உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவும் அதன் விளைவுகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உலகப் பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரணமான பிளவை வெளிப்படுத்துகிறது. இதற்கு ஒப்பிடக்கூடிய நிலை, ஒரு நூற்றாண்டுக்கு முன் “கொந்தளிப்பான இருபதுகள்” என அழைக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டுமே காணப்பட்டது. அப்போது அமெரிக்காவின் பொருளாதார உச்சமானது 1929 இல் பங்குச் சந்தை பொறிவுக்கும், அதனைத் தொடர்ந்து பெரும் பொருளாதார மந்தநிலையின் தொடக்கத்திற்கும் வழிவகுத்தது.

உலகின் எஞ்சிய பகுதிகள் —அனைத்து பிரதான பொருளாதாரங்களும்— ஒரு சீரான விரிவாக்கம் ஒருபுறம் இருக்கும்போதும், ஒரு சாதகமான (positive) வளர்ச்சி விகிதத்தைக் கூடப் பதிவு செய்யப் போராடுகின்ற நிலையில், அமெரிக்காவின் பங்குச் சந்தை மற்றும் அதன் நிதிய அமைப்புமுறைக்குள் உலகின் எஞ்சிய பகுதிகளிலிருந்து நிதி பாய்ந்து வருகின்ற நிலையில், அது ஒரு நிதி எழுச்சியின் மத்தியில் உள்ளது.

பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள இந்த நிகழ்வுபோக்கானது, செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியைச் சுற்றியுள்ள நிதிய மிகைப்படுத்தலால் வேகமடைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான என்விடியா (Nvidia), தொழில்நுட்பப் பங்குகளில் சாதாரண நிலையிலிருந்து, சந்தை மதிப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்ததில் பிரதிபலிக்கிறது.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், அவருடன், NYSE இன் தலைவர் லின் மார்ட்டின், நடுவில், மெலனியா ட்ரம்ப், வலது பக்கத்தில் மற்றும் வர்த்தகர் பீட்டர் கியாச்சி, இடது பக்கத்தில், டிசம்பர் 12, 2024 அன்று நியூயார்க் பங்குச் சந்தையின் தளத்தில் நடந்து செல்லும்போது  [AP Photo/Alex Brandon]

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவரது நிர்வாகத்தின் முக்கிய துறைகளின் கட்டுப்பாட்டில் நிதிச் செல்வந்த தன்னலக்குழுத் தட்டுக்களை நியமித்ததுடன், பெருநிறுவன வரிகளைக் குறைப்பதற்கான அவரது உறுதிப்பாடு, மற்றும் நிதி ஒழுங்குமுறைகளில் எஞ்சியிருப்பவற்றை நடைமுறையளவில் கைவிடுவது ஆகியவற்றுடன் இது தீவிரமடைந்துள்ளது

உலகப் பொருளாதாரத்தில் திரண்டு வரும் வீழ்ச்சியின் அனைத்து அறிகுறிகளையும் விவரிக்க இங்கே இருக்கும் இடத்தை விட அதிக இடம் தேவைப்படும். இந்த நிகழ்ச்சிப்போக்கின் குறிப்பிடத்தக்க சில வெளிப்பாடுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது போதுமானதாக இருக்கும்.

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமும், ஒருகாலத்தில் ஐரோப்பாவின் சக்தி மிக்க நாடாக விளங்கிய ஜேர்மனியில், அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய உற்பத்தித் தொழில்துறை எங்கிலும் அலையெனப் பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன. இது வணிகச் சுழற்சியின் போக்கில் “மீட்சியை” எதிர்பார்க்கக்கூடிய தற்காலிக சரிவு அல்ல, மாறாக அதன் அடிப்படை அமைப்புகளே சிதைவடைந்து வருகின்றன.

நிதியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் “ஜேர்மன் வணிக முன்மாதிரி உடைந்துவிட்டதா?” என்ற கேள்வியை முன்நிறுத்துகின்றன. பெரும்பான்மையாக அளிக்கப்படும் பதில் ஆம் என்பதுதான்.

தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் “மிகவும் வெளிப்படையாகப் பதிவான சரிவு” என்று நவம்பரில், பைனான்சியல் டைம்ஸ் ஆனது டியூட்ஸ்செ வங்கியின் (Deutsche Bank) தலைமை பொருளாதார நிபுணர் ரோபின் விங்க்லெரின் (Robin Winkler) கருத்துக்களை மேற்கோளிட்டுள்ளது.

“ஜேர்மனியின் வணிக மாதிரி மரணகதியிலான அபாயத்தில் உள்ளது—எதிர்காலத்தில் எப்போதோ என்றல்ல, மாறாக இங்கே இப்பொழுதே” என்று கடந்த செப்டம்பரில், ஜேர்மன் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் சிக்ஃபிரைட் ருஸ்வூர்ம் (Siegfried Russwurm) எச்சரித்துள்ளார். 2030 ஆம் ஆண்டிற்குள், ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு காணாமல் போகக்கூடும் என்றும், “தொழில்துறை சரிவு என்பது ஒரு உண்மையாக இருக்கும் அபாயம்” என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று வோல்ஸ்வாகன் (VW) ஆலைகள் மூடப்படும் அச்சுறுத்தலின் மத்தியில் இரும்பு மற்றும் வாகன தொழில்துறையில் பாரிய பணிநீக்கங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் நெருக்கடி அத்துடன் நிற்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களிலிருந்து உலகத் தலைமையிலிருந்து வந்துள்ள ஜேர்மனியின் இரசாயன உற்பத்தி, இப்போது அதன் 2018 அளவுகளுடன் பார்க்கும்போது 18 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜேர்மனியின் மத்திய வங்கியான புண்டேஸ்வங்கி (Bundesbank) கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 2025 வளர்ச்சிக்கான அதன் முன்கணிப்பை 1 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாகக் குறைத்ததுடன், அமெரிக்க சுங்கவரி போர் அதை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்று எச்சரித்திருக்கிறது.

தற்போதைய அனுமானங்களின் கீழ், ஜேர்மனி அடுத்த ஆண்டு வெறும் 0.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடையும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது, ஆனால் அமெரிக்காவுக்கான ஐரோப்பிய சரக்குகள் மீது 10 சதவீத வரியும் சீன ஏற்றுமதிகள் மீது 60 சதவீத வரியும் விதிப்பதற்கு ட்ரம்ப் தனதுஅச்சுறுத்தல்களைப் பின்பற்றினால், ஜேர்மன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6 சதவீத புள்ளிகளாக வீழ்ச்சி அடையக்கூடும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், “ஜேர்மனி வீழ்ச்சியில் இல்லை” என்று செப்டம்பரில் வலியுறுத்திய ஜேர்மன் மத்திய வங்கியின் தலைவர் ஜோஹாயிம் நாகெல் (Joachim Nagel), சமீபத்திய அறிக்கை மீதான அவரது கருத்துக்களில் குறிப்பிட்டார்: “ஜேர்மன் பொருளாதாரம் வெறுமனே தொடர்ச்சியான சுழற்சி தலையீடுகளுடன் மட்டுமல்ல, மாறாகக் கட்டமைப்பு பிரச்சினைகளுடனும் போராடி வருகிறது.” 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமும், 2008-09 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் பிரதான ஆதாரமுமான சீனாவிலிருந்து வெளிவரும் சமீபத்திய புள்ளிவிபரங்கள், இந்த ஆண்டு அதன் உத்தியோகபூர்வ வளர்ச்சி இலக்கான “மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் மிகக் குறைந்த அளவான சுமார் 5 சதவீதத்தை” எட்டுவதற்கு போராடி வருவதையும், வளர்ச்சி அடுத்த ஆண்டு இன்னும் குறைவாக வீழ்ச்சியடையக்கூடும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

பெய்ஜிங்கில் எச்சரிக்கை மணிகள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நுகர்வுச் செலவினம் இந்த ஆண்டு நவம்பர் வரை 3 சதவிகிதம்தான் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. இது 4.6 சதவிகிதம் உயரலாம் மற்றும் முந்தைய மாதத்தைவிட 4.8 சதவிகித உயரலாம் என்ற கணிப்புகளுக்குக் குறைவானதாகும்.

கடந்த வாரம் அதன் வருடாந்திர மத்திய பொருளாதார பணி மாநாட்டில் (Central Economic Work Conference), நுகர்வை அதிகரிக்க “தீவிரமான” முயற்சிகளை மேற்கொள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அழைப்பு விடுத்தது, மேலும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங் முன்னெடுத்த பொருளாதார திட்டத்தின் மைய தூணாக இருந்து வரும் “புதிய உற்பத்தி சக்திகளை” அபிவிருத்தி செய்வதற்கான அழைப்புக்கு முன்னதாக இந்தப் பிரச்சினையை முதன்மையான முன்னுரிமையாக அதன் அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், நிதியியல் கொள்கையின் நிலைப்பாட்டை “விவேகமான” என்பதிலிருந்து “மிதமான தளர்வான” நிலைப்பாட்டிற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது —2008 நெருக்கடிக்குப் பின்னர் இத்தகைய வார்த்தைகள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பான் பல தசாப்தங்களாக உலக வளர்ச்சியின் மையம் என்ற காட்சியிலிருந்து நன்கு விலகி உள்ளது மற்றும் தொடர்ச்சியான பணவீக்கத்திற்கு எதிராகப் போராடியும் வருகிறது, அதன் வளர்ச்சி விகிதம் அதிகபட்சம் 1 சதவீதத்திற்கும் 2 சதவீதத்திற்கும் இடையில் மட்டுமே வருகிறது. அதன் வீழ்ச்சி இந்தாண்டு தொடக்கத்தில் அது உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற அதன் நிலையிலிருந்து நான்காம் இடத்திற்கு ஜேர்மனியிடம் இழந்து கீழிறக்கப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்டது.

பிரிட்டன் அல்லது ஆஸ்திரேலியா போன்ற நடுத்தர பொருளாதாரங்களையும் எங்கே இருக்கிறது என்று ஒருவர் மேற்கோளிடலாம், இந்நாடுகளில் அரசாங்கம் பெருமளவில் பணத்தை செலவழிக்காவிட்டால், பொருளாதாரம் பின்னோக்கி நகரும் அபாயம் உள்ளது.  தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (per capita GDP) தொடர்ந்து ஏழு காலாண்டுகளாகச் சரிந்துள்ளது.

மாறாக, அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக முன்னேறுவதாகத் தோன்றுகிறது, ஏனெனில் அதன் நிதிச் சந்தைகளுக்குள் பணம் பெருமளவில் பாய்கிறது. அமெரிக்கா தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்ற கருத்து நிலவினாலும், எச்சரிக்கை குரல்களும் எழுப்பப்படுகின்றன.

பைனான்சியல் டைம்ஸ் (FT) இன் வழமையான மதிப்புரையாளரும், ராக்பெல்லர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான ருச்சிர் சர்மா (Ruchir Sharma), “அனைத்து குமிழிகளுக்கும் தாய்” என்று தலைப்பிட்ட ஒரு சமீபத்திய கட்டுரையில், வோல் ஸ்ட்ரீட்டிற்குள் அசாதாரணமான பணப் பாய்ச்சலை விவரித்ததுடன், நிதிய வட்டாரங்களில் “அமெரிக்க விதிவிலக்கு” அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய முதலீட்டாளர்கள், “நவீன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாட்டில் அதிக மூலதனத்தை முதலீடு செய்கின்றனர்” என்று அவர் எழுதினார். இதன் விளைவாக, அமெரிக்கா “முன்னணி உலகளாவிய பங்குச் சந்தைக் குறியீட்டில் 1980களில் 30 சதவீதமாக இருந்ததிலிருந்து இப்போது கிட்டத்தட்ட 70 சதவீதத்தை எட்டியுள்ளது.” உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்கு 27 சதவீதம் மட்டுமே என்ற உண்மையானது, அடிப்படையில் உண்மைப் பொருளாதாரத்திலிருந்து நிதித்துறை எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உலகக் கடன் மற்றும் தனியார் சந்தைகளில் அமெரிக்காவின் ஈர்க்கும் சக்தி முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. 2024 இல் இதுவரையில், “வெளிநாட்டவர்கள் $1 ட்ரில்லியன் டாலர் வருடாந்திர விகிதத்தில் அமெரிக்க கடனுக்குள் மூலதனமாகச் செலுத்தியுள்ளனர், இது யூரோ மண்டலத்திற்குள் செலுத்தப்பட்டதை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்”, அத்துடன் அமெரிக்கா தனியார் முதலீடுகளுக்காக $13 ட்ரில்லியன் டாலர் சந்தையில் 70 சதவீத பணப்புழக்கத்தை ஈர்த்திருக்கிறது.

தொழில்நுட்பம் அல்லது AI குமிழிகளைப் பற்றி பேசுவது பரந்தளவிலான பார்வையை மறைக்கிறது என்று சர்மா கூறியுள்ளார். “உலகளாவிய முதலீட்டாளர்களின் மனதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, அதிகப்படியான உரிமையாளர்களைக் (over-owned)  கொண்டுள்ளது [அதாவது, பங்கு வைத்திருக்க விரும்பும் அனைவரும் ஏற்கனவே அதைச் செய்துவிட்டனர்], உண்மை மதிப்பை விட அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது (overvalued), மற்றும் இதுவரை காணாத அளவிற்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ”

அதைத் தொடர்ந்து வந்த ஒரு மதிப்பாய்வு கட்டுரையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு வோல் ஸ்ட்ரீட் பகுப்பாய்வாளரும் அமெரிக்க பங்குகள் தொடர்ந்து உயரும் என்று வலியுறுத்திய நிலையில், அவரது ஆரம்ப மதிப்பீடு சில எதிர்வினைகளைப் பெற்றது. எனினும், வரலாற்று அனுபவத்தை தெளிவாக அடிப்படையாகக் கொண்டு, அவர் குறிப்பிட்டதாவது: “இந்த அனைத்து ஆர்வமும் குமிழி மிகவும் முதிர்ந்த நிலையில் உள்ளதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.”

அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள குறைபாடு, அதன் “கூர்மையாக அதிகரித்து வரும் கடனுக்கு அடிமையாகியிருப்பது” என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கூடுதலாக $1 டாலரை உருவாக்க இப்போது அது கிட்டத்தட்ட$2 டாலர் கூடுதல் கடனை எடுத்துக்கொள்கிறது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீத அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வேறு எந்த நாடும் இந்த வழியில் செலவழித்தால், முதலீட்டாளர்கள் தப்பி ஓடியிருப்பார்கள், ஆனால் இப்போதைக்கு, உலகின் முன்னணி பொருளாதாரம் மற்றும் இருப்பு நாணயத்தை வழங்குபவர் என்ற முறையில் அமெரிக்கா எதிலிருந்தும் தப்பிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”

அமெரிக்க குமிழிக்கு எரியூட்டுகின்ற மற்றொரு காரணி, குறைந்தபட்சம் நிதியியல் சந்தைகளின் சில பிரிவுகளில், குறிப்பாக சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் மேற்கொள்ளப்போகும் வரிவிதிப்பு போர், அனுகூலமான விளைவுகளைக் ஏற்படுத்தப் போகிறது என்ற நம்பிக்கை ஆகும்.

மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) ஆசியா பிரிவின் முன்னாள் தலைவரான நீண்டகால சீனா பற்றிய பகுப்பாய்வாளர் ஸ்டீபன் ரோச் (Stephen Roach), அமெரிக்க-சீனா பொருளாதார உறவின் அடித்தளத்தில் உள்ள சில யதார்த்தங்களை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக பெய்ஜிங் முக்கிய கனிமங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததைச் சுட்டிக்காட்டி அவர் தனது கருத்துக்களைத் தொடங்கினார். இந்த நடவடிக்கைகள் “பழிவாங்கல் என்பது மோதலை தீவிரப்படுத்தும் உயர் ஆற்றல் எரிபொருள் (high-octane fuel) என்பதை நினைவூட்டுகின்றன” என்றார். 

சமன்பாட்டின் மற்ற பாதியை விட்டுவிட்டு, சீனாவுடனான உறவு ஒரு வழி என்று அமெரிக்க கொள்கை வட்டாரங்களில் ஒரு தவறான பார்வை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

“வருமானம் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த விலை சீனப் பொருட்களையும் பெரிதும் அமெரிக்கா நம்பியுள்ளது; அமெரிக்காவிற்கு அதன் உள்நாட்டு சேமிப்பு வெற்றிடத்தை நிரப்ப உதவும் வகையில் சீனாவின் உபரி சேமிப்பு தேவைப்படுகிறது; அமெரிக்க உற்பத்தியாளர்கள் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகச் சீனாவை நம்பியுள்ளனர். இந்த கூட்டு-சார்புநிலை என்பதன் அர்த்தம், சீனா அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைப் போலவே அமெரிக்காவும் சீனாவைச் சார்ந்திருக்கிறது என்பதாகும்.”

சீனாவின் உச்சகட்ட நிதியியல் ஆயுதமாக அமெரிக்க கருவூலப் பத்திரங்கள், அரசாங்க கடன், 1$ ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக அது வைத்திருக்கிறது அதில் $772 பில்லியன் டாலர் மக்கள் குடியரசிடமிருந்தும் மற்றும் $233 பில்லியன் டாலர் ஹாங்காங்கில் இருந்து வெளிவருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா அதன் கையிருப்புகளை திரும்பப்பெறத் தொடங்கினால் அல்லது கருவூலக் கடன் ஏலங்களில் கூட ஈடுபடத் தவறினால், “இது அமெரிக்காவின் பற்றாக்குறை-பாதிப்புக்குள்ளாகும் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும், உலக நிதியியல் சந்தைகளில் கடுமையான கூடுதல் சேதங்களுடன் அமெரிக்க பத்திர சந்தையில் பேரழிவைக் கட்டவிழ்த்துவிடும்.”

“அலட்சியமான அமெரிக்கர்கள்” மத்தியில் நிலவும் கருத்து என்னவெனில், அதன் விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் சீனா “இந்த அணு ஆயுத விருப்பத்தை நோக்கி செல்ல துணியாது” என்பதாகும். ஆனால், இத்தகைய சூழ்நிலை நிதிச் சந்தை சரிவை ஏற்படுத்தும் என்பதால் நடக்காது என்று தோன்றினாலும், “சிக்கிக்கொண்ட எதிரியின் ‘குறைந்த நிகழ்தகவு ஆபத்து’ விளைவுகளை புறக்கணிப்பது பொறுப்பற்றதாக இருக்கும்.”

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, தற்போதைய நிலைமைக்கு இணையானது “வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்ட இருபதுகள்” மட்டுமே. பெருமந்த நிலையைத் தூண்டிய வோல் ஸ்ட்ரீட் சரிவு திடீரென்று எதிர்பாராதநிலையில் தோன்றியது என்ற கருத்து உள்ளது.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, தற்போதைய ஒப்பிடக்கூடிய நிலை “கொந்தளிப்பான இருபதுகள்” மட்டுமே. பெருமந்தநிலையைத் தூண்டிய வோல் ஸ்ட்ரீட் சரிவு திடீரென்று எதிர்பாராத நிலையில் தோன்றியது என்ற கருத்து உள்ளது.

உண்மையில், 1929 அக்டோபர் நிகழ்வுகளுக்கு முன்னர் என்ன வரவிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வந்திருந்தன. 1927-28 வாக்கில், ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் மந்தநிலையின் தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன. குறிப்பாக ஜேர்மனியில், ஒரு தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிளை ஏற்படுத்தியிருந்தன.

நிதியியல் பேரழிவு அதனைத் தொடர்ந்து வந்த—மந்தநிலை, பாரிய வேலைவாய்ப்பின்மை, பாசிசம், சர்வாதிகாரம், மற்றும் இறுதியில் உலகப் போர்— முதலாளித்துவ நெருக்கடியால் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கான ஒரே விடையிறுப்பாக உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அவசியத்தை முன்நிறுத்தியது.

தொழிலாள வர்க்கமானது, அதன் தலைமையாகவிருந்த, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணமாக, இந்த வரலாற்றுரீதியில் அவசியமான பணியை முன்னெடுக்க முடியாமல் போனது.

வரலாறு, நிச்சயமாக, அப்படியே திரும்ப நிகழ்வதில்லை. ஆனால் மார்க் ட்வைன் (Mark Twain) கூறியதுபோல, அது ஓரளவு ஒத்த வடிவத்தில் நிகழ்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடி, அதன் இறுதிக்கட்ட மரண ஓலம், அந்த காலத்தை விட இப்போது மிகவும் முன்னேறிய கட்டத்தில் உள்ளது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன.

ஆகவே இந்தத் தருணத்தில், உலகைச் சூழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கமைப்பின் ஆழமடைந்து வரும் பொருளாதார முறிவால் உடனடியாக நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டுள்ள பாரிய வர்க்கப் போராட்டங்களுக்கு அவசியமான தலைமையை வழங்குவதற்கு, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் (ICFI) கட்டியெழுப்புவதே தீர்மானகரமான பணியாக உள்ளது.  உலகத்தை மூழ்கடிக்கும் பொருளாதார ஒழுங்கு நெருக்கடியில் “அமெரிக்க விதிவிலக்கு” என்று எதுவும் இருக்காது.

Loading