இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் ஒவ்வொரு கூட்டத்திலும், சுங்கவரிகளும் மற்றய பாதுகாப்புவாத நடவடிக்கைகளும் உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கின்றன என்றும், இது மெதுவான பொருளாதார வளர்ச்சிக்கு அல்லது அதைவிட மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. குறிப்பாக, 1930களில் காணப்பட்டதைப் போன்ற பகைநிறைந்த வர்த்தகக் கூட்டணிகள் உருவாகக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆனால் நிதிய மற்றும் பொருளாதார பகுப்பாய்வாளர்களின் கருத்துக்களில் மீண்டும் மீண்டும் கூறப்படும் இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், சுங்கவரித் தடைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. ட்ரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது தொடங்கப்பட்டு பைடெனால் குறிப்பிடத்தக்க வகையில் தீவிரப்படுத்தப்பட்ட உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மீதான அதிக சுங்கவரித் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.
இது தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துவிட்டது, இந்த வாரம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 சதவீத சுங்கவரிக்குப் பதிலாக சீன மின்சார வாகனங்கள் மீது 35 சதவீதம் கூடுதல் சுங்கவரி விதித்துள்ளது.
அடுத்த வாரம் நடைமுறைக்கு வரும் இந்தப் புதிய நடைமுறைகளானது ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். சீன மின்சார வாகன (EV) உற்பத்தியாளர்கள் அரசு மானியங்களிலிருந்து நியாயமற்ற முறையில் பயனடைகிறார்கள் என்ற அடிப்படையில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன.
சீன அரசாங்கமானது தேவையற்ற அரசு ஆதரவு என்ற கூற்றை நிராகரித்தது, அது “அனைத்து சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதியாகப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துவரும்” என்று கூறியது.
மற்றய நாடுகளைப் போலவே உதவித் தொகைகளும், உதவிகளும் வழங்கப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் அதிகளவில் சீன ஊடுருவலுக்கான உண்மையான காரணம், சீனத் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியிருப்பதும், அதன் செலவுக் கட்டமைப்பு கணிசமாகக் குறைவாக இருப்பதும்தான்.
ஜேர்மன் அரசாங்கம் மற்றும் ஜேர்மன் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பைச் சந்தித்ததும் சுங்கவரிகள் திணிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது, தொழில்துறையில் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போராட்டத்தில் ஜேர்மன் வாகன உற்பத்தியாளர்கள் உயிர்பிழைப்பதற்கான அவர்களின் பாதையாகச் சீன உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைக்க விரும்புகின்றனர். வரிவிதிப்பு நடவடிக்கைகள் சீனாவில் தங்கள் சந்தைகளைப் பாதிக்கும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்றும் அவை அஞ்சுகின்றனர்.
சீன ஏற்றுமதிகளின் அளவோடு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கக்கூடிய ஒரு வழிமுறையை வகுக்கும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட எட்டு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுங்கவரிகளை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரு தரப்பினதும் கருத்து வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருந்ததால் அப்பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டது.
இந்த வழிமுறைகளில் சில உடன்பாடுகள் எட்டப்படுமா என்பதைப் பார்க்க, பெய்ஜிங்கிற்கு தூதுவர்களை அனுப்புமாறு சீனா விடுத்த அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டதுடன், மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஐரோப்பிய ஆணையத்தின் (EU) தலைவர் ஊர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தொடங்கிய விசாரணையின் விளைவாக இந்தச் சுங்கவரி விதிப்புகள் வந்துள்ளன. அவர்களின் இந்தத் திணிப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கணிசமான எதிர்ப்பை ஏற்படுத்தியது. 27 உறுப்பினர்களில் ஜேர்மனி மற்றும் ஹங்கேரி முன்னணியில் இருந்த ஐந்து உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர், 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த முடிவுக்கு முன்னதாக, ஸ்பெயின் அரசாங்கம் திட்டத்தை “மறுபரிசீலனை” செய்யமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் ஆணையம் திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தது. இந்த முடிவு, மானியங்கள் தொடர்பான பிரச்சினையைவிட, புவிசார் அரசியல் காரணிகள் - குறிப்பாக சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரப் போரில் அணி சேர்வது - முக்கிய பங்கு வகித்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்த முடிவை அறிவித்த ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் (Valdis Dombrovskis), இது சீனாவின் மானியங்கள் மற்றும் நியாயமற்ற சந்தை நடைமுறைகளைப் பற்றியது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
“ஒரு கடுமையான ஆய்வு விசாரணைக்குப் பின்னர் இந்த விகிதாசார மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஏற்பதன் மூலமாக, நியாயமான சந்தை நடைமுறைகளுக்காகவும் ஐரோப்பிய தொழில்துறை அடித்தளத்திற்காகவும் நாங்கள் நிற்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
“மின்சார வாகனத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் போட்டியை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எனினும், இந்தப் போட்டி நியாயமான மற்றும் சமவாய்ப்புகள் நிறைந்த சூழலில் நடைபெற வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் தலைவர் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், “ஐரோப்பிய தொழில்துறை அடித்தளத்தை” பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய குறிப்பு, இந்த முடிவுக்கு அடைப்படைக் காரணங்களில் ஒன்று, அனைத்துப் பெரும் வல்லரசுகளும் ஒரு போர் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள முயல்வதே ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் வர்த்தகப் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள பிளவுகள், ஜேர்மனியிடமிருந்து வந்த கருத்துக்களால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன. ஜேர்மன் வாகன தொழில்துறை கூட்டமைப்பான VDA இன் தலைவரான ஹில்டெகார்ட் முல்லர் (Hildegarde Müller), இந்த முடிவு “தடையற்ற உலகளாவிய வர்த்தகத்திற்கும், அதனால் செழிப்பு மற்றும் ஐரோப்பாவின் வளர்ச்சிக்கும் ஒரு பின்னடைவு” என்று கூறினார்.
“சீனாவைக் கையாள்வதில் தொழில்துறை அப்பாவித்தனமாக இருக்கவில்லை, ஆனால் சவால்கள் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட வேண்டும்” என்று ஒரு அறிக்கை தெரிவித்திருக்கிறது.
ஜேர்மன் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை பேர்லின் “திறந்த சந்தைகளுக்காக நிற்கிறது. ஏனென்றால் குறிப்பாக ஜேர்மனி, பூகோளரீதியில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருளாதாரமாக, இதைச் சார்ந்துள்ளது.”
பாதுகாப்புவாதம் நுகர்வோருக்குக் கார்களை அதிக விலையுடையதாக மாற்றும், அதனால் ஐரோப்பாவில் ஆலை மூடல்களை விரைவுபடுத்தும் என்று BMW தலைமை நிர்வாகி ஓலிவர் ஜிப்ஸ் (Oliver Zipse) கூறியுள்ளார்.
உலகளாவிய கார் தொழில்துறையின் ஒன்றோடொன்று இணைந்திருப்பது ரோபர்டோ வாவசோரி (Roberto Vavassori) சுட்டிக்காட்டினார், “வாகன தொழில்துறையில் உள்ள பல விநியோகஸ்தர்களுக்கு, [சீனர்கள்] மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் மற்றும் மிகப் பெரிய வாடிக்கையாளராகவும் உள்ளனர்,” என்று அவர் பைனான்சியல் டைம்ஸ் (FT) பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
சில முக்கிய கார் உற்பத்தியாளர்களின் அணுகுமுறை என்னவென்றால், சீனா தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிய கூறுகளை உருவாக்கி வருகின்ற நிலைமைகளின் கீழ், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்காகத் தீவிரமடைந்து வரும் பூகோளரீதியான போராட்டத்தில் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கைக்குச் சுங்கவரிச் சுவர்களை எழுப்புவதன் மூலம் அல்ல, அவை செலவுகளை உயர்த்துவதற்கான வழியை ஏற்படுத்துகின்றன. மாறாக சீன உற்பத்தியாளர்களுடன் ஒருவித ஒத்துழைப்பை வளர்க்க வேண்டியிருக்கிறது.
குறைந்த செலவுக் கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கிறது. முக்கிய சீன உற்பத்தியாளர்கள் தங்கள் ஐரோப்பிய சகாக்களைவிடத் தொழில்நுட்பரீதியில் மேம்பட்ட மற்றும் 30 சதவீதம் மலிவான மின்சார வாகனங்களைத் (EV) தயாரித்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
புதுமை படைப்பின் வேகமும், வெறும் செலவு மட்டுமல்லாமல், ஒரு முக்கிய காரணியாக உள்ளது. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்ட ஒரு மதிப்பீட்டின்படி, சீன நிறுவனங்கள் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புடன் கூடிய புதிய கார்களை வெறும் ஒரு வருடத்தில் உருவாக்குகின்றன. அதே வேளையில், ஐரோப்பாவில் இதே செயல்முறைக்கு நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
ஐரோப்பாவின் சில பிரதான உற்பத்தியாளர்கள் இந்த வரிவிதிப்புகளை எதிர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கங்கள், பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்டன் மார்ட்டின் (Aston Martin) முன்னாள் தலைவர் ஆண்டி பால்மர் (Andy Palmer) பைனான்சியல் டைம்ஸ் க்கு அளித்த கருத்துக்களில் சுட்டிக்காட்டப்பட்டன.
“தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருந்த காலத்தில் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா நாடுகள் என்ன செய்தன? அவை ஒத்துழைப்பை நாடின. இப்போது ஐரோப்பிய தொழில்துறை அதே பாதையைப் பின்பற்ற வேண்டும். சீன நிறுவனங்களை ஐரோப்பாவில் செயல்பட ஊக்குவிப்பதோடு, குறிப்பாக மின்கல தொழில்நுட்பத்தில் முன்னேற அவர்களுடன் கூட்டுறவு கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், வாகனத் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் வேலை அழிப்பு மற்றும் ஊதிய வெட்டு அலையை எதிர்கொள்கின்ற ஒரு நிலைமையில் எந்தப் பாதையுமே முன்னோக்கிச் செல்ல முடியாது.
வரி உயர்வுகள் வேலைகளைப் பாதுகாக்காது, மாறாக எஞ்சியிருப்பவற்றை சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதுடன் கைகோர்த்திருக்கும், அவை தொழிற்சங்க அமைப்புகளால் செயல்படுத்தப்படும். இதேபோல் கூட்டு முயற்சிகள் அல்லது பிற ஒத்துழைப்பு வகைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் செலவுக் கட்டமைப்பில் மிகப் பெரிய குறைப்பை உள்ளடக்கியிருக்கும். இது வேலைக் குறைப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் மூலம் அடையப்படும்.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றுதான் சாத்தியமான முன்னோக்கு ஆகும், அதாவது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி மிகப் பெரிய பூகோள வாகன பெருநிறுவனங்களைப் பொதுவுடைமையாக்குவதற்கான போராட்டமாகும், இவ்வாறு செய்வதன் மூலம், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றங்கள், சில நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே பெருக்குவதற்குப் பதிலாக, சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட முடியும்.