பைடென் போர் நிறுத்தத்தை அறிவித்ததில் இருந்து இஸ்ரேலிய படைகள் காஸாவில் 86 பேரை கொன்றுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா பகுதிக்குள் குண்டு வீச்சுக்களின் புகை மண்டலங்கள் எழுவதை, தெற்கு இஸ்ரேலில் இருந்து பார்க்க கூடியதாக உள்ளது, ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 16, 2025 [AP Photo/Tsafrir Abayov]

காஸாவில் இனப்படுகொலையை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் ஒரு போர்நிறுத்தத்தை செயல்படுத்த உடன்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கடந்த புதனன்று அறிவித்த போதிலும், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய பகுதி முழுவதும் அதன் வெறியாட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இஸ்ரேலிய படைகள் 86 பேரைக் கொன்றும், 558 பேர்களை காயப்படுத்தியும் உள்ளன. இது, ஒரு வாரத்தில் ஏற்பட்ட அதிகபட்ச தினசரி இறப்பு எண்ணிக்கையாகும். உயிரிழந்தவர்களில் 23 குழந்தைகளும் அடங்குவர். வியாழனன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) காஸாவில் “50 பயங்கரவாத இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது.

பாலஸ்தீன தகவல் மையம் “ஆக்கிரமிப்பாளர்கள், வியாழக்கிழமை காஸா பகுதியின் பல்வேறு பகுதிகளில் விமானங்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் வன்முறை ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்ததாகவும், வீடுகள், இடம்பெயர்ந்தோர் கூடும் இடங்கள் மற்றும் தெருக்களை குறிவைத்து டசின் கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியதாகவும்” தெரிவித்தது.

“கடந்த 24 மணி நேரத்திற்குள், இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதி முழுவதும் அதன் தாக்குதல்களை அதிகரித்தது, முக்கியமாக கட்டிடங்கள் மற்றும் பொது வசதிகளை குறிவைத்தது. தஞ்சமும் பாதுகாப்பும் தேடி வந்த அதிகமான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களுக்குள் வைத்து கொல்லப்பட்டனர்” என்று அல் ஜசீரா அறிவித்தது,

ஹமாஸ், பேச்சுவார்த்தையாளர்களை “மிரட்டி பணம் பறித்ததாக” குற்றஞ்சாட்டிய முந்தைய அறிக்கைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதம மந்திரியின் அலுவலகமானது, வியாழனன்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவையின் வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இந்த உடன்பாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரவைக்குள்ளேயே குறிப்பிடத்தக்க பிளவுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. வியாழனன்று தேசிய பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்விர் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்தார். “இந்த பொறுப்பற்ற ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், யூத சக்தியின் உறுப்பினர்களாகிய நாங்கள், ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் சமர்ப்பிப்போம்” என்று அறிவித்தார்.

இஸ்ரேலின் ஒப்பந்தம் குறித்த தனது அறிக்கையில் மிகவும் நுணுக்கமாக இருந்த புலம்பெயர்ந்தோர் அமைச்சர் அமிச்சாய் சிக்லி, இந்த ஒப்பந்தம் காஸாவிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்களை முழுமையாக திரும்பப் பெறுவதை உள்ளடக்காது என்பதை தெளிவுபடுத்தினார்.

“இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அடித்தளம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் உறுதியளிக்க மறுப்பதாகும். அதேயளவுக்கு முக்கியமானது, காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கையை அவர்கள் பெறவில்லை. இஸ்ரேலிய இராணுவம் பிலடெல்பி தாழ்வாரத்தையும் (அதன் முழு நீளத்திலும் ஐந்து புறக்காவல் நிலையங்கள் மற்றும் ரோந்துகளுடன்) மற்றும் காஸாவின் எல்லைகளை ஒட்டிய சுற்றளவையும் தொடர்ந்து வைத்திருக்கும்,” என்று அவர் X இல் ஒரு அறிக்கையில் எழுதினார்.

வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் இனப்படுகொலைக்கான அமெரிக்க ஆதரவை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும் என்பதை தெளிவுபடுத்திய அவர், அது “சந்தேகத்திற்கிடமின்றி இஸ்ரேலுக்கு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அறிவித்தார். மேலும் அவர், “இஸ்ரேலின் உண்மையான நண்பரான ஜனாதிபதி ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவுள்ள @michaelgwaltz, ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், தேவைக்கேற்ப போரைத் தொடர இஸ்ரேலின் உரிமையை வரவிருக்கும் நிர்வாகம் ஆதரிக்கிறது என்றும், ஹமாஸ் காஸாவை தொடர்ந்து ஆட்சி செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றும் கூறியதை நான் கவனமாகக் கேட்டேன். நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலாளர் @PeteHegseth, இந்த வாரம் தனது உறுதிப்படுத்தல் விசாரணையின் போது, ​​ஹமாஸை அழித்து கடைசி மனிதன் வரை அதை ஒழிக்கும் இஸ்ரேலின் உரிமையை ஆதரிப்பதாகக் கூறியதாக” அமிச்சாய் சிக்லி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், காஸாவில் மனிதாபிமான நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல், “காஸாவின் சிறுவர்களுக்கு, இந்த புத்தாண்டு அதிக இறப்புகளையும், தாக்குதல்கள், பற்றாக்குறை மற்றும் குளிரில் அதிகரித்த வெளிப்பாடு ஆகியவற்றால் துன்பத்தையும் கொண்டு வந்துள்ளது” என்று கூறினார்.

கேத்தரின் ரஸ்ஸல் பின்வருமாறு தெரிவித்தார்:

“2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் காஸா பகுதியில் நடந்த இடைவிடாத வன்முறையில் குறைந்தது 74 பிள்ளைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காஸா நகரம், கான் யூனிஸ் மற்றும் தெற்கில் ஒருதலைப்பட்சமாக “பாதுகாப்பு மண்டலம்” என்று பெயரிடப்பட்ட அல் மவாசி பகுதிகளில் இரவு நேரத் தாக்குதல்கள் உட்பட, பல பாரிய இறப்பு நிகழ்வுகளில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அல் மவாசியில் நேற்று நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிறுவர்கள் பாதுகாப்பு நிறுவனம், பின்வருமாறு குறிப்பிட்டது:

2024 ஆம் ஆண்டில் காஸாவில் இடம்பெற்ற குண்டு வீச்சுக்களினால் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 475 சிறுவர்கள் (அல்லது ஒரு நாளைக்கு 15 சிறுவர்கள்) வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்களாக இருப்பர், இதில் கடுமையான காயங்கள் மற்றும் காது கேளாமைகளும் அடங்கும்...

இது மேலும் கூறுகையில்,

2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில், குறைந்தது 5,230 பிள்ளைகள் குறிப்பிடத்தக்க மறுவாழ்வு உதவி தேவைப்படும் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இஸ்ரேலியப் படைகளால் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் இருந்ததால், அவர்களை அணுக முடியவில்லை, இதனால் சிறுவர்கள் அதிக ஆபத்தில், முடமாகிப் போவதற்கான நிலையில் உள்ளனர்.

சிறுவர்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் கூட்டு அமைப்பான பாலஸ்தீனியர்களுக்கான மருத்துவ உதவியின் (MAP), எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனா ஜீலானி பின்வருமாறு கூறினார்: “நீங்கள் சிறுவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அவர்களுக்கு வளர்ந்து வரும் எலும்புகள் இருக்கும், எனவே அவர்களின் எலும்பின் வளர்ந்து வரும் பகுதியில் காயம் ஏற்பட்டால், அந்தப் பகுதி வளர்வதை நிறுத்திவிடும். ஊட்டச்சத்து குறைபாட்டின் அதிகரித்த அளவுகளால் காயங்கள் குணமடையவில்லை - நாங்கள் அடிப்படையில் ஆறாத காயங்களை மீண்டும் தைக்க முயற்சிக்கிறோம். எலும்புகள் குணமடையாததால், கைகால்கள் உறுதியாக இருந்தாலும், சூழ்நிலையின் தீவிரம் காரணமாக அவை செயல்படாததால், சிறுவர்கள் உடல் உறுப்புகளை துண்டிக்கும் அவலங்களை எதிர்கொள்கின்றனர் “ என்று குறிப்பிட்டார்.

ஒரு தனி அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம், “40,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அவசரகால உணவுப் பாதுகாப்பின்மையை (IPC கட்டம் 4) அனுபவித்து வருகின்றனர். மேலும் 8,000 க்கும் அதிகமானோர் பேரழிவு தரும் உணவுப் பாதுகாப்பின்மை நிலைமைகளை (IPC கட்டம் 5) அனுபவித்து வருகின்றனர்” என்று எழுதியது. மேலும், “தற்போது, ​​காஸா முழுவதும் பகுதியளவு செயல்படும் 18 மருத்துவமனைகளில் ஏழு, 11 கள மருத்துவமனைகளில் நான்கு மற்றும் ஒரு சமூக சுகாதார மையத்தில் மட்டுமே அவசர மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு வசதி கிடைக்கிறது” என்று குறிப்பிட்டது.

இந்த மாத தொடக்கத்தில், காஸாவில் 46,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, உண்மையான இறப்பு எண்ணிக்கையை 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்து மதிப்பிடுவதாகவும், உண்மையான இறப்பு எண்ணிக்கை 70,000ஐத் தாண்டியிருக்கலாம் என்றும் ஒரு முன்னணி ஆய்வு கண்டறிந்துள்ளது.

Loading