மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய சுகாதார பராமரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தொம்சனை (Brian Thompson) மன்ஹாட்டன் தெருக்களில் வைத்து படுகொலை செய்ததாகக் கூறப்படும் 26 வயதான லூய்கி மங்கியோனின் (Luigi Mangione) வழக்கு, அமெரிக்காவில் ஒரு பெரிய பொதுப் பிரச்சினையாக மாறியுள்ளது. இது தொடர்பாக, பல விபரங்கள் விளக்கப்பட வேண்டிய நிலையில், சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்து வரும் பிரதிபலிப்பானது, அடிப்படை வர்க்க கேள்விகளை எழுப்புகிறது.
முதலாவதாக, உலக சோசலிச வலைத் தளம் மங்கியோனுக்கு எதிராக பழிவாங்கும் வழக்கு தொடுப்பதை கண்டிக்கிறது, அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இது அவர் மீதான மரண தண்டனைக்கான சாத்தியக்கூறை உயர்த்துகிறது. கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மங்கியோனுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவருக்குத் தேவையான மருத்துவ உதவியை கொடுக்கவேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
இது தொடர்பாக, பெருநிறுவன தன்னலக்குழுக்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் விடையிறுப்பானது, மங்கியோனை நோக்கிய தனிப்பட்ட முறையில் ஒரு வக்கிரமான அணுகுமுறையுடன், அவரை வன்முறையாளன் என்று கூறப்படுவதன் மீதான சீற்றத்தையும் இணைத்து, முற்றிலும் பாசாங்குத்தனமாக உள்ளது. மன்ஹாட்டனில் இடம்பெற்ற படுகொலைக்கு ஒரு சில நாட்களுக்குப் பின்னர், மாஸ்கோ வீதிகளில் ரஷ்ய தளபதி இகோர் கிரிலோவ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை ஊடகங்கள் ஒருமனதாக பாராட்டின. இந்த பயங்கரவாத நடவடிக்கை, உலகை அணுவாயுத போரின் விளிம்பிற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.
முதலாம் உலகப் போர் இடம்பெற்ற சமயத்தில் நடந்த விஷமப் பிரச்சாரம் குறித்த குடியுரிமை வழக்கறிஞர் கிளாரன்ஸ் டாரோவின் (Clarence Darrow) விவரிப்பை மேற்கோளிடுவதானால், அமெரிக்க முதலாளித்துவ சமூகம், இறுதிக்கட்ட நெருக்கடியில், “மாமிசத்தை உண்டு இரத்தத்தைக் குடிக்கிறது”. உக்ரேன், காஸா, சிரியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்க ஆதரவிலான போர்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புதிய ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் பார்த்திராத அளவிற்கு, அரசியல் அட்டூழியத்துக்கு தயாரிப்பு செய்து வருகிறது.
இதைச் சொன்ன பிறகு, மங்கியோனை ஒருவித பழிவாங்கும் நாயகனாக உயர்த்திப் பிடிப்பவர்களை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். தொம்சன் “அவருக்கு தகுதியானதைப் பெற்றார்” என்ற எந்தவொரு திருப்தி உணர்வும் ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் தீங்கு விளைவிக்கும் விடையிறுப்பாகும். இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சமூக போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினையை, இது தனிமனிதனால் தீர்க்கப்படும் பிரச்சனையாக்குகிறது.
மங்கியோன் செய்ததாக கூறப்படுவதற்கு கணிசமான பொதுமக்களின் ஆதரவு, அமெரிக்க பொது வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ள போக்கை வெளிப்படுத்துகிறது. இதுவே, வர்க்க நனவுக்கு எதிராக பெருநிறுவன ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டு, தனிநபர் நடவடிக்கை மற்றும் தீவிர தனிமனித வாதத்தை மகிமைப்படுத்துகிறது.
இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து மேலும் தெரியவரும். எவ்வாறாயினும், ஒரு செயலை வழிநடத்தும் முன்னோக்கு மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை வைத்து, அகநிலை நோக்கங்களால் ஏற்படும் ஒரு செயலை ஒருபோதும் மதிப்பிட முடியாது. பிந்தைய அளவுகோல்களைப் பொறுத்தவரை, தொம்சனின் கொலை 50 வயதான அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோர், ஒரு கணவன் மற்றும் தந்தையை இழந்துள்ளனர் என்பதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் மங்கியோனே கூட ஒரு நீண்ட சிறைத்தண்டனை மற்றும் மரண தண்டனைக்கு முகங்கொடுக்கிறார்.
விஷயங்களின் பரந்த திட்டத்தில், தோம்சன் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு சிறிய மீன் மற்றும் அவர் ஏற்கனவே விரைவாக மாற்றப்பட்டுள்ளார். அவரது கொலையால் தூண்டப்பட்ட வெளிப்படையான நோக்கமும் அனுதாபமும் பெரும் மந்தநிலை கால நாவலான கோபத்தின் திராட்சையின் (The Grapes of Wrath [1]) ஒரு பிரபலமான காட்சியை நினைவூட்டுகிறது. இந்த நாவலில், ஒரு ஏழை விவசாயி, தனது வீட்டை இடிக்க ஒரு புல்டோசர் டிரைவருடன் வாக்குவாதம் செய்கிறார். இடிப்பதை தடுப்பற்காக, யாரைச் சுடுவது என்று அவர் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்:
[டிரைவர்:] “அது நான் இல்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் இதை செய்யாவிட்டால் என் வேலையை இழப்பேன். மேலும் பாருங்கள், நீங்கள் என்னைக் கொன்றால் என்ன செய்வது? அவர்கள் உங்களை தூக்கிலிடுவார்கள், ஆனால் நீங்கள் தூக்கிலிடப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு, இந்த டிராக்டரில் இன்னொருவர் இருப்பார், அவர் உங்கள் வீட்டை இடித்துத் தள்ளுவார். ஆகவே, நீங்கள் தவறான மனிதனைக் கொல்கிறீர்கள்”.
“உண்மைதான்” என்றார் குத்தகைதாரர். “உனக்கு யார் உத்தரவு போட்டது? நான் அதைத் தொடரப் போகிறேன். கொல்லப்பட வேண்டியவன் அவன்தான்”.
“நீங்கள் சொல்வது தவறு. வங்கியில் இருந்து அவர் உத்தரவை பெற்றார். வங்கி அவர்களிடம், ‘அந்த நபர்களை வெளியேற்றுங்கள், அது உங்களது வேலை’ என்று கூறியது.
“சரி, வங்கியில் தலைவர் ஒருவர் இருக்கிறார், அங்கு இயக்குநர்கள் குழு ஒன்று உள்ளது. நான் துப்பாக்கியின் ரவையை நிரப்பிக் கொண்டு வங்கிக்குப் போகிறேன்” என்றார் குத்தகைதாரர்.
டிரைவர் சொன்னார்: “கிழக்கிலிருந்து வங்கி உத்தரவுகளைப் பெறுகிறது என்று தோழர் ஒருவர் என்னிடம் கூறினார். ‘நிலத்தை லாபகரமாக்குங்கள் அல்லது நாங்கள் உங்களை முடித்துவிடுவோம்’ என்பதுதான் அந்த உத்தரவு.
“ஆனால் அது எங்கே நிற்கிறது? யாரைச் சுடலாம்? என்னைப் பட்டினி போட்டுக் கொண்டிருப்பவனைக் கொல்வதற்கு முன் பட்டினி கிடந்து சாவதை நான் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை” என்று குத்தகைதாரர் கூறுகிறார்.
“எனக்குத் தெரியாது. ஒருவேளை சுட யாரும் இல்லை. ஒருவேளை விஷயம் மனிதனே இல்லையோ என்னவோ. ஒருவேளை, நீங்கள் சொன்னது போல், சொத்து அதைச் செய்கிறது.
“நான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று குத்தகைதாரர் கூறினார். “நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். இதை நிறுத்த ஒரு வழி இருக்கிறது. இது மின்னல் அல்லது பூகம்பம் போன்றது அல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கெட்ட காரியத்தை நாம் பெற்றிருக்கிறோம், கடவுளால் அதை நாம் மாற்ற முடியும்.”
நமது காலத்தின் அடிப்படைப் பணியானது, ஒரு சோசலிசப் புரட்சியின் மூலம், தொழிலாள வர்க்கத்தால் ஐக்கிய சுகாதார பராமரிப்பு நிறுவனம் மற்றும் பிற பெரிய நிறுவனங்களை கையகப்படுத்துவதே ஒழிய, தனிப்பட்ட நிர்வாகிகளுக்கு எதிரான “பழிவாங்கல்” அல்ல. இதற்கு, வர்க்க நனவு மற்றும் அமைப்பின் மட்டத்தை இந்த வரலாற்று நோக்கத்தின் மட்டத்திற்கு உயர்த்தும் திறனுடைய தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
அமேசான், போயிங், கனடா போஸ்ட் மற்றும் ஏனைய இடங்களில் தொழிலாளர்களின் சமீபத்திய மற்றும் நடந்து வரும் வேலைநிறுத்தங்கள், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வர்க்க போராட்டத்தின் ஒரு பாரிய வெடிப்புக்கு முந்தைய அதிர்வுகளாக உள்ளன. இந்த தன்னியல்பான மேலெழுச்சி எந்த அளவிற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான மற்றும் சர்வதேச இயக்கமாக மாறுகிறது என்பதையும், மற்றும் நிர்வாக-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் எந்த அளவிற்கு தங்களை சுயாதீனமாக ஒழுங்கமைத்துக் கொள்ள முடிகிறது என்பதையும் வைத்து விளைவுகள் தீர்மானிக்கப்படும்.
மார்க்சிஸ்டுகள் தனிமனித வன்முறையை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் அது மேற்கண்ட கண்ணோட்டத்திற்கு நேரடியாக எதிரானதாக இருக்கிறது. நாம் முந்தைய முன்னோக்கு ஆய்வுகளில் விளக்கியதைப் போல, வர்க்கத்தின் நடவடிக்கைக்கு பதிலாக, முதன்மையாக நடுத்தர வர்க்க இளைஞர்களின் அணிகளில் இருந்து எடுக்கப்படும் அவநம்பிக்கையான, கோபமான தனிநபர்கள் மீதான நடவடிக்கை இங்கு பிரதியீடு செய்யப்படுகிறது.
இந்த அணுகுமுறைக்கு முரண்பட்ட விதத்தில், போலி-இடதுகளின் பரந்த பிரிவுகள் பகிரங்கமாக மங்கியோனை ஊக்குவித்து வருகின்றன. 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாக ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து உடைந்த ஒரு நடுத்தர வர்க்க தீவிரவாத குழுவான ஸ்பார்டசிஸ்ட் லீக்கின் செய்தித்தாளில் வெளியான ஒரு தலைப்புச் செய்தி பின்வருமாறு அறிவித்தது:
“ஆக்கபூர்வமற்றது ஆனால் அவர் குற்றவாளியல்ல: லூய்கியை விடுதலை செய்!” இதில், அவர்கள் தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் இரத்தவெறியின் மிக மோசமான உள்ளுணர்வுகளை ஊக்குவிக்கின்றனர், மங்கியோனின் “உறுதியான, தீர்க்கமான மற்றும் தைரியமான” நடவடிக்கையைப் பாராட்டுகின்ற அதேவேளையில், “இரத்தம் உறிஞ்சும் கோடீஸ்வரருக்கு” விருப்பத்துடன் அனுதாபம் காட்டுகின்றனர். இது “தைரியமான மற்றும் தீர்மானகரமானதாக” இருந்தாலும், நிராயுதபாணியான ஒரு மனிதனை முதுகில் சுடுவதில் நிச்சயமாக தைரியம் எதுவும் இல்லை.
மங்கியோனை குற்றஞ்சாட்டும் நடவடிக்கைகள் “உகந்ததல்ல” என்று மட்டுமே விமர்சித்த அவர்கள், பின்னர் அந்தக் கொலை “தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து நிச்சயமாக ஒரு குற்றமும் அல்ல” என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றனர்.
உண்மையில், தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்துதான் இந்தக் கொலை மிகவும் குற்றத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. “மற்றவர்கள் இந்த செயலால் உத்வேகம் பெற்று அதே பாதையைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமாகும் - இது புரட்சிகரமான மனித உடலை வீணடிப்பதாகும்” என்று ஸ்பார்டசிஸ்ட் லீக் தானே ஒப்புக்கொள்கிறது. இந்த அறிக்கையில், அடிப்படையில் அத்தகைய கொடூரமான துயரத்திற்கான பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவசியமான படிப்பினைகளைப் பெறுவதற்கும் தொழிலாளர்களுக்கு கல்வியூட்டுவதற்கும் பதிலாக, ஸ்பார்ட்டசிஸ்ட் லீக் அரசியல் குழப்பத்தை ஏற்றுக்கொள்கிறது, மேலும் அதனை பெரிதாக்க உதவுகிறது.
மங்கியோனுக்கான அவர்களின் ஆதரவு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் ஆரோன் புஷ்னெல்லின் தற்கொலையை ஊக்குவித்ததை நினைவுபடுத்துகிறது. புஷ்னெல் தனது சொந்த எதிர்ப்பின் ஒரு வடிவமாக தனது சொந்த உயிரையே பலிகொடுத்தார். அதே நேரத்தில், மங்கியோன் மற்றொருவரின் உயிரை எடுத்தார். ஆனால், இவர்கள் இருவரிடம் பொதுவாக இருப்பது அவர்களின் முற்றிலும் அரசியல்ரீதியாக பயனற்ற தன்மைதான். முதலாளித்துவ வர்க்கமானது, ஒருவர் தன்னைத்தானே உயிருடன் எரித்துக் கொள்வதாலோ அல்லது ஒரு நிர்வாகியைக் கொல்வதாலோ அசைக்கப்படாது.
ஸ்பார்ட்டசிஸ்ட் லீக் “பயங்கரவாதத்திற்கு” எதிரான மார்க்சிச எதிர்ப்புக்கு உதட்டளவில் மட்டுமே சேவை செய்து, அதை ஒரு பக்க பிரச்சினை என்று அறிவிக்கிறது. உண்மையில், இந்த எதிர்ப்பின் மையமானது, குறிப்பாக இது ஸ்பார்டசிஸ்ட் லீக் மற்றும் பிறரை கொள்கையற்ற சந்தர்ப்பவாதிகள் என அம்பலப்படுத்துகிறது.
அனைத்து வகையான எதிர்ப்பையும் அரக்கத்தனமாக சித்தரிக்க “பயங்கரவாதம்” என்ற வார்த்தையின் முதலாளித்துவ பயன்பாட்டிற்கு மாறாக, இந்த வார்த்தையின் மார்க்சிச பயன்பாடு எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் வன்முறை நடவடிக்கைகளை அணிதிரட்டுவதற்கு மாற்றாக எப்போதும் குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளது. மார்க்சிஸ்டுகள் எப்பொழுதும் “தீவிரவாதத்தின்” தோற்றம் இருந்தபோதிலும், அதன் இதயத்தில் உள்ள பயங்கரவாதம் ஒரு அடிப்படையில் சீர்திருத்தவாத, பழமைவாத முன்னோக்கு ஆகும், அது ஆளும் வர்க்கத்தை விட்டுக்கொடுப்புகளுக்கு “அழுத்தம்” கொடுக்கிறது.
மங்கியோனை ஆதரிப்பவர்களில் பலர் சந்தேகத்திற்கு இடமின்றி அவரது நடவடிக்கையானது, காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டு கட்டணங்களை குறைப்பதற்கும் காப்பீட்டை விரிவுபடுத்துவதற்கும் பயமுறுத்தும் என்று நம்புகிறார்கள். ஆனால், இந்த நடவடிக்கை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. பெருநிறுவன அமெரிக்கா, ட்ரம்பின் கீழ் பரந்த சர்வாதிகாரத்திற்கும் மற்றும் வெளிப்படையான செல்வந்த தட்டுக்களின் ஆட்சிக்கும் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், மங்கியோனை ஒரு உதாரணமாக ஆக்க தீர்மானகரமாக உள்ளது.
பயங்கரவாத குழுக்களின் அரசியல் பரிணாமம் எப்பொழுதும் ஒரு திட்டவட்டமான வர்க்க தர்க்கத்தை பின்பற்றி வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ரஷ்ய மார்க்சிசத்தின் ஸ்தாபகர் ஜோர்ஜி பிளெக்ஹானோவ் (Georgi Plekhanov), ஜாரை படுகொலைகளுடன் எதிர்த்துப் போராட முயன்ற நரோத்னிக் இயக்கத்தை “குண்டுகளைக் கொண்ட தாராளவாதிகள்” என்று கூறி எதிர்த்தார். இந்த குணாம்சப்படுத்தல் பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்ய புரட்சியின் போது நிரூபிக்கப்பட்டது. அப்போது சோசலிச புரட்சிக் கட்சியில் இருந்த அவர்களின் அரசியல் வாரிசுகள் அக்டோபர் புரட்சியை எதிர்த்து, உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக்குகளுக்கு எதிராக ஜாரிச அதிகாரிகளுடன் இணைந்து கொண்டனர்.
மிக சமீபத்திய காலங்களில், குண்டுவீச்சுக்களையும் கொரில்லா தந்திரோபாயங்களையும் ஆதரித்த 1960 களில் இருந்து பல முன்னாள் தீவிரவாதிகள் உயர்மட்ட அரசியல் மற்றும் கல்வித்துறை பதவிகளில் தங்கள் வழியைக் கண்டுள்ளனர், இதில் வெதர் அண்டர்கிரவுண்டின் (Weather Underground) வில்லியம் ஏயர்ஸ் (William Ayers) மற்றும் முன்னாள் மாவோவாதியாக இருந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வான் ஜோன்ஸ் (Van Jones) ஆகியோர் அடங்குவர். ஜேர்மனியில் முன்னாள் தெருச் சண்டைக்காரரான ஜோஷ்கா பிஷ்ஷர் (Joschka Fischer) 1990களின் கடைசியில் வெளியுறவு மந்திரியானார்.
ஸ்பார்ட்டசிஸ்ட் (Spartacist) கட்சியும் அது சார்ந்துள்ள போலி-இடது சகோதரத்துவமும், தீவிரமயப்பட்ட இளைஞர்களின் ஒரு தலைமுறையை சீர்திருத்தவாத “அழுத்தம்” என்ற முட்டுச்சந்துக்குள் திசைதிருப்ப முயன்று வருகின்றன. இது அடிப்படையில் இருக்கும் நிலைமையை அச்சுறுத்தவில்லை. மாறாக, அவ்வாறு செய்வதன் மூலம், தோம்சனின் படுகொலையைப் போன்று நடைபெறக்கூடிய தீவிர விரக்திகர சூழலை தோற்றுவிக்க உதவியுள்ளனர்.
ஒரு பாரிய இயக்கத்தின் சீர்குலைவு ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மட்டும் பாதையை வகுக்கவில்லை. மாறாக, தனிப்பட்ட “தீர்வுகள்” மூலம் ஒரு வழியைத் தேடுவதற்கு பாதிக்கப்படக்கூடிய அடுக்குகளையும் இது விட்டுச் செல்கிறது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே குறிப்பாக உண்மையாக இருக்கிறது. இந்த வகையானவர்களில் மங்கியோனும் உள்ளடங்குகிறார். சுமார் 60 சதவீத இளைஞர்கள் அவரது செயல்களை ஆதரிப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
ஆனால் இப்போது, போராட்டங்கள் மூலமாக “அழுத்தம்” கொடுப்பதில் வெளிப்படையான தோல்விக்குப் பின்னர், போலி-இடதுகள் இப்போது பழிவாங்கும் சுய-அழிவு நடவடிக்கைகள் மூலமாக “அழுத்தத்தை” கொடுக்க ஊக்குவித்து வருகின்றன.
குறுக்கு வழிகள் மற்றும் விரைவான தீர்வுகளை ஊக்குவிப்பவர்கள், அல்லது தங்களைப் பற்றி என்ன சொன்னாலும், சமூக தீர்வுகளிலிருந்து தனிப்பட்ட தீர்வுகளுக்கு கவனத்தை திசை திருப்புபவர்கள் அனைவரும், அரசியல் நோக்குநிலை பிறழ்ந்தவர்களாகவும், அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர். சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் போரை எதிர்ப்பதற்கு ஒரு வழியைத் தேடும் இளைஞர்களுக்காக, நாங்கள் கூறுகிறோம்: தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்பி, சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புங்கள்! தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல, மாறாக தொழிலாளர் சக்தியால் மட்டுமே முதலாளித்துவத்துடன் கணக்குத் தீர்க்க முடியும்.
The Grapes of Wrath என்பது ஜான் ஸ்டீன்பெக் (John Steinbeck) எழுதிய ஒரு நாவல், இது 1939 இல் வெளியிடப்பட்டது. இது அமெரிக்க இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் பெரும் மந்தநிலையின் போது படைக்கப்பட்டுள்ளது. வறட்சி, பொருளாதார கஷ்டம் மற்றும் விவசாயத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களால் ஓக்லஹோமா (Oklahoma) வீட்டிலிருந்து இடம்பெயர்ந்த ஏழை குத்தகை விவசாயிகளான ஜோட் (Joad) குடும்பத்தைப் பின்தொடர்கிறது இந்தக் கதை. அவர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி கலிபோர்னியாவுக்குச் செல்கிறார்கள், ஆனால் வழியில் பல சவால்களையும் அநீதிகளையும் எதிர்கொள்கின்றனர்.
இந்த நாவல் சமூக நீதி, உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் மனித ஆன்மாவின் பின்னடைவு போன்ற கருப்பொருள்களை மையமாக வைத்து உரையாற்றுகிறது. இது ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டுகிறது, இது பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் சமூக சமத்துவமின்மை பற்றிய ஒரு சக்திவாய்ந்த வர்ணனையாக அமைகிறது.