மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
புதன்கிழமை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் வியாழக்கிழமை ஜனாதிபதி ஜோ பைடென் வெளியிட்ட அறிக்கைகளில், ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் வரவிருக்கும் பாசிசவாத ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு முற்றிலும் உடந்தையாக இருப்பதற்கான ஒரு நிலைப்பாட்டை ஏற்றுள்ளனர்.
நவம்பர் 5 தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்பை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக ஹாரிஸ் கூறினார். “அவருக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களின் மாற்றத்திற்கு நாங்கள் உதவுவோம் என்றும், நாங்கள் அமைதியான அதிகார பரிமாற்றத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் அவரிடம் கூறினேன்” என்று அவர் கூறினார். ட்ரம்ப் ஒரு பாசிசவாதி என்றோ அல்லது அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஓர் அச்சுறுத்தல் என்றோ முந்தைய அறிக்கைகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
வியாழனன்று பைடென் வெளியிட்ட அறிக்கை இன்னும் கோழைத்தனமாக இருந்தது. அவர் சர்வாதிகாரத்தின் அபாயங்கள் குறித்து அமெரிக்க மக்களை எச்சரிப்பதற்காக தேசிய தொலைக்காட்சியில் தோன்றவில்லை. மாறாக, அவருக்கு அடுத்து பதவிக்கு வரவுள்ள பாசிசவாத வாரிசுக்கு ஒரு வரவேற்பை வழங்குவதற்காகவே தொலைக்காட்சியில் தோன்றினார்.
அவர் பின்வருமாறு கூறினார்.:
நேற்று நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்புடன் பேசி, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான மற்றும் ஒழுங்கான பரிமாற்றத்தை உறுதி செய்ய அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற எனது முழு நிர்வாகத்தையும் வழிநடத்துவேன் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். அதுதான் அமெரிக்க மக்களுக்கு தகுதியானது... ஜனாதிபதியாக எனது கடமையை செய்வேன். நான் என் சத்தியத்தை நிறைவேற்றுவேன். அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பேன். ஜனவரி 20 அன்று, அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும்.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழைந்து, உலகின் மிக சக்திவாய்ந்த அரசியல் பதவியை மீண்டும் பெறுவது, ஒரு சாதாரண அரசியல் சந்தர்ப்பம் அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வன்முறையான அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்திய ட்ரம்ப், 2020 தேர்தல் முடிவை மாற்றியமைக்கவும், அதிகாரத்தில் தனது பிடியைப் பேணவும் முயன்றார். பைடெனின் வெற்றிக்கான காங்கிரஸின் சான்றிதழைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, ட்ரம்ப் தனது ஆதரவாளர்களின் கும்பலை, ஜனவரி 6, 2021 அன்று காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டலைத் தாக்குவதற்கு வாஷிங்டனுக்கு வரவழைத்தார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பின்னர், பைடெனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுத்திருந்தார். மேலும், 2024 தேர்தல் பிரச்சாரத்தை, திருடப்பட்ட தேர்தல் என்ற “பெரிய பொய்யின்” அடிப்படையில் நடத்தினார்.
இந்த வரலாறு குறித்து பைடென் எதுவும் குறிப்பிடவில்லை. ஜனவரி 20 முதல் அவர் ஒரு சர்வாதிகாரியாக செயல்படப் போவதாகவும், புலம்பெயர்ந்தோரை பெருமளவில் சுற்றி வளைக்கவும், மில்லியன் கணக்கானவர்களை உடனடியாக நாடு கடத்துவதற்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பதாகவும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அறிவித்தது குறித்து பைடென் முற்றிலும் அமைதியாக இருந்தார். தனது ஆதரவாளர்கள் வாக்களிக்கும் கடைசி தேர்தல் இதுதான் என்று ட்ரம்ப் அறிவித்தது குறித்து பைடென் எதுவும் குறிப்பிடவில்லை. பத்திரிகையாளர்கள், சிவில் உரிமைக் குழுக்கள், காஸா இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், சோசலிஸ்டுகள் மற்றும் பைடென் உட்பட ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் உள்ளடங்கலாக “உள்ளே இருக்கும் எதிரியை” கைது செய்து வழக்குத் தொடுப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
2016 இல், ஹிலாரி கிளிண்டன் மீது ட்ரம்ப் வியப்பூட்டும் வகையில் வெற்றி பெற்றதற்குப் பின்னர், பராக் ஒபாமா ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு வரவேற்றதுடன், அந்த தேர்தல் ஒரு “உட் சண்டையை” மட்டுமே பிரதிநிதித்துவம் செய்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் கருத்துடன் அவரை வரவேற்றார். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகள், அவற்றின் தேர்தல் சேற்றை வாரி இறைத்தல் எதுவாக இருந்தாலும், அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டுள்ளன என்பதை பைடென் ஒப்புக் கொண்டார்.
மேலும், பைடென் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். அவர் ஒரு ஏமாளி அல்ல. அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக முதலாளித்துவ அரசியலில் இருந்து வருகிறார். ட்ரம்ப் என்றால் யார், அவர் என்ன செய்ய தயாராகி வருகிறார் என்பது அவருக்குத் தெரியும். நாசகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் ஒரு உண்மையான பொலிஸ்-அரசு குணாம்சத்தைக் கொண்டிருக்கக் கூடிய பாரிய நாடுகடத்தல்களுக்கான திட்டங்கள் குறித்து அவர் ஒரேயொரு வார்த்தை கூட கவலை தெரிவிக்கவில்லை. இவ்விதத்தில் ட்ரம்புக்கு பதவி மாற்றத்தை எளிதாக்குவதற்கான அவரது வாக்குறுதியானது, வெறுமனே பொறுப்பற்ற தன்மை அல்லது மண்டியிடுதல் என்பதற்கும் அப்பால் செல்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் நடத்தவிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான நேரடித் தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பதை, ஜனநாயகக் கட்சி பைடென் மூலமாக முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
அவர் தொலைக்காட்சியில் கருத்து தெரிவிக்கையில், பைடென் தனது நிர்வாகத்தின் கீழ் சமூக முன்னேற்றம் பற்றிய போலியான கூற்றுக்களை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகள் பேரழிவிற்குள்ளானதைக் கண்ட உழைக்கும் மக்களின் பாரிய நிராகரிப்பை எதிர்கொண்டார். “உலகின் வலுவான பொருளாதாரத்தை நாங்கள் விட்டுச் செல்கிறோம், நாங்கள் ஒன்றாக அமெரிக்காவை சிறப்பாக மாற்றியுள்ளோம்” என்று பைடென் கூறினார். அப்படியானால் அவர் தேர்ந்தெடுத்த வாரிசான கமலா ஹரிஸ் தேர்தலில் ஏன் இவ்வளவு பரிதாபகரமாக தோல்வியடைந்தார்?
பைடென் நிர்வாகத்திற்கு ஒரேயொரு முன்னுரிமை மட்டுமே உள்ளது: அது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தீவிரப்படுத்துவவதாகும். குளிர்காலத்தில் போருக்கு நிதியளிப்பதற்காக பென்டகனில் இருந்து கியேவ் ஆட்சிக்கு இறுதி பில்லியன் கணக்கான அமெரிக்க இராணுவ உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெள்ளை மாளிகை அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது, ட்ரம்ப்பின் திட்டமிட்ட நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்க வெள்ளை மாளிகையின் இயலாமைக்கு இது முற்றிலும் மாறுபட்டது.
பைடென் ஜனாதிபதியாக இருக்கும் வரை, அடுத்த 70 நாட்களுக்கு ட்ரம்ப் அரசியல் சோதனையில் இருப்பதாகவும், “அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கு” ஜனவரி 20க்குப் பிறகு அதிகாரத்தை அமைதியான மற்றும் ஜனநாயகப் பிரயோகத்திற்கு உத்தரவாதம் தேவை என்றும் பைடென் அறிவித்திருப்பது முற்றிலும் பொருட்டாகவே இருந்திருக்கும். ட்ரம்ப் அவரது பிரதான அமைச்சரவை அதிகாரிகளாக, குறிப்பாக இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பொறுப்பாளர்களாக யாரை நியமிக்கப் போகிறார் என்பதை பகிரங்கப்படுத்துவதும் இதில் உள்ளடங்கும்.
இதற்கிடையில், ஹாரிஸுக்கு வாக்களித்த 70 மில்லியன் பேர் உட்பட, ட்ரம்பிற்கு வாக்களிக்காத பெரும்பான்மையான அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகள் குறித்து ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க பைடெனுக்கு ஜனாதிபதியாக உரிமை உண்டு. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மறுத்த கோடிக்கணக்கான மக்கள் மற்றும் ட்ரம்பின் வலதுசாரி ஜனரஞ்சக வாய்வீச்சால் கோபமும் விரக்தியும் அடைந்த சுரண்டப்பட்ட பல மில்லியன் மக்களுக்கு ஒரு சர்வாதிகாரி-ஜனாதிபதியை பதவியில் அமர்த்த விருப்பம் இல்லை. அதற்கு பதிலாக, பைடென் ட்ரம்புக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்.
அவரது தோரணையிலும் செயல்களிலும், பைடென் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பதவியில் இருந்த ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜேம்ஸ் புக்கானனை ஒத்திருக்கிறார். இவர் வழக்கமாக வரலாற்றாசிரியர்களால் —ட்ரம்ப் வரையில்— அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதியாக மதிப்பிடப்படுகிறார். 1860 தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் வெற்றி பெற்ற பிறகு, அடிமைத்தனத்திற்கு ஆதரவாக இருந்த ஜனநாயகக் கட்சி, கூட்டமைப்புக் கிளர்ச்சிக்கு (Confederate insurrection) திறம்பட பச்சைக்கொடி காட்டியது. தெற்கில் இருந்த கூட்டாட்சி இராணுவ நிலைகள் மற்றும் ஆயுதக் கையிருப்புகளைப் பாதுகாக்க புக்கானன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர், கூட்டமைப்பு பிரிவினைவாதிகள் அவற்றைக் கைப்பற்றி ஆரம்ப இராணுவ நன்மையைப் பெறுவதற்கு அனுமதித்தார்.
“அமைதியான அதிகார மாற்றம்” குறித்த பைடென் மற்றும் ஹாரிஸின் வாக்குறுதிகள் அபத்தமானவை, ஏனென்றால் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றிருந்தால், அத்தகைய மாற்றத்திற்கான ஒரே அச்சுறுத்தலாக ட்ரம்ப் இருந்திருப்பார். 2020 இல் செய்ததைப் போல தேர்தல் தோல்வியை மாற்றியமைக்க ட்ரம்ப் முயல்வார் என்பதே தனது மிகப்பெரிய அச்சம் என்று ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பைடென் எச்சரித்திருந்தார்.
இந்த தேர்தலில் ஹாரிஸ் வெற்றி பெற்றால் குழப்பத்தை உருவாக்குவதற்கான ட்ரம்ப் முகாமின் திட்டங்கள் குறித்து ஞாயிறன்று பிற்பகுதியில், நியூ யோர்க் டைம்ஸ் விரிவாக எழுதியது. அந்த முதல் பக்க அறிக்கை பின்வருவனவற்றை உள்ளடக்கி இருந்தது: “ஒரு செல்வாக்கான வலதுசாரி ஊடக பிரமுகரும் ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகருமான ஸ்டீபன் கே. பானன் செவ்வாயன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, அவர் உடனடியாக செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் நடந்த இரவில் திரு. ட்ரம்ப் முன்கூட்டியே செயல்பட்டு வெறுமனே வெற்றியைக் கோர வேண்டும் என்று கூறினார்” என்று டைம்ஸ் குறிப்பிட்டது.
ஆனால் ட்ரம்பின் தேர்தல் வெற்றியானது, 2020 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மீண்டும் செய்வதை தேவையற்றதாக ஆக்கியது. ஆனால், பானன் ட்ரம்பின் உள்வட்டத்தில் நுரை பொங்கும் இரத்தவெறிக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். MSNBC, நியூ யார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டாட்சி அதிகாரத்துவத்தின் பிரிவுகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஆடியோ ஒளிபரப்பில், பானன் இதனை அறிவித்தார். மேலும் பானன், “அவர்கள் எந்த மரியாதைக்கும் தகுதியற்றவர்கள், நீங்கள் எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர்கள், மேலும் நீங்கள் எந்த பரிதாபத்திற்கும் தகுதியற்றவர்கள்... நாங்கள் முரட்டுத்தனமான ரோமானிய நீதி என்று அழைப்பதற்கு நீங்கள் தகுதியானவர், அதை உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
பிரபுத்துவத்திற்குள் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற பிறகு, தனது அரசியல் எதிரிகளை அகற்றுவதற்காக ரோமானிய ஆளுநர் மேற்கொண்ட ஒரு பிரச்சாரமான சுல்லாவின் இழிபுகழ்பெற்ற தடைகளை பானன் குறிப்பிட்டிருக்கலாம். ஒரு வரலாற்றாசிரியர் இதனை விவரிக்கையில்:
சுல்லா தன்னுடைய மீதமிருந்த எதிரிகளை திட்டமிட்டு ஒழித்துக்கட்ட ஆரம்பித்தார் ... 2000 முதல் 9000 குதிரை வீரர்கள் மற்றும் செனட்டர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களில் யாரை வேண்டுமானாலும் வெகுமதிக்காக சுதந்திரமாகக் கொல்லலாம்.(சார்லஸ் ஃப்ரீமேன், எகிப்து, கிரீஸ் மற்றும் ரோம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம்).
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது இருந்ததை விட, அதிக அதிகாரத்துடன் ஜனவரியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைவார். காங்கிரஸின் இரு அவைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள குடியரசுக் கட்சி, ட்ரம்பின் பாசிசவாத கொள்கைகளின் கருவியாக முற்றிலுமாக மறுவடிவம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலையில் அதன் இழிபுகழ்பெற்ற தீர்ப்பில், ஜனாதிபதியாக ட்ரம்ப் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், அது எவ்வளவு சட்டவிரோதமானதாக இருந்தாலும், அரசியலமைப்பிற்கு முரணானதாக இருந்தாலும் அல்லது வன்முறையானதாக இருந்தாலும் சரி, அதற்கு விதிவிலக்கு அளித்துள்ளது.
ட்ரம்ப் ஜனநாயகத்திற்கான ஓர் அச்சுறுத்தல் என்பது குறித்த அனைத்து வாய்வீச்சுக்களுக்கும் அப்பால், முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதுடன் சமரசம் செய்து கொண்டுள்ளன. முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் நிதியப் பிரபுத்துவத்தில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களும் ஏற்கனவே புதிய அமெரிக்க ஆட்சியாளரின் முன் மண்டியிடத் தொடங்கி தங்கள் ஆதரவை உறுதியளிக்கத் தொடங்கியுள்ளனர். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் பில்லியனர் உரிமையாளர்கள் ஹாரிஸின் திட்டமிட்ட ஒப்புதல்களை தடுத்த பொழுது தேர்தலுக்கு முன்னரே இந்த முன்கூட்டிய சரணாகதி அடையாளம் காட்டப்பட்டது.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான போஸ்ட் உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ், இதைத் தொடர்ந்து ட்ரம்பைப் பாராட்டியதுடன், “ஒரு அசாதாரண அரசியல் மறுபிரவேசம் மற்றும் தீர்க்கமான வெற்றிக்காக நமது 45 வது மற்றும் இப்போது 47 வது ஜனாதிபதிக்கு பெரும் வாழ்த்துக்கள்” என்று ஓர் உணர்ச்சி பொங்கும் அறிக்கையை வெளியிட்டார். பணக்கார அமெரிக்கரும் தீவிர ட்ரம்ப் ஆர்வலருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் / ட்விட்டரில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
ட்ரம்ப்பின் சர்வாதிகாரத்திற்கு ஜனநாயகக் கட்சியிடம் இருந்தோ அல்லது முதலாளித்துவ தன்னலக்குழுவின் எந்தப் பிரிவிடமிருந்தோ எந்த அர்த்தமுள்ள எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. தேர்தலுக்கு முன்னரே டீம்ஸ்டர்ஸ் தலைவர் சீன் ஓ’பிரையன் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசியது எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, தொழிற்சங்கங்களும் விரைவில் இதனைப் பின்பற்றும்.
ட்ரம்புக்கான எதிர்ப்பு அடிமட்டத்தில் இருந்து, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும். ட்ரம்புக்கு வாக்களித்த தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் குழப்பம் என்னவாக இருந்தாலும், வர்க்கப் போராட்டம் ஒரு தவிர்க்கவியலாத தர்க்கத்தைக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பாரிய ஒடுக்குமுறை, செல்வந்தர்களுக்கு பெரும் வரி குறைப்புக்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆகியவை உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரங்களில் விலை செலுத்தப்படும்.
சோசலிச சமத்துவக் கட்சி, சர்வாதிகாரத்திற்கு எதிரான மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு சோசலிச முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கும். சோசலிச சமத்துவக் கட்சியும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் ஆலைகளிலும் வேலையிடங்களிலும் தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பை அபிவிருத்தி செய்யும். அத்துடன் இந்த எதிர்ப்பைக் கட்டியெழுப்பவும் அணிதிரட்டவும் கூட்டங்களை நடத்தும்.