இலங்கை அரசாங்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரத்தில் கைவைப்பதை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் கண்டனம் செய்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலம்.

“சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தோற்கடிப்பது எப்படி? என்ற தலைப்பில், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, 3 ஜனவரி 2025 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடத்தவிருந்த பகிரங்க விரிவுரைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தினால் (FUTA) 5  ஜனவரி 2025 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

ஊடக அறிக்கை

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி சுதந்திரத்தின் மீது கைவைப்பதை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் கண்டனம் செய்கிறது

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் தாக்கம் குறித்து கலந்துரையாடப்படவிருந்த கூட்டத்தை தடுக்க பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் எடுத்த முடிவை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு (FUTA) வன்மையாக கண்டிக்கிறது. அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கத்தினால் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு, 3 ஜனவரி 2025 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், மாநாட்டின் தலைப்பை மாற்ற வேண்டும் அல்லது கூட்டத்தை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் என்று துணைவேந்தர் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நாம் அறிந்தோம்.

இந்த நடவடிக்கை, கல்வி சுதந்திரத்தின் மீது ஒரு வெட்கக்கேடான மற்றும் தேவையற்ற தலையீட்டைக் குறிக்கிறது. பல்கலைக்கழகங்கள் எனப்படுபவை, விமர்சன ரீதியான சிந்தனை, திறந்த உரையாடல் மற்றும் பலதரப்பட்ட கருத்துகளின் பரிமாற்றத்திற்கான அடிப்படை அரங்காகும். தற்போதுள்ள விவரிப்புகளுக்கு சவால் விடும் அல்லது விமர்சன முன்னோக்குகளுக்கு சவால் விடக்கூடிய விவாதங்களை நடத்துவது உள்ளடங்களாக, கல்விசார் கற்கை நிறுவனத்தின் மூலம், பரந்த பல்கலைக்கழக சமூகத்திற்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிகழ்வில் துணைவேந்தர் தலையிடுவது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. அறிவுசார் கற்கைகள் மற்றும் சுதந்திரத்தினதும் கோட்டைகளாகக் கருதப்படும் பல்கலைக்கழகங்களின் நெறிமுறைகளை இத்தகைய நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. விமர்சனப்பூர்வமான கலந்துரையாடல்களை நசுக்குவதானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி உரிமைகளை வெட்டிக் குறைப்பது மட்டுமல்லாமல், நமது உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கையையும் மரியாதையையும் குறைமதிப்பிடச் செய்கிறது.

கல்விச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையையும் தணிக்கை அல்லது பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல், கருத்துக்களை சுதந்திரமாக விவாதிக்கக்கூடிய அரங்கமாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்துமாறும் நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

சாருதத்தா பி. இளங்கசிங்க

பொதுச் செயலாளர்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA)

Loading