்வதை நிறுத்துவதாகவும், பா.ஜ.க.யின் வலதுசாரி தொழில் சட்ட “சீர்திருத்தத்தை” இரத்து செய்வதாகவும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதை உறுதி செய்வதாகவும் வாக்குறுதியளிக்கின்றது. பா.ஜ.க.யின் அதிகப்படியான “கட்டுப்பாடுகளை” அகற்றுவதன் மூலம் வணிகத்திற்கான “ஆரோக்கியமான, அச்சமற்ற மற்றும் நம்பகமான சூழலை” மீட்டெடுப்பதும்; இராணுவ செலவினங்களை உயர்த்துவதும்; மற்றும் சர்ச்சைக்குரிய எல்லையில் சீன அழுத்தத்திற்கு அடிபணியும் மோடியின் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதையும் பெரும் வணிகத்துக்கான வாக்குறுதிகள் உள்ளடக்கியுள்ளன.

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியா கூட்டணியின் கூற்றுக்கள் போலித்தனமானவை. ஊடகங்களின் ஒரு பகுதி, காங்கிரஸின் கொள்கைகளை “மெல்லிய-இந்துத்துவ” என்று அழைக்க வழிவகுத்தளவுக்கு, காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக இந்து வலதுசாரிகளுடன் ஒத்துப்போய் கூட்டாக வேலை செய்து வந்துள்ளது. ஆனால், இந்தியா கூட்டணியை உருவாக்கி தலைமை வகித்த பிரதான கட்சிகளின் குழுவில், பாசிசவாத, வெளிப்படையான இந்துத்துவ-சார்பு மற்றும் முன்னாள் பா.ஜ.க. கூட்டாளியான சிவசேனா (UBT) உள்ளடங்கி இருப்பதானது அது “மதச்சார்பற்ற” அரண் என்று கூறிக்கொள்வதன் பொய்யை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

ஸ்ராலினிச சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ., இந்திய மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையுடன் சேர்ந்து, பிற்போக்கு இந்தியக் கூட்டணிக்கு ஒரு “முற்போக்கு” முகத்தைக் கொடுக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல தசாப்தங்களாக, ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களது இடது முன்னணியும் வர்க்கப் போராட்டத்தை நசுக்கி, தொழிலாள வர்க்கத்தை பெருவணிக காங்கிரஸ் கட்சிக்கும், வலதுசாரி சாதிய மற்றும் இன-வகுப்புவாதக் கட்சிகளுக்குள் அடைத்து வைத்துள்ளன. இதன் விளைவு பா.ஜ.க.யும் அதன் இந்து பாசிசக் கூட்டாளிகளும் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன.

பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே சாத்தியமான மூலோபாயமானது, வர்க்கப் போராட்டத்தையும் ட்ரொட்ஸ்கியின் மூலோபாயம் மற்றும் நிரந்தரப் புரட்சியின் வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தியத் தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளர்களைத் தங்களுக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைக்கவும் இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைபு செய்வதற்காகவும் முன்னெடுக்கும் போராட்டத்தில், முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக, தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.

Loading