மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த மாத இறுதியில் புளூம்பேர்க்கில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பிரதான கட்டுரை, சீனாவுக்கு எதிரான அமெரிக்க அதிநவீன-தொழில்நுட்ப பொருளாதாரப் போர் குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வை வழங்கியிருக்கிறது, அத்துடன் தலைப்புச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, “தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கான [சீன ஜனாதிபதி] ஜி (Xi)யின் உந்துதலைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன,” என்ற முடிவை எடுக்கிறது.
கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல, குறைந்தபட்சம் ஓரளவுக்கேனும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க உந்துதல் இன்னும் அதிக ஆக்கிரமிப்பு வடிவங்களை எடுக்கும், இது போருக்கான வாய்ப்பை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரும்.
சீனாவின் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் மிக உயர்ந்த மட்டத்திலான சில்லு (chip) தயாரிக்கும் திறனை அணுகுவதிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர் என்ற, “ஒரு பார்வையைக்” குறிப்பிட்டு, அமெரிக்கா தன் இலக்கையடைய மேற்கொண்ட நடவடிக்கை வெற்றிகரமாக இருப்பதாகத் தோன்றியுள்ளது என்று அக்கட்டுரை தொடங்கியிருந்தது.
ஏனென்றால், மிகவும் மேம்பட்ட சில்லுகளை தயாரிக்க அவசியமான அதன் 'ஒரு வகையான' இயந்திரங்களை சீனாவுக்கு வழங்குவதை மறுப்பதற்கு டச்சு நிறுவனமான ASML க்கு அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் நிதித் தடைகள் இருந்தபோதிலும், எதிர்கால தொழில்களை மேம்படுத்துவதில் சீனா “நிலையான முன்னேற்றம்” அடைந்து வருவதாகவும், பத்தாண்டுகளுக்கு முன்பு ஜி ஆல் தொடங்கிய சீனாவில் உற்பத்தி 2025 (Made in China 2025) திட்டம் “பெரும்பாலும் வெற்றியடைந்துள்ளது” என்பதையும் ஆழமான ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.
“ப்ளூம்பெர்க் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்ட 13 முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில், சீனா அவற்றில் ஐந்தில் உலகளவில் தலைமை நிலையைப் அடைந்துள்ளது, மேலும் ஏழு மற்றவற்றிலிருந்து வேகமாக முன்னேறி வருகிறது.”
வாஷிங்டனைத் தளமாகக் கொண்டிருக்கும் சிந்தனைக் குழுவான சர்வதேச பொருளாதாரத்திற்கான கல்விநிறுவனத்தின் தலைவர் ஆடம் போசனின் (Adam Posen) கருத்துக்களை அக்கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது,: “சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்க கட்டுப்பாடுகளால் தடுக்கப்படாது, மேலும் மெதுவாகவும் கூடச் செல்லாது.” அமெரிக்காவிலும் உலகளவிலும் புதுமையின் வேகத்தைக் குறைக்கும் “கடுமையான ஒன்றாக” ஒரே விதிவிலக்காக அது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதாரத்தின் அதே கட்டமைப்பிலேயே கடந்த முப்பது வருடங்களாக ஏற்பட்டுள்ள பரந்த மாற்றத்தை அது சுட்டிக்காட்டியிருக்கிறது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவுக்குப் பிந்தைய உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடுகையில் சீனாவின் “உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் வர்த்தக உபரி மிகப்பெரியது” என்று குறிப்பிட்டுள்ளது. மின்சார வாகனங்கள் (EVs), பேட்டரிகள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பில் சீனா முன்னிலை வகிக்கின்றது.
அதிநவீன சில்லுகள் (chips) தயாரிப்பில் சீனா ஈடுபடுவதைத் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெள்ளை மாளிகையில் யார் வெற்றி பெற்றாலும் இந்தச் சண்டை தொடரும்.
இது வெறும் பொருளாதாரத் துறையோடு நின்றுவிடவில்லை. அந்தக் கட்டுரை மேலும் தொடர்ந்தது:
வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்த வரையில், தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெறுவதற்கான உந்துதல் என்பது அபிவிருத்தியை ஏற்படுத்துதல், வேலைகளை உருவாக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்கான எண்ணம் உட்பட பல பரிசீலனைகளால் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த சமயத்தில் பொருளாதாரக் கொள்கையில் மற்றொரு காரணி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று இரண்டு தலைநகரங்களிலும் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்: ஒன்று உடனடியாகவோ அல்லது திட்டமிடப்படாவிட்டாலும் கூட, ஒரு சாத்தியமான போருக்கான தயாரிப்பு.
அமெரிக்கத் தரப்பில், அது 2022 இல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனின் (Jake Sullivan) ஒரு முக்கிய உரையின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருக்கிறது, அதில் அவர் குறைக்கடத்திகள் (semiconductors), சுத்தமான ஆற்றல் (clean energy) மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் (biotech) உள்ளிட்ட தொடர்ச்சியான பகுதிகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார், அதில் அமெரிக்கா “முடிந்தவரை முன்நிலையில் இருக்க” முயல்கிறது என்று அவர் கூறினார்.
டிரம்ப் ஜனாதிபதியாக இருக்கும்போது அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள்மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அப்பால் பைடென் நிர்வாகத்தால் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள், ஒரு “புதிய மூலோபாய சொத்து” என்று சல்லிவன் கூறியுள்ளார், இது எதிரிகள் மீது செலவுகளைச் சுமத்துவதற்கும் “அவர்களின் போர்க்கள திறன்களைக் சிதைப்பதற்கும்” பயன்படுத்தப்படும்.
தங்கள் அதிகாரபூர்வ அறிக்கைகளில், சீன அதிகாரிகள் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர். அமெரிக்கா மேம்படுத்தும் செயல்பாட்டில் உள்ள சர்வதேச சுதந்திர வர்த்தக ஒழுங்கை நிலைநிறுத்தத் தாங்கள் முயல்வதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் அமெரிக்க மூலோபாயத் திட்டமிடல் என்பது வர்த்தகத்தை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை, அது போரையும் உள்ளடக்கியிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள், அதில் அமெரிக்கா மூலப்பொருட்களின் முக்கிய விநியோகங்களை, குறிப்பாக எரிசக்தி அளிப்புக்களைத் துண்டிக்க முயல்கிறது, மேலும் மாற்று எரிசக்தி ஆதாரங்களில் சீனா திறனை வளர்க்க முயல்கின்றது.
இதன் அர்த்தம், சீனாவின் “ஜி இன் அரசாங்கம் மிதமிஞ்சிய கொள்திறனைக் குறைத்து, பொருளாதாரத்தை நுகர்வை நோக்கி மேலும் மறுசமநிலைப்படுத்த வேண்டுமென்ற அமெரிக்கா கோரிக்கைகள் வைத்தாலும், சீனாவின் உற்பத்தி சக்தியைக் குறைக்கும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது” என்று அக்கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது.
மிகவும் மேம்பட்ட கணினி சில்லுகள் (chips) மற்றும் மிகவும் சிக்கலான சில்லு (chips) தயாரிக்கும் கருவிகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது இருந்தபோதிலும், “சீனா தொடர்ந்து உற்பத்தி மேலாதிக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறது” என்றும், அமெரிக்கா போட்டியில் வெற்றிபெற விரும்பினால், அது “வேகமாக ஓட வேண்டும் அல்லது சீனாவைத் தாக்க கடினமாக முயற்சிக்க வேண்டும்” என்றும் பகுப்பாய்வு கூறியிருக்கிறது.
இது எப்பொழுதும் அதிகரித்துவரும் பொருளாதாரப் போரைக் குறிக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இது இராணுவ முறைகளின் அதிகரிக்கும் பயன்பாட்டில் அபிவிருத்தி அடையும். ஏனென்றால், பெய்ஜிங் முதலீட்டு வங்கியான சான்சனின் இயக்குனர் ஷென் மெங் (Shen Meng), ஆராய்ச்சியாளர்களிடம் கூறியதைப் போல, “சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறுகிய காலத்தில் வேலை செய்தன” என்றாலும், நீண்ட காலத்திற்கு “சீனா இந்தக் கட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும்.”
இது வெறும் ஊகம் அல்ல, மாறாக சீனத் தொலைதொடர்பு பெருநிறுவனமான ஹூவாய் (Huawei) விடயத்தில் பிரதிபலித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டில், டிரம்ப் நிர்வாகம் அதன் செல்பேசிகளுக்குத் (mobile phones) தேவையான மேம்பட்ட சில்லுகளை (chips) பெறுவதற்கு மறுத்து அந்நிறுவனத்திற்கு தடை விதித்தது மேலும் அதனால் அதன் விற்பனையும் சரிந்தது.
ஆனால் அது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மேலும் பணத்தை அள்ளிக்கொட்டியது மற்றும் உள்நாட்டு விநியோகிப்பாளர்களுடன் (suppliers) இணைந்து மிகவும் மேம்பட்ட சில்லை (chip) உருவாக்கப் பணியாற்றியது, இது சாத்தியமில்லை என்று அமெரிக்கா கருதியது. சீனா அபிவிருத்தி செய்த சில்லு (chip) முதல்தரத்தில் இல்லையென்றாலும், கட்டுரையின் படி: “ஹவாய் திறன்பேசி (smartphone) வணிகம் மீட்கப்பட்டு இப்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு சவாலாக உள்ளது.”
வாஷிங்டனை தளமாகக் கொண்டிருக்கும் ஒரு ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வாளர் பால் டிரியோலோ (Paul Triolo), ஹூவாய் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சில்லுகள் ஆப்பிள் மற்றும் என்விடியா (Nvidia) தயாரித்ததைப் போல மேம்பட்டவை அல்ல என்றாலும், “அவை பல பயன்பாடுகளுக்குப் போதுமான திறன் கொண்டவையாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கக் கருவிகளைப் பயன்படுத்தாமல் உற்பத்தியை நோக்கி சீனா “பெரும் முன்னேற்றத்தை” அடைந்துள்ளது, ஆனால் “கருவி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆரம்பத்திலிருந்து இறுதிவரையிலான உற்பத்தி வசதிகள் இரண்டையும் இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ந்து கட்டுப்பாடுகளை அதிகரித்து வருவதால்” இந்த நிகழ்முறை மெதுவாகவும் சவாலாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இது மெதுவாக இருக்கலாம், ஆனால் வளர்ச்சியின் திசையை மறுப்பதற்கில்லை. 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா தனது சில்லு உற்பத்தியில் தன்னிறைவை 40 சதவீதமாக உயர்த்தக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) மதிப்பிட்டுள்ளது, இது தற்போதைய அளவை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குகிறது. இந்த வளர்ச்சி இன்னும் அதன் வரம்பிற்கு மேல் இல்லையென்றாலும், இது அமெரிக்காவிடமிருந்து இன்னும் தீவிரமான ஆக்கிரோஷமான பதில் நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
சீன அதிநவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதை நோக்கி அமெரிக்காவின் அதிகரித்தளவிலான போர்வெறி எதிர்வினையும், முதலாளித்துவ அமைப்புமுறை வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறையின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையையும், அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுத்து சோசலிசத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அதை ஒழிப்பதற்கான வரலாற்று அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உற்பத்தி சக்திகளில் உள்ள மற்ற ஒவ்வொரு முன்னேற்றத்தையும் போலவே, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு தேசத்தின் விளைபொருளல்ல, மாறாக உலகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், நிரலாளர்கள் (programmers) போன்றோரின் உழைப்பை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய விளைபொருளாகும்.
உலக மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் மாபெரும் முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை அது கொண்டுள்ளது. ஆனால் அதன் உலகளாவிய நோக்கத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறையால் உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான இந்த முரண்பாடு நீடிக்கும் வரையில், பிரதான ஏகாதிபத்திய சக்திகள் தங்களை மேலாதிக்க சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டு அதைத் தீர்க்க முயல்வதால், இத்தகைய வளர்ச்சி உலகப் போர் அபாயத்தையும் மற்றும் நாகரிகத்தின் அழிவையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது.