முன்னோக்கு

அமெரிக்காவில் அமேசான் மற்றும் ஸ்டார்பக்ஸ் வேலைநிறுத்தப் போராட்டங்கள் 2025 இல் உலகளாவிய வர்க்க மோதல் விரிவடைந்து வருவதை முன்னறிவிப்பு செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

டிசம்பர் 19, 2024, கலிபோர்னியாவின் தொழில்துறை நகரில் உள்ள DAX5 ஆலையை முற்றுகையிடும் அமேசான் தொழிலாளர்கள்.

வர்க்கப் போராட்ட காலகட்டத்துடன் சேர்த்து அமெரிக்காவில் விடுமுறை காலமும் தொடங்கிவிட்டது. ஆயிரக் கணக்கான அமேசான் மற்றும் ஸ்டார்பக்ஸ் (Amazon and Starbucks) தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புகின்றனர்.

உலக சோசலிச வலைத் தளம் இந்த வேலைநிறுத்தப் போராட்டங்களை ஆதரிப்பதுடன், அவற்றுக்குப் பின்னால் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கும் அழைப்பு விடுக்கிறது. இது வெறுமனே தொழிலாள வர்க்கத்தின் இரண்டு பிரிவுகளின் போராட்டம் அல்ல. மாறாக, அனைத்து தொழிலாளர்களுக்குமான இன்றியமையாத அக்கறை கொண்ட போராட்டமாகும். இது, 2025 ஆம் ஆண்டில் உலகளவில் விரிவடைந்து வரும் ஒரு போக்கின் சமிக்ஞையாகும்.

நியூ யோர்க் நகரம், அட்லாண்டா, தெற்கு கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் இல்லிநோய்ஸின் ஸ்கோகி ஆகிய இடங்களில் அமேசான் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக டீம்ஸ்டர்ஸ் தெரிவிக்கிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் என்று கூறப்படுகிறது. ஓட்டுநர்கள் பணியாளர் அந்தஸ்து, வாழ்வதற்குரிய ஊதியங்கள் மற்றும் அவர்களின் வேலை அட்டவணைகளைக் கட்டுப்படுத்தும் ஊபர்-பாணி (வாடகை வண்டி) தரமதிப்பீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவர கோரி வருகின்றனர்.

நியூ யோர்க்கின் குவீன்ஸில், 20 துணை ஒப்பந்ததாரர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஓட்டுநர்கள் ஒன்றாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 15 டாலர்களை ஊதியமாகப் பெறும் அவர்கள், நியூ யோர்க் நகரில் ஒரு ஒற்றை பெற்றோரின் வாழ்க்கை ஊதியத்தை (ஒரு மணி நேரத்திற்கு 56.42 டாலர்) விட மிகக் குறைவானதையே பெறுகிறார்கள். ஸ்டேட்டன் தீவில் உள்ள JFK8 கிட்டங்கியிலும் இதேபோன்ற நிலைமைகள் உள்ளன, அங்கு மார்ச் 2022 இல் 5,500 தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு வாக்களித்தனர்.

JFK8 தொழிலாளர்களை பெருமளவில் ஓரங்கட்டியுள்ள டீம்ஸ்டர்ஸ், ஒரு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அமேசான் மறுத்த போதிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடையாள போராட்டங்களுடன் மட்டுப்படுத்தியுள்ளது. டீம்ஸ்டர்ஸ் தலைவர்கள், தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் ஓரளவு மேம்பாடுகள் என்பன நிறுவனத்தின் மிகப்பெரிய வருவாய் விகிதத்தைக் குறைக்கும் மற்றும் நிறுவனத்தின் 1.1 மில்லியன் அமெரிக்க தொழிலாளர்களின் எதிர்கால வேலைநிறுத்தங்களைத் தடுக்கும் என்று அமேசானை நம்ப வைக்கும் என்று நம்புகிறார்கள்.

அமேசான்-பாணி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பெருமளவிலான பணிநீக்கங்களை மேற்கொள்ள உதவும் UPS நிர்வாகத்துடன் அதே வசதியான உறவுகளை கொண்டிருக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் விரும்புகிறது. ஆனால், இதற்கு முரண்பட்ட விதத்தில், அமேசான் தொழிலாளர்கள், நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் அவர்களின் கோரிக்கைகளை அடைவதற்கும் ஒரு தீவிர போராட்டத்தை விரும்புகின்றனர்.

திங்களன்று, பாஸ்டனில் உள்ள ஸ்டார்பக்ஸ், டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் (Dallas-Fort Worth) மற்றும் போர்ட்லேண்ட், ஓரிகானில் உள்ள காபி, தேநீர் மற்றும் சிறப்பு பானங்கள் போன்ற பானங்களை தயாரித்து வழங்கும் பாரிஸ்டா தொழிலாளர்கள், டிசம்பர் 20 இல் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டங்களில் இணைந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இப்போது சியாட்டில், லொஸ் ஏஞ்சல்ஸ், சிக்காகோ, நியூ யோர்க் நகரம் மற்றும் பிலடெல்பியா உட்பட 12 முக்கிய நகரங்களில் 50 கடைகளை பாதித்துள்ளது.

மேலும், 525 கடைகளில் உள்ள தொழிலாளர்களை உள்ளடக்கிய ஸ்டார்பக்ஸ் வொர்க்கர்ஸ் யுனைடெட் (Starbucks Workers United), நிறுவனம் இது தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாகக் கூறுகிறது. 2024 இல் $3.76 பில்லியன் டாலர் லாபம் இருந்தபோதிலும், ஸ்டார்பக்ஸ் பெரும்பாலான பாரிஸ்டாக்களுக்கு உடனடி உயர்வுகள் இல்லாமல் 1.5 சதவிகிதம் மட்டுமே எதிர்கால அதிகரிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதிக ஊதியத்திற்கான கோரிக்கைகளை ஸ்டார்பக்ஸ் நிராகரித்து, அவற்றை “அனுமதிக்க முடியாதது” என்று அறிவித்தது. ஒரு மணி நேரத்திற்கு அதன் அற்ப 18 டாலர் சராசரி ஊதியம் மற்றும் நன்மைகள் என்பன, இதர சில்லறை விற்பனையாளர்களுடன் ஒப்பிடமுடியாதவை என்று நிறுவனம் கூறுகிறது.

அமேசான் மற்றும் ஸ்டார்பக்ஸ் இரண்டும் பிரம்மாண்டமான உலகளாவிய நிறுவனங்கள் ஆகும். அமேசான், 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் பரந்த தொழிலாளர் சக்தியுடன், சில்லறை விற்பனை, தளவாடங்கள், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்டார்பக்ஸ், 360,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 80 நாடுகளில் இருப்பைக் கொண்டுள்ளது, உணவு சேவை நிறுவனங்களுக்கான சந்தை மூலதனத்தில் மெக்டொனால்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஸ்டார்பக்ஸ் உள்ளது.

இரண்டுமே தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் இருந்து இலாபம் ஈட்டும் ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. 241 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பு கொண்ட அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ் மற்றும் 3.2 பில்லியன் டாலர் செல்வவளம் என மதிப்பிடப்படும் ஸ்டார்பக்ஸ் முன்னாள் தலைமை செயலதிகாரி ஹரோல்ட் ஷூல்ட்ஸ் ஆகியோர், பெரும் செல்வந்தர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான பரந்த இடைவெளியை எடுத்துக்காட்டுகின்றனர்.

இந்த பெருநிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் கூட்டு பலத்தை அணித்திரட்டுவது அவசியமாகும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), ஒவ்வொரு வேலையிடத்திலும் குழுக்களை ஸ்தாபிப்பதன் மூலமாக சாமானிய தொழிலாளர்களின் ஒரு எதிர்-தாக்குதலைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது.

இந்தக் குழுக்கள், அமேசனில் “உற்பத்தி விகித” முறையை ஒழிப்பதற்கும், இரண்டு நிறுவனங்களிலும் தற்காலிக தொழிலாளர்களை நியமிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அனைத்து தொழிலாளர்களுக்குமான வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியத்தை பாதுகாப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும். IWA-RFC மூலமாக, தொழிலாளர்கள் நேரடியான தகவல்தொடர்பு வழிகளை ஸ்தாபிப்பதுடன், தேசிய எல்லைகளைக் கடந்து அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பார்கள். நிர்வாகத்தின் தாக்குதல்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளின் விற்றுத்தள்ளல்களுக்கு எதிராக இந்த குழுக்கள் தொழிலாளர்களின் அதிகாரத்திற்காக போராடும்.

இந்த அடிப்படைகளில் ஒரு போராட்டத்தை ஒழுங்கமைக்காமல், தொழிலாளர்கள் இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க ஆதாயங்களை அடைவது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாகும். வணிக சார்பு அதிகாரத்துவத்தினரிடம் இருந்து கட்டுப்பாட்டை எடுக்க தொழிலாளர்களின் போராட்டம் தேவைப்படுகிறது. தொழிற்சங்க எந்திரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்துவவாதிகளின் ஒரே கவலை, அவர்களின் அரசியல் தொடர்புகளையும் ஆறு இலக்க சம்பளங்களையும் பாதுகாப்பது மட்டுமே.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கார்னகி, ராக்ஃபெல்லர் மற்றும் பிற கொள்ளையர்களின் ஆட்சியில் இருந்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது என்பது இந்தளவுக்கு வெளிப்படையாக இருந்ததில்லை. மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் பெருகிய முறையில் இந்த தன்னலக்குழுவை எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது அதனால் அடிமைப்படுத்தப்படும் என்பதை உணர்ந்துள்ளனர்.

நிஜமான ஊதியங்களின் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசி மற்றும் வீடற்ற நிலை என சமூக துயரங்களின் அனைத்துக் குறியீடுகளும் கடந்த ஆண்டில் மோசமடைந்துள்ளன. ஆனால், ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, 2024 ஒரு வளமான ஆண்டாகும்.

“இது பில்லியனர்களுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் ஆண்டாகும், பூமியிலுள்ள 2,800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 2024 ஆம் ஆண்டில் மூன்று காற்புள்ளிகளைக் கொண்ட பில்லியனர்கள் ஆகி வருகின்றனர்” என்று ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய நிலையில், இந்த ஆண்டின் முதல் 10 பில்லியனர்கள் தங்கள் செல்வவளத்தை 730 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.  

இந்த தன்னலக் குழுக்களின் ஒரு தேர்வாக உள்ள வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தில், ஒரு பில்லியனராக அல்லது மெகா-மில்லியனராக இருப்பது என்பது நியமனத்திற்கான முதல் தேவையாகும். ஆனால், பத்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கும், சமூக வேலைத்திட்டங்களில் இருந்து ட்ரில்லியன் கணக்கான பணத்தை வெட்டித் தள்ளுவதற்கும், பல தலைமுறையாக, போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்திருந்த சமூக மற்றும் ஜனநாயக ஆதாயங்களை அழிப்பதற்கும், ட்ரம்ப், மஸ்க் மற்றும் ஏனைய பில்லியனர்களின் திட்டங்கள் பாரிய எதிர்ப்புக்களை முகங்கொடுக்கும்.

ட்ரம்ப் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமும், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனான ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும். டீம்ஸ்டர்ஸ் இன் பொது தலைவர் சீன் ஓ’பிரையன், ட்ரம்பின் கொள்கைகளுக்கு, குறிப்பாக அவரது நச்சுத்தனமான “அமெரிக்கா முதலில்” தேசியவாதத்தை ஆமோதிக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஓர் அலையில் முன்னணியில் இருந்து வருகிறார்.

வர்க்கப் போராட்டமானது, அரசியல் நிகழ்வுகளின் உந்து சக்தியாக எழுந்து வருகிறது. கடந்த ஆண்டு உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சியைக் கண்டது. காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் வெடித்தன. ஆர்ஜென்டினா, கினியா, நைஜீரியா, கிரீஸ் மற்றும் இத்தாலி எங்கிலும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான பொது வேலைநிறுத்த போராட்டங்கள் பெருக்கெடுத்தன. வடக்கு அயர்லாந்தில், 150,000 பொதுத்துறை தொழிலாளர்கள் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். தென் கொரியா (சியோல் போக்குவரத்து நிறுவனம், சாம்சுங்), இலங்கை (இரயில்வே தொழிலாளர்கள்), சிலி (தாமிர சுரங்கத் தொழிலாளர்கள்), பிரேசில் (துறைமுகத் தொழிலாளர்கள்), துருக்கி (உலோகத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள்), ஜேர்மனி (லுப்தான்சா, வோல்க்ஸ்வாகன்), பிரிட்டன் (இரயில் மற்றும் விமான நிலையம்), பிரான்ஸ் (துறைமுகம், இரயில் மற்றும் பொதுத்துறை) மற்றும் மெக்சிகோ (எஃகு மற்றும் வாகனத்துறை தொழிலாளர்கள்) ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெற்றன.

அமெரிக்காவில், தென் மாநிலங்களின் AT&T தொலைத்தொடர்பு தொழிலாளர்கள், காஸா இனப்படுகொலையை எதிர்த்ததற்காக கைது செய்யப்படுவதற்கு எதிராக தங்களின் மாணவர்களைப் பாதுகாத்த கிட்டத்தட்ட 40,000ம் கலிபோர்னியா பல்கலைக்கழக கல்வித்துறை தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டங்களில் உள்ளடங்குவர். 33,000 போயிங் தொழிலாளர்களின் இரண்டு மாத வேலைநிறுத்தம் மற்றும் கிழக்கு மற்றும் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 47,000 துறைமுகத் தொழிலாளர்களின் வெளிநடப்பு போராட்டம் ஆகியவை இதில் அடங்கும். கனடாவில், ஆயிரக்கணக்கான சஸ்காட்செவன் கல்வியாளர்களும் இரயில்பாதை, துறைமுகம் மற்றும் கனடா அஞ்சல் தொழிலாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமேசான் மற்றும் ஸ்டார்பக்ஸ் வேலைநிறுத்தங்கள் 2025 இல் வரவிருக்கும் வர்க்க மோதல் புயலின் ஒரு ஆரம்ப அறிகுறியாகும். அமெரிக்காவில், துறைமுகத் தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் புதுப்பிக்கப்பட்ட போராட்டங்களும் இதில் உள்ளடங்கும்.

அமெரிக்காவில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும், மூலப்பொருட்கள், சந்தைகள், இலாபங்கள் மற்றும் மலிவு உழைப்பு ஆகியவற்றின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தால் நடத்தப்படும் பெருகிவரும் போர்களுக்கும் இடையேயான தொடர்பு முன்னெப்போதும் இல்லாததை விட தெளிவாகி வருகிறது. பனாமா கால்வாயைக் கைப்பற்றுவது மற்றும் ரஷ்யா மீதான ஜனநாயகக் கட்சியினரின் போர்வெறி பற்றிய ட்ரம்பின் கூச்சல்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் “உள்ளே இருக்கும் எதிரி”, அதாவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்தும் திட்டங்களுடன் கைகோர்த்துச் செல்கின்றன.

மனிதகுலத்தின் உயிர்வாழ்வு, மனித முன்னேற்றத்தை மீண்டும் தொடங்குவதுடன் சமூக சமத்துவத்தை அடைவது ஒருபுறம் இருக்க, மனிதகுலத்தின் உயிர்பிழைப்பே முற்றிலுமாக பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதிலும் மற்றும் சமூகத்தின் மீதான அவர்களின் சர்வாதிகார கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் தங்கியுள்ளது. முழு அரசியல் ஸ்தாபனத்தின் ஆதரவுடன் உலக பில்லியனர்கள் நடத்தும் வெறித்தனமான தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இதனை தெளிவாக்கியுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமேசான் மற்றும் ஸ்டார்பக்ஸ் தொழிலாளர்களுக்கு சாத்தியமான பரந்த ஆதரவை வழங்குமாறும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புத்தாண்டில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்-தாக்குதலை ஒழுங்கமைக்க சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்புமாறும் உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது.

Loading