மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனவரி 20 அன்று சரியாக ஒரு வாரத்தில், ஒரு குற்றவாளியும் ஆர்வமுள்ள சர்வாதிகாரியுமான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்வு, அமெரிக்க ஜனநாயகத்தின் பேரழிவுகரமான வீழ்ச்சியைக் குறிக்கும். 2020 தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்ற முயற்சித்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, “அமெரிக்க அரசியலமைப்பைப் பேணுவோம், பாதுகாப்போம் மற்றும் தற்காப்போம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தை ட்ரம்ப் ஒப்பிப்பது என்பது, அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் பொய்யாக இருக்கும்.
அவரது தொடக்க உரையின் செய்தி: “செல்வந்தர்களுக்கு தயாள குணத்துடனும், மற்றவர்கள் அனைவருக்கும் தீய எண்ணத்துடனும்” இருக்கும்.
ட்ரம்ப் பதவியேற்றவுடன் “நிர்வாக உத்தரவுகளின் ஒரு பனிப்புயலை” கட்டவிழ்த்துவிடத் தயாராகி வருகிறார். இதனை கடந்த வாரயிறுதியில் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோன் பர்ராசோ “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பூட்டும்” ஒரு பிரச்சாரம் என்று விவரித்தார். உத்தரவுகள், விதிமுறைகளை அகற்றுவதிலும், புலம்பெயர்ந்தோரை பாரியளவில் சுற்றி வளைக்க உத்தரவிடுவதிலும், ஆளும் உயரடுக்கை செழிப்பாக்குவதை விரைவுபடுத்துவதிலும் அவர் கவனம் செலுத்துவார்.
ட்ரம்பால் உயர் அமைச்சரவை பதவிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இந்த வாரம் செனட்டில் ஆஜராகத் தொடங்குவார்கள். அவர்களில் கிறிஸ்டி நோயெம் உள்ளார், அவர் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு டகோட்டா ஆளுநரான அவரது சாதனையில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய வன்முறையை ஊக்குவித்தல் மற்றும் அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லையைக் கண்காணிக்க டெக்சாஸுக்கு தேசிய காவல் துருப்புக்களை அனுப்புதல் ஆகியவை அடங்கும். எல்லை ரோந்து, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) மற்றும் இரகசிய சேவை உள்ளிட்ட நிறுவனங்களை அவர் மேற்பார்வையிடுவார்.
அட்டர்னி ஜெனரலுக்கான ட்ரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட பாம் போண்டி, நோயெமுடன் புதன்கிழமை தனது பதவியை தொடங்குவார். முன்னாள் புளோரிடா அட்டர்னி ஜெனரலும் பெருநிறுவன பரப்புரையாளருமான போண்டி, ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவராக பணியாற்றி வந்ததோடு, ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பொய்களின் முக்கிய ஊக்குவிப்பாளராகவும் இருந்தார்.
அவரது நியமனம், ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதலை மேற்பார்வையிட “நீதித்துறையைப்” பயன்படுத்தும் நிர்வாகத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இதில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் முன்னணியில் உள்ளது. “அரசியல் எதிரிகள், அதிருப்தியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட உள்நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக துருப்புக்களை நிலைநிறுத்த” ட்ரம்ப் திட்டமிட்டுள்ள திட்டங்கள் குறித்து, “ட்ரம்பின் கீழ் அமெரிக்க மண்ணில் நிலைநிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க இராணுவம் விவாதிக்கிறது” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் பொலிட்டிகோ நேற்று செய்தி வெளியிட்டது.
வெளியுறவுத்துறை அமைச்சராக புளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோவை ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். கியூபா எதிர்ப்பு வெறியரான இவர், லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை ஊக்குவித்து வரும் அதே வேளையில், சீனா மற்றும் ஈரானுக்கு எதிராக பொருளாதார மற்றும் இராணுவ மோதலை நீண்டகாலமாக ஆதரித்து வருகிறார். இவரது நியமனம், அரசாங்கங்களை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குவதிலும் இராணுவ வன்முறையை விரிவுபடுத்துவதிலும் புதிதாக கவனம் செலுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் தீவிரமாக செயல்படுவதை சமிக்ஞை செய்கிறது.
இதற்கிடையில், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ், காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை மேலும் தீவிரப்படுத்த உறுதியளித்துள்ளார். மேலும், பதவியேற்பு தினத்திற்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் “அனைத்து நரகமும் கட்டவிழ்த்து விடப்படும்” என்று வார இறுதியில் சூளுரைத்தார்.
இந்த வாரம் வரவேற்கப்படும் மற்றவர்களில், பில்லியனரும் ஒரு தனியார் முதலீட்டு நிதிய மேலாளருமான ஸ்காட் பெசென்ட் கருவூல செயலாளராகவும்; காலநிலை மாற்ற மறுப்பாளரும், லிபர்ட்டி எனர்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ரைட் எரிசக்தி செயலாளராகவும்; மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவன நிர்வாகியாக லீ செல்டின் ஆகியோரும் அடங்குவர்.
புவி வெப்பமடைதலால் ஏற்படும் காட்டுத்தீ அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியான லொஸ் ஏஞ்சல்ஸை தொடர்ந்து அழித்து வருவதால், ரைட் மற்றும் ஜெல்டின் சுற்றுச்சூழல் கொள்கையின் கடிவாளத்தை எடுத்துக்கொள்வார்கள். இந்த காட்டுத் தீயினால் குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் நச்சுப் புகையால் விஷமாக்கப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 12,000 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் எரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இன்னமும் பதவியேற்புக்கு உறுதிப்படுத்தப்படாதவர்களில், தடுப்பூசி எதிர்ப்பு வழக்கறிஞர் ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியரும் ஒருவராவர். இவர், தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் புதிய, இன்னும் கொடிய நோய்க்கிருமிகளின் தோற்றத்துடன் உலகம் தொடர்ந்து போராடி வரும் நேரத்தில், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையை வழிநடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மிச்சிகன் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் ஆபத்தான அளவுகளைப் புகாரளித்து வருகின்றன. “மிச்சிகனில் உள்ள மருத்துவமனைகளில் கோவிட் நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் உள்ளனர்” என்று மிச்சிகன் குடும்ப மருத்துவர்கள் அகாடமியின் தலைவர் ரேச்சல் கிளாமோ டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பெருகிவரும் பொது சுகாதார நெருக்கடியுடன் சேர்ந்து, H5N1 பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் முதல் மனித மரணம் கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸ், கோவிட்-19 ஐ விட கொடிய தொற்றுநோயைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மைய இலக்கு தொழிலாள வர்க்கமாக இருக்கும். காங்கிரஸின் உறுதிப்படுத்தலுக்கு இன்னமும் உட்படுத்தப்படவில்லை என்றாலும், உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க் மற்றும் உயிரிதொழில்நுட்ப பில்லியனர் விவேக் ராமசாமி ஆகியோர் புதிய நிர்வாகத்திற்குள் “அரசு செயல்திறன் துறை” (DOGE) என்றழைக்கப்படுவதன் கூட்டுத் தலைவர்களாக சக்திவாய்ந்த பதவிகளை வகிப்பார்கள்.
கடந்த வாரயிறுதியில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளை இலக்கு வைத்து, ஆழமான வெட்டுக்களை அடையாளம் காண, கருவூலத்துறை, உள்நாட்டு வருவாய் சேவை, படையினர் விவகாரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் உட்பட ஒரு டசினுக்கும் அதிகமான கூட்டாட்சி முகமைகளுக்கு மஸ்க் மற்றும் ராமசாமி ஏற்கனவே தமது தூதர்களை அனுப்பியுள்ளனர்.
கடந்த நவம்பர் 5 முதல் நடந்து வருகின்ற அனைத்தும் உலக சோசலிச வலைத்தளத்தின் எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்றன. ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அமெரிக்க அரசியலை அதன் அடிப்படை சமூக யதார்த்தத்துடன் வன்முறையாக மறுஒழுங்கமைக்கப்படுவதை குறிக்கிறது. அதிர்ச்சியூட்டும் சமத்துவமின்மையால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு சமூகமானது, பாரிய நிறுவனங்கள், மெகா-மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் ஒரு தன்னலக்குழுவால் ஆளப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தளம் அதன் புத்தாண்டு அறிக்கையில் பின்வருமாறு எழுதியது:
அமெரிக்காவின் பெரும்தலைவர் என்று அழைக்கப்படுபவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், 2016 இல் அவர் பெற்ற ஆரம்ப வெற்றியும், அந்த விடயத்தில் ஜனவரி 6, 2021 இல், அவர் மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியும் பிறழ்ச்சிகள் அல்ல. மாறாக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் இடம்பெற்றுவரும் அரசியலின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைப்பின் வெளிப்பாடுகளே என்பதை எடுத்துக்காட்டுகிறது.
பைடென் நிர்வாகத்தின் கடந்த நான்கு ஆண்டுகள், இந்த அரசியல் தோல்விக்கு வழி வகுத்துள்ளன. பைடெனின் கீழ் ஜனநாயகக் கட்சியினர் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் முதல் காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை வரையில், உலகளாவிய போரை அதிகரிப்பதில் தனித்துவமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவே, அவர்களின் வரையறுக்கும் நோக்குநிலையாக உள்ளது. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து,”ஜனநாயகத்தின் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தல்” அல்லது “பாசிச அபாயம்” குறித்த அனைத்து பேச்சுக்களையும் கைவிட்டு, அதற்கு பதிலாக வரவிருக்கும் ஆட்சியுடன் “ஐக்கியம்” மற்றும் “ஒத்துழைப்புக்கு” அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க உறுதிபூண்டுள்ள ஜனநாயகக் கட்சி, இந்தப் பாத்திரத்தை அது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து பகிர்ந்து கொள்கிறது. சர்வதேச நெடுங்கடலோர தொழிலாளர்கள் சங்கம் (ILA) புதன்கிழமை (துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடுத்த பிறகு) ஒரு அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சிறந்த நண்பர்களில் ஒருவராக ட்ரம்பை பாராட்டியது. தொழிற்சங்க எந்திரம் மூலதனத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுவதோடு, ட்ரம்புடன் நல்லிணக்கம் காட்டவும் மற்றும் பாசிசவாத ஜனாதிபதியை தொழிலாள வர்க்கத்தின் பாதுகாவலராக ஊக்குவிக்கவும் துரிதமாக நகர்ந்து வருகிறது.
இதற்கிடையே, ஊடகங்களை “மக்களின் எதிரி” என்று மீண்டும் மீண்டும் கண்டனம் செய்த ஒரு மனிதரான ட்ரம்புக்கு ஊடகங்கள் ஏற்கனவே இடமளிக்கத் தொடங்கிவிட்டன. அவரது மிகத் தீவிரமான ஆத்திரமூட்டல்கள் (கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயைக் கைப்பற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் கனடாவை இணைப்பதற்கான திட்டங்கள் போன்றவை) இப்போது “அரசியல் சொற்பொழிவின்” சட்டபூர்வமான கூறுகளாகக் கருதப்படுகின்றன.
ஆனால் அத்தனை பொறுப்பற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னைத்தானே பெருமையடித்துக் கொள்ளும் தற்பெருமைக்கு அப்பால், ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கடியால் பாதிக்கப்படும்.
உள்நாட்டில் சமூக பிற்போக்குத்தனக் கொள்கைகளும் வெளிநாட்டில் ஏகாதிபத்தியக் கொள்ளையடிப்பும் என்பன, அமெரிக்க முதலாளித்துவம் பகுத்தறிவு ரீதியான பதிலைக் கொண்டிருக்காத உள்நாட்டு மற்றும் உலகளாவிய முரண்பாடுகளுக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாகும். அது மீண்டுமொருமுறை, இரண்டு முறை பதவி நீக்க குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளியின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைத்துள்ளது என்ற உண்மையானது, ஆளும் வர்க்கத்தின் அரசியல், தார்மீக திவால்நிலைக்கு சான்றாக உள்ளது.
ட்ரம்பின் வாய்வீச்சு ஜனரஞ்சகவாதம் ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடி என்று விரைவில் அம்பலப்படுத்தப்படும். ஊடகங்கள் தொடர்ந்து ட்ரம்பை “இயல்பாக்கிவரும்” அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினர் வருங்கால அமெரிக்க “பெருந்தலைவரின்” முன்னால் மண்டியிடுவர். அதேநேரம், தன்னலக் குழுக்களின் அரசாங்கத்திற்கான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திற்குள் மேலும் அபிவிருத்தி அடையும். அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தை பாரியளவில் தீவிரப்படுத்துவது நிகழ்ச்சி நிரலில் உள்ளது.