2022 இலங்கை எழுச்சியிலிருந்து 2024 இல் பங்களாதேசுக்கான அரசியல் படிப்பினைகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அண்டை நாடான பங்களாதேஷ் 2024 ஜூலை-ஆகஸ்ட்டில் வெகுஜன போராட்டங்களால் அதிர்ந்ததுடன், உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு அதிர்ச்சி அலைகளை அனுப்பியது.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் முன்னாள் பங்களாதேஷ பிரதமர் ஷேக் ஹசீனா [AP Photo/Eranga Jayawardena/Kimimasa Mayama]

தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இரண்டு எழுச்சிகளும் ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கும் உலகளாவிய முதலாளித்துவத்தின் அதே நெருக்கடியால் உந்தப்பட்டன. அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்துவதால், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியின் ஒரு பகுதியாக இந்த எழுச்சிகள் வெடிக்கின்றன.

இந்த எழுச்சிகளிலிருந்து தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெறுவதானது, வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்குத் தயாராவதற்கு இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாததாகும்.

2022ல், கொடிய கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ தூண்டிவிட்ட போரால் விநியோகச் சங்கிலிகள் கடுமையாக சீர்குலைந்த பின்னர், விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருந்த நிலையில், இலங்கை முழுவதும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்தன. 2022 தொடக்கத்தில் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் சரிந்ததால், அரசாங்கம் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கவும், இன்றியமையாத இறக்குமதிகளை நிறுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், இலங்கையில் நெருக்கடி கடுமையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிடைக்கக்கூடிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெற நீண்ட வரிசைகள் உருவாகிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை. நீண்ட மின்வெட்டு ஒவ்வொரு நாளும் வழக்கமாகிவிட்டது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ராஜினாமா செய்ய வேண்டும், 'கோட்டா வீட்டிற்கு போ”, '225 பேரும் வேண்டாம்' என்ற கோரிக்கைகளுடன் மக்கள் வீதிகளில் இறங்கினர். தன்னிச்சையான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததால் இந்த இயக்கம் காட்டுத் தீ போல பரவியது. மத்திய கொழும்பில் ஆயிரக்கணக்கானோர் காலி முகத்திடலை நிரந்தரமாக ஆக்கிரமித்ததுடன் ராஜபக்ஷ அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவை விதித்தபோது மக்கள் அரச அடக்குமுறை அச்சுறுத்தலை மீண்டும் மீண்டும் மீறினர்.

தொழிலாளர் வர்க்கம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியாக போராட்டத்தில் நுழைவதைத் தடுக்க தொழிற்சங்கங்கள் தீவிரமாக உழைத்தன. இருப்பினும், தொழிலாளர்கள் பெரிய குழுக்களாக போராட்டங்களில் சேரத் தொடங்கியதால், தொழிற்சங்க அதிகாரிகள் ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில் இரண்டு ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களாக மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அரசாங்கமும் இனவாதிகளும் வெகுஜன இயக்கத்தைப் பிளவுபடுத்த இனவாத வெறுப்பைத் தூண்ட முயற்சிப்பதை எதிர்த்து, இன மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து மில்லியன் கணக்கான மக்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

ஒரு வெகுஜன எழுச்சியை எதிர்கொண்ட அரசாங்கம் சரிந்தது, ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். 

கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 9 ஜூலை 2022 அன்று, இலங்கை ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் தெருவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். [AP Photo/Amitha Thennakoon]

இருப்பினும், இராஜபக்ஷ ஆட்சியை மாற்றுவது, முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான பாராளுமன்றக் கட்சிகள், அவற்றின் தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுசாரிகளின் கைகளில் விடப்பட்டது. முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்த ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த அதேநேரம், தொழிற்சங்கங்களும் முன்னிலை சோசலிசக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தை இந்தக் கோரிக்கைக்கு அடிபணியச் செய்தன.

இதன் விளைவாக, மதிப்பிழந்த பாராளுமன்றத்தால், இராஜபக்ஷவை மாற்றுவதற்காக, சர்வதேச நாணய நிதிய சார்பு, அமெரிக்க கைப்பாவையான ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயக விரோதமான முறையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு கடுமையான சட்டத்தின் ஆதரவுடன் கூடிய பொலிஸ்-அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை அவர் ஈவிரக்கமின்றி செயல்படுத்தி வருகிறார்.

'2022 எழுச்சி, விக்கிரமசிங்க ஆட்சி பதவிக்கு வருவதில் முடிவடைவது தவிர்க்க முடியாத ஒன்றல்ல,' என சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ அமைப்பினுள் உழைக்கும் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடையாது என்று வலியுறுத்தியது. எனவே, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதில் தொழிலாள வர்க்கம் முன்முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிலிருந்தும் சுயாதீனமாக, விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதன் பேரில், ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களுக்கு நாம் அறைகூவல் விடுத்தோம்.

இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றம் எதுவெனில், இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளைக் அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களினதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கு பிரச்சாரம் செய்யுமாறு, சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் வலியுறுத்தியது. முதலாளித்துவ அரசியல்வாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் பாராளுமன்றத்திற்கு மாறாக, அத்தகைய மாநாடு தொழிலாள வர்க்க பிரதிநிதிகள் தங்கள் முக்கியமான சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயத்தை வகுப்பதற்கான வழிகளை வழங்கும்.

இருப்பினும், எந்தவொரு வெகுஜன இயக்கத்திலும் முக்கியமான பிரச்சினை அரசியல் தலைமைத்துவம் ஆகும். முதலாளித்துவத்திற்கும் அதன் அனைத்து பாதுகாவலர்களுக்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்குத் தேவையான  ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியாக, சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நாங்கள் விளக்கினோம்.

பங்களாதேஷில், அவாமி லீக் அரசாங்கத்தின் கீழ், நீதித்துறையால் மீண்டும் இயற்றப்பட்ட பிற்போக்கு மற்றும் பிளவுபடுத்தும் தொழில் இடஒதுக்கீட்டு முறைமைக்கு எதிராக, பாரபட்சத்துக்கு எதிரான மாணவர் (SAD) என்ற பதாகையின் கீழ், பல்கலைக்கழக மாணவர்கள் ஜூலை தொடக்கத்தில் தங்கள் போராட்டங்களைத் தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்ததால், பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் குண்டர்களுடன் சேர்ந்து பொலிஸ் மற்றும் இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டு, ஏராளமான மாணவர்களைக் கொன்றார்.

5 ஆகஸ்ட் 2024 திங்கட்கிழமை, பங்களாதேஷின் டாக்காவில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் இராஜினாமாவைக் கொண்டாடும் போது எதிர்ப்பாளர்கள் கோஷங்களை எழுப்பிய போது. [AP Photo/Rajib Dahr]

இந்த இரத்தக்களரி அடக்குமுறை மற்றும் இணையத் தடை மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை விதித்ததற்கு எதிராக குவிந்துவந்த வெகுஜன கோபம் வெடித்தது. பாகுபாட்டிற்கு எதிரான பாரபட்சத்துக்கு எதிரான மாணவர் அமைப்பு ஆகஸ்ட் தொடக்கத்தில் டாக்காவிற்கு ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்தது. அதில் மில்லியன் கணக்கானவர்கள் இணைந்து, வறுமை, சமூக சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர்கள் மீதான இரக்கமற்ற சுரண்டல் குறித்து ஆழ்ந்த கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் ஹசீனா மற்றும் அவரது அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரினர்.

அலையைத் தடுக்க முடியாமல், இராணுவம் தலையிட்டு, பிரதமரை ராஜினாமா செய்து நாட்டை விட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்லுமாறு கூறியது. பின்னர் மாணவர் அமைப்பு மற்றும் சிவில் குழுக்கள் என்று அழைக்கப்படுபவர்களின் ஆதரவுடன் இராணுவத்தால் நிறுவப்பட்ட இடைக்கால நிர்வாகம், முன்னாள் வங்கியாளரான முகமது யூனஸை தலைமை ஆலோசகராக நியமித்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட யூனஸ், 'நல்லாட்சி மற்றும் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னுரிமை அளித்து, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மீட்டெடுக்க வலுவான மற்றும் தொலைநோக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வேன்' என்பதை உடனடியாக தெளிவுபடுத்தினார்.

'வலுவான மற்றும் தொலைநோக்கு பொருளாதார சீர்திருத்தங்கள்' என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே உள்ளது: அது, பெருவணிகங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாபங்களை உறுதி செய்வதற்காக, உழைக்கும் மக்களை விலைகொடுக்க வைக்கும் கொடூரமான சந்தை-சார்பு சிக்கன நடவடிக்கைளே ஆகும். மேலும், இராணுவத்தின் ஆதரவுடனான இடைக்கால நிர்வாகம், நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, காலவரையின்றி அதிகாரத்தில் இருக்கின்றது. எந்த தேர்தலும் அறிவிக்கப்படவில்லை.

இடது ஜனநாயகக் கூட்டணியில் குழுவாக உள்ள பல்வேறு ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களைப் போலவே, வலதுசாரி பங்களாதேஷ் தேசியக் கட்சியும் (BNP) இடைக்கால ஆட்சிக்கு அதன் முழு ஆதரவையும் உறுதியளித்துள்ளது.

இலங்கையில் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே, அவாமி லீக் மற்றும் பி.என்.பி. கட்சியை ஆதரித்த வரலாற்றைக் கொண்ட ஸ்ராலினிசக் கட்சிகளும், தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன நலன்களுக்காகப் போராடுவதற்காக வெகுஜன எழுச்சியில் ஒரு வர்க்கமாக தலையிடுவதைத் தடுக்க தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டன.

கடந்த 15 ஆண்டுகளாக அவாமி லீக்கின் எதேச்சதிகார மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு உழைக்கும் மக்கள் நியாயமான முறையில் விரோதமாக உள்ளனர். ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அது இரக்கமின்றி அடக்குவதனாது, முதலாளித்துவ ஆட்சியை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் அசிங்கமான முகத்தைத் தவிர வேறில்லை.

இடைக்கால ஆட்சியின் கீழும், இறுதியாக எந்த முதலாளித்துவ அரசாங்கம் அதை பதிலீடு செய்தாலும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீதான தாக்குதல் தீவிரமடையும். நிர்வாகத்திற்குப் பின்னால் முதலாளித்துவ அரசும், எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவமும் உள்ளன. அது அதன் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதை எதற்காகவும் நிறுத்தப் போவதில்லை.

2022 இல் இலங்கையிலிருந்து பெறப்பட்ட பாடம் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள், ஸ்ராலினிஸ்டுகள் உட்பட அவற்றின் இடதுசாரி துணைக்குழுக்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களிலிருந்தும் அரசியல் ரீதியாக விலகிக்கொள்ளாமல், அதன் வர்க்க நலன்களுக்காகப் போராட முடியாது. எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் நடத்துவதற்கு, தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் அவசியம்.

முதலாளித்துவ அமைப்பினுள் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான சமூக நெருக்கடிக்கு எந்த தீர்வும் கிடையாது. லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற முதலாளித்துவ வளர்ச்சி காலங்கடந்த நாடுகளில், சர்வதேச நிதி மூலதனத்துடன் பிணைக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கமானது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இயல்பாகவே இலாயக்கற்றது என்பதை நிரூபித்தார்.

சிறிய பணக்கார உயரடுக்கின் இலாபங்களை அன்றி, மாறாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு சமூகத்தை அடிப்படையில் மறுசீரமைக்க, தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் -தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டம் அவசியமாகும். ட்ரொட்ஸ்கி விளக்கியது போல, அத்தகைய போராட்டம் உலகளாவிய மூலதனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கை, தெற்காசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் சமீபத்தில் நடந்த வெகுஜன எழுச்சிகள், முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கிய முக்கியமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றன. 1947-1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், தொழிலாள வர்க்கத்தைப் பிரித்து தங்கள் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள, இந்திய துணைக் கண்டத்தை ஒரு பிற்போக்கு பிரிவினைவாத அடிப்படையில் இந்து இந்தியா மற்றும் முஸ்லிம் பாகிஸ்தானாகப் பிரித்தனர். இந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் நடவடிக்கைகளின் தளமாக இலங்கை ஒரு தனி நாடாக நிறுவப்பட்டது.

தெற்காசியாவில் ஆளும் வர்க்கங்கள், இனப்படுகொலைகள், உள்நாட்டு மோதல்கள் மற்றும் போர்களுக்கு வழிவகுத்த பிளவுபடுத்தும் இனவாதம் மற்றும் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் அதே பிற்போக்கு வழிமுறைகள் மூலம் மட்டுமே தங்கள் ஆட்சியைப் பராமரித்து வருகின்றன. 1971 இல் பங்களாதேஷ் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்த கொடூரமான சுரண்டல் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்த அடிப்படைப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, இடைக்கால நிர்வாகத்தின் சிக்கன நடவடிக்கை திட்ட நிரலுக்கு எதிராக, தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும், சர்வதேச அளவில் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைக்கவும், நான்காம் அகிலம் மேற்கொண்டுள்ள முன்முயற்சியான, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணையுமாறு பங்களாதேஷில் உள்ள தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எங்களுடன் இணைந்துகொள்ள, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை பங்களாதேஷில் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

பங்களாதேஷில் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை இந்த அரசியல் சவாலை ஏற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலக சோசலிச வலைத் தளத்தைப் படியுங்கள், எங்கள் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் படித்து, WSWS மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் அரசியல் உதவியை உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Loading