ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய கால்பந்து குண்டர்களின் கலவரத்திற்குப் பின்னர் நேட்டோ நாடுகள் "யூத எதிர்ப்புவாதத்தை" கண்டனம் செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை, இஸ்ரேலிய கால்பந்து குண்டர்கள் ஆம்ஸ்டர்டாமில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனிய கொடிகளைக் கிழித்தெறிந்து, அரபு மக்களைத் தாக்கி, காஸாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். காஸாவில் நடைபெறும் இனப்படுகொலையின் போது மக்காபி டெல் அவிவ் மற்றும் அஜாக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுவதற்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில், சில குண்டர்கள் ஆம்ஸ்டர்டாம் குடியிருப்பாளர்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவங்களில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், அனைத்து மக்காபி ரசிகர்களும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தியது

வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நவம்பர் 7, 2024 வியாழக்கிழமை, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகே இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுப்பு போராட்டத்திற்குப் பின்னர், சியோனிச மக்காபி டெல் அவிவ் ஆதரவாளர்களை பொலிசார் மெட்ரோவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.  [AP Photo/InterVision]

ஆனால் வாஷிங்டனும் ஐரோப்பிய அரசாங்கங்களும் குண்டர்களுடன் மோதியவர்களை “யூத எதிர்ப்பாளர்கள்” என்று கண்டனம் செய்து, ஒரு கடுமையான பிரச்சார இயக்கத்துடன் எதிர்வினையாற்றின. யாரும் கொல்லப்படவில்லை என்ற நிலையிலும், அதிதீவிர வலதுசாரி டச்சு அரசியல்வாதியான கீர்ட் வில்டர்ஸ், யூதர்களுக்கு எதிரான ஒரு கொடூரமான “இன வன்முறையை” தடுப்பதற்காக என்று கூறி, காவல்துறை அடக்குமுறைக்கு அழைப்பு விடுத்து வருகிறார். நேற்று வரை, நகரம் முழுவதும் நடத்தப்பட்ட கைது நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சார இயக்கம் பொய்களின் தொகுப்பாகும். காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு ஆதரவளித்ததன் மூலம் இப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் அரசாங்கங்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து இஸ்ரேலிய கால்பந்து குண்டர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கும் அதே வேளையில், காஸாவில் பாலஸ்தீனிய பொதுமக்களின் பெரும் அளவிலான கொலைகளுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டார்: “ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான யூத விரோத தாக்குதல்கள் வெறுக்கத்தக்கவை மற்றும் யூதர்கள் துன்புறுத்தப்பட்ட வரலாற்றின் இருள் நிறைந்த காலகட்டங்களை நினைவூட்டுகின்றன. நாங்கள் இஸ்ரேலிய மற்றும் நெதர்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம், மேலும் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் டச்சு அதிகாரிகளின் உறுதிப்பாட்டை பாராட்டுகிறோம். யூத விரோதம் எங்கு தோன்றினாலும் அதனை நாம் விடாமுயற்சியுடன் எதிர்த்துப் போராட வேண்டும்.”

ஐரோப்பிய அரசாங்கங்களும் இதேபோன்ற கருத்துக்களைத்தான் தெரிவித்தன. ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் (Olaf Scholz) இந்த மோதல்களை “சகித்துக்கொள்ள முடியாதவை” என்று கண்டித்தார், ஏனென்றால் அவை “நம் அனைவரையும் தாக்குகின்றன,” டச்சு பிரதம மந்திரி டிக் ஷூஃப் (Dick Schoof ) அவற்றை “பயங்கரமான யூத-எதிர்ப்புவாத தாக்குதல்” என்று அழைத்தார். யூத இனப்படுகொலையுடன் மோதல்களை ஒப்பிட்டு, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்( Emmanuel Macron ) வன்முறையை “உறுதியாக கண்டித்தார்”, அது “வரலாற்றின் மிகவும் கொடூரமான மணிநேரங்களை” நினைவுபடுத்துவதாக அவர் கூறினார். நெதர்லாந்திற்குள், செய்தி ஊடகப் பிரச்சாரம் பெரும்பாலும் வில்டர்ஸாலேயே இயக்கப்படுகிறது.

“ஆம்ஸ்டர்டாம் தெருக்களில் ஒரு இனப்படுகொலை,” என்று வில்டர்ஸ் ஒரு ட்வீட்டில் கூறினார்: “பாலஸ்தீனிய கொடிகளுடன் முஸ்லிம்கள் யூதர்களை வேட்டையாடுகிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். ஒருபோதும். இஸ்ரேலிய குடிமக்களை பாதுகாக்க தவறியதற்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். இனி ஒருபோதும் இல்லை.”

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த சம்பவத்தை “மிகுந்த தீவிரத்துடன் பார்க்கிறேன்” என்று கூறினார். டச்சு அதிகாரிகள் “தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

இந்த கால்பந்து மோதல்கள் யூத விரோத செயல்கள் அல்லது கொடூரமான படுகொலைகள் என்ற அடிப்படையற்ற, மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்கள், பெரும் அளவிலான காவல்துறை அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டவை. யாரும் கொல்லப்படவில்லை, மேலும் தாக்கப்பட்ட அல்லது ஒரு சம்பவத்தில் ஆற்றில் வீசப்பட்ட குண்டர்கள் யூதர்கள் என்பதால் இலக்கு வைக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்களை நெதர்லாந்து அதிகாரிகள் வழங்கவில்லை. மாறாக, ஆம்ஸ்டர்டாமில் மக்கள் மற்றும் சொத்துக்கள் மீதான மக்காபி குண்டர்களின் தாக்குதல்களும், இனப்படுகொலைக்கு ஆதரவான அவர்களின் கோஷங்களும் கோபத்தின் வெடிப்பைத் தூண்டின என்பதற்கு, ஆம்ஸ்டர்டாம் காவல்துறையின் அறிக்கைகளால் ஆதரிக்கப்பட்ட பெருமளவு காணொளி ஆதாரங்கள் உள்ளன.

மேலும், இது இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் தீவிர வலதுசாரி நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் இடையே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்ட தூண்டுதல் என நம்புவதற்கு காரணம் உள்ளது. மக்காபி-அஜாக்ஸ் (Maccabi-Ajax) போட்டிக்கு முந்தைய நாட்களில், நெதர்லாந்து பத்திரிகைகளான டி டெலிக்ராஃப் (De Telegraaf ) மற்றும் வோட்பால்சோன்(Voetbalzone ) ஆகியவை, இஸ்ரேலின் மொசாட் வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் முகவர்கள் மக்காபி ரசிகர்களுடன் பயணிப்பார்கள் என்றும், இது நெதர்லாந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக என்றும் தெரிவித்தன.

விளையாட்டுக்கு சற்று முன்பு, ஸ்பெயினில் வலென்சியா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்காக மக்காபி ரசிகர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த மறுத்துவிட்டனர், ஏனென்றால் மாட்ரிட் ஒரு பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்க அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும், ஆட்டத்திற்குப் பிறகு பதட்டங்கள் வெடித்தன, இதில் மக்காபி 5-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.

மக்காபி குண்டர்கள் “ஆம்ஸ்டர்டாமில் பாலஸ்தீனிய கொடிகள் காட்சிப்படுத்தப்பட்ட வீடுகளைத் தாக்கத் தொடங்கினர், அதுதான் உண்மையில் வன்முறையின் தொடக்கமாக அமைந்தது” என்று ஆம்ஸ்டர்டாம் நகர சபை உறுப்பினர் ஜாஸி வெல்துய்சன் நேற்று அல் ஜசீராவிடம் தெரிவித்தார். “இதற்கு எதிர்வினையாக, ஆம்ஸ்டர்டாம் குடிமக்கள் ஒன்றுதிரண்டு, புதன்கிழமை மக்காபி ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டனர்.”

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மக்காபி ஆதரவாளர்கள் நகரம் முழுவதும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனிய கொடிகளைக் கிழித்தெறிந்தனர், அரபு ஓட்டுநர்களின் டாக்சிகளை கடப்பாரைகளால் தாக்கினர், மற்றும் இனப்படுகொலைக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர். இவற்றில் “காஸாவில் பள்ளிகள் இல்லை, ஏனெனில் அங்கு குழந்தைகள் எவரும் உயிருடன் இல்லை,” “F*ck பாலஸ்தீனம்,” “IDF [இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்] அரபியர்களை அழிக்கட்டும்,” மற்றும் “அரபியர்களுக்கு மரணம்! நாம் வெற்றி பெறுவோம்” போன்றவை அடங்கும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஆம்ஸ்டர்டாம் காவல்துறைத் தலைவர் பீட்டர் ஹோல்லா அன்றிரவு மக்காபி ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக வந்த செய்திகளை உறுதிப்படுத்தினார். அவர் பிரான்ஸ் 24 செய்திக்கு அளித்த பேட்டியில், “புதன்கிழமை இரவு ரசிகர்களுக்கு இடையே வன்முறை தொடங்கியது. இரவு நேரத்தில், இரு தரப்பிலும் சம்பவங்கள் நடந்தன. மக்காபி ரசிகர்கள் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரோகின் [கால்வாய்] முகப்பில் இருந்து ஒரு கொடியை இறக்கி ஒரு டாக்ஸியை அழித்தனர். ஒரு பாலஸ்தீன கொடி எரிக்கப்பட்டது.”

பைடென், மக்ரோன் மற்றும் மற்றவர்களால் மக்காபி கால்பந்து குண்டர்களுடனான மோதல்களுக்கும் யூதப் இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்டுக்கும்) இடையிலான ஒப்பீடுகள் அரசியல் ரீதியாக கேவலமான பொய்களாகும். இரண்டாம் உலகப் போரின் போது, நெதர்லாந்தின் 140,000 யூதர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நாடு கடத்தப்பட்டு நாஜி மர முகாம்களில் தொழிற்சாலை அளவில் கொல்லப்பட்டனர். 1941 பிப்ரவரி ஆம்ஸ்டர்டாம் பொது வேலைநிறுத்தத்தின் போது, தொழிலாளர் வர்க்கம் இந்த நாடு கடத்தல்களை எதிர்த்த போது, நாஜி அதிகாரிகளும் அன்டன் முசெர்ட்டின் நாஜி ஆதரவு நெதர்லாந்து தேசிய சோசலிச இயக்கத்தின் (NSB) உறுப்பினர்களும், பல யூத மற்றும் யூதரல்லாத தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றனர்.

இன்று இனப்படுகொலையை நிகழ்த்தும் சக்தியானது ஆம்ஸ்டர்டாமின் தொழிலாள வர்க்கம் அல்ல, மாறாக நேட்டோ அரசாங்கங்களால் ஆதரிக்கப்படும் சியோனிச ஆட்சியாகும். இதில் வில்டர்ஸின் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு கொண்ட சுதந்திரக் கட்சியும் (PVV) அடங்கும். இக்கட்சி ஆம்ஸ்டர்டாமில் தற்போதைய காவல்துறை அடக்குமுறைக்கு காரணமாக உள்ளது. இக்கட்சியின் கொடியில் முசெர்ட்டின் NSB இயக்கத்தின் சின்னமாக இருந்த கடற்புறா வரையப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, இந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் நடந்ததைப் போன்ற மேலதிக ஆத்திரமூட்டல்களுக்கான நிலைமைகளை உருவாக்க சியோனிச ஆட்சியானது ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் வேலை செய்து வருகிறது. இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட ஏனைய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் மொசாட் அதன் செயல்பாட்டாளர்களை நிலைநிறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக நேற்று, நெதன்யாகு இவ்வாறு அறிவித்தார்: “இந்தப் புதிய சூழ்நிலைக்கு மத்தியில் நடவடிக்கைத் திட்டங்கள், எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் நமது அமைப்பைத் தயாரிக்குமாறு மொசாட் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன்.”

வெளிநாடுகளில் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் உட்பட அதன் மிருகத்தனமான வழிவகைகளுக்கு மொசாட் இழிபுகழ் பெற்றுள்ளது என்பதிலும், ஒரு சர்ச்சைக்குரிய பிரான்ஸ்-இஸ்ரேல் லீக் ஆஃப் நேஷன்ஸ் கால்பந்து போட்டி தற்போது நவம்பர் 14 அன்று நடைபெற உள்ளது என்பதிலும் இந்த உத்தரவு இன்னும் வெடிப்புத்தன்மை உடையதாக உள்ளது.

ஆழமாக மதிப்பிழந்துள்ள மற்றும் தேசிய பேரணி போன்ற அதிவலது சக்திகளின் நாடாளுமன்ற ஆதரவைச் சார்ந்துள்ள மக்ரோன் அரசாங்கமானது, காஸா இனப்படுகொலைக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க பெரும்பிரயத்தனத்துடன் முயன்று வருகிறது. இந்த வாரம், அதிவலது பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புரூனோ ரெடெய்லியூ, பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கால்பந்து விளையாட்டுக் கழக ரசிகர்கள் ஒரு பெரிய “சுதந்திர பாலஸ்தீன” கொடியை ஒரு விளையாட்டில் காட்டிய பின்னர், விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரப்படுமென அச்சுறுத்தினார்.

நவம்பர் 14ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பிரான்ஸ்-இஸ்ரேல் கால்பந்து போட்டியை பாரிசின் வடக்குப் புறநகர்ப் பகுதியான ஸ்டேட் டு பிரான்சில் (Stade de France) இருந்து மாற்ற வேண்டும் என்ற அழைப்புக்களை நேற்று உள்துறை அமைச்சர் ரெடெய்லியூ (Retailleau) நிராகரித்தார். லீக் ஆஃப் நேஷன்ஸ் போட்டியை நகர்த்துவது “வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் யூத எதிர்ப்புவாதத்திற்கு கைவிடுவதைக் குறிக்கும்” என்று ரெடெய்லியூ கூறினார். இது தொழிலாளர்களுக்கும் இம்முறை பிரான்சில், மொசாட் மற்றும் பிரெஞ்சு பொலிஸ் ஆதரவுடைய இஸ்ரேலிய கால்பந்து குண்டர்களுக்கும் இடையே புதிய மோதல்களைத் தூண்டிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

Loading