மிரட்டல் மற்றும் படுகொலை நடவடிக்கையை புது டெல்லி திட்டமிடுவதாக ஒட்டாவா குற்றம் சாட்டியதை அடுத்து கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்திய அரசாங்க அதிகாரிகளும் உளவுத்துறை முகவர்களும் கனேடிய மண்ணில் மிரட்டல் மற்றும் கொலைப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக, குற்றச் செயல்புரியும் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர் என்பதற்கான 'தெளிவான மற்றும் உறுதிப்படுத்தும்' ஆதாரங்களை ஒட்டாவா புது டெல்லிக்கு வழங்கிய பின்னர் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கிட்டத்தட்ட முற்றிலுமாக முறிந்துள்ளன.

புது டெல்லி, செப்டம்பர் 9, 2023 சனிக்கிழமை, G20 உச்சிமாநாட்டிற்காக பாரத் மாநாட்டு மண்டப மையத்திற்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார் [AP Photo/Evan Vucci, File]

கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் அவரது சமதரப்பு கனேடிய பிரதிநிதி அளித்த ஒட்டாவாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா கோபத்துடன் மறுத்துள்ளது.

திங்களன்று, ஒட்டாவா கனடாவிற்கான இந்தியத் தூதரையும், சட்டவிரோத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறும் மற்ற ஐந்து இந்திய இராஜதந்திரிகளையும் வெளியேற்றியது.

சில மணிநேரங்களுக்குப் பின்னர், தனித்தனி செய்தியாளர் சந்திப்புகளில், ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸ் ஆணையாளர் மைக் டுஹேம் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் புது டெல்லிக்கு எதிரான கனேடிய அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்திக் காட்டினர். 'இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் இரகசிய தகவல் சேகரிப்பு நுட்பங்களை பயன்படுத்தல் உட்பட, தெற்காசிய கனேடியர்களை குறிவைத்து கொலை உள்ளிட்ட பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான நடத்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்' என்று ட்ரூடோ கூறினார்.

நடந்துகொண்டிருக்கும் குற்றவியல் விசாரணைகளையும், நீதித்துறை நடவடிக்கைகளையும் மேற்கோள் காட்டியதன் மூலம், ட்ரூடோ அல்லது டுஹேம் இருவரும் தங்களின் அபாயகரமான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க உறுதியான ஆதாரங்களை வழங்கவில்லை. ஆனால் சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா வகிக்கும் முக்கியத்துவத்தையும், இதன் விளைவாக, இந்திய-கனேடிய உறவுகளை ஆபத்தில் ஆழ்த்த ஒட்டாவாவின் தயக்கத்தையும் கருத்தில் கொண்டதுடன், நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தீவிர வலதுசாரி இந்திய அரசாங்கத்தின் குண்டர் தன்மை பற்றி, அவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி மலையளவு ஆதாரங்களையும் அடித்தளமாகக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கான கனடாவின் தூதரையும், ஐந்து கூடுதல் கனேடிய இராஜதந்திரிகளையும் வெளியேற்றுவதன் மூலம் புது டெல்லி பதிலடி கொடுத்துள்ளது.

அதன் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையில், “இந்திய அரசாங்கம் இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை வலுவாக நிராகரிக்கிறது மற்றும் வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்ட ட்ரூடோ அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக அவற்றைக் கூறுகிறது” என்று வலியுறுத்துகிறது.

ஜூன் 2023 இல் வான்கூவரில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதில், இந்திய தலையீட்டின் 'நம்பகமான உளவுத்துறை தகவல்' கனடாவிடம் இருப்பதாக பதின்மூன்று மாதங்களுக்கு முன்பு ட்ரூடோ பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவில் பிறந்த கனேடியரான நிஜ்ஜார் உலகளாவிய காலிஸ்தான் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார். காலிஸ்தான் இயக்கம் என்பது வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தனி சீக்கிய தேசிய-அரசை உருவாக்குவதற்கான பிற்போக்கு வகுப்புவாத பிரச்சாரத்தை மேற்கொள்ளும் இயக்கமாகும்.

அதைத் தொடர்ந்து, செக் குடியரசில் இருந்து நிகில் குப்தா என்ற இந்திய நாட்டவரை அமெரிக்கா நாடு கடத்தியது, அவர் அமெரிக்க மண்ணில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டினர். குப்தாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை, பன்னூனுக்கு எதிரான படுகொலைச் சதியை இந்திய அதிகாரி ஒருவர் இயக்கியதாகக் குற்றம் சாட்டியது. அவர் வாஷிங்டன் போஸ்ட்டால் விக்ரம் யாதவ் என அடையாளப்படுத்தப்பட்டார். மேலும் அவர் இந்தியாவின் முதன்மையான உளவுத்துறை அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) பணியிலிருப்பவர் என்பதும் அடையாளப்படுத்தப்பட்டது.

பிஷ்னோய் கும்பலுக்கும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில், கனேடிய அதிகாரிகள் காலிஸ்தான் சார்பு செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதற்காக சுமார் 20 பேரை கைது செய்துள்ளனர், இதில் நிஜ்ஜாரின் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்தியரும் உள்ளடங்குவர்.

RCMP இன் கூற்றுப்படி, காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவருமே இல்லையென்றாலும் பலருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான இந்தியாவை தளமாகக் கொண்ட குற்றவியல் அமைப்புடன் தொடர்பு உள்ளது. கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை பிஷ்னோய் கும்பல் வழிநடத்த இந்திய அரசு ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

பிஷ்னோய் தற்போது இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனது குற்றச் செயல்களை எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து நடத்தி வருவதாக இந்திய செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று அவரது செய்தியாளர் கூட்டத்தில் ட்ரூடோவுடன் இணைந்த வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி, நுய்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஒட்டாவா முதலில் பகிரங்கமாக குற்றம் சாட்டியதிலிருந்து, கனடாவில் புது டெல்லியின் இரகசிய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன எனத் தெரிவித்தார்.

கனடாவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இப்போது நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 'இந்திய இராஜதந்திரிகளுக்கிடையேயான உரையாடல்கள் மற்றும் உரைகள்' இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஒரு மூத்த RAW அதிகாரி பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியிருப்பதாகவும், 'உளவுத்துறை சேகரிக்கும் பணிகள் மற்றும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு' அவர்கள் ஒப்புதல் அளித்ததாகவும் ஒட்டாவா புது டெல்லிக்கு தெரிவித்ததாக' வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷா மோடியின் முக்கிய உதவியாளரவார். பல தசாப்தங்களாக நெருங்கிய தொடர்புடைய அவரது தலைவரைப் போலவே அவர் வகுப்புவாத தூண்டுதல்கள் தொடர்மான மோசமான வரலாற்றைக் கொண்டவர், மேலும் மூன்று குற்றவாளிகளின் கூட்டு மரணதண்டனையை (போலி என்கவுண்டர் கொலைகள்) திட்டமிட்டதற்காக இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவினால் குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால், 2014ல் மோடி பிரதமரான பின்னர் இக்குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மோடி மற்றும் ஷா இருவரும் வாழ்ந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சிறையில் இருந்து குண்டர் பிஷ்னோய் இடமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க ஷா உள்துறை அமைச்சராக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக இந்திய செய்தி வலைத் தளமான தி வயர் குறிப்பிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிஷ்னோய் மார்ச் 2023 தொலைக்காட்சி நேர்காணலைக் கொடுக்க கூட அனுமதிக்கப்பட்டார், அதில் அவர் 'நான் ஒரு தேசியவாதி. நான் காலிஸ்தானுக்கு எதிரானவன். நான் பாகிஸ்தானுக்கு எதிரானவன்” என தனது 'தேசபக்தி' பற்றி பெருமையாகக் கூறினார்.

காலிஸ்தான் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கொலை, வன்முறை மற்றும் மிரட்டல் பற்றிய இந்தியாவின் சர்வதேச நடவடிக்கையின் மீது ஒரு வருடத்திற்கும் மேலான இராஜதந்திர தகராறு முழுவதும், ஒட்டாவாவைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது வாஷிங்டன் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு புது டெல்லியின் பதிலில் ஒரு வெளிப்படையான வேறுபாடு உள்ளது.

மோடி அரசாங்கம் கனேடிய குற்றச்சாட்டுகளை ஆர்ப்பாட்டமாக நிராகரித்தாலும், அமெரிக்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை அது செய்துள்ளது. பைடென் நிர்வாகம், அதன் பங்கிற்கு, ஆரம்பத்திலிருந்தே, இந்திய அரசின் கொலைகார நடவடிக்கைகள், அமெரிக்க ஏகாதிபத்திய உலக மூலோபாயத்தில் இந்தியாவை இன்னும் ஆழமாக ஒருங்கிணைக்கும் வாஷிங்டனின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்க அனுமதிக்காது என்பதை தெளிவுபடுத்தியதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீனாவிற்கு எதிராக, பாரிய ஆயுத விற்பனை மற்றும் மேம்பட்ட ஆயுத தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இடையூறாக இருக்கவும்கூடாது என்பதையும் தெளிவுபடுத்தியது.

எவ்வாறாயினும், இந்தியாவிற்கு எதிரான கனடாவின் சமீபத்திய இராஜதந்திர முயற்சியானது வாஷிங்டனுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டதாக நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

ஒரு அமெரிக்க-கனேடிய ' பதுங்கித் தாக்குதல்'

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, “கடந்த ஒரு வாரமாக வாஷிங்டனும் ஒட்டாவாவும் இந்திய சகாக்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அறியப்படுகிறது. அவை நாடுகடந்த படுகொலைகள் மற்றும் அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் சார்பு பிரிவினைவாத பிரமுகர்களைக் கொல்ல சதித்திட்டங்களில் இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரின் ஈடுபாடு குறித்த 'நம்பகமான தகவல்கள்' என்று விவரித்தது...'.

இக்கூட்டங்களின் தன்மையை, ‘'இது அமெரிக்கர்கள் மற்றும் கனேடியர்கள் இருவரின் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதல்' என்று ஒரு உயர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம்” விவரித்தார்.

கடந்த வாரம், பன்னூன் கொலை சதி வழக்கின் குற்றப்பத்திரிக்கை வெளியானதைத் தொடர்ந்து, 'பொறுப்புக் கூறல்' என்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மோடியும் ஷாவும் உருவாக்கிய இந்திய அரசாங்கத்தின் 'விசாரணைக் குழுவின்' பிரதிநிதிகளை வாஷிங்டனுக்கு வருமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை திறம்பட வரவழைத்தது.

பின்னர் அதன் வலைத் தளத்திலிருந்து நீக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிவிப்பின்படி, விசாரணைக் குழு உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வாஷிங்டனுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிங்கப்பூரில் நடந்த இந்தியா, கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் இரகசிய அசாதாரண சந்திப்புக்கு பின்னர், வட அமெரிக்காவில் இந்திய அரசு திட்டமிட்ட ஒரு படுகொலை நடவடிக்கைக்கான 'உறுதியான' ஆதாரங்கள் இருப்பதாக ட்ரூடோவின் பகிரங்க வலியுறுத்தல் மற்றும் ஆறு இந்திய இராஜதந்திரிகளை வெளியேற்றியமை ஆகியவற்றுக்குப் பின்னர் உடனடியாக அவர்கள் அமெரிக்க அதிகாரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கனடாவின் ஆதரவுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் 'பயங்கரவாத செவ்வாய்க் கிழமைகள்' மற்றும் ட்ரம்ப் உத்தரவிட்ட ஈரானிய இஸ்லாமிய காவலர் படைத் தலைவர் காசிம் சுலைமானியை 2020 கொன்றது போன்ற வெளிநாட்டு மண்ணில் படுகொலைகளை மேற்கொள்வது உட்பட வாஷிங்டன் விருப்பப்படி சர்வதேச சட்டத்தை மீறுகிறது. இந்த இரண்டு வட அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசுகளும் இஸ்ரேல் காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதலை நடத்தி, மத்திய கிழக்கு எங்கிலும் வெறியாட்டம் நடத்தி, ஒரு போர் குற்றத்தையும் சர்வதேச சட்ட மீறல்களையும் வேண்டுமென்றே திணித்து வருகின்ற நிலையில், கடந்த ஆண்டு பூராவும் இஸ்ரேலை இறுதிவரை ஆதரவளித்துள்ளன.

தேசிய இறையாண்மை, தேசிய கௌரவம் மற்றும் உள்நாட்டு அரசியல் ஒருங்கிணைப்பு ஆகிய காரணங்களுக்காக, வாஷிங்டனும் ஒட்டாவாவும் புது டெல்லி தங்கள் சட்டங்களை மீறவும் தங்கள் குடிமக்களை கொல்லவும் வெறுமனே அனுமதிக்கத் தயாராக இல்லை. சமீப ஆண்டுகளில் 20 படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தானில் இந்தியா அதைச் செய்தால் அது ஒரு விடயம், ஆனால் வான்கூவர் அல்லது நியூ யோர்க் தெருக்களில் செய்தால் அது வேறொரு விடயமாகின்றது.

வாஷிங்டன் இப்போது இந்தப் பிரச்சினையைத் தூண்டுவதற்கும் அதன் நீண்டகால நெருங்கிய நட்பு நாடான கனடாவை ஒரு வகையான சாக்குப்போக்காகப் பயன்படுத்த தேர்ந்தெடுத்ததற்கும் தெளிவாக வேறு காரணங்கள் உள்ளன.

உக்ரேன் தொடர்பாக ரஷ்யா மீது அவர்கள் தூண்டிய போரில் நேட்டோ சக்திகளை ஆதரிப்பதில் புது டெல்லி விலகியிருப்பது தொடர்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் விரக்தியும் கோபமும் அடைந்துள்ளனர். மேலும் உக்ரேனின் இராணுவ நிலைப்பாடு மேலும் மோசமடைவதால் அந்த விரக்திகள் அதிகரித்துள்ளன.

சீனாவிற்கு எதிரான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-மூலோபாய கூட்டணிகள் மற்றும் வாஷிங்டன் மற்றும் அதன் முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான 'உரையாடல்கள்' ஆகியவற்றின் வலைப்பின்னலில் இந்தியா தொடர்ந்து தன்னை ஒருங்கிணைத்து வருகிறது. எவ்வாறாயினும், அதன் ஆயுதங்கள் மற்றும் அணுசக்தித் திட்டத்தின் பெரும்பகுதியைச் சார்ந்துள்ள ரஷ்யாவுடனான அதன் பல தசாப்த கால மூலோபாய கூட்டாண்மையை கணிசமாகக் குறைக்கும் அல்லது உடைக்கும் அமெரிக்க அழுத்தத்தை அது தொடர்ந்து எதிர்க்கிறது. மேலும், அமெரிக்கா விதித்துள்ள மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையால், தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் திறன், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இப்போது இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வினியோகத்தர் ஆகும். இது 2021 இல் வெறும் 2 சதவீத சந்தைப் பங்கில் இருந்தது, இந்த எண்ணெயில் பெரும்பகுதி சுத்திகரிக்கப்பட்ட பொருட்களாக பின்னர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவின் இந்த இரகசிய சட்டவிரோத நடவடிக்கைகள், வாஷிங்டனுக்கு, ரஷ்யாவிற்கு எதிரான அதன் உந்துதலுக்கு ஏற்ப புது டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வழிமுறையை வழங்குகின்றன. அதே சமயம் கனடா இதற்கு தலைமை வகிப்பதால், இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியை எந்த வகையிலும் பாதிக்காமல் அல்லது அமெரிக்க பொதுமக்களின் பார்வையில் அதனை இழிவுபடுத்தாமல் பைடென் நிர்வாகம் அதன் செய்தியை அனுப்ப அனுமதிக்கிறது.

இது எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கனடாவில், இந்திய-அரசு வன்முறை பற்றிய சமீபத்திய வெளிப்பாடுகள் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன, மேலும் கனடா 'ஒரு விரோத உலகில்' மிகவும் ஆக்கிரோஷமான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான கூடுதல் வாதங்கள்களாக, நேட்டோ மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடனான ஐந்து கண்கள் எனப்படுவற்றுடனான அதன் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் இராணுவ செலவினங்களை பெருமளவிலான உயர்த்தவும் மற்றும் உள்நாட்டில் அரசு கண்காணிப்பை அதிகரிப்பதற்குமான காரணங்களாக காட்டப்படுகின்றன.

கடந்த ஜூன் மாதம், 'வெளிநாட்டு,' முக்கியமாக சீன, 'குறுக்கீட்டை' எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், பாராளுமன்றம் ஒருமனதாக ஒரு சட்டத்தை ஏற்றுக்கொண்டது, இது முற்றிலும் புதிய வகை அரசியல் குற்றங்களை உருவாக்குவதோடு, உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரங்களை பெருமளவில் அதிகரிக்கும்.

இந்தியப் பத்திரிகைகளில், வட அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆர்வலர்களுக்கு எதிரான மோடி அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையின் 'முட்டாள்தனத்தை' கண்டிக்கும் கட்டுரைகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. மேலும், இது புது டெல்லியை மிரட்டுவதற்கு வாஷிங்டனுக்கு நெம்புகோலை வழங்கியுள்ளது என்று வாதிடுவதுடன் மேலும், பல்வேறு விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வெளிவரும்போது, அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப அவர்கள் மீதான பதட்டங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.

மேலும் பொதுவாக, இந்த முழு விவகாரமும் சர்வதேச சட்டத்தின் எந்தவொரு தோற்றத்தின் சரிவையும், உலக முதலாளித்துவமாக சர்வதேச உறவுகளின் வெடிக்கும் தன்மையையும் பற்றிப் பேசுகிறது, அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் முன்னணியில் இருப்பதால், உலகளாவிய போரை நோக்கி நகர்கிறது.

Loading