மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இன சுத்திகரிப்புக்கான வெளிப்படையான அழைப்பாக, காஸாவிலுள்ள அரபு மக்களை “சுத்தப்படுத்த” இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். “நீங்கள் அநேகமாக ஒன்றரை மில்லியன் மக்களைப் பற்றி பேசுகிறீர்கள், நாங்கள் அந்த முழு விஷயத்தையும் சுத்தம் செய்கிறோம்” என்று ட்ரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து செய்தியாளர்களிடம் கூறினார்.
“பல நூற்றாண்டுகளாக, பல, பல மோதல்கள் நடந்த இடத்திலிருந்து,”, பாலஸ்தீன மக்களை அகற்றுவதன் மூலமோ அல்லது அவர்களை அழிப்பதன் மூலமோ மத்திய கிழக்கில் அமைதி அடையப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் இந்த அறிக்கை, பாலஸ்தீன பிராந்தியங்கள் அனைத்தையும் இணைத்துக் கொள்வதற்கும், மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு “அகன்ற இஸ்ரேலை” கட்டியெழுப்புவதற்குமான முயற்சியின் பாகமாக, காஸாவில் இருந்து பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு நிர்மூலமாக்கி வெளியேற்றும் நெதன்யாகு அரசாங்கத்தின் உண்மையான கொள்கையை, அமெரிக்க அரசின் பாகத்தில் இருந்து பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தழுவிக்கொள்வதாகும்.
காஸாவில் குறைந்தபட்சம் 70,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகம் நிதியளித்து, ஆயுதம் மற்றும் அரசியல்ரீதியாக பாதுகாத்து வந்த அதேவேளையில், அவரது நிர்வாகம் “இரண்டு-அரசு தீர்வை” முன் வைப்பதன் மூலம், பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தாயகத்தை நாடுகிறது என்ற கட்டுக்கதையை ஆதரித்து வந்தது.
ஒரு அர்த்தத்தில், காஸாவில் பைடென் நிர்வாகத்தின் இனப்படுகொலைக் கொள்கையின் அத்தியாவசிய உள்ளடக்கத்தை மட்டுமே ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால் வார்த்தைகளுக்கு அர்த்தம் உண்டு. ஒரு அமெரிக்க ஜனாதிபதி இனச்சுத்திகரிப்பை அரச கொள்கையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஒரு மக்களை பலவந்தமாக இடமாற்றம் செய்வது ஒரு போர்க்குற்றமும் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமும் ஆகும், மேலும் காஸாவில் இன சுத்திகரிப்புக்கு ட்ரம்ப் செயலூக்கத்துடனும் நனவுடனும் வசதி செய்து கொடுத்திருப்பது அவரை ஒரு போர் குற்றவாளியாக ஆக்குகிறது.
காஸாவை அரபு மக்களிடம் இருந்து “சுத்தப்படுத்த” இஸ்ரேலுக்கு அவர் விடுத்த அழைப்பு, தற்செயலான சொற்றொடர் அல்ல. உண்மையில், பாலஸ்தீனத்தின் இடம்பெற்றுவரும் இனச்சுத்திகரிப்பு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலமுறை விடுத்த அழைப்புகளில், இது சமீபத்திய, மற்றும் மிகவும் வெளிப்படையான அழைப்பாகும்.
கடந்த வாரம், காங்கிரஸுக்கு வழங்கிய சாட்சியத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக ஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட எலிஸ் ஸ்டெஃபானிக், ஒட்டுமொத்த மேற்குக் கரை மீதும் இஸ்ரேலுக்கு ஒரு “விவிலிய உரிமை” இருப்பதாக அறிவித்தார். கடந்த வார இறுதியில் NBC செய்திக்கு ட்ரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை பாலஸ்தீன மக்களை காஸாவிலிருந்து இடம்பெயர வைப்பது குறித்து விவாதித்து வருகிறது.
இஸ்ரேலுக்கு புதிய 2,000 இறாத்தல் எடைகொண்ட குண்டுகளை மேலும் அனுப்புவதாக பென்டகன் அறிவித்ததைத் தொடர்ந்து, காஸாவில் இனச் சுத்திகரிப்பு பணியை ட்ரம்ப் வெளிப்படையாகத் தழுவியுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் நகரத் தொகுதிகள் முழுவதையும் தகர்ப்பதற்கு இந்தக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.
காஸா மற்றும் லெபனானில் ஒரு பெயரளவிலான “போர்நிறுத்தம்” இருந்து வருகின்ற போதிலும், கடந்த ஞாயிறன்று தெற்கு லெபனானில் 22 பேரைக் கொன்றும், மேற்குக் கரையின் ஜெனினில் நடந்து வரும் ஒரு தேடுதல் வேட்டையில் குறைந்தபட்சம் 16 பேர்களைக் கொன்றும், இஸ்ரேல் மத்திய கிழக்கு எங்கிலும் அதன் அட்டூழியத்தைத் தொடர்கிறது.
மனிதர்களின் ஒரு மக்கள்தொகையைக் குறிப்பிட “சுத்திகரிப்பது” என்ற வார்த்தையை ட்ரம்ப் பயன்படுத்துவதானது, 1941 மற்றும் 1945 க்கு இடையில் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் மீதான இனப்படுகொலையை நடத்திய ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி இயக்கத்தின் வார்த்தைஜாலத்தை வேண்டுமென்றே ஏற்றுக் கொள்வதாகும்.
பத்திரிகையாளர் பாப் உட்வார்டுக்கு, ஜெனரல் மார்க் மில்லி விளக்கியதைப் போல, டொனால்ட் ட்ரம்ப் “முழுமையாக ஒரு பாசிஸ்ட்” ஆவார். வேனிட்டி ஃபேர் என்ற பத்திரிகையின் கூற்றுப்படி, ட்ரம்பின் முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் தனது வழக்கறிஞரிடம், தற்போதைய ஜனாதிபதி “ஹிட்லரின் உரைகளை தொகுத்து வைத்துள்ள புத்தகமான எனது புதிய கட்டளையைப் படிப்பதாகவும், அதை அவர் தனது படுக்கைக்கு அருகில் ஒரு அலுமாரியில் வைத்திருப்பதாகவும்” கூறியுள்ளார்.
ஒரு ஒட்டுமொத்த இனக்குழுவையும் “சுத்தப்படுத்தும்” ட்ரம்பின் முன்மொழிவு ஹிட்லரின் உதடுகளில் இருந்து நேரடியாக வருகிறது. ட்ரம்ப் தனது படுக்கைக்கு அருகில் வைத்திருப்பதாகக் கூறப்படும் புத்தக தொகுப்பிலிருந்து 1938 இல் ஹிட்லர் ஆற்றிய உரையில், “இரத்தம் மற்றும் மண்ணின் நித்திய மதிப்புகள் ஜேர்மன் தேசத்தையும், நமது இனத்தையும்”, யூத மக்களிடமிருந்து “நமது கலாச்சாரத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்று ஹிட்லர் அறிவித்தார்.
யூத இனப்படுகொலையின் போது, யூத மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகள் ஜூடென்ரீன் அல்லது “யூதர்களிடமிருந்து சுத்திகரிக்கப்பட்டவை” என்று அறிவிக்கப்பட்டன. இந்த உள்ளடக்கத்தில், பாலஸ்தீனத்திலிருந்து அரேபியர்களை “சுத்தப்படுத்துவது” என்பது பாலஸ்தீனிய பிரச்சினைக்கு “இறுதித் தீர்வாக” இருக்கும் என்பதை ட்ரம்பின் வார்த்தைகள் மறைமுகமாக உணர்த்துகின்றன.
அவுஸ்விட்ச் சித்திரவதை முகாம் விடுவிக்கப்பட்டு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க அரசின் தலைவர், பாரிய படுகொலைகள் மூலமாக “சமூக சுகாதாரம்” என்ற நாஜி சித்தாந்தத்தை பகிரங்கமாக தழுவியிருப்பது மட்டுமல்ல, மாறாக செயலூக்கத்துடன் அதை செயல்படுத்தியும் வருகிறார்.
பாலஸ்தீன மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து “தூய்மைப்படுத்தும்” ட்ரம்பின் முன்மொழிவு, நாஜி ஆட்சியில் அதன் மிக உயர்ந்த வரலாற்று வெளிப்பாடாக இருந்த ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை இயல்பாக்குவதில் ஒரு மைல்கல்லாக இருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முதலாளித்துவத்தின் சித்தாந்த பாதுகாவலர்கள், நாஜி ஜேர்மனியின் குற்றங்கள் ஒரு வகையான வரலாற்று விபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது என்றும் கூறினர். ஹிட்லரும் அவர் தலைமையிலான இயக்கமும், ஜனநாயகம், அமைதி மற்றும் இணக்கமான உலகப் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படைப் போக்கிலிருந்து விலகலை கொண்டிருப்பதாக குறிக்கப்பட்டது.
இதற்கு மாறாக, ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கியும் ட்ரொட்ஸ்கிச இயக்கமும், பாசிசம் முதலாளித்துவத்தின் மிக ஆழமான மற்றும் மிகவும் அத்தியாவசியமான குணாம்சங்களை வெளிப்படுத்துகிறது என்றும், அது நெருக்கடி காலகட்டங்களில் மேற்பரப்புக்கு வெடித்தது என்றும் விளக்கினர்.
உலகை அடிமைத்தன காலனிகளாக துண்டாடுவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலில் அவற்றால் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தின் மிகவும் செறிவான வெளிப்பாட்டை ஹிட்லர் பிரதிநிதித்துவம் செய்ததைப் போலவே, ட்ரம்பும் பல தசாப்தங்களாக உலக முதலாளித்துவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக காட்டுமிராண்டித்தனத்தை இயல்பாக்குவதையும் உதாரணமாக கொண்டிருக்கிறார்.
ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகம் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” ஆரம்பித்தபோது, ஈராக்கிற்கு எதிரான “அதிர்ச்சி, பிரமிப்பு” மற்றும் குண்டுவீச்சு தாக்குதல், அபு கிரைப் மற்றும் குவாண்டனாமோ விரிகுடாவின் சிறைக்கூடங்களின் கொடூரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஆதரவில் படுகொலை செய்யப்பட்டனர்.
கோவிட்-19 தொற்றுநோய் வெடித்தவுடன், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், அப்போதைய இங்கிலாந்து பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் வார்த்தைகளில், “வயதானவர்களைக் கையாளும் இயற்கையின் வழி” போல, வேண்டுமென்றே பாரிய மரணங்களை பகிரங்கமாக தழுவிக் கொண்டன. ஜோன்சன் வெளிப்படுத்தியதைப் போல, இந்த தொற்றுநோய்க்கு முதலாளித்துவத்தின் விடையிறுப்பு “உடல்கள் குவியட்டும்” என்பதாக இருந்தது.
வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் மீண்டும் திரும்புவதென்பது, முதலாளித்துவம் அதன் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகள் மீது ஏதேனும் அத்துமீறல் ஏற்படுமோ என்று அஞ்சுகின்ற செல்வந்த தட்டுக்கள், சமூகத்தின் மீதான அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்கின்ற நிலையில், போர், சித்திரவதை, நாடுகளை இணைத்தல் மற்றும் பாரிய படுகொலையை இயல்பாக்குவதன் விளைபொருளாகும். ட்ரம்பின் தேர்தல் வெற்றியை நாஜி சல்யூட் அடித்து வரவேற்ற, ட்ரம்பின் முன்னணி நிதி திரட்டுபவரான எலோன் மஸ்க், நாஜி ஜேர்மனியின் குற்றங்களை மீண்டும் செய்வதற்கான அவரின் நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான உந்துதலுக்கு ஏற்ப மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்கும் வாஷிங்டனின் முயற்சிகளின் ஒரு பகுதியாக காஸா இனப்படுகொலைக்கான அவர்களின் ஆதரவு உள்ளது என்பதை பைடென் நிர்வாகத்திலிருந்த ட்ரம்பின் முன்னோடிகள், எடுத்துக்காட்டியுள்ளனர். ட்ரம்ப் இந்த முயற்சிகளை இன்னும் அதிக அளவு காட்டுமிராண்டித்தனத்துடன் இரட்டிப்பாக்குவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். 1.5 மில்லியன் மக்களை “சுத்தப்படுத்துவது” குறித்த அவரது இயல்பான குறிப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தின் கீழ் உலகை மறுஒழுங்கு செய்வதற்கான அதன் உந்துதலை, கட்டவிழ்த்து விடுவதற்கு தயாரிப்பு செய்து வரும் பரந்த அளவிலான உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளுக்கு ஒரு சான்றாகும்.
காஸா இனப்படுகொலையின் விரிவாக்கமும், அது ஒரு பாகமாக இருக்கும் பரந்த ஏகாதிபத்தியப் போரும் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டும். கடந்த 15 மாதங்களில், இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பரந்த போராட்டமாக விரிவாக்கப்பட வேண்டும் என்பதோடு, நிதியியல் தன்னலக்குழுக்களின் சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அதன் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.