இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திசாநாயக்க, நாட்டின் நவம்பர் 14 அன்று நடக்கவுள்ள தேசிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளர்களை 'வலுவான அரசாங்கத்திற்காக' உழைக்குமாறு உருக்கமாக வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 13 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தேர்தல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) சுமார் 500 வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், திசாநாயக்கவின் பேச்சைக் கேட்பதற்காக கொழும்பு புறநகரில் உள்ள ஆடம்பரமான கிரன்ட் மொனார்க் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் கூடியிருந்தனர்.
கடந்த மாதம் அவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள், திசாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பரந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்து, ஒரு திடீர் பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார்.
ஜே.வி.பி./தே.ம.ச. வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய திசாநாயக்க, 'நாங்கள் ஒரு புதிய சித்தாந்தம் மற்றும் வேலைத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்' என்று புலம்பினார். ஜே.வி.பி. தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மூன்று பேர் கொண்ட அமைச்சரவையே உள்ளது. அதில், வெளியேறும் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் அவரும் மற்ற இரண்டு ஜே.வி.பி./தே.ம.ச. உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். இது 'எந்த வகையிலும் போதுமானதாக இல்லை' என்று அவர் தொடர்ந்தார். 'நவம்பர் 14 அன்று அந்த அரசியல் அதிகாரத்தைப் பெறுவதே எங்கள் முன் உள்ள சவாலாகும். நாம் பாராளுமன்றத்தில் வலுவான அதிகாரத்தைப் பெற வேண்டும்,' என அவர் வலியுறுத்தினார்.
இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களால் 'இடதுசாரி' என்று பொய்யாகக் கூறப்படும் அதேவேளையில், இலங்கை தேசியவாதம் மற்றும் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போன ஜே.வி.பி./தே.ம.ச.யின் சித்தாந்தம் பற்றி திசாநாயக்க எதுவும் கூறாததோடு இராணுவ-பாதுகாப்பு எந்திரம் மற்றும் 'சட்டம் மற்றும் ஒழுங்கு' ஆகியவற்றுக்கு அது கொடுக்கும் மரியாதையானது சோசலிசத்தை விட பாசிசத்தை மிகவும் ஒத்திருக்கிறது.
பாரம்பரிய அரசியலில் வேரூன்றியுள்ள 'ஊழல், மோசடி மற்றும் குடும்ப ஆட்சி” போன்றவற்றை தூக்கி விசினால் மட்டுமே தீவை நாசமாக்கிக்கொண்டிருக்கும் கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என்ற ஜே.வி.பி./தே.ம.ச.யின் இடைவிடாது மறுசுழற்சி செய்யப்படும் பொய்யை மீண்டும் கூறுவதைத் தவிர, கட்சியின் வேலைத்திட்டம் பற்றி திசாநாயக்க எதுவும் கூறவில்லை,
உண்மையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முற்றிலும் உறுதிபூண்டுள்ளது. இதன் கீழ் சுகாதாரம், கல்வி மற்றும் விலை மானியங்கள் மீதான அரசாங்க செலவினங்கள் குறைக்கப்படும்; வரி அதிகரிப்பு மற்றும் கட்டண அதிகரிப்பு மூலம் பெருமளவில் முதன்மை வரவு செலவுத் திட்ட வருவாய் குவிக்கப்பட வேண்டும்; அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை துரிதமாக விற்றுத்தள்ளி அரை மில்லியன் அரச தொழில்களை அழிக்க வேண்டும்.
'கடன் நிலைத்தன்மையை' அடைவதற்காக, அதாவது பூகோள முதலீட்டாளர்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்வதோடு, உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு பொருளாதாரத்தை அதிக இலாபம் ஈட்டக் கூடியதாக ஆக்கப்பட வேண்டும்.
திசாநாயக்க தனது உரையில், ஜே.வி.பி./தே.ம.ச. பாராளுமன்றத்தை அதிகரித்த எண்ணிக்கையால் மட்டுமன்றி, 'தரமான' உறுப்பினர்களால் நிரப்ப வேண்டும் என்றார். ஜே.வி.பி./தே.ம.ச.யால் கூறப்படும் 'தரம்' என்பது, பெரும்பாலும் 'நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல்' என்ற தேசியவாத அழைப்பின் கீழ், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை ஆதரிக்கின்ற தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், தொழிலறிஞர்கள் ஆகியோர் அடங்கி வேட்பாளர்களே ஆவர். தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கை அரசின் இனவாதப் போரின் போது கிழக்கின் முன்னாள் தளபதியாக இருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான அருண ஜெயசேகர மற்றும் பெருநிறுவன நிர்வாகிகளான எரங்க உதேஸ் வீரரத்ன, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
ஜே.வி.பி./தே.ம.ச., இப்போது முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைப் போலவே, இலங்கை மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் சுமைகளை நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கான அதன் நோக்கத்தை, அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'முன்னேறும் தேசம், அழகான நாடு!” என்பதை தூக்கிப் பிடிப்பதன் மூலம் இருட்டடிப்பு செய்ய முயல்கிறது.
ஜே.வி.பி./தே.ம.ச., வெற்றி ஏற்கனவே சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டத்தில் கூறிய திசாநாயக்க, 'அரசியல்வாதிகளுக்கு தோல்வி அல்லது இறப்பது ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்த பழைய அரசியல் கலாச்சாரத்தில் இருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கும் வகையில்” அவர்களுக்கு 'அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம்' தோன்றியுள்ளது,” என்றார்.
பாராளுமன்றத்தில் இருந்து 'ஓய்வு பெறுவதாக' அறிவித்துள்ள, மூன்று முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, மஹிந்த இராஜபக்ஷ உட்பட, பாரம்பரிய ஆளும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அதில் இருந்து பிரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலும் உள்ள பல பிரதான பிரமுகர்களையே அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.
ஜனாதிபதி பதவியை வெல்வதில், திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.யும் பாரம்பரிய அரசியல் ஸ்தாபனத்தின் மீது உழைக்கும் மக்களின் வெகுஜன கோபத்தையும் அதிருப்தியையும் பாசாங்குத்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இந்த வெகுஜன அதிருப்தியே 2022 இல் வெடித்த மக்கள் எழுச்சியில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்திலிருந்து துரத்தியது. திசாநாயக்கவுக்கான வாக்குகள் 2019 ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 440,000 வாக்குகளில் இருந்து 2024 இல் 5.6 மில்லியனாக அல்லது 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்காக பத்து மடங்குக்கு மேல் அதிகரித்தது.
திசாநாயக்க தனது அக்டோபர் 13 உரையில், எதிர்க்கட்சிகளின் 'பலவீனத்தை' பயன்படுத்தி அபார பாராளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்றுமாறு கட்சியின் வேட்பாளர்களை வலியுறுத்தினார். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்உம் போது, அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் இருந்து எழும் தவிர்க்க முடியாத வெகுஜன எதிர்ப்புக்கு முகங்கொடுப்பதன் பேரில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்துவதே 'வலுவான அரசாங்கத்திற்கான' இந்த பிரச்சாரத்தின் வெளிப்படையான நோக்கமாகும் ஆகும்.
ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவுகள், இப்போது திசாநாயக்கவின் 'நிலையான' அல்லது பெரும்பான்மையான ஜே.வி.பி./தே.ம.ச. தலைமையிலான அரசாங்கத்திற்கான அபிலாஷையை ஆதரிப்பதாக சமிக்ஞை செய்கின்றன. இது பாராளுமன்றத்தின் மூலம் அதன் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு வசதிளிப்பதோடு அனைத்து எதிர்க்கட்சிகளிடமிருந்தும் அதை காத்துக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாது. அதன் பிற்போக்கு, ஏகாதிபத்திய சார்பு திட்ட நிரலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளையும் வேலைநிறுத்தங்களையும் 'சட்டவிரோதமானதாகவும்,' 'ஜனநாயக விரோதமானதாகவும்' 'தேச விரோதமானதாகவும்' கொச்சைப்படுத்துவதற்கு, ஊடகங்களையும் ஆளும் வர்க்கத்தையும் அது பலப்படுத்தும்.
அக்டோபர் 11 அன்று, கொழும்பை தளமாகக் கொண்ட டெய்லி மிரர் பத்திரிகை புதிய அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைக் கண்டிக்கும் தலையங்கம் ஒன்றை வெளியிட்டது. 'குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விசுவாசிகளை நியமித்ததற்காகவும்' ஏழைகளுக்கு வாழ்க்கைச் சுமையை குறைக்க சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்வது போன்ற 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்றும் 'இளம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க' மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்று அது சுட்டிக்காட்டியது.
திசாநாயக்க மற்றும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.க்கு வக்காலத்து வாங்கும் மிரர் ஆசிரியர்கள், 'ஒரு சில' விசுவாசிகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் இன்றுவரை 'சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரேயொரு சந்திப்பை மட்டுமே நடத்தியுள்தாகவும்' வாதிட்டனர்.
அதன் பின்னர் இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் வெடிக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையை அது சுட்டிக்காட்டியது. 'போட்டியிடும் முக்கிய பிராந்திய வல்லரசுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள்...எங்கள் துறைமுகங்களில் வந்து தரிப்பதானது நமது நாட்டின் நிதி, அரசியல் மற்றும் சர்வதேச ஒருங்கிணைவுக்கான சான்றாகும்,' என அது கூறுகிறது. புதிய அரசாங்கத்துக்கு குழிபறிக்கப்படுவதற்கு எதிராக எச்சரித்த தலையங்கம், 'நமது முந்தைய ஜனாதிபதிகள் சிலரின் நடவடிக்கைகள்... தற்போதைய ஜனாதிபதிக்கு உபாயங்களைக் கையாள்வதற்கு உரிய வாய்ப்புகளை குறைத்துள்ளள...” “எனவே இந்த பொதுத் தேர்தலில் நாம் எப்படி வாக்களிக்கிறோம், என்பது மிகவும் முக்கியமானது' என்று அது முடித்தது.
அதே நாளில், தி ஐலண்ட் பத்திரிகை ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அதில், 'ரணில் (விக்ரமசிங்க) (ஜனாதிபதியாக) சென்றுவிட்டார், என்று 'அரசியல் வட்டாரங்களில் ஒரு நகைச்சுவை உள்ளது,' ஆனால் அவர் திரும்பி வந்துவிட்டார்!' என்று குறிப்பிட்டது. விக்கிரமசிங்க 'தைரியமாக அமுல்படுத்திய' கொள்கைகள், 'புதிய ஆட்சிமுறையின் கீழ் அப்படியே உள்ளன, …” என்று ஐலண்ட் விளக்கியுள்ளது.
'நிதானமான பொருளாதார யதார்த்தம் ஜனாதிபதி திசாநாயக்கவின் சிந்தனையில் ஒரு கனிந்துவிடும் விளைவை ஏற்படுத்தியுள்ளதுடன், நவம்பர் 14 பொதுத் தேர்தலில் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதில் தே.ம.ச. பெற்றால், ஒரு சிறந்த மாற்றீட்டின் தேவைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியை பற்றிக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன,” என ஐலண்ட் அறிவிக்கின்றது.
இந்த விடயத்தை நிரூபிப்பது போல், ஜே.வி.பி. அரசியல் குழு உறுப்பினரும், ஜே.வி.பி./தே.ம.ச. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் பேச்சாளருமான விஜித ஹேரத், அடுத்த ஆண்டு 1 மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கவிருந்த சம்பள உயர்வை அரசாங்கம் நிறுத்துவதாக அறிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு சற்று முன்னர், பல வருடங்களாக நசுக்கிவந்த பணவீக்கத்திற்குப் பிறகு குறைந்தபட்சம் 25 சதவீத சம்பள அதிகரிப்பை தருவதாக விக்கிரமசிங்க அறிவித்தார். பாரிய பணவீக்கம் காரணமாக 2022 இல் இலங்கை தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் 27 வீதமும் 2023 இல் 23 வீதமும் வீழ்ச்சியடைந்தது.
தேர்தலுக்கு முந்தைய சம்பள உயர்வை அறிவிப்பதற்கு முன்னதாக, விக்ரமசிங்க நிதி அமைச்சுடன் சரியாக ஆலோசனை நடத்தவில்லை என்றும், நாட்டின் நிதி நிலைமை குறித்து முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் ஹேரத் கூறினார். ஜே.வி.பி./தே.ம.ச., 'இதுபோன்ற எதையும்' 'ஒருபோதும்' உறுதியளிக்கவில்லை என்று அவர் தொடர்ந்தார்.
உண்மையில், செப்டம்பர் 4 அன்று தே.ம.ச. வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய திசாநாயக்க, அரச துறை சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறியதற்காக விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இருவரையும் விமர்சித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி, நிதி ஒழுக்கத்தை சிறந்த முறையில் செயல்படுத்துபவர் என தன்னை காட்டிக் கொண்ட ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர், இத்தகைய ஊதிய உயர்வுகளை 'மரணகரமானது' என்று கண்டனம் செய்தார்.
திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் விக்கிரமசிங்கவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்து சமுத்திரத்தின் பிரதான கப்பல் பாதைகளை அணிடியதாக அமைந்துள்ள இலங்கையை, சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான இராணுவ-மூலோபாயத் தாக்குதலுக்குள் இன்னும் ஆழமாக ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ளது. அதிகாரத்தின் கடிவாளத்தில் வைப்பதற்கு தன்னை நம்பலாம் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு நிரூபிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜே.வி.பி., அண்மைய ஆண்டுகளில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்புகள் உட்பட, வாஷிங்டனை ஆக்ரோஷமாக அரவணைத்துக்கொண்டதோடு, பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான கூட்டாளியான இந்தியாவின் 'மூலோபாய நலன்களுக்கு' எதிராக எதையும் செய்ய மாட்டோம் என சபதமெடுத்துக்கொண்டது. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தலைவர் அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் கொழும்புக்கு விஜயம் செய்து திசாநாயக்கவை சந்தித்தார்.
சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களை எச்சரிக்கிறது: திசாநாயக்க பொதுத் தேர்தல் முடிந்து நேரத்தைக் குறிக்கும் வரை, சர்வதேச நாணய நிதியமும் ஆளும் வர்க்கமும் அவரை அனுமதித்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு அவர் சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் இன்னும் கடுமையான கட்டத்திற்கு முன்னேறுவார்.
தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்கொள்ளும் அரசாங்கம், அதன் முன்னோடிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோதச் சட்டங்களைக் கையில் எடுத்துக்கொள்வதோடு, ஒருபுறம் நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்களைப் பயன்படுத்துவதோடு மறுபுறம் சிங்களப் பேரினவாதத்தையும் தூண்டிவிடும்.
ஜே.வி.பி./தே.ம.ச., தனது 'ஓய்வு பெற்ற முப்படையினரின் கூட்டு' மற்றும் 'ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கூட்டு' மூலம் இராணுவ-பாதுகாப்பு எந்திரம் மற்றும் தமிழர்-விரோதப் போரின் வீரர்களுடன் நெருக்கமாக இருப்பதை ஒரு நிதானமான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோ.ச.க., திசாநாயக்க ஆட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளை அணிதிரட்டுவதற்காக கொழும்பு, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல்களில் தலையிடுகிறது.
எங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் விளக்கியது விளக்கியது போல்: மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடி, சர்வாதிகாரம் மற்றும் உலகப் போர் அச்சுறுத்தலுக்கு முதலாளித்துவ அமைப்புக்குள் அல்லது தேசிய அடிப்படையில் தீர்வு கிடையாது.
முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் போலி இடது குழுக்களை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்! தொழிலாள வர்க்கம் விஷயங்களை தனது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச நாணய நிதயித்தின் சிக்கனத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கும், ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கடன்களையும் நிராகரிப்பதற்கும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகப் போராடுவதற்கும் ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் பெருந் தோட்டங்களிலும், நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கப் போராடுகிறோம்.
முதலாளித்துவ உயரடுக்கின் பாராளுமன்றம் மற்றும் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறைமை உட்பட அனைத்துக் கட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கும் எதிராக, சுயாதீனமான தொழிலாள வர்க்க அதிகாரத்தின் உறுப்புகளாக, அந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கு நாங்கள் போராடுகிறோம். நிதெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க இதுவே முன்னோக்கி செல்லும் பாதையாகும்.
மேலும் படிக்க
- இலங்கை அரசாங்கம் 1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துவதை எதிர்த்திடு!
- இலங்கையின் பெரும் வர்த்தகர்கள் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்க விரைந்துள்ளனர்
- போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது