மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வியாழக்கிழமை மாலை, அமெரிக்காவின் ஒவ்வொரு வர்த்தக பங்காளி நாடுகள் மீதும் கடுமையான சுங்க வரிகளை விதித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவு, அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் சிதைவு மற்றும் முறிவில் ஒரு மைல் கல்லாகும்.
1930களின் பெருமந்த நிலையின் போது பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பேரழிவுகரமான விளைவுகளுடன் திணிக்கப்பட்டதற்கு சமமான ஒரு சுங்கவரிச் சுவரை அமெரிக்கா இப்போது தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொண்டுள்ளது. இது, மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெரிய இரத்தக்களரியான இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதில் ஒரு தீர்மானகரமான பாத்திரம் வகித்தது.
உலகிற்கு எதிரான ட்ரம்பின் பொருளாதாரப் போரின் விளைவுகள் குறைந்ததல்ல. அது ஆழ்ந்த பொருளாதார மோதலில் விரைவான சரிவைக் கொண்டுவந்து, தவிர்க்க முடியாமல் போர் வெடிப்பதற்கு இட்டுச் செல்லும்.
உண்மையில், நிலைமை 1930 களில் மேலோங்கி இருந்ததை விட இன்னும் தீவிரமாக உள்ளது. அந்த நேரத்தில், சர்வதேச வர்த்தகம் பெரும்பாலும் மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை உள்ளடக்கியதாக இருந்தது. உற்பத்தி பெரும்பாலும் தேசிய எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று, ஒரு குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லக்கூடிய எந்தப் பொருளும் இல்லை. ஒவ்வொரு பொருளும், எளிமையானது முதல் மிகவும் சிக்கலானது வரை, உலகளாவிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார அமைப்பாக மாறியுள்ளது. அதேபோல் தொழிலாள வர்க்கமும் புறநிலைரீதியாக உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்தும் ஐக்கியப்பட்டும் உள்ளது.
ஆனால் இந்த அபிவிருத்தியானது, உற்பத்தியின் பூகோளமயமாக்கம் மற்றும் நாடுகள் மற்றும் கண்டங்களைக் கடந்து செல்லும் சிக்கலான விநியோகச் சங்கிலிகளின் அபிவிருத்தி, உலக முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு மைய முரண்பாட்டை, அதாவது உலகப் பொருளாதாரத்திற்கும் உலகம் போட்டி தேசிய அரசுகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான தீவிரத்தின் ஒரு புதிய உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.
ட்ரம்பின் நடவடிக்கைகள், 1930 களின் பேரழிவுகள் மற்றும் அதைக் கட்டுப்படுத்த முனைந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய வர்த்தக ஒழுங்கமைப்பை முற்றிலுமாக அழிப்பதைக் குறிக்கின்றன. ஒரு நிர்வாக அதிகாரி கூறியதைப் போல: “இது ஒரு புதிய வர்த்தக அமைப்புமுறை.”
நிச்சயமாக அதுதான். ட்ரம்பின் நடவடிக்கைகளின் முழு முக்கியத்துவத்தை, அவற்றின் வரலாற்று உள்ளடக்கத்தில் வைத்துப் பார்க்கும் போதுதான் கிரகித்துக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வர்த்தக ஒழுங்கானது, சுங்கவரி நடவடிக்கைகளைக் குறைத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த வழிமுறைகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை மட்டுமல்லாமல், அவை ஆழமான புவிசார் அரசியல் உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தன. இவை, 1930களின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட ஒரு புரிதலை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன. ஒவ்வொரு நாடும் காப்புவரிகள் மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் அதன் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயன்ற உலகளாவிய பொருளாதார ஒழுங்கு முறைகள், தவிர்க்க முடியாமல் இராணுவ மோதலுக்கு வழிவகுத்தன.
2ம் உலகப் போருக்குப் பிந்தைய அமைப்புமுறையானது அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார ஆதிக்கத்தில் தங்கியிருந்தது. அது, அதன் பரந்த தொழில்துறை திறனைப் பயன்படுத்தி, அது முக்கியமாகச் சார்ந்திருந்த உலகளாவிய சந்தையை மீண்டும் கட்டியெழுப்பியது. ஆனால், ஒற்றை அதிகார மையத்தைச் சுற்றியுள்ள உலக அமைப்பாக இருந்த பாக்ஸ் அமெரிக்கானா ஒரு தீர்க்க முடியாத முரண்பாட்டைக் கொண்டிருந்தது.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் பின்னர் விரிவாக்கமும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சீராக கீழறுத்தது. பல தசாப்தங்களாக நீடித்த இந்த அளவு சரிவு, இப்போது ஒரு பண்புரீதியான திருப்புமுனைக்கு வழிவகுத்துள்ளது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற பழைய போட்டியாளர்களை மட்டும் இல்லாமல், சீனா போன்ற புதிய போட்டியாளர்களையும் வடிவத்தில் எதிர்கொள்கிறது.
ட்ரம்பால் தொடங்கப்பட்ட பொருளாதார போர்முறை வெறுமனே அவரது வெறிபிடித்த மூளையின் விளைபொருளோ அல்லது அவரது பாசிச ஆலோசகர்களின் விளைபொருளோ அல்ல.
அவரது நடவடிக்கைகள், அவர் அரங்கில் தோன்றுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே அபிவிருத்தி கண்டு வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முகங்கொடுக்கும் உயிர்வாழ்வியல் நெருக்கடியின் வெளிப்பாடாகும்.
அக்டோபர் 1987 பங்குச் சந்தை பொறிவில் இருந்து, 2000-2001 தொழில்நுட்ப சிதைவு, 2008 நிதியியல் பொறிவு மற்றும் கோவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில் மார்ச் 2020 இல் கருவூல பத்திர சந்தை முடக்கம் வரை நீண்டு, தொடர்ச்சியான புயல்கள் மற்றும் நெருக்கடிகளில் வெளிப்பட்ட உலகின் தொழில்துறை அதிகார மையமாக இருந்த அமெரிக்கா, நிதி ஒட்டுண்ணித்தனத்தின் மையமாக மாறியதில் இருந்து இது எடுத்துக்காட்டப்படுகிறது.
சுங்கவரிகள் மூலமோ அல்லது வேறு எந்த நடவடிக்கைகளைக் கொண்டோ இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் எந்த பொருளாதார வேலைத்திட்டமும் இல்லை. மாறாக, அது இயந்திரத்தனமான வழிவகைகளைப் பயன்படுத்த உந்தப்படுகிறது.
உலகிற்கு எதிரான ட்ரம்பின் வரிவிதிப்பு போரின் இராணுவவாத குணாம்சம் இந்த நிர்வாக உத்தரவு நெடுகிலும் வெளிப்படையாக தெரிகிறது.
இது, வெளிநாட்டு வர்த்தக பங்காளிகளால் பரஸ்பரப் பங்களிப்பு இல்லாததால், “உள்நாட்டு உற்பத்தித் தளம், முக்கியமான விநியோகச் சங்கிலிகள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் தளம்” ஆகியவற்றில் ஏற்படும் தாக்கத்தை குறிக்கிறது.
இந்த உத்தரவு முழுவதிலும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் அனைத்து நாடுகளும் “பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில்” அதனுடன் அணிசேர வேண்டியதன் அவசியம் குறித்த குறிப்புகள் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவுக்கு எதிரான போரில், மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அதன் இடத்தைப் பேணுவதற்கான அமெரிக்காவின் உந்துதலுடன் அவை முழுமையாக ஒருங்கிணைந்தாக வேண்டும், அல்லது அவை பொருளாதாரரீதியில் சம்மட்டியால் அடிக்கப்படும்.
உதாரணமாக, இந்தியாவைப் பொறுத்தவரை, ட்ரம்ப் “ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக” மோடி அரசாங்கத்திற்கு எதிராக சீறினார்.
பிரேசில் மீது சுமத்தப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு, அடித்தளத்தில் உள்ள நிகழ்ச்சி நிரலை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா வணிக உபரியைக் கொண்டுள்ள ஒரு சில நாடுகளில் இதுவும் ஒன்று என்ற உண்மை இருந்தபோதிலும், பிரேசில் 50 சதவீத சுங்க வரியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ட்ரம்பின் பாசிச கூட்டாளியான பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாலும், சர்வதேச வளர்ச்சிக்கு நிதியளிக்க டாலர் முறைக்கு மாற்று வழிகளைத் தேடும் BRICS குழுவில் பிரேசில் மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதாலும், இது ட்ரம்பின் கவனத்தில் உள்ளது.
ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியதைப் போல, அமெரிக்காவின் பாரிய கடன்களைத் தொடர்ந்து இயக்கும் திறனுக்கு இன்றியமையாததாக இருக்கும் டாலரின் மேலாதிக்கத்தை இழப்பது என்பது, ஒரு போரில் தோற்பதுக்கு சமமானதாக இருக்கும்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், லியோன் ட்ரொட்ஸ்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் மிகவும் பகிரங்கமாகவும் வன்முறையாகவும் செழுமைக் காலகட்டத்தில் அல்ல, மாறாக ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வெளிப்படுத்தப்படும் என்று விளக்கினார்.
இந்த முன்னறிவிப்பு எச்சரிக்கை உண்மையாகிவிட்டது. இது பேச்சுவார்த்தைகளின் விளைவாக இல்லாத ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும் ஒப்பந்தங்களின் தன்மையில் எடுத்துக்காட்டாக உள்ளது. ஆனால், ட்ரம்பின் கட்டளையின் விளைவாக, பிற நாடுகள் இணங்க அதற்கு வேண்டும் அல்லது முடக்கமான பொருளாதாரத் தடைகளால் தாக்கப்பட வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்க சந்தைகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கும் விளைவை ஏற்படுத்தக் கூடிய சுங்க வரிகளைத் திணிக்கும் அச்சுறுத்தலின் கீழ், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு சரணடைந்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட “உடன்படிக்கையில்” இது மிகத் தெளிவாக காணப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் தயாராக இல்லாத ஒரு முழு-வீச்சிலான வர்த்தகப் போருக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அது பின்வாங்கியுள்ளது. ஆனால் இந்த சரணாகதி கண்டனங்களைச் சந்தித்தது. இது, பிரெஞ்சு பிரதம மந்திரி பிரான்சுவா பேய்ரூவின் கருத்தான “தன்னைத்தானே அடிபணிய வைத்தது” என்பதினால் எடுத்துக்காட்டப்பட்டது.
இந்த “உடன்படிக்கை” நிச்சயத்தன்மையைக் கொண்டு வந்திருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் கூறிய போதிலும், வெறியாட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்பதையும், தங்களை முற்றிலுமாக அடிபணிய வைப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டநிரல் என்பதையும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் நன்கறியும். இதேபோல் ஜப்பானும் குறிவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போட்டியாளர்கள், தொடர்ந்து மண்ணில் தரைமட்டமாக்கப்படும் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
இவ்வாறாக, ஒரு புதிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போருக்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல, அவை முளைக்கவும் தொடங்கியுள்ளன.
20 ஆம் நூற்றாண்டின் பாதையில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் இரண்டு முறை அமெரிக்காவிற்கு எதிராக போருக்குச் சென்றது, மேலும், ஜப்பான் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்காக இரண்டாம் உலகப் போரில் ஒரு இரத்தந்தோய்ந்த மோதலில் ஈடுபட்டது. 2ம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் அடக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட இந்த முரண்பாடுகளின் அடித்தளங்கள் இப்போது உடைந்து 1930 களில் இருந்ததைப் போலவே மீண்டும் மீண்டும் மேற்பரப்பில் வெடிக்கத் தயாராக உள்ளன.
ஆனால், அந்தக் காலகட்டத்திற்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. தொழிலாள வர்க்கம் இப்பொழுது மிகப்பெரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுவரும் நிலையில், இவற்றை உள்கிரகித்து புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, 1930களில் ஜேர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததன் காரணமாக தொழிலாள வர்க்கம் பிரமாண்டமான தோல்விகளைச் சந்தித்தது. ஆனால் இன்று, தொழிலாள வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை அல்லது மனச்சோர்வடையவில்லை. உலகெங்கிலும் இடதை நோக்கிய இயக்கம் வளர்ந்து வருகிறது, முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வு ஆழமடைந்து வருகிறது, மேலும் சோசலிச தீர்வை நோக்கிய ஒரு திருப்பம், எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்களிடையே உள்ளது.
இந்த இயக்கத்தை ஒரு தெளிவான முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதே முக்கியமான பணியாகும். இந்த நெருக்கடி ட்ரம்பின் விருப்பு வெறுப்புகளிலிருந்து எழவில்லை, மாறாக முழு முதலாளித்துவ ஒழுங்கு மற்றும் அதன் தேசிய-அரசு அமைப்புமுறையின் வரலாற்று திவால்நிலையிலிருந்து எழுகிறது என்ற புரிதலின் அடிப்படையில் இது வேரூன்றியிருக்க வேண்டும்.
எனவே, “பிரதான எதிரி நாட்டுக்குள்ளே இருக்கிறார்” என்ற முழக்கத்துடன் கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான அரசியல் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் அடிப்படையில், ஒரு சர்வதேச முன்னோக்கிற்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே இது தீர்க்கப்பட முடியும்.
இதன்பொருள், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை உடனடியாக, ட்ரம்ப் ஊக்குவிக்கும் தேசியவாத நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போராடுவதாகும். அவரது சுங்க வரிப் போர்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கும் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் என்ற அவரது அனைத்து கூற்றுக்களுக்கும் இடையில், புறநிலை பொருளாதார யதார்த்தங்கள் வேறுவிதமாகக் கூறுகின்றன. சுங்க வரிகள் அமெரிக்க தொழில்துறையின் செலவு கட்டமைப்பை அதிகரிக்கின்றன. முதலாளிகள் தங்கள் இலாபங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக, இதனை வேலைகள் மற்றும் பணி நிலைமைகள் மீதான பாரிய தாக்குதல்களின் மூலம் கடக்க முயற்சிக்கின்றனர்.
அதேபோல், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்ட பொருளாதாரப் போருக்கான ஒரே தீர்வு, ஒரு தேசியவாத வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதே என்ற தங்கள் “சொந்த” ஆளும் வர்க்கங்களின் கருத்தை நிராகரிப்பதுடன், அதனை எதிர்த்துப் போராட வேண்டும். தேசியவாத வேலைத்திட்டம் பேரழிவுக்கான பாதையாகும்.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டுமே, உலக சோசலிசப் புரட்சிக்கான முன்னோக்கு முன்வைக்கப்படுகிறது. இந்த முன்னோக்கானது, ஏதோவொரு கற்பனாவாத இலக்கு அல்ல. ட்ரம்பின் போரால் எடுத்துக்காட்டப்பட்ட முதலாளித்துவத்தின் மரண ஓலம், ஒரு புதிய மற்றும் இன்னும் அதிக அபாயகரமான கட்டத்திற்குள் நுழைகின்ற நிலையில், இதுவே இந்த தருணத்தின் ஒரே சாத்தியமான மற்றும் யதார்த்தமான வேலைத்திட்டமாக அமைகிறது. அதற்காகப் போராடுவதற்கு அவசியமான தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத பணியாகும்.