மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடியில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். அதன் பேரழிவு விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்படும். 2021 ஜனவரியில், ஜனாதிபதித் தேர்தலை வன்முறையாக தூக்கியெறிய முயன்ற ஒரு பாசிச வாய்வீச்சாளர், 2024 தேர்தலில், தேர்தல் கல்லூரி மற்றும் மக்களின் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் தீர்மானகரமான வெற்றியை பெற்றுள்ளார். இன்னும் 70 நாட்களில் அவர் மீண்டும் வெள்ளை மாளிகையில் பதவியில் அமர்த்தப்படுவார்.
ட்ரம்ப், தனது அரசியல் வெற்றிக்கு ஜனநாயகக் கட்சியின் திவால்நிலைக்கு கடன்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, வசதியான நடுத்தர வர்க்கத்தின் அடையாள அரசியலுடன், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான பணவீக்கத்தின் நாசகரமான தாக்கத்திற்கு திமிர்த்தனமான அலட்சியம் மற்றும் உக்ரேனில் போருக்கும் காஸாவில் இனப்படுகொலைக்கும் இடைவிடாத ஆதரவு ஆகியவை தேர்தல் தோல்விக்கு அடித்தளம் அமைத்தன.
முதலாளித்துவ ஊடகங்களின் பிரதான தூண்கள் ஏற்கனவே ட்ரம்ப் வெற்றியின் அரசியல் தாக்கங்களைக் குறைத்துக் காட்ட முயன்று வருகின்றன. நியூ யோர்க் டைம்ஸ், “திரு. ட்ரம்ப்பின் தேர்வானது ஒரு பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது. ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தின் நீண்டகால தலைவிதியை அவரால் தீர்மானிக்க முடியாது” என்று எழுதுகிறது. ட்ரம்ப் ஒரு நொண்டி-வாத்து ஜனாதிபதியாக இருப்பார் என்று டைம்ஸ் அதன் வாசகர்களுக்கு மறுஉத்தரவாதம் அளிக்கிறது. ஏனென்றால் அவர் மற்றொரு பதவிக்காலத்திற்கு போட்டியிடுவதற்கு அரசியலமைப்பால் தடுக்கப்பட்டுள்ளார்.
இது ஆசைக்குரிய சிந்தனை. இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என்றும், தனது ஆதரவாளர்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டியதில்லை என்றும் ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அரசியல் யதார்த்தம் என்னவென்றால், ட்ரம்ப் தேர்வானது முன்கண்டிராத சமூக எதிர்புரட்சி அலைக்கு களம் அமைக்கிறது, இதை அவர் இரும்புக் குதிக்காலைக் கொண்டு திணிக்க திட்டமிடுகிறார்.
ட்ரம்ப் “சர்வாதிகாரியாக” மாறுவதற்கும், “நாட்டுக்குள்ளே இருக்கும் எதிரியை” நசுக்குவதற்கு இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் சூளுரைத்துள்ளார். ஆவணமற்ற 11 மில்லியன் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த அவர் திட்டமிட்டுள்ளார், இந்த நடவடிக்கைக்கு முக்கிய அமெரிக்க நகரங்களை இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது அவசியமாகும். வருமான வரியை நீக்குவது பற்றிப் பேசிய அவர், பணக்காரர்கள் மீதான வரிகளைக் குறைப்பதாகவும், வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்தார். இந்தக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது ஏற்படுத்தும் அழிவுகரமான தாக்கத்தை மிகைப்படுத்த முடியாது.
அவர் அரசியல் விபத்து அல்ல. எவ்வாறிருப்பினும், அது சாதிக்கப்பட்டது —இது ஜனநாயகக் கட்சியின் அரசியல் உடந்தையைக் குறைப்பதற்காக அல்ல— இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரத்திற்கு வருவதானது அமெரிக்காவில் நிலவுகின்ற நிஜமான சமூக உறவுகளுக்கு பொருந்தும் வகையில், அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் வெறுமனே ஒரு குற்றவியல் தனிநபராக பேசவில்லை. மாறாக, கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக வடிவம் பெற்றுள்ள ஒரு சக்திவாய்ந்த முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் பிரதிநிதியாக பேசுகிறார். எலோன் மஸ்க், ஜெஃப் பெஸோஸ், பீட்டர் தியேல் மற்றும் லாரி எலிசன் போன்றவர்களின் தலைமையில் பெரும் பில்லியனர்களும் மில்லியனர்களும் அமெரிக்க சமூகத்தின் ஒரு பிற்போக்குத்தனமான மறுசீரமைப்பை அவர்களின் நலன்களுக்காக செயல்படுத்த ட்ரம்பை பயன்படுத்தி வருகின்றனர். ட்ரம்ப் மீண்டுமொருமுறை வெள்ளை மாளிகையில் அமர்ந்த உடனேயே கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் ஒடுக்குமுறை மற்றும் சமூகரீதியில் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளின் சரமாரியான தாக்குதலை தயாரிப்பதற்கு அவர்கள் ஜனவரி 20 பதவியேற்புக்கு முந்தைய நேரத்தைப் பயன்படுத்துவார்கள்.
பெரும்பான்மையான மக்களின் நலன்கள் அரசியல் ஸ்தாபனத்திற்குள் வெளிப்படுத்தாமல் இருப்பதை, அவரால் சுரண்டிக் கொள்ள முடிந்தது. ஹாரிஸின் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த சமூக வேண்டுகோளையும் செய்வதை எதிர்த்தது. லிஸ் செனி போன்ற வெறுக்கப்படும் போர் வெறியர்களை ஊக்குவித்து, குடியரசுக் கட்சியினரை மந்திரிசபையில் இருத்துவதாக உறுதியளித்து, மிகவும் வசதி படைத்த வாக்காளர்களுக்கு அவர்கள் தங்கள் பிரச்சாரத்தை முன்வைத்தனர்.
ஹாரிஸ், பராக் ஒபாமா மற்றும் இதர ஜனநாயகக் கட்சி வாரிசுகள் நாடு முழுவதும் பயணம் செய்து, ஹாரிஸுக்கு வாக்களிக்கத் தவறுவது பெண் வெறுப்பு அல்லது இனவெறிக்கு ஆதாரமாக இருக்கும் என்று வாக்காளர்களை வற்புறுத்தினர். அவர்கள் இன மற்றும் பாலின அடையாளத்திற்கான இடைவிடாத முறையீடுகளை நாட்டுக்கு வெளியேயான போருக்கு முழு குரலில் ஒப்புதலுடன் இணைத்தனர். ஜனநாயகக் கட்சியினர் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு கூடுதல் ஆதரவை சூளுரைத்ததுடன், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தீவிரப்படுத்தவும் அழைப்பு விடுத்தனர்.
ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சமூக நெருக்கடியைத் தீர்க்க எதையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, நாட்டை ஏறத்தாழ அதற்கு நேர்மாறானதாக நம்பும் மக்களுக்கு நாட்டை “சரியான பாதையில்” இருப்பதாக சித்தரித்து வந்தனர். பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் போன்ற பிரமுகர்கள், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் உழைக்கும் மக்களுக்கான நிலைமைகளை மேம்படுத்தியுள்ளது என்றும், ஹாரிஸ் “பில்லியனர் வர்க்கம்” மேலாதிக்கத்திற்கு சவால் விடுவார் என்றும் அபத்தமான பொய்யை முன்வைத்தனர். தொழிலாள வர்க்கம் “இழிவானவர்களின் கூடையைக்” கொண்டுள்ளது என்ற ஹிலாரி கிளிண்டனின் 2016 கூற்றைப் பின்பற்றி, பைடென் தேர்தலின் இறுதி நாட்களில் ட்ரம்பின் ஆதரவாளர்களை “குப்பை” என்று அழைத்தார்.
2020 ஆம் ஆண்டு கிடைத்த வாக்குகளை ஒப்பிடும் போது, ட்ரம்ப்புக்கான ஆதரவில் அதிகரிப்பு இல்லை என்று வாக்குகள் மொத்தமாக காட்டுகின்றன. ஆனால், ஜனநாயகக் கட்சியினருக்கான ஆதரவில் பெரும் சரிவு ஏற்பட்டது, கமலா ஹாரிஸ் 2020 இல் ஜோ பைடெனை விட 10 முதல் 15 மில்லியன் குறைவான வாக்குகளைப் பெற்றார்.
நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கமலா ஹாரிஸ் பைடனை விட குறைவாகச் செயல்பட்டார். அடையாளத்தை முன்வைத்ததன் அடிப்படையில் ஹாரிஸ் பிரச்சாரத்தின் பின்னால் பல்வேறு இன மற்றும் பாலின குழுக்களை சமாதானப்படுத்துவதற்கான ஜனநாயகக் கட்சியின் முயற்சிகள் முற்றிலுமாக தோல்வியடைந்தன. மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெள்ளையரல்லாதவர்களாக உள்ள மாவட்டங்களில் வாக்கு வித்தியாசங்களில் ட்ரம்ப் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டார். மேலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தரவுகள் ஹாரிஸ் தேசிய அளவில் லத்தீன் ஆண்களை 54-44 சதவீத வித்தியாசத்தில் இழந்ததாகக் காட்டுகிறது. இது, 2020 இல் இருந்து தலைகீழாக இருந்தது, அப்போது பைடென் அந்த மக்கள்தொகையை 59-39 சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஸா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த வேட்பாளருக்கு எண்ணற்ற இளைஞர்கள் வாக்களிக்க மறுத்ததால், ஜனநாயகக் கட்சியினர் இளம் வாக்காளர்களை வென்ற வித்தியாசமும் 2020 இல் இருந்து கணிசமாக வீழ்ச்சியடைந்தது. கமலா ஹாரிஸ் 56-41 சதவீத வித்தியாசத்திலும், பைடென் 65-31 சதவீத வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். ட்ரம்ப் புதிய வாக்காளர்களிடையே பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றார், இது ஜனநாயகக் கட்சியினர் வசதியான உயர்-நடுத்தர வர்க்கத்தைத் தாண்டி வாக்காளர்களைத் திரட்டத் தவறிவிட்டனர் என்பதற்கான அறிகுறியாகும்.
உண்மையில், ஹாரிஸ் வசதி படைத்தவர்கள் மத்தியில் மட்டுமே முன்னேறினார். 200,000 டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் கொண்ட வாக்காளர்களில், அவர் 44 சதவீதத்திலிருந்து 52 சதவீத வாக்குகளை பெற்றார். 2020 இல் அந்த வருமான வரம்பில் ஒரு குறுகியளவே ட்ரம்ப்பின் வெற்றியை மாற்றியமைத்தது.
2020 இல் 100,000 டாலர் முதல் 200,000 டாலர் வரை வருமானம் கொண்ட வாக்காளர்களை 58-41 சதவீத வித்தியாசத்தில் ட்ரம்ப் வென்றுள்ளார். ஆனால் ஹாரிஸ் 53-45 சதவீத வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சியினர் ஒரே நேரத்தில் உழைக்கும் மக்களின் ஆதரவில் வீழ்ச்சியைக் கண்டனர். ஹாரிஸ், 30,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை சம்பாதிப்பவர்களை இழந்தார். இது 2020 இல், பைடென் சுமார் 57-43 சதவீத வித்தியாசத்தில் மக்கள்தொகையில் ஒரு பரந்த பகுதியளவில் வெற்றி பெற்றிருந்தார்.
வாக்காளர்கள் ஆழ்ந்த சமூக கோபத்தால் உந்தப்பட்டிருந்தனர். “இன்று நாட்டில் விடயங்கள் நடந்து வரும் விதத்தில்” அவர்கள் “அதிருப்தி” கொண்டிருப்பதாக கூறிய 43 சதவீத வாக்காளர்களில், ட்ரம்ப் 54-44 சதவீத வாக்குகளை வென்றுள்ளார். தாங்கள் “கோபமாக” இருப்பதாக பதிலளித்த 29 சதவீதத்தினரில், ட்ரம்ப் 71-27 சதவீதத்தை அவர் வென்றார். இன்றைய பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் குறித்து “உற்சாகமாக” இருக்கும் மக்கள்தொகையின் மிகச் சிறிய பகுதியினர் மத்தியில் ஹாரிஸ் 89-10 சதவீத வாக்குகளை வென்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று தங்கள் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மொத்த மக்கள்தொகை விகிதம் இருமடங்காக 45 சதவீதமாக இருந்தது. ட்ரம்ப் அந்த வாக்குகளை 80-17 சதவீத வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் ஒரு சமூக வெடிமருந்துக் கிடங்கிற்கு தலைமை தாங்குவார்கள் என்பதையும், அவர்கள் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வலதுசாரி கொள்கைகள் சமூக கோபத்தை ஆழப்படுத்த மட்டுமே செய்யும் என்பதையும் நன்கு அறிவார்கள். பாரிய பொலிஸ் அரசு ஒடுக்குமுறையை அனைத்து சமூக கேடுகளுக்கும் புலம்பெயர்ந்தோரை பலிகடாவாக்கும் ஒரு பாசிசவாத பிரச்சாரத்துடன் இணைப்பதே அவர்களின் மூலோபாயமாகும். புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் கீழ்த்தரமான தாக்குதல்களால் வாக்காளர்கள் ஈர்க்கப்பட்டனர் என்பதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டவில்லை என்றாலும், பெருந்திரளான பெரும்பான்மையினர் பெருந்திரளான நாடுகடத்தலை முகங்கொடுப்பதை விட புலம்பெயர்ந்தவர்கள் குடியுரிமைக்கான ஒரு பாதைக்கு தகுதியானவர்கள் என்று அவர்கள் நம்புவதாக கூறினாலும், அவரது முதல் நிர்வாகமே கூட குழந்தை விளையாட்டு போல் தோற்றமளிக்கும் அளவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ஒரு பாரிய மற்றும் வன்முறையான தாக்குதலுக்கு களம் அமைத்து கொடுத்தது.
போரை எதிர்ப்பதாக ட்ரம்ப் வாய்வீச்சில் கூறுவது ஜனநாயகக் கட்சியில் உள்ள தீவிரமான போர்வெறியர்களிடம் இருந்து விலகி வாக்குகளை பெற்றிருக்கலாம் என்றாலும், ட்ரம்ப் அவரே சீனா, ஈரான் மற்றும் வட கொரியாவுடன் தீவிரமான மோதலை அறிவுறுத்தும் ஒரு ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய அரசியல்வாதி ஆவார்.
ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பு சமரசம் மற்றும் கூட்டணிக்கு முனைவதாக இருக்கும். இது ஏற்கனவே புதன்கிழமை பிற்பகல் ஹாரிஸின் சரணாகதி அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. வரவிருக்கும் ட்ரம்ப் ஆட்சியின் சர்வாதிகார குணாம்சம் குறித்து அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்பதோடு, வருங்கால அமெரிக்க ஆட்சியை நோக்கிய மாற்றத்துடன் ஒத்துழைக்கவும் வாக்குறுதியளித்தார். ஜனநாயகக் கட்சியினர் இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்வார்கள். அதேவேளையில், குடியரசுக் கட்சியினருடன் அவர்களின் மைய முன்னுரிமையான போரை விரிவாக்குவதன் மீது ஒரு உடன்பாட்டை உருவாக்க முனைவார்கள்.
ட்ரம்பின் அரசியல் மற்றும் சமூக வேலைத்திட்டத்தின் பிற்போக்குத்தனமான தன்மை போதுமான அளவு தெளிவாகிவிடும். ஆளும் வர்க்கம் அரசை மறுசீரமைக்க முற்படுகையில், வர்க்க அடிப்படையில் அரசியலில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் எழுதியதைப் போல, ட்ரம்ப்பின் தேர்வானது “தொழிலாள வர்க்கத்தை நோக்கிய எந்தவொரு வேலைத்திட்ட நோக்குநிலையையும் ஜனநாயகக் கட்சி நீண்டகாலமாக மற்றும் மிகவும் திட்டமிட்டு நிராகரித்ததன் பேரழிவு விளைவு” ஆகும்.
அமெரிக்காவில், புதிய மார்க்சிச-எதிர்ப்பு கம்யூனிச-எதிர்ப்பு நீண்டகால பாரம்பரியத்துடன் இணைந்துள்ளது. தொழிலாள வர்க்க போர்க்குணத்துடன் தொடர்புபட்ட வகையிலான இடதுசாரி அரசியல் காணாமல் போனது. தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் பாரியளவில் செல்வம் குவிந்திருப்பது பற்றிய எந்தவொரு தீவிரமான கவலைகளையும் அடையாளத்துடன் தொடர்புடைய மனக்குறைகள் இடம்பெயர்த்துள்ளன.
ஜனநாயகக் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட வலதுசாரி அரசியலின் இந்த வடிவத்தை ஊக்குவித்தவர்கள், இப்போது தேர்தலுக்கான அனைத்து பதில்களிலும் மிகவும் திவாலானதை நாடுகிறார்கள்: அதாவது, மக்களை குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையில் கடந்த ஆண்டிலிருந்து காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்களில் இருந்து, பெருநிறுவன தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருந்து முறித்துக் கொள்ள முயன்று வரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையின் ஒரு சீரான வளர்ச்சி வரையில், அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பின் வெடிப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆழ்ந்த சமூகப் போராட்டங்கள் தொடுவானத்தில் உள்ளன.
இந்தப் போராட்டங்கள் அரசியல்ரீதியாக வழிநடத்தப்பட வேண்டும், அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் செல்வந்த தட்டுக்களின் ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே பாசிசத்தை தடுத்து நிறுத்த முடியும் என்ற ஒரு புரிதலால் அவை வழிநடத்தப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சர்வதேச மூலோபாயத்தால் உயிரூட்டப்பட்டு, உண்மையான சோசலிச அரசியலுக்கு “ஒரு புதிய பிறப்பு” இருந்தாக வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி, ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மூலமாக, போர், சமத்துவமின்மை மற்றும் அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சர்வதேச, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட புறப்பட்டது. இந்த வேலைத்திட்டம் இப்போது இன்னும் அதிக அவசரத்தை எடுக்கிறது. வரவிருக்கும் காலகட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், போர், சர்வாதிகாரம் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் இயக்கத்தின் தலைமையை வென்றெடுக்கவும் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்காகவும் போராடும்.