மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன்கிழமை இரவு, ஜனாதிபதி ஜோ பைடெனின் பிரியாவிடை உரை சுய-பாராட்டு சொல்லாட்சி மற்றும் அவரது நிர்வாகத்தின் நான்கு ஆண்டுகளின் வெற்றிகள் குறித்த கற்பனையான கூற்றுக்களின் கலவையாக இருந்தது. இந்த வெற்றுரைகளுக்கு இடையே, அமெரிக்க சமூகத்தின் கொடூரமான யதார்த்தத்தை சுருக்கமாக ஒப்புக் கொள்ளும் ஒரு அறிக்கையை பைடென் வெளியிட்டார்.
“எனக்கு மிகுந்த கவலையைத் தரும் சில விஷயங்கள் குறித்து நாட்டை எச்சரிக்க விரும்புகிறேன்” என்று பைடென் கூறினார். “மிகச் சில அதி-செல்வந்தர்களின் கைகளில் அதிகாரம் ஆபத்தான முறையில் குவிந்துள்ளது. இன்று, அமெரிக்காவில் ஒரு தன்னலக்குழு அதீத செல்வவளம், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் உருவாகி வருகிறது, இது நமது முழு ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் உண்மையில் அச்சுறுத்துகிறது...” என்று குறிப்பிட்டார்.
1961 ஆம் ஆண்டு, முன்னாள் ஜெனரலும் ஓய்வு பெற்ற ஜனாதிபதியுமான ஐசனோவரின் பிரியாவிடை உரையில், “இராணுவ-தொழில்துறை வளாகத்தின்” ஆபத்துகள் குறித்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த பைடென், “நமது நாட்டிற்கு உண்மையான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப-தொழில்துறை வளாகத்தின்” எழுச்சியை குறிப்பிட்டார்.
“வடிவம் பெற்று வரும்” “சாத்தியமான” அபிவிருத்திகள் குறித்து பைடென் நிபந்தனையுடன் பேசிய போதிலும், அமெரிக்க சமூகத்தின் தன்னலக்குழுவின் தன்மை ஏற்கனவே ஒரு ஆழமாக வேரூன்றிய யதார்த்தமாக உள்ளது. இது, அவர் பாதுகாக்கும் அதே அமைப்புமுறையால் பல தசாப்தங்களாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
பைடெனின் கருத்துக்களில் உள்ள மலைப்பூட்டும் பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டுவது போதுமானளவுக்கு எளிதாகும். இது, அவரது சொந்த நிர்வாகத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பாசாங்குடன் தன்னலக்குழு கட்டுப்பாட்டை பலப்படுத்துவதை முன்வைக்கிறது. புளூம்பேர்க் நியூஸ் தகவல்படி, பைடென் பதவியில் இருந்த நான்காண்டு காலத்தில், 100 பணக்கார அமெரிக்கர்களின் செல்வவளம் 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு —மலைப்பூட்டும் வகையில் 63 சதவீத அதிகரிப்பு— அதிகரித்தது.
பைடென் “தொழில்நுட்ப-தொழில்துறை வளாகம்” என்று குறிப்பிட்டவற்றில் உள்ள முக்கிய நபர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை வானளாவ உயர்த்தியுள்ளனர். எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2020ல் 25 பில்லியன் டாலரில் இருந்து 415 பில்லியன் டாலராக, பதினாறு மடங்கு அதிகரித்துள்ளது. ஜெஃப் பெசோஸின் செல்வவளம் இரட்டிப்பாகியுள்ளது, மேலும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
பைடென் பதவியை விட்டு வெளியேறும்போது, 2008 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பாரிய இரு கட்சி வங்கி பிணை எடுப்புகள் மூலம், தானும் ஜனநாயகக் கட்சியும், வளர்ப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் மையப் பங்கு வகித்த ஒரு தன்னலக்குழுவைப் பற்றிப் பேசுகிறார். ஜனாதிபதியாக பைடெனின் முதன்மையான குறிக்கோளாக, பெரிய நிறுவனங்களுக்காக ஊதியங்களைக் குறைத்தல் மற்றும் செலவுகளைக் குறைத்தல் என்ற வெளிப்படையான நோக்கத்துடன், ஒரு சீற்றமான தொற்றுநோய்களின் போது பொதுமக்களை “இயல்பான” பொருளாதார வாழ்க்கையை மீண்டும் தொடங்கச் செய்வதாக இருந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் இருந்து, பெருநிறுவன வரி ஏய்ப்பின் மையமான டெலாவேரின் செனட்டராக பல தசாப்தங்களாக சேவையாற்றி வந்த ஒரு மனிதர், இப்போது தன்னலக்குழுவின் எதிர்ப்பாளராகக் காட்டிக் கொள்வதில் மிகவும் பரிதாபகரமான ஏதோவொன்று உள்ளது.
இன்னும் அடிப்படையில், பைடென் இந்த தன்னலக்குழுவின் மூலங்கள் பற்றியோ அல்லது அவரும் முழு அரசியல் ஸ்தாபனமும் பாதுகாத்துவரும் சமூக, பொருளாதார அமைப்புமுறையான முதலாளித்துவத்துடனான அதன் உள்ளார்ந்த தொடர்பைப் பற்றியோ பேசவில்லை, பேசவும் முடியவில்லை.
பைடெனோ அல்லது அவரது பணியாளர்களோ உலக சோசலிச வலைத் தளத்தைப் (WSWS) படித்திருக்கிறார்களா என்பது பற்றி எமக்குத் தெரியாது. ஆனால், நம்பகமான மூலத்திலிருந்து, நீண்ட காலமாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பகுப்பாய்வை, குறிப்பாக, டொனால்ட் ட்ரம்பின் மறுதேர்தல் தொடர்பான பகுப்பாய்வை, பைடென் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு WSWS தனது ஆரம்ப அறிக்கையில், “டொனால்ட் ட்ரம்ப் வெறுமனே ஒரு குற்றவியல் தனிநபராக பேசவில்லை”. மாறாக, “கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக உருவாகியுள்ள ஒரு சக்திவாய்ந்த முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதியாகப் பேசுகிறார்” என்று எழுதியது. மேலும், “எலோன் மஸ்க், ஜெஃப் பெஸோஸ், பீட்டர் தியேல் மற்றும் லாரி எலிசன் போன்றவர்களின் தலைமையில் பெரும் மில்லியனர்களும் பில்லியனர்களும் தங்கள் நலன்களுக்காக அமெரிக்க சமூகத்தின் பிற்போக்குத்தனமான மறுசீரமைப்பைச் செயல்படுத்த ட்ரம்பை பயன்படுத்தி வருகின்றனர்” என்று WSWS குறிப்பிட்டது.
உலக சோசலிச வலைத் தளமானது, ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அழிவின் சமூக அடித்தளத்தை மட்டும் பகுப்பாய்வு செய்யவில்லை. அது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு முன்மொழிவையும் முன்வைத்தது. தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் 20 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி “தன்னலக்குழு மற்றும் அவர்களுக்காக: ட்ரம்பின் அமைச்சரவையும் அமெரிக்க அரசின் மறுசீரமைப்பும்” என்ற தலைப்பின் கீழ் ஒரு இணையவழி கூட்டத்தை ஒழுங்கமைத்து, துல்லியமாக இந்த பிரச்சினையின் மீது கவனம் செலுத்தியது.
ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துரைத்த WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், “இந்த நாட்டில் சமூக உறவுகளின் தன்னலக்குழு தன்மை, ஒப்பீட்டளவில் ஒரு சில மக்களிடம் செல்வம் பெருமளவில் குவிந்து கிடப்பது, ஒரு ஜனநாயக அமைப்புமுறைக்கு முற்றிலும் பொருத்தமற்றவை” என்று விளக்கினார். மேலும், “தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தின் வளர்ச்சி, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டம், உற்பத்தி சாதனங்களின் உரிமையையும் சமூகத்தின் கட்டுப்பாட்டையும் பரந்த பெரும் திரளான மக்களுக்கு மாற்றுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகம் அதன் நவீன வடிவத்தில் வளர முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட, “தன்னலக்குழு, பாசிசம் மற்றும் போருக்கு எதிரான சோசலிசம்” என்ற தலைப்பிலான அதன் புத்தாண்டு அறிக்கையில், முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த கொள்கைக்கும் இடையிலான தொடர்பை வரைந்தது. அதில், மில்லியன் கணக்கானவர்களைக் கொன்ற பெருந்தொற்று நோய் மனிதப்படுகொலைக்கான பதில் மற்றும் மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தி தீவிரமடைந்து வரும் உலகளாவிய போர் ஆகியவை அடங்கும்.
“இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெருக்கடிகளுக்குக் காரணம், சமூகம் முழுவதையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் அடிபணியச் செய்யும் ஒரு தன்னலக்குழு ஆகும். இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது, அதன் இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும். அதன் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், மேலும் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையின் மீதான அதன் பிடியை ஒழிக்க வேண்டும்” என்று நாம் எழுதினோம்.
தற்போதைய சமூக யதார்த்தம் ஒரு விரிவான வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகும். ஐசனோவர் குறித்த பைடெனின் குறிப்பு அவர் நினைத்ததை விட அதிகமாக வெளிப்படுத்துகிறது. 1961 இல் ஐசனோவர் அவரது எச்சரிக்கையை வெளியிட்ட போது, அமெரிக்க முதலாளித்துவம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தின் உச்சத்தில் இருந்தது. அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பைடென் நாற்றம்கண்டு அழுகிக்கொண்டிருக்கும் ஒரு ஆளும் வர்க்கத்தின் வயதான பிரதிநிதியாகப் பேசுகிறார்.
பைடென் சுருக்கமாகக் குறிப்பிட்ட யதார்த்தத்தை நிவர்த்தி செய்ய ஜனநாயகக் கட்சி எதையும் முன்மொழியவில்லை, மேலும் அதனால் எதையும் முன்மொழியவும் முடியாது. ட்ரம்ப் மற்றும் அவரது சர்வாதிகார அரசியலின் “ஆபத்து” குறித்து அவ்வப்போது குறிப்புகள் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சி தொடர்ந்து பாசிசத்தின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டு வருகிறது. இப்போது அதை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. பைடென், தனது பிரியாவிடை உரையில், “வரவிருக்கும் நிர்வாகம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்ற அவரது முந்தைய அறிக்கையை மீண்டும் கூறினார். இது, அவர் அதிகாரத்தை ஒப்படைக்கவிருக்கும் அரசாங்கத்தைக் குறித்த அவரது ஒரே உண்மையான குறிப்பு மட்டுமே ஆகும்.
இந்த நிர்வாகத்தை தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பிற்குள் அல்லது தன்னலக்குழுவின் செல்வத்தையும் அதிகாரத்தையும் நேரடியாகத் தாக்காமல் எதிர்த்துப் போராட முடியும் என்ற கருத்து வெறும் கற்பனை ஆகும். ஆளும் வர்க்கம் அதன் நோக்கங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது: ஜனநாயக உரிமைகளை ஒழிப்பது, கருத்து வேறுபாடுகளை நசுக்குவது மற்றும் நிதிய தன்னலக்குழுவை செழிப்பாக்கும் அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கிறது. தன்னலக்குழுக்களின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதன் மூலம் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும். சமூகத்தின் மீதான அவர்களின் பிடியை உடைக்க, அவர்களின் செல்வத்தை பறிமுதல் செய்வதன் மூலமும், தனியார் இலாபத்திற்காக அல்ல, சமூகத் தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைப்பதன் மூலமும் இது செய்யப்பட வேண்டும்.
இந்தப் பணி சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் பாசிச அரசியலின் எழுச்சியில் இருந்து தீவிரமடைந்து வரும் உலக ஏகாதிபத்திய போர் வரையில், முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் விளைவுகள் குறித்து இடைவிடாது எச்சரித்து வந்துள்ளன.
ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புகின்ற நிலையில், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்திற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வருகிறது. இதுவே அடிப்படையானதும் அவசரமானதுமான அரசியல் பணியாகும்.