மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஒரு வாரத்தில், அவருக்கு முன்னர் எந்த ஜனாதிபதியும் ஒருபோதும் முயற்சிக்காததைச் செய்வதற்கு, ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார்: அது, அரசியலமைப்பைத் தலைகீழாக மாற்றி ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுதல் ஆகும். புலம்பெயர்வோர்களின் “படையெடுப்பை” முற்றுமுழுதாக நிறுத்துவது என்ற சாக்குபோக்கின் கீழ், ட்ரம்ப் போர்க்கால அதிகாரங்களைக் கையிலெடுத்துள்ளார். இதற்காக, காங்கிரஸின் சட்டங்களை மீறுவதற்கான அதிகாரத்தை அவர் கோரியுள்ளதுடன், நாட்டில் குடியேறும் மக்களை அச்சுறுத்தும் ஒரு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.
அதிகாரத்துக்கு வந்த வெறும் ஏழு நாட்களிலேயே ஸ்டீபன் மில்லர் மற்றும் ரொம் ஹோமன் போன்ற பாசிச உதவியாளர்களுடன் இணைந்து ட்ரம்ப், பல ஆண்டுகளாக தயாரிப்பு செய்து வந்துள்ள ஒரு மூலோபாயத்தின் ஆரம்ப கட்டங்களை தொடங்கி உள்ளார்.
இதில் பின்வருவன அடங்குகின்றன:
- அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தம் மற்றும் அதன் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவாதத்தை நேரடியாக மீறி, அமெரிக்காவில் பிறந்த தனிநபர்களின் குடியுரிமையை பறிக்க ஜனாதிபதி அதிகாரத்தை கோருவது, மற்றும் அரசியலமைப்பு அதிகாரப் பிரிவை மீறுவது.
- அமெரிக்காவில் உள்ள அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் (தோராயமாக 30 மில்லியன் மக்கள்) முதல் அரசியலமைப்பு திருத்த உரிமைகள் கிடையாது என்று திட்டவட்டம் செய்து, அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் விமர்சிப்பது நாடுகடத்தப்படுவதற்கான அடித்தளமாக அமைகிறது.
- அமெரிக்க எல்லைகளுக்குள் புவியியல் வரம்புகள் இல்லாமல் இராணுவ அதிகாரத்தை வழங்குவதன் மூலம், “படையெடுப்பு” என்று அழைப்பதை அடக்குவதற்கான செயல்பாட்டு போர் திட்டங்களை உருவாக்க அமெரிக்க வடக்கு கட்டளையகத்திற்கு (NORTHCOM) உத்தரவிடுதல்.
- கிளர்ச்சிச் சட்டம் மற்றும் அந்நிய எதிரிகள் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை வழிநடத்துதல், உத்தியோகபூர்வ இராணுவச் சட்டத்திற்கு களம் அமைத்தல்.
- உள்ளூர் போலீஸ் மற்றும் FBI-ஐ குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவதற்காகப் பயன்படுத்தி, நியூவார்க், சிக்காகோ மற்றும் பிற அமெரிக்க நகரங்களுக்கு அவர்களை அனுப்புதல்.
- ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் “எதிரி போராளிகளை” காட்டுமிராண்டித்தனமாக சித்தரிப்பதை நினைவூட்டும் வகையில், கொலம்பியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் விமானங்களில் நாடுகடத்தப்பட்டவர்களை அவர்களின் நாற்காலிகளில் சங்கிலியால் கட்டி வைத்தல்.
- அரசாங்க உத்தரவுகளால் இலக்கு வைக்கப்பட்டவர்களை பாதுகாக்க அல்லது ஆலோசனை வழங்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அச்சுறுத்தல் விடுத்தல்.
- போதுமான விசுவாசம் இல்லாதவர்கள் அல்லது இந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியவர்கள் என்று கருதப்படும் எவரையும் அகற்ற, கூட்டாட்சி அமைப்புகளை முழுமையாக சுத்திகரிப்பு செய்யத் தொடங்குதல்.
- நாடுகடத்தல் விமானங்களை ஏற்றுக்கொள்ளும்படி கொலம்பியாவை கட்டாயப்படுத்த போர்க்கால நடவடிக்கைகளை எடுப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் கொலம்பியாவுடன் ஒரு பெரிய சர்வதேச மோதலைத் தூண்டுதல்.
பெரும் பொய்: ஒரு புலம்பெயர்ந்தோர் “படையெடுப்பு”
இந்த தீவிரமான மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கான போலி-சட்ட சாக்குப்போக்கு, பெருமளவிலான குடியேற்றம் ஒரு “படையெடுப்பை” உள்ளடக்கியது என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பாகும். இது, புலம்பெயர்ந்தோரின் நடமாட்டத்தை அமெரிக்க மண்ணில் ஒரு வெளிநாட்டு இராணுவத்தால் நடத்தப்படும் இராணுவத் தாக்குதலுக்கு சமமாக்குகிறது. இந்த இட்டுக்கட்டப்பட்ட அவசரகால நிலையைப் பயன்படுத்தி, குடியேற்றத்தை ஒழுங்குபடுத்தும் காங்கிரஸ் சட்டங்கள் கட்டுப்படுத்தும் சட்டங்கள் அல்ல, மாறாக வெறும் ஆலோசனை வழங்குபவை மட்டுமே என்று ட்ரம்ப் வலியுறுத்துகிறார். இது, அரசியலமைப்பை மீறுவதற்கும் உத்தரவாணைகள் மூலம் ஆட்சி செய்வதற்கு தடையற்ற நிர்வாக அதிகாரத்தைக் கோருவதற்கும் அவரை அனுமதிக்கிறது.
“படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான நிர்வாக உத்தரவு, குடியேற்றத்தை தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக சித்தரிக்கிறது. இது, முந்தைய நிர்வாகம் “முன்னொருபோதும் இல்லாத வகையில் வெள்ளமென சட்டவிரோத புலம்பெயர்வை அழைத்தது, நிர்வகித்தது மற்றும் மேற்பார்வையிட்டது” என்பதை ஆதாரமின்றி வலியுறுத்துவதுடன், லட்சக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் எல்லையைக் கடக்க அல்லது வணிக விமானங்கள் மூலம் வர அனுமதிக்க, நீண்டகால கூட்டாட்சி சட்டங்களை மீறியதாகக் கூறுகிறது.
புலம்பெயர்ந்தோர்கள், “தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும், அப்பாவி அமெரிக்கர்களுக்கு எதிராக மோசமான மற்றும் கொடூரமான செயல்களைச்” செய்வதாகவும், “உளவு பார்த்தல், பொருளாதார உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் உள்ளிட்ட விரோத நடவடிக்கைகளில்” ஈடுபடுவதாகவும் அந்த உத்தரவு குற்றஞ்சாட்டுகிறது.
பாரிய புலம்பெயர்வு நிகழ்வுப்போக்கை ஒரு “படையெடுப்பு” என்று முத்திரை குத்துவது ஒரு அப்பட்டமான பொய் என்பதோடு, ஒட்டுமொத்த மக்களுக்கு எதிரான ஒரு போர்ப் பிரகடனமும் ஆகும். அமெரிக்காவில் வசிக்கும் ஆறு பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர், மேலும் பரந்த பெரும்பான்மை அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர், வேலை செய்கிறார்கள் மற்றும் பள்ளிக்குச் செல்கின்றனர். ட்ரம்பின் உத்தரவின் உரையின்படி, மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த பள்ளிக் குழந்தைகள், தொழிலாளர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளும் வெறுமனே “அமெரிக்க சமூகங்களில் இணைந்து கொள்வதின் மூலமாக”, அவர்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதன் மூலமாக ஒரு போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கருதப்படுகிறார்கள்.
அமெரிக்காவில் குடியேற்றம் என்பது ஒரு “படையெடுப்பு” என்ற அறிவிப்பானது, குடியேறியவர்களால் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றுடன் மோதுகிறது. பாரிய குடியேற்றத்தின் தற்போதைய வடிவம் ஒரு “படையெடுப்பை” உள்ளடக்கியது என்றால், 17-18 ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் மற்றும் டச்சுக்காரர்களின் குடியேற்றம், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜேர்மானியர்கள் மற்றும் ஐரிஷ்காரர்கள், மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இத்தாலியர்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பியர்களின் குடியேற்றமும் அவ்வாறே இருந்தது. புலம்பெயர்ந்தோர் “படையெடுப்பு” என்ற கூற்றின் அடிப்படையில் எந்தவொரு நாட்டிலும் அவசரகால ஆட்சியை அடித்தளமாகக் கொள்வது என்பது, அதிதீவிர பிற்போக்குத்தனமாக இருக்கும். அமெரிக்காவில் இது “புலம்பெயர்ந்தோரின் தேசமாக” அதன் வரலாற்று அடையாளத்தை மறுதலிக்கிறது.
இந்த “படையெடுப்பு” என்று கூறப்படுவதன் அளவு, காங்கிரஸால் இயற்றி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை இடைநிறுத்துவதை அவசியமாக்குகிறது என்று மற்றொரு நிர்வாக உத்தரவு வலியுறுத்துகிறது: “எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் தேசியச் சட்டம் [INA] அமெரிக்காவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகார களத்தை ஆக்கிரமிக்கவில்லை. குறிப்பாக அவசரகால காலங்களில், INA இன் முழு விதிகளும் செயல்பாட்டு கட்டுப்பாடுகளால் பயனற்றவையாக, அதாவது, மாநிலங்களுக்குள் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போது மாற்றப்படுகிறது.” இந்த விரிவான அறிவிப்பு, ஜனாதிபதியின் “உள்ளார்ந்த அதிகாரங்கள்” காங்கிரஸின் பாராளுமன்ற அதிகாரத்தை மீறுவதாகவும், அரசியல் ரீதியாக அதிகாரங்களைப் பிரிப்பதை ரத்து செய்வதாகவும் வலியுறுத்துகிறது.
நிர்வாகத்திற்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்குதல்
அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி பதவியையோ விமர்சிக்கும் அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களின் உரிமையும் “வெளிநாட்டு பயங்கரவாதிகளிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்” என்ற தனி நிர்வாக உத்தரவின் மூலம் திறம்பட இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உத்தரவு கூறுகிறது:
அமெரிக்காவில் ஏற்கனவே இருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டினர், அதன் குடிமக்கள், கலாச்சாரம், அரசாங்கம், நிறுவனங்கள் அல்லது ஸ்தாபகக் கொள்கைகள் மீது விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், குறிப்பிட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் நமது தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பிற அச்சுறுத்தல்களை ஆதரிக்கவோ, உதவவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என்பதையும் அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவில், 30 நாட்களுக்குள், இராணுவ-உளவுத்துறை எந்திரம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கையும் அடங்கும்.
அமெரிக்க மக்களின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திய அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் வெளிநாட்டினரின் செயல்களிலிருந்து, முதல் திருத்தத்தால் பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான நமது குடிமக்களின் உரிமைகள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்ல, நமது அரசியலமைப்பில் குடியரசு தாங்கி நிற்கின்ற கலாச்சாரத்தை தூக்கியெறிவது அல்லது மாற்றுவது, அல்லது வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி, வக்காலத்து அல்லது ஆதரவை வழங்குவது ஆகியன, அமெரிக்க மக்களைப் பாதுகாக்க தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு பரிந்துரை செய்கிறது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
இந்த ஆணை புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை பறிப்பதை மட்டுமல்ல, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக இருப்பவர்களின் உரிமைகளையும் பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “அரசாங்கத்தை கவிழ்க்க” வாதிடும் அமெரிக்கர்களைக் “கண்டறிந்து அவர்களின் குடியுரிமையைப் பறிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும்” இந்த ஆணை புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடுகிறது. இந்த விரிவான உத்தரவு அரசியல் எதிர்ப்பை தேசத்துரோகத்துடன் இணைத்து, நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் எவரையும் திறம்பட இலக்கு வைக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த உத்தரவுகள் குடியேற்றத்தை ஒட்டுமொத்த மக்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு ஈட்டிமுனையாக பயன்படுத்துகின்றன.
ஏற்கனவே, வலதுசாரி சியோனிச அமைப்புகள், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை நாடு கடத்த கோரி வருகின்றன. இது, அத்தகைய சக்திகள், அதிருப்தியை ஒடுக்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பை நசுக்கவும் இத்தகைய அதிகாரங்களை எவ்வாறு பிரயோகிக்க முடியும் என்பதற்கான உறைய வைக்கும் முன்னோட்டமாகும்.
பிராந்தியங்களின் அதிகாரத்தையும் (posse comitatus) பதினான்காவது சட்ட திருத்தத்தையும் மீறுதல்
குடியேற்ற அமுலாக்கத்தில் ஈடுபடுவதற்காக, அமெரிக்க மண்ணில் நிலைநிறுத்தப்படுவதற்கான போர்த் திட்டங்களை பென்டகன் வகுக்க வேண்டும் என்று கோரும் உத்தரவு பின்வருமாறு:
இந்த உத்தரவு அமுலுக்கு வந்த 10 நாட்களுக்குள், ஒருங்கிணைந்த கட்டளைத் திட்டத்தின் திருத்தத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவும், இது எல்லைகளை மூடுவதற்கும் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும் அமெரிக்காவின் வடக்கு கட்டளையகத்துக்கு (USNORTHCOM) பணியை ஒதுக்குகிறது. மேலும், சட்டவிரோத வெகுஜன இடம்பெயர்வு, போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் கடத்தல் மேலும் பிற குற்றச் செயல்கள் உள்ளிட்ட படையெடுப்பு வடிவங்களை முறியடிப்பதன் மூலம் இந்த உத்தரவு அமெரிக்காவை வலுப்படுத்துகிறது.
இந்த உத்தரவு மில்லியன் கணக்கான நிராயுதபாணியான புலம்பெயர்ந்தோரை பொதுமக்கள் என்று வகைப்படுத்தாமல் “எதிரிப் போராளிகள்” என்று வகைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறை எழுப்புகிறது. இது செயல்படுத்தப்பட்டால், அவர்கள் அமெரிக்காவின் சட்டங்களால் அல்ல, மாறாக போர் சட்டங்களால் நிர்வகிக்கப்படும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது முன்னொருபோதும் இல்லாத ஒடுக்குமுறைக்கும் மற்றும் “இறையாண்மையை” பாதுகாக்கும் போர்வையின் கீழ் உள்நாட்டு நிர்வாகத்தை இராணுவமயமாக்குவதற்கும் வழிவகுக்கும். இது பிராந்திய அதிகாரம் என்ற பொதுச் சட்டக் கொள்கையை மீறுவதாகும். அங்கு இராணுவம் அமெரிக்க மண்ணில் சட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.
பிறப்புரிமை குடியுரிமையை இரத்து செய்யும் இந்த உத்தரவு, ட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க குடிமக்களை “பாதுகாப்பதை” நோக்கமாகக் கொண்டவை என்ற ட்ரம்பின் வாதங்களின் மோசடியான தன்மையை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது. யதார்த்தத்தில், இந்த உத்தரவு அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகள் மீதான முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை பிரதிநிதித்துவம் செய்கிறது.
அமெரிக்க மண்ணில் பிறந்த தனிநபர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கான அதிகாரத்தை ஆணவத்துடன் பயன்படுத்த முயற்சிப்பதன் மூலம் (பதினான்காவது திருத்தத்தால் குடியுரிமைக்கான உரிமை வெளிப்படையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது), ட்ரம்பும் அவரது பாசிச ஆலோசகர்களும் அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை சட்டத் தூண்களில் ஒன்றின் மீது நேரடித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிர்வாக உத்தரவு கடந்த வாரம் ரீகனால் நியமிக்கப்பட்ட கூட்டாட்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜோன் கோகனூரால் கட்டளையிடப்பட்டது. அவர் இந்த உத்தரவை சியாட்டிலில் நடந்த ஒரு விசாரணையின் போது, அரசியலமைப்பை மாற்றுவதற்கான ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று கோகனூர் கூறினார்: “உலக வரலாற்றில் நாம் திரும்பிப் பார்க்கும் மற்ற நேரங்கள் உள்ளன, நல்லெண்ணம் கொண்டவர்கள் ‘நீதிபதிகள் எங்கே இருந்தனர்? வழக்கறிஞர்கள் எங்கே?”
கோகனூரின் தீர்ப்பு இந்த கடுமையான நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அதேவேளையில், ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது. இது அதிவலது நீதிபதிகளால் மேலாதிக்கம் செலுத்தப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் இந்த உத்தரவு விசாரிக்கப்படுவதற்கு களம் அமைத்துள்ளது. நீதிமன்றம் ட்ரம்புக்கு எதிராக தீர்ப்பளித்தாலும் கூட, ட்ரம்ப் அந்த உத்தரவை மீறுவாரா என்பதும், அமெரிக்காவில் பிறந்த குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் மற்றும் பிற குடியுரிமை ஆவணங்களை மறுப்பதற்கான அவரது உத்தரவை நிர்வாக முகமைகள் பின்பற்ற வேண்டும் என்றும் கோருவாரா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாக உள்ளது.
அமெரிக்க வரலாற்றில் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை மீறும் அசாதாரண நிகழ்வுகள் பல உள்ளன. அவற்றில் அன்னியர் மற்றும் தேசத்துரோகச் சட்டங்கள், சீன விலக்குகள், பால்மர் தாக்குதல்கள், ஹிட்லரை விட்டு வெளியேறிய யூத அகதிகளை முறையாக விலக்கி வைத்தல், ஜப்பானிய-அமெரிக்கர்களின் தடுப்புக்காவல், மெக்சிகன் நாட்டினரை இலக்காகக் கொண்ட “வெட்பேக் நடவடிக்கை” என்று முரட்டுத்தனமாகப் பெயரிடப்பட்டு கடந்த மூன்று தசாப்தங்களாக பெருமளவில் இடம்பெறும் நாடுகடத்துதல்கள் என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும். இந்த மரபிற்கு ட்ரம்ப் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் முறையீடுகளை செய்கிறார்.
ஆனால், புலம்பெயர்ந்தவர்கள் மீதான இப்போதைய தாக்குதலில் புதிய ஒன்று உள்ளது: அதாவது, ட்ரம்பின் அடக்குமுறை, முன்னொருபோதும் இல்லாத வகையில் நிர்வாகக் பிரிவின் கைகளில் அரசு அதிகாரத்தை குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ட்ரம்ப் ஜனவரி 6, 2021 அன்று அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார், அப்போது அவர் 2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், தேர்தல் கல்லூரியின் சான்றிதழை நிறுத்த காங்கிரஸ் மீது ஒரு தாக்குதலை ஏற்பாடு செய்வதன் மூலம் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் முயன்றார். 2024 தேர்தல் பிரச்சாரத்தில், அவர் “முதல் நாளிலேயே ஒரு சர்வாதிகாரியாக” ஆட்சி செய்யப் போவதாகவும், அரசியலமைப்பை “முடிவுக்குக் கொண்டு வருவதாகவும்” உறுதியளித்தார். தற்போது அந்த திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ட்ரம்பின் கொள்கைகள், பரந்த பெரும்பான்மை மக்களின் எஞ்சியிருக்கும் ஜனநாயக மற்றும் சமூக பாதுகாப்புகளைக் கிழித்தெறிவதன் மூலமாக, அதன் மேலாதிக்கத்தை பலப்படுத்த தீர்மானகரமாக உள்ள ஒரு சிறிய நிதியியல் உயரடுக்கின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன. ஜனநாயகம் என்பது தன்னலக்குழு ஆட்சியுடன் பொருந்தாது. உலக சோசலிச வலைத் தளம் முன்னர் குறிப்பிட்டதைப் போல, ட்ரம்ப் அமெரிக்க அரசியலின் ஏதேன் தோட்டத்தில் ஒரு இடைத்தரகர் அல்ல. இரண்டு கட்சிகளாலும் பல தசாப்தங்களாக எளிதாக்கப்பட்ட செல்வக் குவிப்பின் நீடித்த நிகழ்ச்சிப்போக்கு, ட்ரம்பை வாந்தி எடுக்கச் செய்து அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் இருத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பு பாத்திரம்
ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பை நம்பியுள்ளார். ஜனநாயகக் கட்சி, ஏற்கனவே ட்ரம்பினது அமைச்சரவை நியமனங்களை உறுதிப்படுத்தவும் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரது பிற்போக்குத்தனமான தாக்குதல்களை நடத்தவும் வாக்களித்து வருகிறது. இது, கடந்த வாரம் இரு கட்சிகளும் நிறைவேற்றிய லேகன் ரிலே சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, கடைத் திருட்டு போன்ற சிறிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கு கட்டாய தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என்று கோருகிறது. அனைத்திற்கும் மேலாக, ட்ரம்புக்கு எதிரான எந்தவொரு தீவிர சவாலும் அவர் நிர்வாகத்தை மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவ ஆட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் அச்சுறுத்தக் கூடிய சமூக எதிர்ப்பு அலையைத் தூண்டக் கூடும் என்பதையிட்டு ஜனநாயகக் கட்சியினர் பீதியடைந்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் சரணடைதல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, மாறாக வோல் ஸ்ட்ரீட் மற்றும் போரின் கட்சியாக அதன் பங்கின் பிரதிபலிப்பாகும். ட்ரம்பின் முதல் மற்றும் இரண்டாவது நிர்வாகங்களுக்கு இடையிலான தொடர்ச்சி (கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கும், எதிர்ப்பை அடக்குவதற்கும், நிர்வாகக் கிளையில் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள்) ஜனநாயகக் கட்சியினரின் எச்சரிக்கை அல்லது எதிர்ப்பால் அல்ல, மாறாக மௌனம் மற்றும் உடந்தையுடன் எதிர்கொள்ளப்பட்டது.
நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையானது, கடந்த சனியன்று பிரசுரித்த ஒரு கட்டுரையில், 2017 ஐப் போலன்றி, “எலோன் மஸ்க் ஒரு நாஜியைப் போல சைகை காட்டிக் கொண்டிருக்கையில், வெகு சில ஜனநாயகக் கட்சியினரே பதவிநீக்க குற்றவிசாரணை குறித்து பேசுகின்றனர் அல்லது ஆரம்பகட்ட பாசிசவாதத்தின் மீது அவர்களின் எச்சரிக்கையைத் தக்க வைத்துக் கொள்கின்றனர். … ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் மீள வந்தது பற்றி கவலைப்பட்டதாகவோ அல்லது உற்சாகப்பட்டதாகவோ தெரியவில்லை.” இது பைடென் மற்றும் ஹாரிஸ் போன்ற நீண்டகால முன்னணி பிரமுகர்களுக்கும், அத்துடன் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற “முற்போக்குவாதிகளுக்கும்” பொருந்தும். இடதுசாரி எதிர்ப்பை சிக்க வைத்து அடக்குவதில் அவர்கள் காட்டி வருகின்ற கடின உழைப்பிற்காக அவர்களுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அதிகாரத்துக்கு வந்த முதல் வாரம் மக்களிடையே ஒரு குறிப்பிட்ட அளவிலான திகைப்பை உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதும் செயல்படுத்தப்படுவதும் முன்னெப்போதையும் விட சர்வதேச அளவில் ஒன்றோடொன்று இணைந்துள்ள மற்றும் ஒன்றோடொன்று கலந்துள்ள மக்களிடையே பாரிய எதிர்ப்பைத் தூண்டும். சமூக செலவினங்களைக் குறைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை அகற்றுதல், செல்வந்தர்கள் மீதான வரிகளை அகற்றுதல் ஆகிய உத்தரவுகளுடன் இணைந்து, இந்த நிர்வாகம் அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு நேரடிப் போரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
அமெரிக்காவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுவதில் ட்ரம்ப் வெற்றி பெறுவாரா என்பது கட்டவிழ்ந்து வரும் வர்க்க போராட்டத்தின் மூலமாக தீர்மானிக்கப்படும். கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் போன்ற இடங்களில் தொழிலாளர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளன. வரவிருக்கும் வாரங்களும் மாதங்களும் ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றங்கள் குறித்து பெரும் சீற்றத்தை உருவாக்கும். ஆனால், முதலும் முக்கியமானதுமாக அவசியப்படுவது ஒரு அரசியல் வேலைத்திட்டமாகும்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மக்களை அணிதிரட்ட பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் குழுக்களை கட்டியெழுப்பு!
சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா), வரவிருக்கும் தாக்குதலுக்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை தயார் செய்யவும், அரசியல் கல்வியூட்டவும் மற்றும் ஒழுங்கமைக்கவும் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களில் குழுக்களை அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுக்கிறது. இதுபோன்ற குழுக்கள், தகவல்களைப் பரப்புவதற்கான மையங்களாகவும், குடும்பங்களை உடைப்பதற்கும் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்குமான ட்ரம்பின் சர்வாதிகார முயற்சிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கான களமாகவும் சேவையாற்றும்.
“ஒருவருக்கு ஏற்படும் காயம் என்பது அனைவருக்கும் ஏற்படும் காயம்” என்ற கோட்பாட்டின் கீழ் சமூகத்தின் உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுக்கு சட்டபூர்வமான பொது விடையிறுப்புகளைத் திட்டமிட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பின்னணிகளையும் சேர்ந்த அக்கறையுள்ள அண்டை வீட்டாரை இந்தக் குழுக்கள் ஒன்றிணைக்கும். இந்தக் குழுக்கள் எங்கு இயங்கினாலும், புலம்பெயர்வு அந்தஸ்து அல்லது தேசிய பின்னணியில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கான இரண்டு பெருவணிக கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் முறியடிக்க அவை செயல்பட வேண்டும். ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக மக்களை “பரவலாக விழித்தெழச்” செய்யும் நோக்கில் ஒரு பாரிய அரசியல் கல்வியூட்டும் பிரச்சாரத்தை நடத்துவதன் மூலம், பெருநிறுவன ஊடகங்களின் வெளிநாட்டினரை வெறுக்கும் பொய்களை அவர்கள் அம்பலப்படுத்துவார்கள்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது (IWA-RFC) இதுபோன்ற குழுக்களுக்கு ஆலோசனையும் ஆதரவும் வழங்குவதோடு, மேலும் குழுக்களை உருவாக்குவதற்கும், பள்ளி, பணியிடம் மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால் கடிதப் போக்குவரத்து மற்றும் ஒத்துழைப்பின் சக்திவாய்ந்த வலையமைப்பில் அவற்றை இணைக்கும் போராட்டத்தில் செயலூக்கத்துடன் ஈடுபடும். புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை அனைவரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை வரவிருக்கும் போராட்டங்களில் அறிமுகப்படுத்த IWA-RFC பாடுபடும்.
அமெரிக்க வரலாறு முழுவதும் அனைத்து பின்னணியிலிருந்தும் தொழிலாளர்களை ஒன்றிணைத்து அரசியல் பின்தங்கிய நிலை மற்றும் அரசு அடக்குமுறையை நசுக்குவதற்கு வர்க்கப்போராட்டம் அவசியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை, ட்ரம்ப் மற்றும் அவரது தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு தாக்குதல் போராட்டமாக மாற்ற IWA-RFC போராடும்.
_________________
குறிப்பு:
பொஸே கோமிடாட்டஸ் (posse comitatus):
“Posse comitatus” என்பது ஒரு லத்தீன் சொல், இது “பிராந்தியத்தின் அதிகாரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், இது பொதுவாக 1878 ஆம் ஆண்டின் போஸ் கோமிடாட்டஸ் சட்டத்துடன் தொடர்புடையது, இது நாட்டிற்குள் உள்நாட்டுக் கொள்கைகளை செயல்படுத்த கூட்டாட்சி இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது. இராணுவத்தை போலீஸ் படையாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது சிவில் சட்ட அமுலாக்கப் பாத்திரங்களில் இராணுவப் படைகளைப் பயன்படுத்துவது, இது பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ளது.