இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை நடத்துகிறது. 3 ஜனவரி 2025 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் இடம்பெறும் இந்த விரவுரைக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் அணுசரனையளித்துள்ளது.
இது இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு அவசரப் பிரச்சினை ஆகும். சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கட்டளையிடப்பட்ட ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகள் வெகுஜனங்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை மேலும் சிதைக்கிறது.
உழைக்கும் மக்கள் மீதான அதன் பாதிப்பை குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளைப் பற்றி தனது அரசாங்கம் அதனுடன் 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும்' என்று கூறியே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவிக்கு வந்தார். இப்போது அவர் பொருளாதாரத்தின் மோசமான நிலை காரணமாக சிக்கன நடவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலில் நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது அல்லது வணிகமயமாக்குவது மற்றும் இலட்சக் கணக்கான தொழில்களை அழித்து அரசாங்கத் துறையை சீரழிப்பதும் அடங்கும். இதனால் இலவச சுகாதார சேவை, கல்வி உட்பட நலத்திட்டங்கள் மேலும் எழும்புவரை சிதைக்கப்படும்.
அனைத்து ஸ்தாபனக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான அவை அனைத்தும், சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு தலைவணங்குகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் திசாநாயக்கவின் 'கொள்கை அறிக்கையையும்' சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு செலவினங்களைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்கும் அவரது வரவு செலவுத் திட்டத்தையும் ஏகமனதாக அங்கீகரித்துள்ளன.
ஆளும் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என்று அழைக்கப்படுபவை போன்றவற்றின் தொழிற்சங்கங்களும் இதை எதிர்ப்பதாக முனுமுனுக்கக் கூட இல்லை.
போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் ஜே.வி.பி./தே.ம.ச. தேர்வு செய்யப்பட்டதை 'முற்போக்கானது' என்று பாராட்டியுள்ளன. செப்டம்பரில், முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் சங்கங்களின் தலைவர்கள், கல்வி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று கூறி, அவர்களின் கோரிக்கைகளை அவர் தள்ளுபடி செய்தார். மாணவர் தலைவர்கள் அதை பணிவுடன் ஏற்றுக்கொண்டனர்.
இதற்கு மாறாக, ஐ.வை.எஸ்.எஸ்.இ., தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான பிரச்சனைகள் எதுவும் முதலாளித்துவ அமைப்புக்குள் தீர்க்கப்பட முடியாது என்ற அடிப்படை உண்மையிலிருந்து தொடங்குகிறது. உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களும் அவர்களது அரசியல் ஊழியர்களும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதே ஒரே மாற்றீடாகும்.
நாங்கள் சொல்கிறோம்: அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்; பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கு; முதலாளிகள் குவித்துக்கொண்டுள்ள செல்வத்தைக் கைப்பற்று; இந்த வளங்களை மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்து.
சோசலிச வழிமுறையில் சமுதாயத்தை மறுசீரமைப்பதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகன போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இலங்கையில் உள்ள ஐ.வை.எஸ்.எஸ்.இ., உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச இளைஞர் அமைப்பின் ஒரு பகுதியாகும். மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் ஏனையோரையும் இந்த முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி கலந்துரையாட எங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திகதி மற்றும் நேரம்: 3 ஜனவரி 2025 மாலை 3.30 மணிக்கு.
இடம்: விரிவுரை மண்டபம் இலக்கம் 86, அரசியல் விஞ்ஞானத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்