இலங்கையில் பழிவாங்கப்படும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும், மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த, நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட 26 தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. மே 28 அன்று தொழிலாளர்கள் மீது போலீசார் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஓல்டன் தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒரு பிரிவினர்

5 பெப்ரவரி 2021 அன்று தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தோட்ட முகாமையாளரின் தொடர்ச்சியான துன்புறுத்தலை எதிர்த்து ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 17 பெப்ரவரி 2021 அன்று முகாமையாளரின் வீட்டிற்கு அருகில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, முகாமையாளரும் அவரது உதவியாளரும், தாம் தொழிலாளர்களால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகக் கூறி பொலிசில் புகார் அளித்தனர்.

பொலிஸ் டசின் கணக்கான தொழிலாளர்களைக் கைது செய்த அதேவேளை, தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரன பெருந்தோட்டக் கம்பனி, அதே பொய் குற்றச்சாட்டுகளுக்காக 38 பேரை திடீரென வேலைநீக்கம் செய்தது. பிரதான தோட்ட தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) உள்ளூர் தலைவர்களும் இந்த வேட்டையாடலில் பங்கேற்றனர்.

சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், ஹட்டனில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் மீண்டும் ஒத்திவைத்த பிறகும், இந்த ஆண்டு மே மாதம் வரை 26 தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருக்கவில்லை.

குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ள தொழிலாளர்கள் மீதான இந்த குற்றவியல் வழக்கின் விசாரணை, செப்டம்பர் 10 அன்று தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொழிலாளர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணன், உதவி முகாமையாளர் அனுஷன் திருச்செல்வம் ஆகியோரைத் தாக்கும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை; அவர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை, தோட்ட முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியமை ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவினதும் உறுப்பினர்கள், தோட்டத் தொழிலாளர்களும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் இந்த வர்க்கப் போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க தங்கள் பலத்தைத் அணிதிரட்ட வேண்டும், என அழைப்பு விடுத்து, 'இலங்கை பொலிஸ் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது' என்ற தலைப்பில், 2025 ஜூனில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின் நூற்றுக்கணக்கான பிரதிகளை விநியோகித்துள்ளனர்.

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று நீங்கள் [சோ.ச.க. உறுப்பினர்கள்] பொய் சொல்வதாக,” தோட்டத்தில் உள்ள ஜே.வி.பி. [மக்கள் விடுதலை முன்னணி] தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதை ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளி எமது பிரச்சாரகர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்திய நடவடிக்கை குழு கூட்டத்தின் போது, அதன் உறுப்பினர்கள் அதைப்பற்றி அறிவித்தனர்.

ஜே.வி.பி. ஆதரவாளருக்கு பதிலளித்த ஒரு தொழிலாளி, “அவர்களுக்கு [சோ.ச.க. உறுப்பினர்களுக்கு] இந்த வழக்கைப் பற்றி நன்கு தெரியும். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இங்கு வந்து வேட்டையாடப்பட்டவர்களைப் பாதுகாக்கப் போராடியவர்கள். தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒருபோதும் இங்கு வரவில்லை, மாறாக அவர்கள் எப்போதும் நிர்வாகத்தையே ஆதரித்தனர்” என கூறியுள்ளார்.

ஜே.வி.பி. ஆதரவாளரான பாலகுமாரே சோ.ச.க. மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் என்பதை நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் இந்தியா மற்றும் இந்திய விஸ்தரிப்பின் 'ஏஜண்டுகள்' என்று ஜே.வி.பி. நீண்ட காலமாக ஆத்திரமூட்டும் சேறடிப்பைச் செய்து வருவதன் காரணமாக, ஜே.வி.பி. தமிழ் தோட்டத் தொழிலாளர்களால் வெறுக்கப்படுகிறது.

ஓல்டன் தோட்டத்தில் வேலை செய்யாத பாலகுமார், கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது, மஸ்கெலியா பகுதியில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) பிரச்சாரங்களை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சமீபத்தில் அவர், முன்னாள் இ.தொ.கா. உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஒரு கிளையை ஓல்டன் தோட்டத்தில் ஸ்தாபித்துள்ளார்.

ஜே.வி.பி.யும் அதன் தொழிற்சங்கமும் கடந்த நான்கு ஆண்டுகளாக பழிவாங்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் குறித்து மௌனமாக இருந்து வரும் அதே நேரம், ஓல்டனில் ஒரு கிளையைக் கொண்ட இ.தொ.கா. இந்த பழிவாங்கல் வேட்டையில் பங்கேற்றுள்ளது.

இந்த வறிய தோட்டத் தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை பற்றிய விரிவான தகவல்கள் நன்கு அறியப்பட்டவையாகும். அவை உலக சோசலிச வலைத் தளத்தில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியான டசின் கணக்கான கட்டுரைகளில் பரந்தளவு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோ.ச.க.யும் இணைந்து மஸ்கெலியா மற்றும் ஹட்டனில் கூட்டங்களை நடத்தி, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்தன.

சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழு மீதான போலி குற்றச்சாட்டுகள், ஓல்டன் தொழிலாளர்களின் பாதுகாப்பு பிரச்சாரத்தை நாசமாக்க ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கம் மேற்கொண்ட ஒரு கொடூரமான முயற்சியாகும். இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன் ஒழுங்கமைந்து, தங்களின் ஊதியங்கள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த போராடுவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள அடிப்படை ஜனநாயக உரிமை மீதான இந்தத் தாக்குதலைத் தோற்கடிப்பதற்கான போராட்டத்தை முன்நகர்த்துமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

தோட்டங்களில் சிறிதளவு ஆதரவையே கொண்டுள்ள ஜே.வி.பி.யின் தொழிற்சங்கம், இ.தொ.கா., ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் போன்ற மற்றும் பல சங்கங்களின் பரவலாக மதிப்பிழந்த அதிகாரிகளின் அரசியல் வாலாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் ஆபத்துகளை மூடிமறைத்து, அவர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தடம்புரளச் செய்வதே ஜே.வி.பி./இ.தொ.கா. தொழிற்சங்கத் தலைமையின் நோக்கமாகும்.

இலங்கையின் பிரதான கூட்டு நிறுவனங்களில் ஒன்றும் உயர்மட்ட இலாபம் ஈட்டும் நிறுவனமுமான ஹேலிஸ் குழுமத்தின் பங்களியான, ஹொரண பிராந்திய பெருந்தோட்டக் கம்பனி, பழிவாங்கப்பட்ட 26 ஊழியர்களை சிறையில் அடைக்கத் தீர்மானித்துள்ளது. 17 பெப்ரவரி 2021 போராட்டத்தைத் தொடர்ந்து, எந்த விசாரணையும் இல்லாமல் 38 தொழிலாளர்களை உடனடியாக வேலைநீக்கம் செய்தது.

வரவிருக்கும் குற்றவியல் வழக்குக்கும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களை மீண்டும் வேலையில் அமர்த்துமாறும், நிலுவை ஊதியம் வழங்குமாறும் கோரி தொழில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்குகளுக்கும் ஹொரண பிராந்திய பெருந்தோட்டக் கம்பனி தனது சொந்த வழக்கறிஞர்களை ஈடுபடுத்துகின்றது.

ஹட்டன் தொழில் நீதிமன்றில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட இரண்டு வழக்குகளில் கம்பனிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 13 தொழிலாளர்கள் சட்டச் செலவாக கம்பனிக்கு 7,500 ரூபா செலுத்த வேண்டும் என்றும், 17 பேர் 7,000 ரூபா செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழில் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்ற வழக்குகள் மார்ச் 2021 முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், தொழிலாளர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு இரு முறையாவது ஹட்டனுக்குப் பயணம் செய்ய செலவிட வேண்டியிருந்ததுடன், குறித்த நாட்களில் வருமானத்தை இழக்க நேர்ந்த அதேவேளை, வழக்கறிஞர்களுக்கும் சொந்த வருமானத்தில் இருந்து பணம் செலுத்த வேண்டியிருந்தது. சிலர் தொலைதூரத் தோட்டங்களில் கூலி வேலைகளை அல்லது குறைந்த ஊதியத்தில் தினசரி வேலைகளைச் செய்து வருகின்றனர்.

தொழில் நீதிமன்றில் தண்டிக்கப்பட்ட தொழிலாளர்களில் 13 பேர், தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, கூட்டாக நுவரெலியா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

சோ.ச.க. மற்றும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு அதன் ஜூன் 25 கட்டுரையில் விளக்குவது போல், ஓல்டன் தோட்ட பழிவாங்கல் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மீதும் தீவிரமடைந்து வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். 'பாரம்பரிய ஊதிய முறையை மாற்றுவது, ஓய்வூதியங்கள் மற்றும் பிற அடிப்படை உரிமைகளை ஒழிப்பது மற்றும் தொழிலாளர்களை நவீன கால குத்தகை விவசாயிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மிகவும் சுரண்டல் நிறைந்த வருவாய் பகிர்வு திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் இதில் அடங்கும். இந்த மறுசீரமைப்பில் லாபமற்ற தோட்டங்களை விவசாய மற்றும் தோட்டக்கலை திட்டங்களுக்குள் கொண்டுவருவதும் அடங்கும்.

'அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், 26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை சிறையில் அடைக்க தோட்டக் கம்பனி மேற்கொண்டுள்ள முயற்சிகள், தோட்டத் தொழிலாளர்கள் மீது மட்டுமன்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதுமான ஒரு கடுமையான தாக்குதலாகும், அது தோற்கடிக்கப்பட வேண்டும்.'

பாதிக்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், முழு ஊதியத்துடன் அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலையில் அமர்த்துவதற்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை ஆதரிக்குமாறு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு சோ.ச.க. மற்றும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் அழைப்பு விடுக்கின்றன.

முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும், பிரதான தொழில்துறைகள், வங்கிகள் மற்றும் தோட்டங்களை தேசியமயமாக்கி, அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கின்ற, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் தொழிலாள வர்க்கமானது ஒருங்கிணைந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட முடியும்.

இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறும், உங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறும், இந்த தீர்க்கமான பிரச்சாரத்திற்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி கலந்துரையாடுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தொலைபேசி: +94773562327

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

Loading