முன்னோக்கு

அறிவியலுக்கு எதிரான போரை கென்னடி தீவிரப்படுத்துவதால் புதிய கோவிட்-19 திரிபுகள் அதிகரிக்கின்றன

“பெருந்தொற்று முடிந்துவிட்டது” என்ற ஆளும் வர்க்கத்தின் அறிவிப்பு மீண்டும் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பரவலாக 11வது அலையாக அதிக பரவல் திறன் கொண்ட கோவிட்-19 தொற்று பரவி வருகின்றது. SARS-CoV-2 கொரோனா வைரஸ், அதிகாரபூர்வ விஞ்ஞானிகள் மற்றும் கோவிட் எதிர்ப்பாளர்களால் தவறாக வாக்குறுதியளிக்கப்பட்ட எளிதில் கணிக்கக்கூடிய “இனி சாதாரணமாகவே இருக்கும்” என்ற நிலைக்கு செல்வதற்கான எந்த அறிகுறிகளையும் இதுவரைக் காட்டவில்லை.

தற்போதைய கொரோனா உயர்பரவல் நிலைக்கு இரண்டு மிக முக்கிய திரிபுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது: NB.1.8.1, “நிம்பஸ்” (Nimbus) என்றும் மற்றும் XFG இது “ஸ்ட்ராடஸ்” (Stratus) என்று அழைக்கப்படுகின்றன, இவை இரண்டும் சேர்ந்து வைரஸ் பரிணாம வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன. NB.1.8.1 மூலம் இப்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 சதவீதத்தைக் எட்டியுள்ளது, அதே நேரத்தில் XFG உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது மற்றும் அமெரிக்க அளவில் மூன்றாவது அதிகம் காணப்படும் வைரஸ் வகையாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய மிகவும் நிலைத்த மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தரவு அளவாக உள்ள துலேன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தணிப்பு கூட்டுப்பணி (PMC) அமைப்பின் தகவல்படி, ஜூலை 21 க்குள் புதிய தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றுகள் 347,000 என்ற அளவுக்கு சென்றுள்ளன, எதிர்பார்ப்புகள் படி இந்த எண்ணிக்கை, அடுத்த மாதத்திற்குள் இரட்டிப்பாக அதிகரிக்கலாம்

இந்த வரைபடம் அமெரிக்காவில் COVID-19 பெருந்தொற்றின் தற்போதைய முன்னறிவிப்பைக் காட்டுகிறது, தினசரி புதிய நோய்த்தொற்றுகள் இப்போது 500,000 ஐ நெருங்குகின்றன [Photo by PMC via Dr. Mike Hoerger]

தொற்றுநோய் தணிப்பு கூட்டுப்பணி (PMC) தரவுகளிலிருந்து விரிவுபடுத்தி பார்த்தால், வரும் மாதத்தில் கோவிட்-19 காரணமாக 6,700 முதல் 11,200 வரையிலான கூடுதல் மரணங்கள் ஏற்படலாம் என்றும், அதே நேரத்தில் ஏற்கனவே நெடுங் கோவிட் (Long COVID) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுடன் 3.76 மில்லியன் அமெரிக்கர்கள் சேரவிருக்கின்றனர் என்றும் மதிப்பிட்டுள்ளது. அதைவிட அதிர்ச்சிகரமானது, ஒரு சராசரி அமெரிக்கர் இப்போது 3.85 முறை கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார் என அவர்கள் மதிப்பிடுகின்றனர், இதன் பொருள் பெருந்தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் 1 பில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் (CDC) தொகுக்கப்பட்ட தனித்தனி தரவுகள், அமெரிக்காவில் உத்தியோகபூர்வ இறப்புக்கள் பெருந்தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகளைவிட 10.6 சதவீதமாக தொடர்ந்து அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டுகின்றன, இது இந்த பெருந்தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள தற்போதைய இறப்பு எண்ணிக்கைகளின் சுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தற்போதைய இந்த நெருக்கடி, பொது சுகாதாரத்திற்கு எதிரான இருகட்சிகளின் ஒத்துழைப்பு கொண்ட போரின் உச்சக்கட்டத்தை பிரதிபலிக்கிறது, இது ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததால் அல்ல, மாறாக பைடென் நிர்வாகம் கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை முற்றாக குறைக்கும் திட்டமிட்ட முயற்சியால் தொடங்கியது. 2022 செப்டம்பரில் “பெருந்தொற்றுநோய் முடிந்துவிட்டது” என்ற பைடெனின் அறிவிப்பு, இன்று தடுப்பூசி எதிர்ப்பு மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் ஆணைகளின் கீழ் நடைபெறும் பொதுசுகாதார நடவடிக்கைகளின் முழுமையான அழிப்பு நடவடிக்கைகளுக்கு மேடை அமைத்துக்கொடுத்துள்ளது.

சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதிலிருந்து, கென்னடி கூட்டாட்சி அரசின் சுகாதார முகமைகள் மீது எப்போதுமில்லாதவகையில் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் (HHS) வேலைவாய்ப்பு மிகப்பெருமளவிலான பாரிய பணிநீக்கங்கள், விலைக்கு வாங்குதல், முன்கூட்டி ஓய்வு பெறவைத்தல் மூலம் 82,000 தொழிலாளர்களிலிருந்து 62,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முகமைகளின் 28 பிரிவுகள் வெறும் 15 ஆக குறைத்து ஒருங்கிணைக்கப்படுகின்றன, பல அலுவலகங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

2026 நிதியாண்டு வரவு-செலவு திட்டக்கணக்கின் கீழ் தீர்மானிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH) அதிர்ச்சியூட்டும்வகையில் 18 பில்லியன் டாலர் குறைக்கப்படுவதை எதிர்கொள்கின்றன — இந்த 40 சதவீத வெட்டு மருத்துவ ஆராய்ச்சியையே பேரழிவுக்கு உட்படுத்தும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) $3.6 பில்லியன் டாலரை இழக்கும் அது அதன் வரவு-செலவு திட்டக்கணக்கில் பாதிக்கும் அதிகமானது, இதனால் நாள்பட்ட நோய் தடுப்பு, எச்ஐவி கண்காணிப்பு மற்றும் உலகளாவிய சுகாதார கண்காணிப்புக்கான முக்கிய திட்டங்கள் முற்றிலுமாக நீக்கப்படும்.

இவை அறிவியல் வழிமுறையையே திட்டமிட்டு குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் ஒத்துப்போகின்றன. கென்னடி தடுப்பூசி நிபுணர்களை பணிநீக்கம் செய்துள்ளார், ஆதார அடிப்படையிலான காய்ச்சல் தடுப்பூசி பரிந்துரைகளை இரத்து செய்துள்ளார், மேலும் அமெரிக்க தடுப்பு சேவைகள் பணிக்குழுவின் 16 உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்வதற்கான திட்டங்களை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இது புற்றுநோய்ப் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு சுகாதார சேவைகள் காப்பீட்டாளர்கள் எந்தமாதிரியான காப்பீடுகளை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் குழுவாகும். மாநில மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளுக்கான $11 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை நிர்வாகம் இரத்து செய்துள்ளது, இது கூட்டாட்சி அரசு முகமைகளுக்கும் முன்னின்று செயற்படும் பொது சுகாதார தொழிலாளர்களுக்கும் இடையிலான தொடர்புகளைத் துண்டித்துள்ளது.

அர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி ஜேவியர் மிலேயுடன் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை (HHS) செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் (வலது) [Photo: Robert F. Kennedy Jr.]

பொது சுகாதாரத்தின் மீது இந்த நேரத்தில் நடக்கும் தாக்குதல் குறிப்பாகக் கொடூரமானது. மருத்துவமனையில் புதிய கோவிட்-19 திரிபுகளால் வேகமாகச் சேர்க்கப்படுவதையும், நெடுங் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், நிர்வாகம் அனைத்து நோய்த் தொற்றுக்கள் திடீரென பரவுவதைக் கண்காணிக்கவும், பதிலளிக்கவும் மற்றும் தணிக்கவும் கூடிய அதன் திறனை திட்டமிட்டு அழித்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, இந்த பெருந்தொற்றுநோயின் மிகவும் அழிவுகரமான நீண்டகால விளைவுகளில் ஒன்றான, தொழிலாள வர்க்கத்தின் மீது பல தலைமுறை தலைமுறையாக சுமையாக மாற்றும் பரவலான நரம்பியல் பாதிப்பு குறித்த ஆழமான நுண்ணறிவை அறிவியல் சான்றுகள் வழங்குகின்ற இந்த நேரத்தில், பொது சுகாதாரம் மீதான இத்தகைய ஆழமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) மற்றும் சயின்ஸ் அட்வான்சஸ் (Science Advances) இதழில் வெளியிடப்பட்ட இரண்டு முக்கியமான ஆய்வுகளின்படி, கோவிட்-19 வைரஸ் மூளை ஆரோக்கியத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்த தடயவியல் ஆதாரங்களை வழங்கியிருக்கின்றன, பெருந்தொற்று “முடிந்துவிட்டது” என்று பொய்யாக அறிவித்த அனைவரின் குற்றவியல் அலட்சியத்தையும் இது அம்பலப்படுத்துகிறது.

தொற்றுநோய் பாதிக்கப்படாமல் கூட, பெருந்தொற்றை கடந்து வாழ்வது 5.5 கூடுதல் மாதங்களுக்கு சமமாக மூளை வயதாவதை துரிதப்படுத்துவதாகவும், வயதானவர்கள், ஆண்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஆய்வு கண்டறிந்துள்ளது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு, இந்த மூளை வயதாவது அளவிடக்கூடிய அறிவாற்றல் பாதிக்கப்படுவதுடன் தொடர்புடையதாகும்.

அதைவிட ஆபத்தானது என்னவென்றால், SARS-CoV-2 அமிலாய்ட்-β பிளேக்குகளை (amyloid-β plaques) உருவாக்குவதை நேரடியாகத் தூண்டும் என்பதை சயின்ஸ் அட்வான்சஸ் ஆராய்சி நிரூபித்துள்ளது. இது அல்சைமர் நோயின் அங்கீகரிப்பட்ட அடையாளமாகும். ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட மனித விழித்திரை மாதிரிகள் மற்றும் கோவிட்-19 பாதிக்கப்பட்டு இறந்த நோயாளிகளிடமிருந்து பெற்ற பிரேத பரிசோதனை திசுக்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இந்த பிளேக்குகளுக்குள் வைரஸ் புரதங்கள் பதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர், இது கோவிட்-19 பாதிப்பால் நேரடி உயிரியல் வழிமுறைகள் மூலம் நரம்புச் சிதைவை ஏற்படுத்தலாம் அல்லது துரிதப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

நரம்பியல் நிபுணர் லெஸ்லி எம்.கை (Leslie M. Kay) யின் 2022 முன்கூட்டியே தெரிவித்த “மீள முடியாத நினைவிழப்பு (dementia) நோய்களின் ஒரு பெரும் அலை நம்மிடம் நெருங்கி வருகிறது “ என்ற எச்சரிக்கை இப்போது பயங்கரமாக உண்மைதான் எனத் தெரிகிறது. மில்லியன் கணக்கான கோவிட்-19 ஆல் உயிர்பிழைத்தவர்களை தொடர்ச்சியாக பாதிக்கும் மணமறிதலும் மற்றும் சுவை இழப்பும் நரம்பியல் கடத்தல் பகுதி அழிவுக்குள்ளாகும் நோய்களின் ஆரம்ப நிலையைக் குறிக்கக்கூடும், காரணம் வைரஸானது நினைவுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியமான மணத்தட்டைப் பகுதியை (olfactory bulb) அழற்சி ஏற்படுத்தும் வகையில் பாதிப்படையச் செய்கிறது. குறிப்பாகச் சொல்வதானால், இந்தச் சேதம் எளிதான (தீவிரமல்லாத) கோவிட்-19 நோயாளிகளிலும் நிகழ்கிறது. இதன் பொருள் இந்த நரம்பியல் பாதிப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை மட்டும் அல்லாமல் அதற்கு அப்பாற்பட்ட பலரிடமும் காணப்படுகிறது. .

இந்தக் கொள்கைகள், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டதைப் போல, ”சமூகப் படுகொலை” என்ற கூற்றுக்கு சமமாகும். அதாவது தொழிலாள வர்க்கத்தின் வாழ்நாளைக் குறைக்கும் வகையில் திட்டமிட்டும் முறையாகவும் சூழ்நிலைகள் உருவாக்கப்படுகிறது. கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அதிக மரணங்களால் சமூக பாதுகாப்பு நிதியில் ஏற்பட்ட 156 பில்லியன் டாலர் சேமிப்பு என்பது தற்செயலாக நடந்த நிகழ்வல்ல, மாறாகத் திட்டமிடப்பட்ட ஒரு உத்தியின் ஒரு பகுதியாகவே உள்ளடக்கப்பட்டிருக்கிறது. பொது சுகாதார அமைப்புமுறையை அழிப்பதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் மரண விகிதங்களை அதிகரிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுகிறது, இதன்மூலம் மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்புக்கான அரசின் பொறுப்புகளைக் குறைத்து, அதனால் கிடைக்கும் நிதியை இராணுவ விரிவாக்கத்திற்கும் மற்றும் செல்வந்தர்களுக்கு வரிவிலக்குகளாகவும் மாற்றுகிறது.

ரொனால்ட் ஆடம்ஸ் சீனியர் மற்றும் பிரையன் நெஃப்டாலி ஓட்டோனியல் கானு ஜோஜ் ஆகியோரின் சமீபத்திய கொடூரமான மற்றும் தடுக்கக்கூடிய வேலையிட மரணங்கள் இந்த யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்காவின் தொழில்துறை படுகொலைச் சாலைகளில் ஆபத்தான வேலையிட நிலைமைகளால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கும் 140,000 க்கும் அதிகமான தொழிலாளர்களில் அவர்களும் அடங்குவர். இதில் 5,000 க்கும் அதிமானவர்கள் கடுமையான காயங்களால் உயிரிழக்கின்றனர்.

ஸ்டெல்லாண்டிஸின் நிறுவனத்தின் டண்டீ என்ஜின் தொழிற்சாலையில் இயந்திர பழுதுபார்க்கும் தொழிலாளி, 63 வயதான ஆடம்ஸ் ஏப்ரல் மாதம் அவர் பராமரிப்பு பணியை மேற்கொண்டபோது மேலிருந்த கிரேன் திடீரென இயங்கி அவர் நசுக்கப்பட்டதால் உயிரிழந்தார். குவாத்தமாலாவைச் சேர்ந்த அகதித் தொழிலாளி 19 வயதான பிரையன், கலிபோர்னியாவின் வெர்னோனில் உள்ள டீனாவின் புரிட்டோஸ் ஆலையில் ஒரு தொழில்துறை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

அறிவியல், பொது சுகாதாரம் மற்றும் வேலையிட பாதுகாப்பு மீது இந்த ஒட்டுமொத்தத் தாக்குதல் ஆளும் உயர்நிலை அதிகார வர்க்கத்திற்கு பல செயல்பாடுகளுக்கு சேவையாற்றுகிறது. இது தொடர்ச்சியாக நடந்து வரும் சுகாதார நெருக்கடிகளுக்கு இடையூறான ஆதாரங்களை அழித்துவிடுகிறது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) போன்ற வேலையிட பாதுகாப்பை மேற்பார்வையிடும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களைக் கலைக்கிறது மற்றும் இலாபங்களைப் தக்கவைத்துக்கொள்ளவேண்டிய செலவாகப் பெருமளவு மரணங்களை இயல்பாக்குகிறது. பொது சுகாதார வல்லுனர்களை பணிநீக்கம் செய்வதும், நோய் பரவலை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு நிதியாதாரத்தை குறைத்தலும் எதிர்கால நோய் பரவல்களுக்கு அறிவியல்அடிப்படையிலான பதில் நடவடிக்கைகள் இல்லாமல் அலட்சியமான அணுகுமுறைகளை மட்டுமே ஏற்படும் சூழலை உறுதிப்படுத்துகின்றன..

இந்த ஒன்றோடொன்று தொடர்புடைய கொள்கைகள் மேலிருந்து வர்க்க யுத்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதை தொழிலாளர்கள் அடையாளம் காண வேண்டும். முதலாளித்துவம் மனித உயிர் பாதுகாப்புக்கும் இலாப நோக்கிற்கும் இடையிலான முரண்படுகளால், அதன் அடிப்படை தோல்வியை இந்தப் பெருந்தொற்று காலத்தில் வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது. இப்போது, அந்த வைரஸ் தொடர்ந்து திரிபடைந்து பரவிக் கொண்டிருக்கின்ற நிலையில், பரவலான இந்தப் பெருந்தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக ஆளும் வர்க்கம் அதன் விளைவுகளைக் குறித்து வேண்டுமென்றே திட்டமிட்டே மக்களை இருட்டில் வைத்திருக்கிறது.

தடுக்ககூடிய மரணங்களைத் தடுக்க தேவையான கருவிகள் இருக்கும்போது, நிகழும் எந்த மரணமும் ஏற்க முடியாது என்ற கோட்பாட்டோடும், அறிவியல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சமூக உரிமையின் அடிப்படையைக் கொண்டு பொது சுகாதாரமும் மருத்துவ சேவையையும் மீட்டெடுக்க தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைந்து போராடவேண்டும். தனியார் இலாபத்தை விட மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கும், இந்த தொற்றுநோயை முடிவுகொண்டுவருவதற்கும், சமூகத்தை சோசலிசத்தால் பதிலீடு செய்வதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.

Loading