முன்னோக்கு

காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான பஞ்சத்தை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வடக்கு காஸா பகுதியிலுள்ள காஸா நகரில் உள்ள ஒரு சமூக சமையலறையில் நன்கொடை உணவைப் பெற பாலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள். ஜூலை 26, 2025 சனிக்கிழமை [AP Photo/Abdel Kareem Hana]

காஸாவில் இருந்து உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும் பட்டினியால் வாடும் மக்களின் கொடூரமான காட்சிகள், மனிதகுல வரலாற்றின் இருண்ட காலகட்டங்களை நினைவூட்டுகின்றன. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இது, ஐரோப்பிய யூதர்கள் மீது நாஜிக்கள் மேற்கொண்ட இறுதித் தீர்வான இனப்படுகொலைக்கு ஒப்பான மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேடப்படும் ஒரு போர்க் குற்றவாளி ஆவர். அனைத்து முக்கிய சக்திகளும் அவர் மீதான கைது வாரண்டை நிறைவேற்ற மறுத்துவிட்டதால் மட்டுமே பாலஸ்தீனியர்களை அழிப்பதை மேற்பார்வையிட அவர் சுதந்திரமாக இருந்து வருகின்றார். தனது பொய்களுடன் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்திவரும் நெதன்யாகு, நாஜிக்களின் பிரச்சாரத் தலைவரான ஜோசப் கோயபல்ஸுடன் போட்டியிடுகிறார்.

இந்த வாரம், காஸா பகுதி முழுவதும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல இறப்புகள் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்த நிலையில், காஸாவில் பஞ்சம் இல்லை என்று நெதன்யாகு அறிவித்தார். சியோனிச ஆட்சி ஐந்து மாதங்களாக காஸாவிற்கு வரும் உதவிகளை இரக்கமின்றி தடை செய்திருந்தாலும், ஹமாஸ் பொருட்களை திருடியதாலோ அல்லது ஐ.நா. அவற்றை வழங்கத் தவறியதாலோ உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். காஸாவின் சுகாதார அமைச்சின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 83 குழந்தைகள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் இறந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

காஸா மீதான தாக்குதலின் தொடக்கத்திலிருந்தே சியோனிச ஆட்சியின் இனப்படுகொலையின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. இதில் அதிகாரப்பூர்வமாக 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இருப்பினும் உண்மையான இறப்பு எண்ணிக்கை பல மடங்குகள் அதிகமாக இருக்கலாம். 2023 அக்டோபரில் இஸ்ரேலிய குண்டுவீச்சின் இரண்டாவது நாளில், நெதன்யாகுவைப் போலவே ஒரு வருடத்திற்கும் மேலாக கைது வாரண்ட் நிலுவையில் உள்ள மற்றொரு போர்க் குற்றவாளியான அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலென்ட் பின்வருமாறு அறிவித்தார்:

காஸா பகுதியை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இருக்காது, எரிபொருள் இருக்காது, எல்லாம் மூடப்பட்டுள்ளது... நாங்கள் மனித விலங்குகளுடன் போரிடுகிறோம், அதன்படி நாங்கள் செயல்படுகிறோம்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, சியோனிச படுகொலையாளர்கள் பாலஸ்தீனிய மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்வதற்கான மிக உயர்ந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களை, முதன்மையாக வாஷிங்டன் மற்றும் பேர்லினில் இருந்து மட்டுமல்லாமல், பிற ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும் தடையின்றி பெற்று, அதனை பாவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் பிற நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை கொடூரமாக வேட்டையாடி வருவதுடன், அவர்களை “யூத-விரோதிகள்” என்று கண்டனம் செய்து, அவர்களின் நடவடிக்கைகளை குற்றமாக்கியுள்ளன. மேலும், அவர்களை மிரட்ட பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.

பாலஸ்தீனிய மக்களை அழித்தொழிப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வெறுப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய சக்திகளில் சில, குற்றம் நடந்துவரும் இடத்திலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. தங்கள் கைகளில் இருந்து இரத்தத்தைக் கழுவ தீவிரமாக முயற்சித்துவரும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், கனேடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் வருகின்ற செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தங்கள் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டே, தங்கள் உதவிகளினால் படுகொலைக்கு உள்ளாகிவரும் அப்பாவி பொதுமக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் இந்த இழிவான நயவஞ்சகர்களை நம்பி யாரும் ஏமாறக்கூடாது. இவர்களின் அறிக்கைகளின் நம்பகத்தன்மையின்மை, கடந்த வாரம் 28 நாடுகள் காஸாவிற்கு உடனடி மற்றும் தடையற்ற உதவிக்கு அழைப்பு விடுத்து கையெழுத்திட்ட பிரகடனத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இதில், பாசிச சிந்தனை கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பிராந்தியத்தில் “அமைதியை” நிலைநாட்ட மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கான பாராட்டின் ஒரு பகுதியும் அடங்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், காஸாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் இஸ்ரேலிய சகாக்களின் கொள்கை என்ன என்பதை ட்ரம்ப் வெளிப்படையாக வெளியிட்டார்: அது, காஸாவில் “மத்திய கிழக்கின் உல்லாச நகரத்தை” உருவாக்க, பாலஸ்தீனியர்களை அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றுவது அல்லது அவர்களை அழித்தொழிப்பதாகும். எனவே ஸ்டார்மர், கார்னி மற்றும் மக்ரோன் ஆகியோர் பாலஸ்தீனியர்கள் இல்லாத ஒரு பாலஸ்தீன அரசை “அங்கீகரிப்பார்கள்”.

நியூ யோர்க் டைம்ஸில் ஸ்டீபன் எர்லாங்கர் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையானது, ஏகாதிபத்தியவாதிகளை ஊக்குவிக்கும் உண்மையான கவலையை எடுத்துக்காட்டுகிறது: உலகெங்கிலும் சியோனிச அரசு மீது பரவலான விரோதப் போக்கு நிலவும் சூழலில், ஏகாதிபத்திய சக்திகளின் அடியாளாக இருந்துவரும் இஸ்ரேலின் நம்பகத்தன்மை, சர்வதேச அளவில் புறக்கணிக்கப்படும் அபாயத்தை கொண்டிருப்பதுடன், மேலும் அது பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகிறது.

ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் ஊடகக் கைக்கூலிகளும் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை என்பது, தவறான கொள்கைகளின் விளைவு அல்ல, அதை சரிசெய்ய முடியும் என்பதாகும். ஆனால், இது சியோனிச வேலைத்திட்டத்தின் இயல்பிலிருந்தும், அதை அடைய ஏகாதிபத்தியத்தை அது நெருக்கமாக நம்பியிருப்பதிலிருந்தும் உருவாகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூத தொழிலாளர்களிடையே சோசலிசத்தின் மீது வளர்ந்து வந்த ஈர்ப்புக்கு எதிர்வினையாக, யூத முதலாளித்துவ வர்க்கத்தினரிடையேயும், வசதி படைத்த அடுக்குகளிலும் சியோனிசம் தோன்றியதிலிருந்து, மிகவும் பிற்போக்குத்தனமான ஏகாதிபத்திய சக்திகளுடன் அணிசேர்வது குறித்து அது எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. ரஷ்யாவில் ஜாரிச சர்வாதிகாரம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் 1930 களில் நாஜி ஜேர்மனி வரை, சியோனிச இயக்கம் சிதைந்து வந்த உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள் பிரத்தியேகமாக யூத தேசிய அரசு என்ற அதன் பிற்போக்குத்தனமான திட்டத்திற்கு மிகவும் வன்முறை மற்றும் இரக்கமற்ற ஆட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வந்தது.

யூத மக்கள் மீதான நாஜிக்களின் இனப்படுகொலை மற்றும் நூறாயிரக்கணக்கான நம்பிக்கையற்ற யூதர்களை நாடற்றவர்களாக ஆக்கிய பின்னர்தான், ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஸ்ராலினிச சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன், அரபு மக்களை வலுக்கட்டாயமாக நக்பாவில் வெளியேற்றுவதன் அடிப்படையில், சியோனிச திட்டம் செயல்படுத்தப்பட முடிந்தது. பாலஸ்தீன மற்றும் யூத மக்களுக்கு இந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களாக, ஏகாதிபத்தியம் இஸ்ரேலை மத்திய கிழக்கு முழுவதும் தனது நலன்களுக்கான பாலமாகப் பயன்படுத்தியுள்ளது. யூத மக்களுக்கு ஒரு “பாதுகாப்பான புகலிடம்” குறித்த சியோனிஸ்டுகளின் வாக்குறுதி, ஒன்றன்பின் ஒன்றாக இரத்தந்தோய்ந்த போர்களின் ஒரு கொடுங்கனவாக மாற்றப்பட்டு, பாலஸ்தீனியர்கள் மீதான தற்போதைய இனப்படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

வாஷிங்டன், பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸில் உள்ள ஏகாதிபத்திய போர்க் குற்றவாளிகள் (இவர்கள் நெதன்யாகு மற்றும் அவரது பாசிச பரிவாரங்களுடன் போர்க்குற்ற நீதிமன்றத்தில் அமர வேண்டும்) தங்கள் சொந்த வல்லரசு அபிலாஷைகளுக்கு சேவை செய்வதற்காக இனப்படுகொலையை எளிதாக்கி, வசதி செய்து கொடுத்துள்ளனர். காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் டேவிட் நோர்த் வழங்கிய விரிவுரையில் அவர் விளக்கியது போல,

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டணிகளின் ஆதரவை தீர்மானிக்கும் நடைமுறையில், புவிசார் அரசியல் நலன்கள் நிச்சயமாகவே உள்ளன.

ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இந்த ஐக்கிய முன்னணியின் அடிப்படை, தற்போதுள்ள இஸ்ரேலிய அரசைக் கலைத்து, ஒரு புதிய இரு-தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவர்களின் ஜனநாயக அபிலாஷைகள் மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை மட்டுமல்ல, ஏகாதிபத்திய புவிசார் அரசியல் மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று ரீதியாக காலாவதியான முழு அரசு கட்டமைப்பையும் அச்சுறுத்துகின்றன என்பதை அங்கீகரிப்பதாகும்.

பாலஸ்தீன மக்களை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்ட சியோனிஸ்டுகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் “ஐக்கிய முன்னணியை” தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். போராட்டத்தில் அணிதிரண்ட அனைத்துலக தொழிலாளர்கள், இனப்படுகொலையை உருவாக்கிய அழுகிய சமூக அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக, அதை நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்காக போராட வேண்டும். உலக சோசலிச வலைத் தளம் கடந்த மாதம் ஒரு அறிக்கையில் விளக்கியதைப் போல, இந்த நடவடிக்கைகளில் உள்ளடங்குபவை:

  • இஸ்ரேலுக்கு அனைத்து ஆயுதங்களையும் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும்.
  • இனப்படுகொலையை நடத்த இஸ்ரேலுக்கு உதவி வரும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அதன் பிற பெருநிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட வேண்டும்.
  • போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேலிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
  • காஸா இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்.

இவற்றுடன், குற்றகரமான சியோனிச ஆட்சியால் காஸா எல்லைகளில் தடுக்கப்பட்ட அனைத்து உதவிகளையும் உடனடியாக அனுமதிப்பதும் அடங்கும். எங்களது கடைசி அறிக்கையிலிருந்து, ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பின் தலைவர் பிலிப் லாஸ்ஸாரினி, அவசரமாகத் தேவையான 6,000 லாரிகள் எகிப்து மற்றும் ஜோர்டானில் காத்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே சாத்தியமாகும். அதன் மிகக் கொடூரமான சமகால வெளிப்பாடாக காஸா இனப்படுகொலை உள்ளது. இஸ்ரேலுக்கு உள்ளேயே அதிகரித்து வரும் எதிர்ப்பு உட்பட, இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களில் மில்லியன் கணக்கான மக்களால் வெளிப்படுத்தப்பட்ட பாரிய கோபம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் சக்தியை அணிதிரட்டுவதற்கான ஒரு போராட்டத்தை நோக்கி திருப்பப்பட வேண்டும்.

இஸ்ரேலுக்கான ஆயுத வினியோகங்கள் மற்றும் அவர்களின் சொந்த பைத்தியக்காரத்தனமான மீள்ஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக, வேலைகள் மற்றும் சமூக திட்டங்கள் மீது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா எங்கிலும் ஆளும் வர்க்கங்களால் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள், ஏகாதிபத்திய போர் எந்திரத்தையும் காஸா இனப்படுகொலையையும் நிறுத்துவதற்கான ஒரு பாரிய சோசலிச இயக்கத்தில், இனப்படுகொலை மற்றும் போரின் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்துவதற்கான எதிர்ப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading