மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸாவிலுள்ள மக்களை பட்டினியால் அழித்தொழிக்க, வேண்டுமென்றே முயலும் இஸ்ரேலின் கொள்கையை திறம்பட ஆமோதித்து, காஸாவிற்கு உணவைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இஸ்ரேல் “மனித உரிமைகளை ஒட்டு மொத்தமாக மீறவில்லை” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு உதவிச் சட்டம் மற்றும் “லீஹி சட்டத்தின்” பிரிவுகள் 502B மற்றும் 620I உட்பட பல அமெரிக்கச் சட்டங்கள், “கடுமையான மனித உரிமை மீறல்களைச்” செய்வதாக வெளியுறவுத் துறை கருதும் படைகளுக்கு ஆயுதம் வழங்குவதை அரசாங்கத்தை தடை செய்கிறது.
பைடென் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட NSM-20 என்று அழைக்கப்படும் ஒரு தேசிய பாதுகாப்பு குறிப்பாணை, “சர்வதேச சட்டத்தை வெளிநாட்டு பங்காளிகள் கடைப்பிடிப்பது குறித்து அமெரிக்கா பொருத்தமான புரிதலை பராமரிக்க வேண்டும்” என்று கூறியது.
அக்டோபர் 13 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், காஸாவின் உணவு விநியோகத்தை இஸ்ரேல் பாரியளவில் அதிகரிக்காவிட்டால், “இந்த நடவடிக்கைகள் NSM-20 இன் கீழ் அமெரிக்க கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரித்தனர். இது இஸ்ரேல் மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதாக கருதப்படும் அபாயம் உள்ளது மற்றும் இராணுவ உதவியைப் பெறாது என்பதை மறைமுகமாக குறிக்கிறது.
“காஸாவுக்குள் நுழைய நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 350 டிரக்குகளை” இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று அக்கடிதம் கோரியது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அந்த மாதம் முழுவதிலும் வெறும் 400 டிரக்குகள் மட்டுமே அப்பகுதிக்குள் நுழைந்திருந்தன. இதன் அர்த்தம் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட்ட உணவின் அளவு அமெரிக்கா உத்தியோகபூர்வமாக கோருவதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.
நிருபர்கள் கேட்டதற்கு, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் (Vedant Patel), “இஸ்ரேலியர்கள் அமெரிக்க சட்டத்தையும், உட்குறிப்பு மூலம், சர்வதேச சட்டத்தையும் மீறுவதாக நாங்கள் கண்டறியவில்லை” என்று கூறினார்.
போர் மற்றும் கூட்டு தண்டனையின் ஒரு வழிமுறையாக பட்டினி போடும் ஒரு திட்டமிட்ட கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்தி வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ள நிலைமைகளின் கீழ், இந்த மதிப்பீடு பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் பாரிய பட்டினிக் கொள்கையை அமெரிக்க அரசாங்கம் பகிரங்கமாக அரவணைப்பதை உள்ளடக்கி உள்ளது.
பிளிங்கன் மற்றும் ஆஸ்டின் எழுதிய கடிதமானது, காஸா மக்களை வேண்டுமென்றே பட்டினியால் கொல்லும் இஸ்ரேலின் கொள்கையை உண்மையில் அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என்ற உண்மையை மறைக்கும் நோக்கில், ஒரு இராஜாங்க ரீதியிலான மூடுதிரையாக இருந்தது. ஆனால், அமெரிக்க அதிகாரிகள் தங்கள் இறுதி எச்சரிக்கையை விடுக்கையில், இன்று காஸாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கான சூழ்நிலையை உருவாக்கினர்: அமெரிக்க அரசாங்கம் பாரிய பட்டினியை ஒரு போர் ஆயுதமாக வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் பாவிப்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தது.
ஓய்வுபெற்ற இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) ஜெனரல் ஜியோரா எய்லாண்ட் (Giora Eiland) முன்மொழிந்த “ஜெனரல்களின் திட்டம்” என்றழைக்கப்படுவதன் ஒரு “பதிப்பை” நெதன்யாகு அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அக்டோபர் 12 இல் CNN அறிவித்தது. அது வடக்கு காஸாவில் அனைத்து உணவையும் முற்றிலுமாக நிறுத்துவதற்கும், அப்பாவி மக்கள் அனைவரையும் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்படக்கூடிய அநேகமாக எதிரி போராளிகளாக நடத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறது.
CNN மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நன்கு அறிந்த ஒரு முன்னாள் மூத்த இராணுவ அதிகாரி (முடிவெடுப்பதில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும்) CNN இடம், “தளபதிகளின் திட்டம்” என அழைக்கப்படும் எய்லாண்டின் முன்மொழிவின் “ஒரு பதிப்பை” அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக கூறினார். இந்த கூற்று முற்றிலும் உண்மை என்று எய்லாண்ட் CNN இடம் கூறினார்.
நவம்பர் 5 அன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன் (Itzik Cohen) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இனி பொதுமக்கள் எஞ்சியிருக்கவில்லை” என்பதால் வடக்கு காஸாவிற்குள் உணவுப் பொருட்களை நுழைய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அனுமதிக்காது என்று குறிப்பிட்டார்.
உண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, வடக்கு காஸாவில் 50,000 முதல் 75,000 பேர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக எதிரிப் போராளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இக்குடிமக்கள் வேண்டுமென்றே வெளிப்படையாகவும் பட்டினி மற்றும் படுகொலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இஸ்ரேல் வேண்டுமென்றே அதன் பாரிய பட்டினி கொள்கையால் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்ற வெளியுறவுத்துறையின் அறிவிப்பு, உண்மையில் அக்டோபர் 22 அன்று வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் நெதன்யாகு இடையே நடந்த ஒரு தனிப்பட்ட விவாதத்தின் உள்ளடக்கங்களை உத்தியோகபூர்வமாக்குகிறது.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.
“வடக்கைத் தனிமைப்படுத்துவதற்கும், மக்கள் அங்கிருந்து வெளியேறாவிட்டால், அவர்கள் உண்மையில் இலக்குகளாக இருப்பார்கள் என்று மக்களிடம் கூறி, அவர்களுக்கான உணவுக்கான அணுகலை மறுப்பதற்கும்” இஸ்ரேல் ஒரு மூலோபாயத்தை பின்பற்றும் ஒரு “கருத்து” நெதன்யாகுவிடம் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த அப்பட்டமான பிரகடனத்திற்கு விடையிறுப்பாக, பிளிங்கன் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் முழுமையான ஆதரவை அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் இரும்பு கவச உறுதிப்பாட்டை செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்” மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக “அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளின் தொடர்ச்சியான முயற்சிகளைத்” தொடர உறுதியளித்தார்.
இஸ்ரேலின் பாரிய பட்டினிக் கொள்கையின் விளைவாக, காஸாவில் மனிதாபிமான நிலைமை பேரழிவுகரமாக உள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இஸ்ரேல் இணங்கி நடக்கிறதா என்பதை மதிப்பீடு செய்வதற்கு அமெரிக்கா தானே விதித்துக் கொண்ட காலக்கெடுவின்படி, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் குழு ஒன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது:
ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட இன்று நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. “வடக்கு காஸாவில் உள்ள ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களும் நோய், பட்டினி மற்றும் வன்முறையால் இறக்கும் உடனடி ஆபத்தில் உள்ளனர்” என்று முகமைகளுக்கு இடையிலான நிலைக்குழு அதிகாரிகள் இப்போது நம்புகின்றனர். இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் அதன் சர்வதேச கடமைகளுக்கு இஸ்ரேல் இணங்கத் தவறியதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேவைப்படும் மக்களைச் சென்றடைவதற்கான உணவு, மருத்துவம் மற்றும் பிற பொருட்களைப் போதுமான அளவு வழங்குவதை உறுதி செய்யத் தவறியதன் இறுதி விளைவுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த திட்டமிட்ட பாரிய பட்டினிக் கொள்கை, காஸாவில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்கள் மீது தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களுடன் கைகோர்த்துள்ளது. இதுகுறித்து ஐ.நா மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 5 மற்றும் 12 பிற்பகல்களுக்கு இடையில், காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் (MoH) கூற்றுப்படி, 274 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 729 பேர் காயமடைந்தனர். 7 அக்டோபர் 2023 மற்றும் 12 நவம்பர் 2024 க்கு இடையில், குறைந்தது 43,665 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 103,076 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலின் பாரிய பட்டினி கொள்கையை பைடென் நிர்வாகம் பகிரங்கமாக அரவணைத்திருப்பது நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. தன்னைத்தானே உலகின் முன்னணி “ஜனநாயகங்களாக” பிரகடனப்படுத்திக் கொண்டவை, அப்பாவி மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவதை ஒரு போர் முறையாக பகிரங்கமாக தழுவிக் கொண்டிருக்கின்றன. இது எதிர்கால போர்களைத் தொடுப்பதற்கு மட்டுமல்ல, மாறாக அவற்றின் சொந்த மக்களின் பரந்த பிரிவுகள் மத்தியிலான உள்நாட்டு அரசியல் எதிர்ப்புக்கு எதிரான உள்நாட்டு ஒடுக்குமுறைக்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.