ரஷ்யாவிற்கு எதிரான அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரஷ்யாவிற்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்தப்போவதாக வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை மறு நிலைப்படுத்துவதாக அறிவித்தார். ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு முன்னதாக, ரஷ்யா உக்ரேனில் தனது போரை நிறுத்தாவிட்டால், ரஷ்யா மற்றும் அதன் அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் பேரழிவு தரும் சுங்க வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்த நாளிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யு.எஸ்.எஸ் வயோமிங் நீர்மூழ்கிக் கப்பல் வேர்ஜீனியாவின் நோர்போக் துறைமுகத்துக்குள் நுழைகிறது.  [Photo: Navy Petty Officer 1st Class Cameron Stoner]

டெலிகிராமில், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், ட்ரம்பின் சுங்கவரி அச்சுறுத்தலை ஒரு இறுதி எச்சரிக்கை விளையாட்டை விளையாடுவதாக கூறினார். மேலும், அவர் கூறுகையில், “1. ரஷ்யா, இஸ்ரேலோ அல்லது ஈரானோ அல்ல. 2. ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் மற்றும் போரை நோக்கிய ஒரு படியாகும். ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் அல்ல, மாறாக அவரது சொந்த நாட்டோடு” என்று தெரிவித்தார். அமெரிக்க-ரஷ்யா போர் என்றால் என்ன அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்ள, உலக அழிவுக்குப் பிறகு நிலைமையை விவரிக்கும் நடமாடும் இறந்தவர்கள் (The Walking Dead) என்ற தொலைக்காட்சி தொடரைப் பார்க்குமாறும் மெட்வெடேவ் ட்ரம்பிற்கு அறிவுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய துணைத் தலைவரும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியுமான டிமிட்ரி மெட்வெடேவின் மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் அதை விட அதிகமாக இருந்தால், பொருத்தமான பிராந்தியங்களில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவற்கு உத்தரவிட்டுள்ளேன்... வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. இவை, பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும், இது அந்த நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த மிகப்பெரிய பொறுப்பற்ற அச்சுறுத்தலுடன், பிரதான சக்திகளுக்கு இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக மோதல்கள் முற்றிலுமாக கட்டுப்பாட்டை மீறி தீவிரமடைந்து வருகின்றன என்பது தெளிவாகிறது. கிரெம்ளின் ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களை உதறித் தள்ளியதுடன், உக்ரேனின் போர் முனையிலுள்ள இராணுவ நிலைகள் நெடுகிலும் தொடர்ந்து தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. ரஷ்யா-உக்ரேன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் உறுதிமொழிகள் தோல்வியடைந்துள்ளன. மேலும் ரஷ்யாவுடனான நேட்டோ மோதலை பாரிய இராணுவ ரீதியாக தீவிரப்படுத்துவதற்கான ஒரு தடுக்க முடியாத உந்துதல் ஆளும் வட்டாரங்களில் உருவாகி வருகிறது.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, உக்ரேன் போரின் எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட ட்ரம்ப், ஒரு சில தொலைபேசி அழைப்புகள் மூலம் “24 மணி நேரத்தில்” உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக சூளுரைத்தார். எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி என்ற முறையில், கடந்த குளிர்காலத்தில் உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கிரெம்ளினுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பிறகு, ட்ரம்ப் உக்ரேனுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆயுத விநியோகங்களை விரைவாக மீண்டும் தொடங்கினார். இந்த முடிவை ஜனநாயகக் கட்சி அதிகாரிகளும், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) வரவேற்றன. இவர்கள் ரஷ்யாவுடனான போருக்கான ஆதரவை ட்ரம்ப் மீதான அவர்களின் எதிர்ப்பின் மையமாக ஆக்கி உள்ளனர்.

எவ்வாறிருப்பினும், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. ஏனெனில், 2022 இல் உக்ரேனை ஆக்கிரமிக்க கிரெம்ளின் எடுத்த முடிவைத் தூண்டிய, முக்கிய ரஷ்ய கோரிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகாரிகள் இணங்கத் தயாராக இல்லை. குறிப்பாக, நேட்டோ தனது படைகளை உக்ரேனில், ரஷ்யாவின் எல்லையில் நிலைநிறுத்த அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையாகும்.

கடந்த வாரத்தில், ரஷ்யாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அதிகரித்தளவில் அவநம்பிக்கையான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதைத் தடுக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டிய ட்ரம்ப், “தடைகள் அவரைத் தொந்தரவு செய்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, உக்ரேன் போரின் இராஜதந்திர தீர்வில் முன்னேற்றம் காணத் தவறியதால் ஜனாதிபதி “கவலைப்படுகிறார்” என்றும் பேச்சுவார்த்தைகளை கைவிடக்கூடும் என்றும் கூறினார். “ஆகவே ஏதோவொரு கட்டத்தில்,” இரு தரப்பினரில் ஒருவர் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால், போர்நிறுத்த முயற்சியில் எவ்வளவு தொடர்ந்து ஈடுபடுவது என்பது குறித்து ட்ரம்ப் இங்கே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று ரூபியோ பொக்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அதற்கு பதிலாக, பிரதான உலக சக்திகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் இராணுவ பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ட்ரம்ப் உண்மையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 100 சதவீத சுங்கவரி விதிப்பாரானால், அதன் விளைவு உலக வர்த்தகத்தில் ஒரு பேரழிவுகரமான பொறிவாக இருக்கும். ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குபவர்களில் சீனா, இந்தியா மற்றும் துருக்கி போன்ற பிரதான ஆசிய பொருளாதாரங்கள் மட்டும் இல்லாமல், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றிய தடைகள் இருந்தபோதிலும், ஹங்கேரி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்லோவாக்கியா, செக்கியா மற்றும் இத்தாலி போன்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அடங்கும்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பத்தில் ரஷ்யாவை சரணடைய கட்டாயப்படுத்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்தபோதிலும், தாராளவாத பத்திரிகை வெளியீடுகளும் பெருகிய முறையில் அவநம்பிக்கையான தொனியை எடுத்து வருகின்றன. வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையானது, “சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க அதிகாரத்தை சவால் செய்வதில் தனது மிக முக்கியமான கூட்டாளியான திரு. புட்டினைக் கைவிடுவார் என்று கற்பனை செய்வது கடினமாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுத அச்சுறுத்தல்களை ட்ரம்ப் நாடுவதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்: ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள முக்கிய உலக சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் மிகவும் தீவிரமாக இருப்பதால், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசாங்கங்களின் கைகளில் இருந்து அதிகாரத்தை எடுக்க தீர்க்கமாக தலையிடாவிட்டால், இவை அமைதியான முறையில் தீர்க்கப்படாது.

அமெரிக்கா தனது கோரிக்கைகளுக்கு இணங்க ரஷ்யாவை கட்டாயப்படுத்த இராஜதந்திர அல்லது வணிக ஆயுதங்களைப் பயன்படுத்த முயற்சிப்பது தோல்வியடைந்த நிலையில், நேட்டோவின் ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ விரிவாக்கத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன.

உண்மையில், ட்ரம்ப் ரஷ்யாவுடன் அணுஆயுதப் போருக்கு அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, ஐரோப்பா பல டிரில்லியன் யூரோ மதிப்புள்ள மீள் ஆயுதமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியது. இது தொடர்பாக, ஜேர்மன் அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம், ஜேர்மன் தரைப்படையில் மலைப்பூட்டும் அதிகரிப்பைத் தயாரித்து வருவதாக உறுதிப்படுத்தினர். மேலும், 17 பில்லியன் யூரோ மதிப்புள்ள 3,000 பாக்சர் கவச வாகனங்கள், 3,500 பேட்ரியா காலாட்படை போர் வாகனங்கள், மற்றும் யூரோஃபைட்டர் ஜெட் விமானங்களை பேர்லின் கொள்முதல் செய்யும். இது, ஜேர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் மே மாதம் பேர்லினின் 1 டிரில்லியன் யூரோக்கள் மறுஆயுதமயமாக்கல் திட்டத்தைப் பயன்படுத்தி ஜேர்மன் இராணுவத்தை ஐரோப்பாவின் வலிமையான மரபுவழி இராணுவமாக மாற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இடம்பெறுகிறது.

இதர ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் பெருமளவில் ஆயுதங்களை கொள்முதல் செய்கின்றன. பிரான்ஸ் 1400 சேர்வல் மற்றும் 1437 கிரிஃபான் கவச வாகனங்களையும், மேலும் நூற்றுக்கணக்கான சீசர் டிரக்குகளில் பொருத்தப்பட்ட பீரங்கிகளையும் வாங்க திட்டமிட்டுள்ளது. இத்தாலி குறைந்தபட்சம் 1050 லின்க்ஸ் கவச வாகனங்கள் மற்றும் 380 பாந்தர் பிரதான போர் டாங்கிகளை ஜேர்மனியின் ரைன்மெட்டல் பெருநிறுவனத்திடம் இருந்து வாங்குகிறது. தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்களை வாங்கும் திட்டத்தை போலந்து அறிவித்துள்ளது.

ஐரோப்பிய இராணுவக் குவிப்பானது, அணு ஆயுதப் போரின் அதிகரித்து வரும் ஆபத்தையும் கிரெம்ளினின் வெளியுறவுக் கொள்கையின் அரசியல் திவால்நிலையையும் சுட்டிக்காட்டுகிறது. 448 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை மற்றும் 20 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மட்டும், ரஷ்யாவின் 143 மில்லியன் மக்கள்தொகை மற்றும் 2 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மிகப் பெரிய அளவில் அதிகமாக உள்ளது. ஐரோப்பா முழுமையாக மீண்டும் இராணுவமயமாக்கப்பட்டால், ரஷ்யாவின் மரபுவழிப் படைகள் எந்தவொரு போரிலும் பெரிதும் குறைவாக இருக்கும். இந்த அதிகரிப்பதைத் தவிர்க்க கிரெம்ளின் அதன் அணு ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்துமா என்ற கேள்வியை இது விரைவாக எழுப்புகிறது.

அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் பிரிக்கவியலாதவாறு தொழிலாளர்கள் மீதான சர்வதேச வர்க்கப் போருடன் பிணைந்துள்ளது. ட்ரம்ப் சமூகநலத் திட்டங்களைக் வெட்டிக் குறைத்து, தனது சுங்க வரிகளால் அமெரிக்காவின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் சிக்கன நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்தில் ட்ரம்புக்கு எதிரான பாரிய போராட்டங்களில் மில்லியன் கணக்கானவர்கள் அணிதிரண்ட பின்னர், மக்களின் விருப்பத்தை அப்பட்டமாக மீறி இராணுவ ஆயத்தப்படுத்தல்களுக்கு நிதியாதாரம் திரட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்து வரும் அரசாங்கங்களுக்கு எதிராக, ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் வெடிக்கும் கோபம் உருவாகி வருகிறது.

உண்மையில், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உக்ரேனுக்கு பிரெஞ்சு அல்லது ஐரோப்பிய தரைப்படைகளை அனுப்பத் தயாராகும் திட்டத்தை முன்மொழிந்தபோது, அந்தத் திட்டம் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய மக்களால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டது. யூரேசியா குழுமத்தின் கருத்துக் கணிப்பில், 89 சதவீதமான மேற்கு ஐரோப்பியர்கள், ரஷ்யாவுடனான போரில் ஈடுபடுவதற்கு விரோதமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

இருப்பினும், இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கி, உக்ரேன் போருக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்ட அரசியல் அமைப்புக்களால் ஊக்குவிக்கப்பட்ட நேட்டோ ஏகாதிபத்திய அரசாங்கங்கள், மனிதகுலத்தின் உயிர்வாழ்வை அச்சுறுத்தும் ஒரு பேரழிவு தரும் அணுஆயுத மோதலை நோக்கி, போரை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்பி, சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான சாமானிய தொழிலாளர்களிடையே எழுந்துள்ள வெகுஜன எதிர்ப்பை ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான எதிர்ப்போடு இணைத்து, உலகை அணு ஆயுதப் போரின் விளிம்பில் வைத்திருக்கும் நிதிய தன்னலக்குழுக்களின் கைகளில் இருந்து அதிகாரத்தை எடுப்பதற்கான ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை கட்டியெழுப்புவதே இன்றெழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

Loading