முன்னோக்கு

அமெரிக்க சிதைவு: ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி பதவியேற்புக்கு முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றுகிறார். ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025. [AP Photo/Matt Rourke]

இன்று (ஜனவரி 20, 2025), அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் இழிவான நிகழ்வு நடைபெறுகிறது. ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ஏமாற்றுக்காரர், மனநோயுற்ற பொய்யர், அறியாமை, மதவெறி, பேராசை மற்றும் வீண்பெருமை ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு பாசிசவாத வாய்வீச்சாளர், உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவத்தின் “தலைமைத் தளபதி” ஆக இருந்து, பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் எரித்துச் சாம்பலாக்க போதுமான அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பார்.

2020 ஜனாதிபதி தேர்தலை பலவந்தமாக தூக்கியெறிந்து, தன்னைத்தானே சர்வாதிகார-ஜனாதிபதியாக அமர்த்த மேற்கொண்ட சதி முயற்சி பெரும் தோல்வியடைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இது, அமெரிக்க ஜனநாயகத்தின் மீளமுடியாத வீழ்ச்சியை, இதைவிட தெளிவாக குறிப்பதற்கில்லை. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதானது, ஜனவரி 6, 2021 அன்று அவர் செயல்படுத்த முயன்றது போல ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி மூலமாக அல்ல. மாறாக, அமெரிக்காவை ஆளும் நிதிய தன்னலக்குழுவில் அவருக்கு இருந்த ஆதரவு, ஜனநாயகக் கட்சியில் அவரது பெயரளவிலான எதிரிகளின் மண்டியிடுதல் மற்றும் அவர்களின் திவால்நிலை ஆகியவற்றின் காரணமாகவே ஆகும்.

மார்ச் 2003 இல், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் பிரமாண்டமான இராணுவ இயந்திரத்திற்கு இடையே, “பேரழிவுடனான சந்திப்புக்கு” இட்டுச் செல்லக் கூடிய ஒரு பாதையில் இறங்கியிருப்பதாக எழுதியது. அந்த சந்திப்புக்கான தேதியை இப்போது கொடுக்க முடியும்: அது ஜனவரி 20, 2025 ஆகும்.

வரலாறு முதல் முறை துன்பியலாகவும், இரண்டாவது முறை கேலிக்கூத்தாகவும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்று கார்ல் மார்க்ஸ் புகழ்பெற்ற முறையில் அறிவித்தார். டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவியேற்பில், இந்த சூத்திரத்தை மாற்றியமைக்கலாம்: முதல் முறையாக சோகம், இரண்டாவது முறையாக பேரழிவு! ட்ரம்பை இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தியதன் மூலம், அமெரிக்க ஆளும் வர்க்கமானது, அனைத்து அரசியல் மற்றும் தார்மீக நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது. இது, அமெரிக்க முதலாளித்துவத்தின் முடிவின் தொடக்கமாகும். அது காற்றை விதைத்தது, இப்போது சூறாவளியை அறுவடை செய்யும்.

2017 இல், வெள்ளை மாளிகைக்குள் ட்ரம்ப் நுழைந்தது ஒரு பிறழ்ச்சி, ஒரு அரசியல் விபத்து, அல்லது வெறுமனே ஜனநாயகக் கட்சியின் திறமையின்மை மற்றும் ஆணவத்தின் துணைவிளைபொருள் என்று —தவறாக இருந்தாலும்— கூறப்பட்டிருக்க முடியும். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நிகழ்வு மீண்டும் நிகழும்போதும் இதே நிலைதான் என்று கூற முடியாது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சாராம்சத்தை ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செல்வமும் அதிகாரமும் எட்டியுள்ள பில்லியனர் தன்னலக்குழுவின் முக்கிய பண்புகளின் கொடூரமான வெளிப்பாடே ட்ரம்பினது தனிப்பட்ட குணாதிசயங்கள் ஆகும்.

ஜனவரி 20, 2017 இல், ட்ரம்ப் முதன்முதலில் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா), “டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு: இழிவில் நிலைத்திருக்கும் ஒரு நிகழ்வு” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எழுதியதை கீழே தருகிறோம்:

45 வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது அமெரிக்க வரலாற்றில் மிகவும் அவமானகரமான நிகழ்வுகளில் ஒன்றாகும். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு கொண்டாட்டங்களுக்காக 100 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. வீண் விரயம்! இந்த பதவியேற்பு விழாவின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவியிருக்கும் குமட்டல் துர்நாற்றத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் அகற்ற முடியாது. புதிய நிர்வாகம் பதவியில் அமர்த்தப்பட்டதன் மூலம், கற்பனை செய்ய முடியாத பரிமாணங்களில் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதையில் நாடு இறங்கியுள்ளது என்ற பரந்த உணர்வையும், பொதுக் கொண்டாட்டங்களின் மோசடியான ஏற்பாட்டையும் மறைக்க முடியாது.

வரலாறு அமெரிக்க முதலாளித்துவத்தை பிடித்துக் கொண்டுள்ளது. பொருளாதார மற்றும் சமூக சீரழிவின் நீடித்த நிகழ்ச்சிப்போக்கு பல தசாப்தங்களாக உத்தியோகபூர்வ அரசியல் கட்டுக்கதைகளுக்கும், அடித்தளத்தில் இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை மூடிமறைக்க உதவிய ஜனநாயக சொற்றொடர்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முகமூடி இப்போது கழற்றப்பட்டுவிட்டது. அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் ஊழல், இரக்கமின்மை, ஒட்டுண்ணித்தனம் மற்றும் அடிப்படையில் பாசிச மனநிலையின் உருவகமாக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார். பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களின் அரசாங்கத்தை ட்ரம்ப் வழிநடத்துவார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள், முதன்மையாக வெளியுறவுக் கொள்கை தொடர்பாகவும், பொருளாதார மற்றும் இராணுவப் போருக்கான அமெரிக்க தயாரிப்புகள் முதன்மையாக ரஷ்யா, சீனாவுக்கு எதிராக இயக்கப்பட வேண்டுமா அல்லது ஜேர்மனி போன்ற அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு எதிராக இயக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆழமான பிளவுகள் இருப்பதை சோசலிச சமத்துவக் கட்சி குறிப்பிட்டது. நாங்கள் பின்வருமாறு எச்சரித்தோம்:

மோதல்கள் எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும், ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் பின்வரும் அவர்களின் நம்பிக்கையில் ஒன்றுபட்டுள்ளன 1) அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் அபாயத்திலும் கூட அதன் உலகளாவிய நலன்களைப் பின்தொடர வேண்டும்; மற்றும் 2) தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

ட்ரம்ப் வெறுமனே தனக்காக மட்டுமல்ல, மாறாக ஆளும் வர்க்கத்தின் சார்பாகவும் பேசுகிறார் மற்றும் ட்வீட் செய்கிறார் என்பது, பில்லியனர்கள் மற்றும் ஜெனரல்களைக் கொண்ட அவரது அமைச்சரவை தேர்வுகள், செனட் உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளில் சவால் செய்யப்படாமல் போவதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. ஒபாமாவைப் பொறுத்த வரையில், கடந்த புதனன்று தனது இறுதி பத்திரிகையாளர் கூட்டத்தை வரவிருக்கும் நிர்வாகத்தின் அரசியல் சட்டபூர்வத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணித்ததுடன், வெற்றி பெற்றுள்ள பின்னர், “[ட்ரம்ப்] அவரது தொலைநோக்குகள் மற்றும் மதிப்புகளுடன் முன்னோக்கி செல்வது பொருத்தமானது” என்று அறிவித்தார்.

இந்த மதிப்பீடு நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டது மட்டுமல்ல; இது இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு அதிவேகமாக மட்டுமே பொருந்தும். வெளியேறவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடென் ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க தாராளவாதத்தின் சீரழிந்த நிலைக்கு ஆளுருவாக உள்ளார். ட்ரம்ப் ஒரு பாசிசவாதி என்பதை சுருக்கமாக ஒப்புக் கொண்ட போதிலும், சாத்தியமான “சுமூகமான பதவி மாற்றத்திற்கு” அவர் உறுதியளித்திருந்தார். உண்மையில், ட்ரம்பின் பாசிச வேலைத்திட்டத்தின் பெரும்பகுதி ஏற்கனவே பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக்கவும் தீவிரப்படுத்தவும் மட்டுமே செய்யும்: அதாவது, புலம்பெயர்ந்தோரை பாரியளவில் நாடு கடத்துவது; ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்ப்பவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்; பொருளாதாரப் போர், அரசியல் நாசவேலை என்பன, வாஷிங்டனால் இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு எதிரான அப்பட்டமான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாகும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்ததைப் போல, ட்ரம்புக்கான மாற்றீடு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மட்டுமே வரும். பைடென் நிர்வாகத்தின் காலப்பதிவு இந்த மதிப்பீட்டை மறுக்க முடியாத உறுதிப்படுத்தலாகும். ஜேர்மனியின் வெய்மார் ஆட்சியை அது மதிப்பிட்டதை போலவே, வெள்ளை மாளிகையில் அவரது நான்காண்டு காலத்தை வரலாறு கண்டனம் செய்யும்: பாசிச சக்திகள் தங்கள் ஆரம்ப தோல்விகளில் இருந்து மீண்டு வரவும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு இன்னும் பெரிய ஆபத்தை மீண்டும் கொண்டுவர அனுமதிக்கப்பட்ட ஒரு இடைக்காலமாக இருக்கும்.

அனைத்திற்கும் மேலாக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விரிவாக்கம், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஊக்குவிப்பதற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாடு, ஈரான் மற்றும் இறுதியில் சீனாவுக்கு எதிரான இன்னும் பரந்த போர்களுக்கான அதன் தயாரிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பைடென் நிர்வாகம் ஏற்கனவே ஒரு உலகப் போரின் முதல் கட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளது. அதை இப்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் வெறிபிடித்த இராணுவவாதிகளிடம் அது ஒப்படைக்கிறது. இதில் போர்க்குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவரும், அதைப் பாதுகாப்பவருமான பீட் ஹெக்செத், பென்டகனின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் உயிர்த்தெழுந்ததற்கான பொறுப்பை இன்னும் பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். பில்லியனர் தன்னலக்குழுவை உருவாக்கிய சமூகப் பொருளாதார செயல்முறைகள் தனிநபர்கள் மூலமாக மட்டுமல்ல, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் போலி இடதுசாரிகள் உட்பட வசதியான நடுத்தர வர்க்கத்தின் அரசியல் அமைப்புகள் போன்ற நிறுவனங்கள் மூலமாகவும் செயல்படுகின்றன.

பேர்ணி சாண்டர்ஸ் (Bernie Sanders), அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) மற்றும் ஏனையவர்கள், ஜனநாயகக் கட்சியின் இரும்புப்பிடியை வலுப்படுத்த மட்டுமே உதவுவதுடன், அரசியல் ஸ்தாபனத்திற்குள் அர்த்தமுள்ள மாற்றத்தை அடைய முடியும் என்ற கட்டுக்கதையை ஊக்குவித்து, பரிதாபகரமான போலி சீர்திருத்தவாதத்தை முன்னெடுத்துள்ளனர். போலி-இடது அமைப்புகள் இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை அரசியலின் மூலமாக தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பாரிய சோசலிச இயக்கம் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதற்கும் அயராது உழைத்து வருகின்றன.

பெருநிறுவன ஊடகங்கள் புதிய ட்ரம்ப் நிர்வாகத்தை நோக்கிய ஒரு விமர்சனரீதியான அணுகுமுறை குறித்த எந்தவொரு பாசாங்கையும் கைவிட்டு, ட்ரம்பை பாரிய மக்கள் ஆதரவுடன் அமெரிக்க மக்களின் தேர்வாக சித்தரித்து வருகின்றன. ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் தனது பங்கைப் பற்றி சாட்சியமளிக்க காங்கிரஸின் அழைப்பாணையை மீறியதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டீவ் பானன் (Steve Bannon), ஞாயிற்றுக்கிழமை ஏபிசி நியூஸ் (ABC News) நேர்காணலில் காட்டியதுபோல, குண்டர்கள், ஏமாற்றுக்காரர்கள் மற்றும் ட்ரம்பின் பிற பாசிச கூட்டாளிகள் அரசியல் ஞானிகளாக நடத்தப்படுகிறார்கள்.

நேற்று நியூயார்க் டைம்ஸ், “கடுமையான பதற்றம், கோபமான எதிர்ப்பு ஆகியன, இணக்கம் மற்றும் அடிபணிவுக்கு வழிவகுத்துவிட்டன” என்று எழுதியபோது, அது தனக்காகவும் ஜனநாயகக் கட்சிக்காகவும் பேசுவதாக இருந்தது. ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டது போல, பலாத்காரம் வெல்வது மட்டுமல்ல, அதை நம்பவைக்கவும் செய்கிறது.

AFL-CIO மற்றும் UAW போன்ற தொழிற்சங்கங்களால் உருவகப்படுத்தப்பட்ட “தொழிலாளர் இயக்கம்” என்றழைக்கப்படுவது இந்த சீரழிவுக்கு உடந்தையாக உள்ளது. ஞாயிறன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், ஒட்டுமொத்த போலி-இடதுகளால் ஊக்குவிக்கப்பட்ட ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW – United Auto Workers) தலைவரான ஷான் ஃபெயின் (Shawn Fain), டீம்ஸ்டர்ஸ் (Teamsters) தலைவர் சீன் ஓ’பிரையன் (Sean O’Brien) மற்றும் ஏனையவர்களின் தலைமையைப் பின்பற்றி, வரவிருக்கும் நிர்வாகத்துடன், குறிப்பாக தேசியவாத பொருளாதார கொள்கையில் “வேலைசெய்ய” உறுதியளித்தார். தொழிற்சங்கங்களின் ஒட்டுமொத்த இயந்திரமும் பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் துணைக் கருவிகளாகவே செயல்படுகின்றன.

வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் மீண்டும் திரும்பியிருப்பது அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு புதிய மற்றும் அபாயகரமான கட்டத்தைக் குறிக்கிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் தீர்க்கவியலாத முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், சர்வாதிகாரம் மற்றும் போர் மூலம் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பெருகிவரும் புவிசார் அரசியல் பதட்டங்களைத் தீர்க்கவும், அதன் அவநம்பிக்கையான முயற்சியை ட்ரம்ப் நிர்வாகம் பிரதிபலிக்கிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வுபோக்கின் ஒரு பகுதியாகும். இது அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், ட்ரம்ப்பின் மீள்வருகை அமெரிக்காவில் பாசிசத்தை வலுப்படுத்துவதாக அர்த்தமல்ல. பெரும்பான்மையான மக்களின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் சுரண்டிக்கொண்டு, பொய்களின் அடிப்படையில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தார். புதிய ஆட்சி நிறுவப்படுவதற்கும் அதன் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் இடையில், மகத்தான சமூகப் போராட்டங்களில் ஈடுபடும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு உள்ளது.

இந்தப் பரந்த முரண்பாடு தற்போதைய சூழ்நிலையை வரையறுக்கிறது. ஆளும் வர்க்கம் வன்முறையில் வலதுபுறம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வெகுஜனங்களின் பொதுவான இயக்கம் இடதுபுறமாக, சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆளும் வர்க்கம் சுதந்திரப் பிரகடனத்தில் பொதிந்துள்ள ஜனநாயக இலட்சியங்களைக் கைவிட்டிருந்ததை, அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ஆப்ரகாம் லிங்கனால் மீண்டும் வலியுறுத்தப்பட்டாலும், தொழிலாள வர்க்கம் அதைக் கைவிட்டதில்லை. இந்த உயர் சிந்தனைகள் அமெரிக்க வெகுஜனங்களின் நனவில் ஆழமாக பொதிந்துள்ளன. சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதி ஆகிய இந்த இலட்சியங்கள் இன்று சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தில் அவற்றின் உண்மையான வெளிப்பாட்டைக் காண்கின்றன.

புரட்சிகர இயக்கம் இந்த ஆழமான உண்மையை தனக்கு அடித்தளமாகக் கொண்டுள்ளது. சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையை, முன்னெப்போதிலும் பார்க்க மோசமடைந்து வரும் நிலைமைகளை முகங்கொடுத்து வரும் தொழிலாள வர்க்கம் மட்டுமே, ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்யும் தன்னலக்குழுவை எதிர்கொள்வதற்கும், அதைத் தூக்கியெறிவதற்கும் தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியாகும்.

அமெரிக்காவும் உலகமும், ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலகட்டத்திற்குள் நுழைகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத பணியாகும்.

Loading