முன்னோக்கு

இஸ்ரேலிய குண்டுகளும் தோட்டாக்களும் காஸாவில் 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றிருக்கலாம் என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா பகுதிக்குள் குண்டு வீச்சுக்களின் புகை மண்டலங்கள் எழுவதை, தெற்கு இஸ்ரேலில் இருந்து பார்க்க கூடியதாக உள்ளது, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 17, 2024. [AP Photo/Ariel Schalit]

கடந்த வாரம், தி லான்செட்டில் வெளியிடப்பட்ட லண்டன் சுகாதாரப் பள்ளி மற்றும் வெப்பமண்டல மருத்துவ (London School of Hygiene & Tropical Medicine) ஆராய்ச்சியாளர்களின் ஒரு முக்கிய ஆய்வு, காஸா இனப்படுகொலையின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை, அக்டோபர் 2023 மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 41 சதவீதம் குறைத்து மதிப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளது.

காஸா சுகாதார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 2023 இல் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தோட்டாக்கள் மற்றும் குண்டுகளினால் 46,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டால், இதன் பொருள் அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,000 க்கும் அதிகமாக இருக்கும். இது, காஸாவின் போருக்கு முந்தைய மக்கள்தொகையில் 2.9 சதவீதமாகும்.

உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள், லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் சரியாக அதிர்ச்சியடைந்துள்ளனர். இது, 12,000 க்கும் மேற்பட்ட வீடுகள், வணிகங்கள், பள்ளிகள் மற்றும் பிற கட்டமைப்புகளை அழித்துள்ளதுடன், 24 இறப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. இது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவாக இருக்கலாம் என்று கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் கூறியுள்ளார்.

ஆனால், உலகின் பணக்கார நகரங்களில் ஒன்றாக இல்லாத, முற்றுகையிடப்பட்ட காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை மரணங்களின் எண்ணிக்கை இதனைவிட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமாகும். இந்த மரணங்கள் வேண்டுமென்றே, மனிதாபிமானமற்ற மனித நடவடிக்கையால் ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 59 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவு மற்றும் உதவியுடன், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) காஸா மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு வருகின்றமை ஒரு இனப்படுகொலை என்ற மறுக்கவியலாத உண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், லண்டன் சுகாதார மருத்துவப் பள்ளியின் ஆய்வில் அம்பலப்படுத்தப்பட்ட இந்த கொடூரமான இறப்பு எண்ணிக்கை கூட, பல அம்சங்களில் ஒரு குறிப்பிடத்தக்க குறைமதிப்பீடாகும். முதலாவதாக, இதன் ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளபடி, கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் புதையுண்டு இறந்துள்ளதாகக் கருதப்படுபவர்கள்பற்றி இந்த ஆய்வில் உள்வாங்கப்படவில்லை. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகத்தால் (OCHA) சுமார் 10,000 பேர்வரை இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆய்வு, காஸா பகுதிக்கு உணவை தடைசெய்து, அதன் மருத்துவமனைகளை முறையாக அழித்து, இஸ்ரேலிய அரசாங்கத்தின் வேண்டுமென்ற முயற்சிகளால் ஊக்குவிக்கப்பட்டுவரும் பட்டினி, நீர்ச்சத்து இழப்பு மற்றும் தொற்று நோய்கள் பரவுதல் ஆகியவற்றின் தாக்கத்தையும் உள்ளடக்கவில்லை.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இறப்பு எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு மிகவும் விரிவான மற்றும் துல்லியமான புள்ளிவிவர முறையைப் பயன்படுத்தியது. இந்த ஆய்வு மூன்று ஆதாரங்களில் இருந்து தரவை ஒருங்கிணைத்தது: சுகாதார அமைச்சக மருத்துவமனை இறப்பு பதிவுகள், அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இணையவழி கணக்கெடுப்புகள் மற்றும் சமூக ஊடக இரங்கல் செய்திகள் ஆகியவைகளாகும்.

தரவுத் தொகுப்புகளுக்கு இடையேயான ஒன்றுடன் ஒன்று மற்றும் இடைவெளிகளைக் கண்டறிய, பிடிப்பு மற்றும் மறுபயன்பாட்டு (capture-recapture) பகுப்பாய்வு எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எந்தவொரு மூலத்தாலும் பதிவு செய்யப்படாத இறப்புகளைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்களை அனுமதித்தது. காணாமல் போனவர்களின் தரவுகள் புள்ளிவிவர மாதிரியாக்கம் மூலம் கையாளப்பட்டன, மேலும் துல்லியத்தை மேம்படுத்த பல்வேறு காட்சிகள் சோதிக்கப்பட்டன.

பட்டினி மற்றும் தொற்று நோய்களால் ஏற்படும் இறப்புக்கள் உட்பட ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இதேபோன்ற நுணுக்கமான அல்லது கடுமை பற்றிய எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் அத்தகைய ஆய்வு கூட சாத்தியமில்லாமல் போகலாம். இந்த ஆய்வின் ஆசிரியர்கள் விளக்குவதைப் போல, “ஒரு கள ஆய்வு வலுவான மதிப்பீடுகளை வழங்க முடியும் என்றாலும், காஸாவிற்குள் மனிதாபிமான மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மிகவும் பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் அணுகல் தடைகள் ஆகியவை தற்போது அதை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன.”

கடந்த ஜூலையில், தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை, முந்தைய போர்களின் தாக்கத்தின் அடிப்படையில், இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட இறப்புகளின் எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக எட்டக்கூடும் என்று மதிப்பிட்டது.

மிக சமீபத்திய ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வன்முறை மரணங்களை பெருமளவில் குறைத்து மதிப்பிடுவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து காரணங்களாலும் ஏற்பட்ட 186,000 இறப்புகள் என்ற முந்தைய எண்ணிக்கையே ஒரு பெரிய குறைத்து மதிப்பிடலாக இருக்க வாய்ப்புள்ளது.

பைடென் நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு, காஸாவில் இறப்பு எண்ணிக்கை ஒரு ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் போரின் ஒரு துணை விளைபொருள் ஆகும். எவ்வாறிருப்பினும், காஸாவில் சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பை முறியடிப்பதற்காக முடிந்தவரை அதிகமான குடிமக்களை கொல்ல வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவே, இந்த இறப்பு எண்ணிக்கை என்பதை சமீபத்திய ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒரு ஆயுதக் குழுவுக்கு எதிரான போர் அல்ல, மாறாக முழு மக்களுக்கும் எதிரான ஒரு இனப்படுகொலை.

கடந்த மாதம், ஹமாஸ் ஆதரவாளர் என்று கருதப்படும் ஒருவரின் மீதான ஒவ்வொரு தாக்குதலிலும் 20 போராளிகள் அல்லாதவர்களைக் கொல்ல அங்கீகாரம் அளிக்கும் அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய இராணுவ ஆவணங்கள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. சில சந்தர்ப்பங்களில் இந்த விகிதம் ஒன்றுக்கு 100 என எட்டியது. ஒவ்வொரு தாக்குதலிலும், 20 பொதுமக்கள் வரை கொல்லும் அறிவிப்பை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டதாக, உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்று டைம்ஸ் எழுதியது.

ஹமாஸ் அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை இலக்கில் வைப்பதற்கான இந்த “செயல்முறை”, சாத்தியமானளவுக்கு அதிகமான மக்களைக் கொல்வதையும் மற்றும் சாத்தியமான அளவுக்கு காஸாவின் பெரும்பகுதியை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, காஸா மீது மிகப்பெரிய குண்டுகளைக் கொண்டு ஒட்டுமொத்தமாக குண்டுவீசுவதற்கான ஒரு மூடிமறைப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை டைம்ஸ் விவரிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சர்வதேச மன்னிப்பு சபையானது, “காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கம் மட்டுமே” இஸ்ரேல் மேற்கொண்டுவரும் படுகொலை, பாலஸ்தீன மக்களின் கட்டாய இடம்பெயர்வு மற்றும் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை வேண்டுமென்றே பட்டினி போடுவதன் “அளவையும் வீச்சையும்” விளக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு விரிவான 296 பக்க அறிக்கையை வெளியிட்டது.

நவம்பர் 27 அன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோருக்கு கைது ஆணைகளைப் பிறப்பித்தது. அந்த இருவரையும், “ஒரு போர் முறையாக பட்டினி போடுவது என்ற போர்க்குற்றத்தையும், மனிதகுலத்திற்கு எதிரான கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்களையும்” மேற்கொண்டனர் குற்றம் சாட்டியது.

கடந்த திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தனது ஜனாதிபதி பதவியின் வெளியுறவுக் கொள்கை குறித்த இறுதி உரையில், “இஸ்ரேல் ஈரானுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியதாகவும்”, அமெரிக்காவைப் பொறுத்தவரை, “எங்கள் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை” அளித்ததாகவும் பெருமையுடன் கூறினார். தனது ஜனாதிபதி பதவியின் பாரம்பரியத்தை சுருக்கமாகக் கூறிய பைடென், “அமெரிக்காவின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நாங்கள் சக்தியை அதிகரித்துள்ளோம்”, மேலும், நாங்கள் எங்கள் இராணுவ சக்தியையும் அதிகரித்துள்ளோம். “எங்கள் தேசிய சக்தியின் ஆதாரங்கள் நாங்கள் பதவியேற்றதை விட மிகவும் வலிமையானவை” என்று அறிவித்தார்,

கடந்த வாரயிறுதியில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகுவுடன் பேசிய பைடென், மத்திய கிழக்கு முழுவதும் “அடிப்படையில் மாறிவிட்ட பிராந்திய சூழ்நிலைகள், சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி மற்றும் பிராந்தியத்தில் ஈரானின் அதிகாரம் பலவீனமடைந்து வருவது” குறித்து பெருமைபீற்றினார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “அதிகாரத்தை” அதிகரிப்பதற்கான அமெரிக்க உந்துதலின் இன்றியமையாத கூறுபாடாக காஸா இனப்படுகொலை உள்ளது. புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டலீசா ரைஸ், எதை “புதிய மத்திய கிழக்கு” என்று பெயரிட்டாரோ அதை உருவாக்கும் முயற்சியில், பாலஸ்தீன பிரச்சினையின் இறுதித் தீர்வை, அதாவது பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பை முற்றிலுமாக உடைப்பதற்கான உந்துதலை, பைடென் நிர்வாகம் பின்பற்றி வருகிறது. “புதிய மத்திய கிழக்கு” என்ற வார்த்தையை, இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாக, அவர் நடத்தி வரும் பாரிய பிராந்திய போரின் இலக்கை விவரிக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறார்.

இன்னும் 5 நாட்களில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். கடந்த வாரம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் சரணடையாவிட்டால் மத்திய கிழக்கில் “அனைத்து நரகமும் வெடிக்கும்” என்று ட்ரம்ப் உறுதியளித்தார். துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், “இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கடைசி இரண்டு பட்டாலியன்களையும் அவற்றின் தலைமையையும் வீழ்த்துவதற்கு” உதவுவதாக உறுதியளித்தார்.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பதிலளித்த இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், மேற்குக் கரையை இணைப்பதற்கான தயாரிப்புகளுக்கு உத்தரவிட்டதன் மூலமாக, மேற்குக் கரையை காஸா போல தோற்றமளிக்க வைக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இரத்தக்கறை படிந்த பைடென் நிர்வாகம் முதல் ட்ரம்ப் மற்றும் அவரது பாசிஸ்டுகள் வரை அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரிவுகளும், இனப்படுகொலை மற்றும் நவ-காலனித்துவ இணைப்பினை இயல்பாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் மீதான தொடர்ச்சியான படுகொலையை அவர்கள் ஒருபோதும் மீண்டும் நிகழாத விதிவிலக்காகக் கருதவில்லை. மாறாக, இதை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகக் கருதுகின்றனர்.

ட்ரம்ப் பதவியேற்க தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். ஒரு பயங்கரமான வெளிப்பாடாக மட்டுமே இருக்கும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் படுகொலைக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிரான போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

Loading