முன்னோக்கு

டாவோஸில் "பிரபுத்துவ தன்னலக்குழு" ஒன்றுகூடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார், வியாழன், ஜனவரி 23, 2025. [AP Photo/Markus Schreiber]

உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள், எரிசக்தி நிர்வாகிகள், அரசு தலைவர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு, இந்த வாரம் 1,000 க்கும் அதிகமான தனியார் ஜெட் விமானங்கள் உலகெங்கிலும் இருந்து சுவிஸ் பனிச்சறுக்கு நகரமான டாவோஸுக்கு பறந்தன.

இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, வறுமை-எதிர்ப்பு தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம், தனது வருடாந்தர அறிக்கையை வெளியிட்டது. அதில், உலக பில்லியனர்களின் செல்வவளம் ஒரே ஆண்டில் 2 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இந்த விகிதம் 2023 ஐ விட மூன்று மடங்கு வேகமாக உயர்ந்துள்ளதாகவும் ஆக்ஸ்ஃபோம் குறிப்பிட்டது.

2024 ஆம் ஆண்டு பணக்காரர்களில் ஒவ்வொருவரின் செல்வமும் சராசரியாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதாக அது கண்டறிந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், தசாப்தத்தின் இறுதிக்குள் ஒரு டிரில்லியனர் இருப்பார் என்று ஆக்ஸ்ஃபோம் எதிர்பார்த்திருந்தாலும், இப்போது ஐந்து பேர் இருப்பார்கள் என்று அது எதிர்பார்க்கிறது.

இந்த உயரடுக்கு இப்போது ஒரு “பிரபுத்துவ தன்னலக்குழு” என்று அழைப்பதை உருவாக்குகிறது. முக்கியமாக, பரம்பரை மூலம் அதன் செல்வத்தை குவித்து, அதை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்துகிறது என்று ஆக்ஸ்ஃபோம் குறிப்பிட்டது.

இது, சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியை தொழில்துறையில் அதிகரித்து வரும் ஏகபோகத்துடன் தொடர்புபடுத்திய ஆக்ஸ்ஃபோம் பின்வருமாறு எழுதியது:

தொழில்துறைகள் மீதான ஏகபோகங்களின் பிடி இறுக்கமாகும்போது, பில்லியனர்கள் தங்கள் செல்வம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதைக் காண்கிறார்கள். ஏகபோக அதிகாரம் உலகம் முழுவதும் அதீத செல்வத்தையும் சமத்துவமின்மையையும் அதிகரிக்க செய்கிறது.

2014 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதார மன்றத்திற்கு முன்னதாக சமத்துவமின்மை குறித்த வருடாந்திர அறிக்கையை வெளியிடும் பாரம்பரியத்தைத் ஆக்ஸ்ஃபோம் தொடங்கியது. அந்த வருடம், உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 76 பில்லியன் டாலராக இருந்தது. இன்று, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு அதை விட ஐந்து மடங்கு அதிகமாக, 427.5 பில்லியன் டாலராக உள்ளது.

ஆக்ஸ்ஃபோம் அதன் 2014 அறிக்கையில், “வெகு சிலரின் கரங்களில் பொருளாதார ஆதார வளங்கள் மிகப்பெரியளவில் குவிந்து வருவதானது, அது உள்ளடக்கிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை முன்வைக்கிறது” என்று எச்சரிக்கை விடுத்தது.

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இந்த எச்சரிக்கை எதிர்காலத்தில் இல்லை, ஆனால், நிகழ்காலத்தில் உள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தில், நவ-பாசிசக் கட்சிகள் பெரும் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுள்ளன. மேலும், அமெரிக்காவில், 2020 இல் ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முயன்ற ஒரு மனிதரான டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் அமெரிக்காவின் தன்னலக்குழுவால் வெள்ளை மாளிகைக்குள் திணிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசில் ஒரு “புரட்சி” என்று அவர் அழைத்ததை மேற்பார்வையிடுவதில் ட்ரம்ப் மும்முரமாக இருப்பதால், இந்த நிகழ்வில் அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் தொலைதூரத்தில் இருந்துகொண்டு, 850 க்கும் மேற்பட்ட மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு ஒரு பெரிய திரையில் தோன்றி சுருக்கமான கருத்துக்களை வழங்கினார். வாஷிங்டன் போஸ்ட்டின் டேவிட் இக்னேஷியஸ் அதை பின்வருமாறு விவரித்தார்:

பல திரைகளில் தோன்றிய ட்ரம்பின் உருவம் அறை முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. மைய மேடையில் திரையரங்க அளவிலான திரையில் தோன்றிய பேரரசரின் கீழே, ஐந்து வணிக மற்றும் அரசியல் தலைவர்கள், உலக பொருளாதார மன்றத்தின் சின்னத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் இருக்கைகளில் சிறியவர்களாக அமர்ந்திருந்தனர். ஒரு காலத்தில் இவர்கள் “பிரபஞ்சத்தின் எஜமானர்கள்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது அவர்கள் மனிதநேயமற்ற மனிதனை நோக்கி சவாலற்ற கேள்வியை எழுப்பும் விண்ணப்பதாரர்களைத் தவிர வேறில்லை.

ட்ரம்ப்பிடம் மண்டியிட்டு, முகஸ்துதி செய்து பாராட்டிய வங்கி மற்றும் எரிசக்தி நிர்வாகிகளை விட, ட்ரம்ப் தன்னைத்தானே உயர்த்திக் கொண்டார். ஆனால், ஒவ்வொரு சர்வாதிகாரியையும் போலவே, அவர் தனக்காக மட்டுமல்ல, ஒரு சமூக வர்க்கத்திற்காகவும் பேசுகிறார். அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் மிகவும் கொள்ளையடிக்கும் உள்ளுணர்வுகளுக்கு ட்ரம்ப் குரல் கொடுத்தார். அமெரிக்காவைப் பற்றிய அவரது தொலைநோக்குப் பார்வை, பெருநிறுவனங்கள் நாட்டின் தொழிலாளர்களைச் சுரண்டவும், அதன் காற்றை விஷமாக்கவும், நச்சுக் கழிவுகளை அதன் நீரில் கொட்டவும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே.

“எனது நிர்வாகம்... வரலாற்றில் மிகப்பெரிய கட்டுப்பாட்டு தளர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது எனது கடைசி பதவிக்காலத்தின் சாதனை படைக்கும் முயற்சிகளை விட அதிகமாக உள்ளது” என்று ட்ரம்ப் கூறினார். “தொழிற்சாலைகளை உருவாக்க அல்லது ஒரு நிறுவனத்தை வளர்க்க” அமெரிக்காவை விட “பூமியில் சிறந்த இடம் இருக்காது” என்று அவர் உறுதியளித்தார்.

அமெரிக்க பெருநிறுவன வரி விகிதம் இப்போது 21 சதவீதத்தில் உள்ளது, “இப்போது நாங்கள் அதை 21 சதவீதத்தில் இருந்து 15 சதவீதத்திற்கு குறைக்க உள்ளோம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “15 சதவீதம் என்பது மிகக் குறைவு. இது ஒரு பெரிய நாட்டிலேயே மிகக் குறைவானது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வேலைத்திட்டம், “பொது அறிவின் ஒரு புரட்சி” என்று ட்ரம்ப் தெரிவித்தார். உண்மையில், இது தன்னலக்குழுக்களிடையே உள்ள “பொதுவான புத்தியாகும்” —கடைசியாக எப்போது ஒரு வணிக விமானத்தில் பறந்தோம் என்பதை நினைவில் கொள்ள முடியாத இவர்கள், தொழிலாளர்கள் உண்பதற்கு போதுமான அளவு சம்பாதிக்கவும், அவர்கள் இறக்கும் வரை வேலை செய்யாமல் இருக்கவும் ஏன் இதுபோன்ற நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.

ஆனால், ட்ரம்ப் அமெரிக்க மக்களிடம் இருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் அடிபணிவையும் கோரினார். அவர் இதை வற்புறுத்தி மிரட்டினார். ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியும், ரியாலிட்டி டிவி நட்சத்திரமும் மற்றும் ரியல் எஸ்டேட் மோசடிக்காரருமான டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பாவின் தன்னலக்குழுக்களுக்கு “அவர்களால் மறுக்க முடியாத ஒரு வாய்ப்பை” உருவாக்கி, அனைத்துத் தலைவர்களுக்குமான தலைவரின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டார்.

உலகில் உள்ள ஒவ்வொரு வணிகத்திற்கும் எனது செய்தி மிகவும் எளிமையானது: அமெரிக்காவில் உங்கள் தயாரிப்பை உருவாக்க வாருங்கள். உலகின் எந்த நாட்டிலும் இல்லாத மிகக் குறைந்த வரிகளில் சிலவற்றை நாங்கள் உங்களிடம் இருந்து வசூலிப்போம். ட்ரம்பின் ஆரம்ப வரி குறைப்புகளுடன் ஒப்பிடும்போது கூட, நாங்கள் அவற்றை கணிசமாகக் குறைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் உங்கள் தயாரிப்பை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், அது உங்கள் தனியுரிமை, பின்னர் மிகவும் எளிமையாக, நீங்கள் சுங்க வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்.

இதையடுத்து, கனடாவை இணைப்பதற்கான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். “நீங்கள் எப்போதும் ஒரு மாநிலமாக மாறலாம் என்று நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு மாநிலமாக இருந்தால், எங்களுக்கு பற்றாக்குறை இருக்காது.”

அடுத்த நாள், ஜனவரி 15 அன்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுக்கு, ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கோரி ட்ரம்ப் விடுத்த அழைப்பு குறித்த விவரங்களை பைனான்சியல் டைம்ஸ் பகிரங்கப்படுத்தியது. “நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அவர்கள் அதை விரும்புகிறார்கள்” என்று அழைப்பைக் கேட்ட ஒரு அதிகாரி, “டென்மார்க்காரர்கள் இப்போது நெருக்கடி நிலையில் உள்ளனர்” என்று டைம்ஸிடம் கூறினார்.

நிதியியல் தன்னலக்குழுவின் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான ட்ரம்பின் உள்நாட்டு முயற்சிக்கும், கனடாவை இணைப்பதற்கான அவரது அழைப்புகளில் தொடங்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடிபணிய வைப்பதற்கான அவரது முயற்சிகளுக்கும் இடையே ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர், விளாடிமீர் லெனின், ஏகாதிபத்தியம் என்ற அவரது முக்கிய 1916 படைப்பில், ஏகாதிபத்தியம் “முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்று அவர் குறிப்பிட்டு குணாம்சப்படுத்தினார்.

ஏகபோகங்கள், தன்னலக்குழு, சுதந்திரத்திற்காக அல்லாமல் மேலாதிக்கத்திற்கான முயற்சி, விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்கார அல்லது மிகவும் சக்திவாய்ந்த தேசங்களால் அதிகரித்த எண்ணிக்கையிலான சிறிய அல்லது பலவீனமான தேசங்களைச் சுரண்டுதல் ஆகியவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் தனித்துவமான பண்புகளுக்கு வழிவகுத்தன. அவை, அதை ஒட்டுண்ணி அல்லது நாற்றம்கண்ட முதலாளித்துவம் என்று வரையறுக்க நம்மை கட்டாயப்படுத்துகின்றன.

லெனினின் காலத்தைப் போலவே, ஏகாதிபத்திய சமூக ஒழுங்கின் மிக அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான குணாம்சங்கள் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. உள்நாட்டுத் துறையில், இது சர்வாதிகாரம், ஏகபோகம் மற்றும் தொழிலாள வர்க்கத்தை முன்பிலும் அதிகமான வறிய நிலைக்கு தள்ளுவதாகும். சர்வதேச உறவுகளில், கடற்கொள்ளை, காலனித்துவம் மற்றும் பூகோள மேலாதிக்க நோக்கத்திற்காக பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கையை இணைத்தல் ஆகும். அழுகிப்போன முதலாளித்துவத்தின் இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் அவற்றின் ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை ட்ரம்பிடம் காண்கின்றன: அதாவது ட்ரம்ப் தன்னலக்குழுக்களின் தலைவர்.

ட்ரம்பும் அவரது சக தன்னலக்குழுக்களும் கட்டமைத்து வருகின்ற நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் செய்யப்படுகிறது. ட்ரம்ப் அவர் கட்டமைத்து வரும் செல்வந்த தட்டுக்களின் சொர்க்கத்திற்காக, தொழிலாள வர்க்கத்தை பரிதாபகரமான வறுமைக்குள் தள்ளி விடலாம் என்று நம்புகிறார்.

ஆனால், நவீன வரலாறு அனைத்துமே இத்தகைய பரந்த செல்வ வளக் குவிப்பும் அதிகாரமும் தவிர்க்கவியலாமல் புரட்சிகர எழுச்சிகளுக்கு கட்டியம் கூறுகின்றன என்பதையே கற்பிக்கின்றன. சமூகத்தில் உள்ள அனைத்து செல்வ வளங்களையும் உற்பத்தி செய்கின்ற மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு கணத்தில் ஸ்தம்பிக்கச் செய்யக் கூடிய தொழிலாள வர்க்கம், இந்த விடயத்தில் அதன் சொந்த கருத்தைக் கொண்டிருக்கும்.

Loading