முன்னோக்கு

"ஃப்யூரர்" ட்ரம்ப் உலகத்தின் மீதும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலுள்ள காங்கிரஸ் கட்டிடமான கேபிடோலில் இடம்பெற்ற ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, கிறிஸ்டோபர் மச்சியோ “நட்சத்திரம் நிறைந்த கொடிக்கான” பாடலை பாடும்போது, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் எழுந்து நிற்கிறார்கள். திங்கள், ஜனவரி 20, 2025. [AP Photo/Saul Loeb]

டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழா வரலாற்றில் ஒரு அருவருக்கத்தக்க பாசிசக் காட்சியாக நினைவுகூரப்படும். அதில், அதிகாரத்துக்கு வந்துள்ள ஜனாதிபதி, வெளியேறும் நிர்வாகத்தையும், புலம்பெயர்ந்தோர்கள், அவர் எதிரிகளாகக் கருதும் அமெரிக்க மக்களின் பரந்த பகுதியினர், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் இறுதியாக, மேற்கு அரைக்கோளத்திற்கு அப்பால் உள்ள உலக மக்கள்தொகைக்கு எதிராகவும் ஒரு மோசமான, வெறுப்பு நிறைந்த வசைபாடலை நிகழ்த்தினார்.

அரசியல் புனைகதைகளை நகலெடுக்கும் வாழ்க்கையின் ஒரு கோரமான உதாரணமாக, மாபெரும் அமெரிக்க எழுத்தாளர் சின்க்ளேர் லூயிஸ் (Sinclair Lewi) தனது பாசிச எதிர்ப்பு நாவலான அது இங்கே நடக்காது (It Can’t Happen Here) என்பதில் கற்பனை செய்த மிருகத்தனமான ஊடக மோசடிக்காரரும், வாய்வீச்சாளருமான ஜனாதிபதி புஸ் விண்ட்ரிப்பின் (Buzz Windrip) அவதாரமாக ட்ரம்ப் தோன்றினார்.

லூயிஸ் எழுதிய பயங்கரமான எதிர்கால (dystopian) நாவல் 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சிக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஒரு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதிலும், இலாபங்கள் மற்றும் வரம்பற்ற செல்வ வளத்தை தேடுவதிலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது, ஜேர்மனியின் ஹிட்லரின் அதன் சொந்த தேசிய வடிவத்தை அதிகாரத்தில் அமர்த்தும். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனவரி 20, 2025 இன் கோரமான பதவியேற்பு விழா லூயிஸின் எச்சரிக்கையை நிரூபித்துள்ளது.

ட்ரம்ப் தனது பதவியேற்பு வசைமொழியின் பாசிச உத்வேகத்தை மறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. 1933 பெப்ருவரி 1 அன்று, ஜேர்மன் சான்சிலர் பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஹிட்லர் வழங்கிய முதல் வானொலி உரையின் தொனியிலும், உள்ளடக்கத்திலும் ட்ரம்பின் உரை வெளிப்படையாக முன்மாதிரியாக இருந்தது. ஹிட்லரின் உரை வைய்மெர் குடியரசு மற்றும் அதன் தலைவர்கள் மீதான ஒரு விஷமத்தனமான கண்டனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் புராண ஜேர்மன் “மக்களை” காட்டிக்கொடுப்பதாக ஹிட்லர் குற்றஞ்சாட்டினார். ஜேர்மனி மீண்டும் மகத்தான நிலைக்கு கொண்டு வரப்படுவதற்கு, அனைத்து துரோகிகளும் துடைத்தெறியப்படுவார்கள்.

ட்ரம்ப், “ஆயிரமாண்டு குடியரசு” குறித்த ஹிட்லரின் முன்னோக்கை தனதாக்கிக் கொண்டு, அதை அமெரிக்காவின் வாக்குறுதியளிக்கப்பட்ட “பொற்காலம்” என்று மறுமுத்திரை குத்தியுள்ளார். எவ்வாறிருப்பினும், ட்ரம்ப் மற்றும் அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மூன்று பணக்கார அமெரிக்கர்களான எலோன் மஸ்க், ஜெஃப் பெஸோஸ் மற்றும் மார்க் சக்கர்பேர்க் உட்பட ஏனைய பில்லியனர் செல்வந்த தட்டுக்களுக்கு மட்டுமே இது “பொன்னானதாக” இருக்கும். இத்தாலியின் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஆர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலேய் போன்ற ட்ரம்பின் சர்வதேச பாசிசக் கூட்டாளிகளும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

பதவியிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், ஒபாமா, மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சார்லஸ் ஷூமர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் உட்பட, ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மற்றும் நிகழ்காலத் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டனர். ட்ரம்ப் பகிரங்கமாக அவர்களை வசைபாடி கண்டித்தபோதும் அவர்கள் அமைதியாகவும் மரியாதையுடனும் அவரது உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் யாருக்கும் அரசியல் துணிச்சல் இல்லை, வரலாற்று உணர்வும் ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய உறுதிப்பாடும் ஒருபுறம் இருக்க, இந்த நிகழ்விலிருந்து வெளிநடப்பு செய்து ஒரு பாசிச ஜனாதிபதியை நியமித்ததை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை. அதற்கு பதிலாக, அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிற்போக்குத்தனமான அரசாங்கத்திற்கு “அமைதியான அதிகார மாற்றத்தை” பாராட்டுவதில் அவர்களும் இணைந்துகொண்டனர்.

அமெரிக்க விரிவாக்கத்திற்கான தனது திட்டங்களை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், தனது அரசாங்கம் பனாமா கால்வாயை “திரும்பப் பெறும்” என்று கூறினார். மேலும், மெக்ஸிகோ, எல் சால்வடார் மற்றும் வெனிசுலாவில் உள்ள குற்றக் கும்பல்களை, ISIS மற்றும் அல்-கொய்தாவைப் போன்று, “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்” என்று வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவை பிறப்பிப்பதாக அவர் கூறினார். இது, இந்த நாடுகள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு ஒரு போலி-சட்ட நியாயப்படுத்தலை வழங்கும்.

ஸ்பானிய-அமெரிக்க போரில் கியூபா, போர்ட்டோ ரிக்கோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸைக் கைப்பற்றிய ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லியின் (William McKinley, 1897-1901) சாதனைகளை ட்ரம்ப் பாராட்டியதுடன், வட அமெரிக்காவின் மிக உயர்ந்த மலையான அலாஸ்காவில் உள்ள டெனாலிக்கு மெக்கின்லியின் பெயரை மீட்டெடுக்க சூளுரைத்தார். மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று மறுபெயரிடவும் அவர் அழைப்புவிடுத்தார். அதேவேளையில், சமீபத்திய வாரங்களில் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதற்கும் கனடாவை 51 வது மாநிலமாக இணைப்பதற்கும் அவர் விடுத்த அழைப்புகளை வெளிப்படையாக பேசாமல் (ஆனால் தெளிவாக மறைமுகமாக) விட்டுவிட்டார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் ஒரு “தேசிய அவசரகால நிலையை” அறிவிக்கும் நிர்வாக உத்தரவுகளில் அவர் உடனடியாக கையெழுத்திடுவதாகவும், அமெரிக்கா மீதான ஒரு வெளிநாட்டு எதிரியின் “படையெடுப்பாக” அதனை மீண்டும் மீண்டும் சித்தரித்து வந்ததை முறியடிக்க இராணுவத்தை நிலைநிறுத்தவிருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். இது, அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் வெளியேற்றுவதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறும் “மெக்சிகோவில் தங்கியிருங்கள்” கொள்கையை மீண்டும் நிலைநிறுத்துவது மற்றும் புலம்பெயர்ந்தோர் சுற்றுப்புறங்கள் மற்றும் வேலைத் தளங்களுக்கு எதிராக தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள பொலிஸ்-இராணுவ எந்திரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உத்தரவுகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இது நூறாயிரக்கணக்கான, இறுதியில் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை சுற்றி வளைக்க வழிவகுக்கும்.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல், விரைவில் உள்நாட்டில் பிறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் என ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் விரிவுபடுத்தப்படும். ட்ரம்ப், 2017 ஆம் ஆண்டு பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை நீட்டிப்பதற்கும் (இந்த ஆண்டு காலாவதியாக உள்ளது) அமெரிக்க இராணுவ இயந்திரத்தை மேலும் பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும் நிதியளிப்பதற்காக, சமூக நலன்களை வெட்டித்தள்ளும் தனது பரந்த திட்டத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும், சட்டவிரோதமாக்க முயல்கிறார்.

போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பி வரும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஒரு படையெடுப்பு இராணுவத்தைப் போல சித்தரித்து, பாரிய தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல்களுக்கான அவரது திட்டங்களுக்கான அடித்தளமாக, 1798 இல் இயற்றப்பட்ட ஒரு இழிவார்ந்த நடவடிக்கையான அன்னிய எதிரிகள் சட்டத்தை அவர் பயன்படுத்த இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். கடைசியாக இரண்டாம் உலகப் போரின்போது கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், அமெரிக்காவில் வசித்த ஜேர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய புலம்பெயர்ந்தோரின் ஜனநாயக உரிமைகளை ஒழிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், இந்த நபர்களின் அச்சுறுத்தல் அளவைப் பொறுத்து பதிவு, கண்காணிப்பு, இடமாற்றம் அல்லது தடுப்புக்காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் நோக்கம், புலம்பெயர்ந்த சமூகங்களை அச்சுறுத்துவதும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதும், அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக இன்னும் கூடுதலான ஒடுக்குமுறைக்கான நிலைமைகளை உருவாக்குவதும் ஆகும்.

இந்த வேலைத்திட்டத்தின் சர்வாதிகார தன்மை, ட்ரம்ப் தன்னைப் பற்றி வெளிப்படையாக தேவதூதர் வார்த்தைகளில் விவரிக்கும் துணை உரையாக, “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க கடவுளால் தான் காப்பாற்றப்பட்டதாகவும்”, கடந்த கோடையில் ஒரு கொலையாளியின் தோட்டாவிலிருந்து உயிர் தப்பியதாகவும் அவர் கூறுகிறார். ட்ரம்ப் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ தேசியவாதியாக சித்தரிக்கப்படுவதற்கு இணங்க, பதவியேற்பு விழாவின் ஆடம்பரமும் கொண்டாட்டமும் மத மற்றும் இராணுவவாத வாய்வீச்சும் சின்னங்களால் நிரம்பியிருந்தது.

செவ்வாய் கிரகத்திற்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பி, அமெரிக்கக் கொடியை வேறொரு கிரகத்தில் நாட்டுவதே அமெரிக்காவின் “வெளிப்படையான விதி” என்று ட்ரம்ப் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், குறிப்பாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கனடா இந்த மொழியைக் கவனத்தில் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பலவீனமான அண்டை நாடுகளின் இழப்பில் அமெரிக்காவிற்கு கடவுள் கொடுத்த விரிவாக்க உரிமையை பரிந்துரைக்கும் “விதியின் வெளிப்பாடு” என்ற முழக்கம், முதலில் 1844 தேர்தலில் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்டது.  இதற்குப் பின்னர் தெற்கிலுள்ள அடிமை உரிமையாளர்களால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டது. இந்த “விதியின் வெளிப்பாடு” என்பது பசிபிக் வடமேற்கில் கனடாவுடனான எல்லைத் தகராறில் ஒரு ஆக்ரோஷமான அமெரிக்க நிலைப்பாட்டிற்கான நியாயப்படுத்தலாக இருந்தது. பின்னர், 1845 இல் டெக்சாஸை ஒரு அடிமை நாடாக இணைத்துக் கொண்டதுடன், இறுதியாக 1846-1848 போரில் அமெரிக்கா மெக்சிகோவின் பாதியை கைப்பற்றி இணைத்துக் கொண்டது. ஆபிரகாம் லிங்கன் அந்த முழக்கத்தை விரிவாக்க அடிமை உடமை சக்திகளின் போர் முழக்கம் என்று நிராகரித்தார். ட்ரம்ப் அதை முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் போர் முழக்கமாக இப்போது தழுவிக்கொள்கிறார்.

ஃப்யூரர் ட்ரம்பின் தொடக்க உரையில் சுய-பெருமைப்படுத்தும் தன்மை சந்தேகத்திற்கிடமின்றி இருந்தது. தேசிய அவசரநிலை பிரகடனங்கள் என்ற போர்வையின் கீழ், ஒருதலைப்பட்சமாக செயல்படுத்தப்படும் தீவிர நடவடிக்கைகளை அறிவித்து, தன்னை முன்னணி சக்தியாகக் காட்டிக் கொண்டார். புதிய உடன்படிக்கை மூலமாக, சட்டமாக கையெழுத்திட்ட மசோதாக்களை காங்கிரசில் நிறைவேற்றிய ரூஸ்வெல்ட்டின் “100 நாட்களைப்” போலல்லாமல், ட்ரம்ப் தனது சொந்த அதிகாரத்தின் பேரில் வெளியிட்ட “100 நிர்வாக உத்தரவுகளுக்கு” அழைப்பு விடுக்கிறார். அவரது உரையில், காங்கிரஸைப் பற்றியோ அல்லது குடியரசுக் கட்சியைப் பற்றியோ எதையும் குறிப்பிடவில்லை, மாறாக அவருடைய பிரத்தியேகமான, தன்னிச்சையான பங்கைத்தான் வலியுறுத்தியிருந்தார்.

[ஒரு ஜேர்மன் வார்த்தையான “Führer” என்பதன் பொருள் “தலைவர்” அல்லது “வழிகாட்டி” என்பதாகும். இது நாஜி ஜேர்மனியின் சர்வாதிகாரியாக தனது பாத்திரத்தைக் குறிக்க “ஃப்யூரர்” என்ற பட்டத்தை அடோல்ஃப் ஹிட்லர் மிகவும் இழிவார்ந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். ]

ஆனால், ஜனநாயகக் கட்சியினரின் அத்தனை தேசியவாத உளறல்கள், கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனம் ஆகியவற்றிற்கு இடையே, ட்ரம்பின் உரையானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சக்தியைப் பரந்தளவில் மிகைமதிப்பிட்டதுடன், ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பாசிசவாத வேலைத்திட்டம் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகளாவிய அளவிலும் தூண்டிவிடும் எதிர்ப்பை குறைத்து மதிப்பிட்டது.

ட்ரம்ப் வில்லியம் மெக்கின்லியைப் பாராட்டலாம். ஆனால், மெக்கின்லி 1897 முதல் 1901 வரையில், ஏகாதிபத்திய சகாப்தத்தின் தொடக்கத்தில், அமெரிக்கா வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாக இருந்தபோது, ஜனாதிபதியாக இருந்தார். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவம் ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ள நிலையில் ட்ரம்பின் ஜனாதிபதி பதவி வருகிறது.

2025 ஆம் ஆண்டில், வேறு எந்த உலகத் தலைவரும் சர்வதேச ஆக்கிரமிப்பு மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்தின் ஒரு பிரமாண்டமான வேலைத் திட்டத்தை உறுதியளித்து உரை நிகழ்த்தியிருந்தால், அவர்களின் கருத்துக்கள் அவர்களின் தீர்ப்பை மட்டுமல்ல, அவர்களின் நல்லறிவையும் கேள்விக்குள்ளாக்குவதாகக் கருதப்படும்.

ட்ரம்பின் முன்னோக்கு ஒரு மாயையாகும். ஆனால், அது குறைந்த ஆபத்து அல்ல. தங்கள் சொந்த ஆளும் வர்க்கங்களின் நலன்களை முன்னெடுக்கும் ஏனைய முதலாளித்துவ அரசாங்கங்களிடம் இருந்து தவிர்க்க முடியாமல் ட்ரம்ப் எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கு எதிராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களின் எதிர்ப்புக்கு எதிராகவும் அவரது அரசாங்கம் இரக்கமற்ற முறையிலும் வன்முறையுடனும் பதிலளிக்கும்.

ஜனநாயகக் கட்சியினர் இந்த அபாயங்களை நன்கு அறிவர். பதவியின் இறுதி மணிநேரங்களில், ஜனாதிபதி பைடென் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஜெனரல் மார்க் மில்லி, முன்னாள் பொது சுகாதார அதிகாரி டாக்டர் அந்தோனி ஃபாசி மற்றும் ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை விசாரித்த பிரதிநிதிகள் சபை கமிட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். தனது அரசியல் எதிரிகள் மீது வழக்குத் தொடரப்படும் என்ற அச்சுறுத்தல்களை ட்ரம்ப் நிர்வாகம் பின்பற்றி வருவதாக பைடென் கவலை தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் கோபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளனர். ஆனால், இப்போது ஒரு பாசிச ஜனாதிபதியின் தாக்குதலை முகங்கொடுத்து வருகின்ற மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தவர்களையும் தொழிலாள வர்க்கத்தில் உள்ள ஏனையவர்களையும் பாதுகாக்க அவர்கள் ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை. அவர்கள் அதை செய்யவும் மாட்டார்கள்.

ட்ரம்ப், ஒரு பணவெறி பிடித்த ஒரு தன்னலக்குழுவின் பிரதிநிதியாக வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழைந்துள்ளார். அதன் மலைப்பூட்டும் செல்வவளம் அதன் நிஜமான சமூக அடித்தளத்திற்கு எதிர்விகிதத்தில் உள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்டிடமான கேபிடோலுக்கு வெளியே விழா நடைபெறாமல், கேபிடோல் குவிமாடத்துக்கு உள்ளே இடம்பெற்றதானது, ஆளும் உயரடுக்கின் உண்மையான தனிமைப்படலுக்கு உதாரணம் ஆகும்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத எலான் மஸ்க், ட்ரம்பின் பதவியேற்பை இரண்டு காட்டுத்தனமான ஹிட்லர் சல்யூட்களுடன் கொண்டாடினார். ஆனால், தன்னலக்குழுவின் சர்வாதிகாரத்திற்கான உற்சாகத்தை தொழிலாள வர்க்கம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஜனவரி 20, 2025 இன் உண்மையான முக்கியத்துவம் என்னவென்றால், அது அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிலும், தீவிரத்திலும், தடுத்து நிறுத்த முடியாத வர்க்க மோதலின் சகாப்தத்தைத் துவக்கியுள்ளது.

Loading