இஸ்ரேல், ஜெனின் மற்றும் பரந்த மேற்குக் கரை மீதான தனது பிடியை இறுக்குகிறது

காஸா மக்கள் 50 மில்லியன் தொன் இடிபாடுகளில் இருந்து 200 சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இஸ்ரேல், மேற்குக் கரையில் அதன் போரை முடுக்கிவிடுவதற்கான ஒரு வாய்ப்பாக காஸாவில் போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தை பயன்படுத்துகிறது.

இதற்கு ட்ரம்ப் நிர்வாகத்தால் பச்சைக்கொடி காட்டப்பட்ட நிலையில், இஸ்ரேலிய இராணுவமும், பாதுகாப்புப் படைகளும் ஜெனினை குறிவைத்து பாரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. “இது யூதேயா மற்றும் சமாரியாவில் [மேற்குக் கரையைக் குறிக்க அதி தீவிர வலதுசாரி சியோனிஸ்டுகள் பயன்படுத்தும் விவிலிய பெயர்] இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பு மூலோபாயத்தில் ஒரு மாற்றத்தைக் குறிக்கும்” என்று வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்தார்.

ஜனவரி 22, 2025 அன்று மேற்குக் கரை ஜெனின் அகதிகள் முகாம் சாலையிலுள்ள இராணுவ புல்டோசர்களை இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் பாதுகாக்கின்றன.  [AP Photo/Majdi Mohammed]

அரசாங்கத்தின் நோக்கங்களை தெளிவுபடுத்திய பாசிச நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், “காஸா மற்றும் லெபனானுக்குப் பின்னர், இன்று, கடவுளின் உதவியுடன், யூதேயா மற்றும் சமாரியாவில் பாதுகாப்பு தொடர்பான கருத்தை மாற்றத் தொடங்கியுள்ளோம்” என்று கூறினார்.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு ஈடாக, இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ போர் நோக்கங்களில் ஒன்றாக மேற்குக் கரையில் “பாதுகாப்பை” உள்ளடக்குவதற்கான உறுதிமொழியை ஸ்மோட்ரிச் பெற்றதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியத்தில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளார்: “காஸாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் நடந்தேறியிருந்தாலும், இஸ்ரேலில் உள்ள மரண இயந்திரம் மேற்குக் கரையில் அதன் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது....

“இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதை நிறுத்த கட்டாயப்படுத்தவில்லை என்றால், இது காஸாவுடன் மட்டும் நின்றுவிடாது. என் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்” என்று அல்பானீஸ் குறிப்பிட்டார்.

இந்த அச்சத்தை எதிரொலித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், போர்நிறுத்தம் குறித்த ஆதாரமற்ற நம்பிக்கை என்ற கருத்தையும் இணைத்துக் கொண்டார். “மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், இஸ்ரேல் இராணுவ வெற்றிகளால் தைரியமடைந்து, மேற்குக் கரையை இணைத்து, காஸாவை ஒருவிதமான இக்கட்டான சூழ்நிலையில் வைத்திருப்பதற்குமான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

குறைந்தபட்சம் 10 பாலஸ்தீனியர்கள் ஜெனினில் கொல்லப்பட்டும், 40 பேர் காயமடைந்தும் உள்ளனர். காயமுற்றவர்களை ஆம்புலன்ஸ்களில் கொண்டுசெல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். பாலஸ்தீனிய செம்பிறை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் நேபல் ஃபர்சாக் செய்தியாளர்களிடம், “அகதிகள் முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மீதான இராணுவ முற்றுகையை யாராலும் உடைக்க முடியாது” என்று கூறினார். ஜெனின் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வு குறித்து “ஆழ்ந்த அக்கறை” கொண்டிருப்பதாக செம்பிறை சங்கம் கூறியுள்ளது.

காஸாவில் அதன் இனப்படுகொலை குற்றவியல் போரில் பயன்படுத்திய தந்திரோபாயங்களை மீண்டும் செய்து, இஸ்ரேலிய படைகள் கலீல் சுலைமான் அரசாங்க மருத்துவமனையை சுற்றி வளைத்துள்ளன. இந்த மருத்துவமனையின் பொறுப்பாளர் விசாம் பக்கர் செய்தியாளர்களிடம், “தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள சாலைகளை அழித்துவிட்டன. ஆம்புலன்ஸ்கள் உள்ளே செல்வதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்க, அழிக்கப்பட்ட தெருக்களின் இடிபாடுகளை, மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லும் இடங்களுக்கு முன்னால் குவித்து வைத்துள்ளனர்” என்று கூறினார்.

செவ்வாயன்று மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையில் இரண்டு செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 600 ஊழியர்களும் நோயாளிகளும் இப்போது தங்களால் முடிந்தவரை மருத்துவமனையின் உள்ளே தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மருத்துவமனையின் பொறுப்பாளர் விசாம் பக்கரின் கூற்றுக்களை உறுதிப்படுத்திய அடெல் பெஷர், அல் ஜசீராவிடம் “நான் மருத்துவமனையின் முற்றத்தில் தூங்கினேன்.... என் வீடு இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்தாலும், என்னால் அதை கடக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.

“அல்-அமல் மருத்துவமனையைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பலர் காயமடைந்தனர். அவர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளும் அடங்குவர். எனது வீட்டிற்கு அருகில் மூன்று அல்லது நான்கு பேர் காயமடைந்தனர், அவர்களை யாராலும் மீட்க முடியவில்லை“.

“இஸ்ரேலிய படைகள் தங்களுக்கு அருகில் செல்பவர்களை சுட்டுக் கொல்கின்றன. அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் காயமடைந்தனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Wafa செய்தி நிறுவனத்தின்படி, ஜெனினில் உள்ள பல சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளையும் நகரத்தையும் விட்டு வெளியேற ஒலிபெருக்கி மூலம் உத்தரவிடப்பட்டனர். இராணுவ முற்றுகை நிலைமைகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சரியான எண்ணிக்கையை தீர்மானிப்பது கடினமாகும்.

மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தின் (UNRWA)  இயக்குனர் ரோலண்ட் பிரெட்ரிக், கடந்த “டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கத் தகுதியற்றது என்று கருதி இந்த முகாமிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக” விவரித்தார். இந்தக் காலகட்டத்தில், UNRWA நிறுவனத்தால், இந்த முகாமுக்கு முழு சேவைகளையும் வழங்க முடியவில்லை. மேலும், இந்த நடவடிக்கை “வான்வழித் தாக்குதல்கள் உட்பட மோசமான ஆயுதங்கள் மற்றும் போர் முறைகளைப் பயன்படுத்தி... பல நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் மேலும் தெரிவாத்தார்.

ஜெனின் முகாமுக்குள் “பாலஸ்தீன அதிகார சபையால் கட்டளையிடப்படும் பாலஸ்தீன அரசுப் படைகளுக்கும் பாலஸ்தீன ஆயுதமேந்திய வீரர்களுக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த ஆயுத மோதல்களைத் தொடர்ந்து” இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரீட்ரிக் குறிப்பிட்டார்.

Middle East Eye, என்ற இணைய பத்திரிகையின் தகவல்படி, “பாலஸ்தீனிய அதிகார சபையின் பாதுகாப்புப் படைகள் புதனன்று ஜெனினில் உள்ள அல்-ராஸி மருத்துவமனைக்குள் புகுந்து ஜெனின் பட்டாலியனை சேர்ந்தவர் என்று நம்பப்படும் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தால் தேடப்பட்டு வந்த ஒரு காயமடைந்த நபரை கைது செய்தனர்.

“மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில், முதல் முறையாக பாலஸ்தீனப் படைகள் பகிரங்கமாகப் பங்கேற்றுள்ள, பாலஸ்தீனப் படைத் தாக்குதல்” என்று இதனை இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஜெனினின் தலைவிதி மேற்குக் கரையில் உள்ள மற்ற நகரங்களுக்கும் காத்திருக்கிறது என்ற அச்சங்கள் உள்ளன. இஸ்ரேலிய படைகள் இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் இராணுவ வாயில்களின் எண்ணிக்கையை (பிரதேசம் முழுவதும் கிட்டத்தட்ட 900 ஆக) பாரியளவில் அதிகரித்து, பிரதான மக்கள் வாழும் மையங்களுக்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் தடுத்துள்ளன.

புதனன்று இஸ்ரேலிய படைகளால் ஐடா அகதிகள் முகாம் தாக்கப்பட்டது; துல்கரெம் மற்றும் ரமல்லா மற்றும் எல்-பைரேவைச் சுற்றியுள்ள சிறு நகரங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான மருத்துவ உதவி அமைப்பின் உறுப்பினர் அசீல் பைடூன் கார்டியனிடம் கூறுகையில், “இரண்டு நாட்களாக நாங்கள் ஒரு விரிவான இராணுவ முற்றுகையை அனுபவித்து வருகிறோம். இஸ்ரேலிய இராணுவம் நூற்றுக்கணக்கான புதிய சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. அவை நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் இடையிலான நடமாட்டத்தை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளன...

“இது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை; நாங்கள் எங்கும் செல்ல முடியாது என்று உணர்கிறோம். நீங்கள் ரமல்லாவில் இருந்து ஜெரிகோவுக்குச் செல்ல விரும்பினால் அது சாத்தியமற்றது. மேலும் அருகிலுள்ள கிராமங்களை அடைவது கூட கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எமது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, இப்பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளிடமிருந்து பைத்தியக்காரத்தனமான தாக்குதல்களும் இடம்பெறுகின்றன” என்று அசீல் பைடூன் தெரிவித்தார்.

கடந்த திங்களன்று இரவு ஜெருசலேமுக்கு அருகிலுள்ள ஜின்சாஃபுட் மற்றும் அல்-ஃபுண்டுக் கிராமங்களைத் தாக்கிய டசின் கணக்கான முகமூடி அணிந்த குடியேற்றவாசிகள், அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் கார்களுக்கு தீ வைப்பதற்கான பொருட்களைக் கொண்டு வந்து, மூன்று வீடுகள், ஒரு நர்சரி பாடசாலை மற்றும் ஒரு தச்சு கடையை தாக்கினர். அவர்கள் கற்களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் இந்த தாக்குதல் நடத்தினர். இதேபோன்ற தாக்குதல்கள் Sinjil, Ein Siniya, Turmus Aya மற்றும் Khirbet Aqwiwis ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றுள்ளன. வயதானவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 21 பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், காஸாவில் வசிப்பவர்கள், தங்களது தரைமட்டமாக்கப்பட்ட நகரங்களில் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன் இடிபாடுகளை, தொடர்ச்சியாக சல்லடை போட்டு வருகின்றனர். வடக்கு காஸாவில் 80 சதவீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டு, 300,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள 10,000 உடல்களை உறவினர்களும் சிவில் அமைப்புகளும் தேடி வருகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து 200 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் எலும்புகள் மட்டுமே அங்கு காணப்படுகின்றன.

இஸ்ரேலிய இராணுவம், சிவில் பாதுகாப்பு அமைப்பின் கிட்டத்தட்ட 100 ஊழியர்களைக் கொன்றும், அதன் பல வாகனங்களையும் அழித்துள்ளதால், தேடும் பணிகள் மெதுவாக இடம்பெறுகின்றன. அதுவும் துப்பாக்கிச் சூட்டின் கீழ் இடம்பெறுகிறது. கடந்த புதன்கிழமை, ரஃபா நகரின் ஷபோரா முகாமில் பெரும்பாலும் அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் போது 28 வயதான அக்ரம் அதீஃப் சனூன் என்பவர் இஸ்ரேலிய குவாட்காப்டர் ட்ரோனினால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர்.

போர் நிறுத்தம் கையெழுத்தானதிலிருந்து காஸாவுக்குள் 2,400 மனிதாபிமான உதவி லாரிகள் தடையின்றி சென்றது. இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். பட்டினி மற்றும் நோயை போர் ஆயுதமாகப் பயன்படுத்தி, இஸ்ரேல் இந்த முக்கிய பொருட்களை கொண்டு செல்வதை ஒரு வருடத்திற்கும் மேலாக வேண்டுமென்றே தடைசெய்துள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

காஸாவின் அல்-அக்ஸா மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்து வரும் பிரிட்டிஷ் மருத்துவர் ஜேம்ஸ் ஸ்மித், அல் ஜசீராவிடம், “நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, இனப்படுகொலையானது, இது போன்ற பலவீனமான போர் நிறுத்தத்தில் முடிவடையாது“ என்று குறிப்பிட்டார்.

காஸா பகுதியில் சீரழிந்து வரும் சுகாதார அமைப்பு, “இன்றும் வேறு வழிகளில் தொடர்கிறது“ என்பதை நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர் ஹிந்த் கௌதரி கூறியதாவது: “காஸா பகுதியின் உள்கட்டமைப்பு எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது”.

மேலும் அவர், “சில இடங்களில், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் இனி இயங்காது. உள்கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

உதவி நிறுவனம் UNRWA மீதான இஸ்ரேலின் தடைக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், இப் பிராந்தியம் மேலும் பேரழிவுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான காஸா மக்கள் இந்த உதவி நிறுவனத்தை நம்பியுள்ளனர் - மேலும் மேற்குக் கரையில் உள்ள பல லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களும் இதில் உள்ளனர்.

“UNRWA மீதான இஸ்ரேலிய தடையின் விளைவுகள்”, என்ற அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒஸ்லோ அறிக்கை, இந்த அமைப்பு மீதான தடையானது, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தது. இந்த அறிக்கையின் இணை ஆசிரியர் ஜோர்கன் ஜென்செஹௌகன், “ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில், இஸ்ரேலிய கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த அமைப்பின் வீழ்ச்சி காஸாவில் மனிதாபிமான நடவடிக்கையை முடக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.

Loading