இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜூன் 23 அன்று, ஈரானால் ஆத்திரமூட்டப்படாத நிலமையிலும், அதன் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது, அமெரிக்கா பாரிய விமானத் தாக்குதல்களை நடத்திய மறு நாள், இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கில் 'பதட்டத்தைக் குறைக்க' அழைப்பு விடுத்து, கடமைக்காக ஒரு கோழைத்தனமான அறிக்கையை வெளியிட்டது. முழு மத்திய கிழக்கையும் போரில் மூழ்கடித்து உலகையே தீக்கிரையாக்குவதற்கு அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி ஈடுபாடு பற்றி, அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மூன்று வாக்கியங்களைக் கொண்ட சுருக்கமான அறிக்கையில், ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதற்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் சட்டவிரோதமாக யுத்தம் செய்வதைப் பற்றி முணுமுணுக்கப்படக் கூட இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுவது கூட கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. 'மத்திய கிழக்கில் சமீபத்திய போர் பதட்டநிலை அதிகரிப்பு குறித்து கடுமையான கவலைகளை' வெளிப்படுத்தும் அதேவேளை, 'அனைத்து தரப்பினரும் நிலைமையை தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றும், 'சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும்' பேச்சுவார்த்தைக்குத் திரும்பி மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.
ஆளும் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.), ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான ஆக்கிரமிப்பை கண்டிக்காமை ஒருபுறம் இருக்க, விமர்சிக்க கூட இல்லை என்பது, இந்த குற்றவியல் அமெரிக்கா தலைமையிலான போருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகும்.
ஈரானின் இராணுவம், அணுசக்தி மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானிய உயர் அதிகாரிகள் படுகொலை உட்பட அதன் மீதான இஸ்ரேலின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்கள் சம்பந்தமான ஜே.வி.பி./தே.ம.ச.யின் பிரதிபலிப்பின் தொடர்ச்சியே இதுவாகும். ஜூன் 13 அன்று வெளியிடப்பட்ட வெளியுறவு அமைச்சக அறிக்கை, இஸ்ரேலும் ஈரானும் கட்டுப்பாடாக இருக்க, பேச்சுவரார்த்தை நடத்த மற்றும் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அது, ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலையும் தற்காப்புக்காகப் போராடும் ஈரானையும் ஒரே தளத்தில் வைத்துள்ளது.
இலங்கைக்குள், ஜே.வி.பி./தே.ம.ச ஈரான் மீதான தாக்குதல் குறித்த எந்தவொரு விவாதத்தையும் அடக்க முயற்சிக்கிறது. அது கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்த எந்தவொரு விவாதத்தையும் தடுப்பதற்காக திட்டமிட்டு, தொடர்ச்சியான சூழ்ச்சிகளை கையாண்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் குறித்து கேள்விகளை எழுப்பவும் விவாதிக்கவும் பாராளுமன்றத்தில் நேரம் கோரினர். பிரேமதாசவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் நாடாளுமன்ற கூட்டாளிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் ஆதரவாக இருப்பதோடு உண்மையிலேயே அவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவில்லை.
ஜூன் 17 அன்று, பிரேமதாச இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்ப முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரேமதாச நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல், முன்னறிவிப்பு இல்லாமல் கேள்விகளை எழுப்ப முடியாது என்று அறிவித்தார். அந்த நாளின் பிற்பகுதியில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருப்பதால் 'இஸ்ரேல்-ஈரான் மோதலின்' விளைவுகள் குறித்த பாராளுமன்ற விவாதம் தேவையற்றது என்று அவர் அறிவித்தார். பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அன்று மாலையில், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் கீதா ஹேரத், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு, மற்றும் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுவதன் சாத்தியம் மற்றும் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களின் மீதான தாக்கம், பற்றி அரசாங்கத்திடம் நான்கு எழுத்து வடிவ கேள்விகளை எழுப்பினார்: வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் சுருக்கமான பதில்களில், யுத்தம் சம்பந்தமான அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பற்றிய எந்தக் குறிப்பும் தவிர்க்கப்பட்டன.
ஜூன் 18 அன்று, ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா முன்மொழிந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் திட்டமிடப்பட்டது. பெரேரா ஒரு சிறிய விபத்தில் சிக்கியதாகக் கூறி அங்கு சமூகமளிக்காத போதும், எதிர்க்கட்சியானது இந்த மோதல் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' என்று கூறி பிரேரணையை முன்வைக்க முயன்றது. இருபது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.
இருப்பினும், அரசாங்கத்தைப் போலவே, எதிர்க்கட்சியும் ஈரான் மீதான போரின் குற்றவியல் தன்மை குறித்து அன்றி, மாறாக மோதலின் இலங்கை மீதான தாக்கம் குறித்தே விவாதிக்க விரும்பியது. அது 15,000 முதல் 20,000 வரையான இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாக கூறியதோடு, ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. இந்த மோதல், எண்ணெய் விலை அதிர்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் பிரேமதாச எச்சரித்தார்.
விஜித ஹேரத் மற்றும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இருவரும் இந்த தீர்மானத்தை நிராகரித்து, 'ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சார்பாக இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் இதை முன்மொழிய முடியாது' என்று அறிவித்தனர். அரசாங்கம் விவாதம் நடத்துவதற்கு 'வெளிப்படையாக' இருந்தாலும், நடைமுறை ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் அறிவித்தனர். அடுத்த நாள் இந்த தீர்மானத்தை முன்மொழிய எடுத்த முயற்சி வெறுமனே புறக்கணிக்கப்பட்டது.
ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் இந்த விவகாரம் சம்பந்தமாக எந்தவொரு பாராளுமன்ற விவாதத்தையும் தடுக்க உறுதியாக உள்ளனர். பல தசாப்தங்களாக, ஜே.வி.பி. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்த போதிலும், அரசாங்கம் அமெரிக்காவுடன் அணிசேர்ந்துள்ள நிலையில், அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சு கடந்த கால விடயமாகிவிட்டது. பாதகமானதாக இல்லாவிட்டாலும், போர் குறித்த அதன் நிலைப்பாட்டை விளக்க நிர்ப்பந்திக்கப்படும் ஒரு பாராளுமன்ற விவாதத்தை நடத்த அது விரும்பவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்கா தலைமையிலான மோதல் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தம் மட்டுமன்றி, சீனாவுடனான போருக்கு அமெரிக்கா துரிதப்படுத்தப்படுவதையும் எதிர்த்து, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்று தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, திசாநாயக்கவும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். அதேநேரம், மத்திய கிழக்குப் போரினால், இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான பொருளாதார தாக்கம், மீண்டும் நாட்டை ஆழமான நெருக்கடி, தீவிர சமூக பதட்டங்கள் மற்றும் பரவலான எதிர்ப்புகளுக்குள் தள்ள அச்சுறுத்துகிறது.
2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனக் கோரிக்கைகளை செயல்படுத்தி வருவதுடன் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கனா ஏற்றுமதிகளுக்கு மிகப்பெரிய வரிகள் விதிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொள்கிறது. 2022 இல் நிகழ்ந்தது போல், ஜனாதிபதியை நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த ஒரு வெகுஜன இயக்கம் வெடிக்கும் என்று முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும் அஞ்சுகிறது.
அமெரிக்க-இஸ்ரேல் இராணுவத் தாக்குதலுக்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் பதிலளிப்பு, இந்தியாவின் நிலைப்பாட்டை நெருக்கமாகப் பிரதிபலிப்பதானது புது தில்லியுடன் அதன் ஆழமடைந்து வரும் கூட்டணியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கம், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களையும் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களையும் கண்டிக்க மறுத்துவிட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேலைக் கண்டித்தும் அதை ஆதரிக்கும் அமெரிக்காவை விமர்சித்தும் முன்கொணரப்பட்ட சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தீர்மானத்திலிருந்து இந்தியாவை விலக்கி வைத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தீர்மானத்துடன் இந்தியா உடன்படவில்லை என்றும், அது பற்றி புது தில்லியுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் ஜெய்சங்கர் கூறினார்.
கடந்த ஆண்டு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சில பிரிவுகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பிறகு, திசாநாயக்க அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் அதிகளவில் அணிசேர்ந்து வருகிறது. அரசாங்கத்தை வெல்வதற்கு முன்பு, ஜே.வி.பி. முஸ்லிம் வாக்குகளை வெல்லும் முயற்சியில் காசா இனப்படுகொலையை கண்டித்தது. இப்போது அது இஸ்ரேலின் கொலைகார நடவடிக்கைகள் குறித்து வெற்று அறிக்கைகளை வெளியிடும் அதே வேளை, அமெரிக்காவின் ஈடுபாட்டை மூடிமறைத்து வருகிறது.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் கொடூரமான இனவாதப் போரில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன, இஸ்ரேலின் ஆதரவை நாடிய 1980 களின் முற்பகுதியிலேயே இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடங்கின. இஸ்ரேல் கிஃபிர் போர் விமானங்கள், ரோந்து கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உட்பட நவீன இராணுவ கட்டமைப்புகளை வழங்கியதுடன் குறிப்பாக மோதலின் இறுதிக் கட்டத்தில் விசேட பயிற்சித் திட்டங்களை வழங்கியது.
சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் திசாநாயக்க அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கையை நிராகரிக்குமாறும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரை எதிர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றது. ஜூன் 21 அன்று உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு விளக்கியது போல்:
ஈரானிலும் உலக அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலை எதிர்க்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை தங்கள் சொந்த வர்க்கப் போராட்ட வழிமுறைகள் மூலம் செய்ய வேண்டும். இதன் அர்த்தமானது, ஏகாதிபத்தியப் போருக்கும், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது எப்போதும் விரிவடைந்து வரும் தாக்குதலுக்கும் எதிரான போராட்டத்தை, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் உலகளாவிய தொழிலாள வர்க்க எதிர்த்தாக்குதலை அபிவிருத்தி செய்வதாகும். இதற்கு ஈரானிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டம் அவசியமாகும்.'
மேலும் படிக்க
- இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி/IYSSE பகிரங்கக் கூட்டங்கள்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!
- இந்தியாவின் மோடி அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை மறைமுகமாக ஆதரிக்கிறது
- காஸாவில் உதவி கோருவோரை படுகொலை செய்யும் இஸ்ரேலிய கொள்கையை ஹாரெட்ஸ் அறிக்கை அம்பலப்படுத்துகிறது
- ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து!