மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர் ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் மரணம் குறித்த சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) விசாரணை குறித்த ஜூலை 27 பொது விசாரணையைத் தொடர்ந்து, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் இந்தக் கருத்துக்களை வழங்கியுள்ளார்.
63 வயதான ஒரு திறமையான தொழிலாளியான ரொனால்ட் ஆடம்ஸ், ஏப்ரல் 7 அன்று மிச்சிகனில் உள்ள டன்டீ இயந்தர வளாகத்தில் தலைக்கு மேல் இருந்த ஒரு பழுதூக்கியில் நசுங்கி இறந்தார். இந்த மரணத்துக்கான சூழ்நிலைகள், நிறுவனம், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் அல்லது மிச்சிகன் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தால் (MIOSHA) இன்னும் விளக்கப்படவில்லை.
IWA-RFCயின் விசாரணையில் 100 தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ரொனால்ட் ஆடம்ஸின் மனைவி ஷமேனியா ஸ்டீவர்ட்-ஆடம்ஸ் உரையாற்றினார். மேலும், மேக் டிரக்ஸ் தொழிலாளியும் மற்றும் IWA-RFC உறுப்பினருமான வில் லேமன், WSWS தொழிலாளர் நிருபர் ஜெர்ரி வைட் மற்றும் இதர வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் சக்திவாய்ந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்த விசாரணையைத் தொடரவும் விரிவாக்கவும், சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்களை ஸ்தாபிக்கவும், தொழிலாளர்களின் உயிர்களையும் உரிமைகளையும் பாதுகாக்க ஒரு சர்வதேச பிரச்சாரத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு தீர்மானத்தை இந்தக் கூட்டம் ஒருமனதாக நிறைவேற்றியது.
விசாரணையில் ஈடுபட அல்லது பணியிட இறப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களைப் புகாரளிக்க, இந்தப் பக்கத்தின் கீழே உள்ள படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
***
சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில், ரொனால்ட் ஆடம்ஸின் குடும்பத்திற்கு எங்களது இரங்கலையும் எங்கள் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு பேசிய ஷாமேனியாவின் கருத்துக்களையும் தைரியத்தையும் நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.
இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எளிதான அனுபவமாக இருக்க முடியாது. நீங்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்திருக்கிறீர்கள். அந்த யதார்த்தத்தை குறைக்க எந்த வழியும் இல்லை. ஆனால், உங்கள் அனுபவம் ஒரு தனிப்பட்ட அனுபவம் அல்ல என்பது இந்தக் கலந்துரையாடலின் போது தெளிவாகிவிடும் என்று நம்புகிறேன். இன்று உலகம் முழுவதும், உழைக்கும் மக்கள் நீங்கள் கடந்து வந்த அனுபவங்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
உண்மையில், கடந்த இரண்டு மணி நேரமாக நாங்கள் இங்கு கூடியிருக்கும்போது, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர், பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
இரங்கல் தெரிவிப்பதன் மூலம் மட்டுமே இந்த நிலைமை முடிவுக்கு வராது என்பதை நாங்கள் அறிவோம். தொழிலாளர்களின் தலைவிதிக்கு தாங்கள்தான் பொறுப்பு எனக் கூறிக் கொள்பவர்கள், குறிப்பாக தொழிற்சங்க அமைப்புக்கள், இதை நிறுத்த எதுவும் செய்யப் போவதில்லை என்பதை நாம் அறிவோம்.
சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய தொழில்துறைகளில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைப்பற்றி செய்தி சேகரிக்க நான் ஓகியோவிற்குச் சென்றிருந்தேன். அது மகத்தான சாமானிய தொழிலாளர்களின் போர்க்குணம் கொண்ட காலகட்டமாக இருந்தது. எஃகு உற்பத்தி மையமாக இருந்த ஒஹியோவில் உள்ள லொரைனில் நான் இருந்தபோது, உள்ளூர் செய்தித்தாளில் லொரைனில் உள்ள தேசிய குழாய் ஆலையில் ரிக் ஹெர்ட்ஜிக் என்ற இளம் தொழிலாளி இறந்துவிட்டதாக ஒரு மிகச் சிறிய அறிவிப்பைக் கண்டேன்.
ரொனால்ட் ஆடம்ஸைக் கொன்றதைப் போன்ற ஒரு நிகழ்வில் ஹெர்ட்ஸிக் கொல்லப்பட்டார். ஆனால், ரிக் மிகவும் அனுபவமற்ற தொழிலாளி, ரொனால்ட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஒரு பெரிய கருவி இந்த இளம் தொழிலாளியான ஹெர்ட்ஸிக் மீது மோதியதில் அவர் உடனடியாக சம்பவ இடத்தில் கொல்லப்பட்டார். அவருக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. அவர் ஒரு வயது குழந்தை, ஒரு இளம் மனைவி மற்றும் பேரழிவிற்குள்ளான ஒரு குடும்பத்தை விட்டுச் சென்றார்.
இப்போது நாம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கிறோம். அதே விஷயங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன.
வரலாற்றின் மிகப் பெரிய விஞ்ஞானப் புரட்சிக்கும், மலைப்பூட்டும் தொழில்நுட்ப அபிவிருத்திக்கும் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருந்தும், தொழிலாளர்களின் உயிர்களைப் பாதுகாக்க மிக அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஒரு தொழிலாளி, ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய மிகவும் ஆபத்தான விஷயம் வேலைக்குச் செல்வதுதான். நாளின் முடிவில், தொழிற்சாலையிலோ அல்லது பணியிடத்திலோ நடந்த ஏதோ ஒரு பயங்கரமான சம்பவம் குறித்த பேரழிவு தரும் செய்தியை எந்தக் குடும்பமும் பெற மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்ப முடியாது.
இதுவரை, நாம் தொழில்துறை விபத்துகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். தொழிற்சாலைகளுக்குள், வேலையிடங்களில், அண்டை அயல்பகுதிகளில் நடக்கும் அன்றாடம் நடக்கும் நச்சுத்தன்மையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு பற்றிய பிரச்சினையை நாம் கவனிக்கவில்லை.
விபத்து என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த வார்த்தை போதுமானதா? நாம் விஷயங்களை மாற்றப் போகிறோம் என்றால், “விபத்துக்கள்” என்று அழைக்கப்படுபவற்றின் காரணத்தை நாம் புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மேலும், இந்த விபத்துகளுக்குள் ஒரு சட்டத்தின் செயல்பாட்டை நாம் காண்கிறோம் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு அறையின் குறுக்கே நடந்து சென்று தடுமாறினால், அது ஒரு விபத்தாக இருக்கலாம். அதிர்ச்சியூட்டும் வகையில், நாளுக்கு நாள், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், வினாடிக்கு நொடி என ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளை நாம் எதிர்கொள்ளும்போது, இவை இனி வழக்கமான அர்த்தத்தில் வெறும் விபத்துகள் அல்ல. அவசியத்தின் செயல்பாட்டை நாம் காண்கிறோம்.
இந்தத் துயரங்கள், இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் வாழும் அமைப்புமுறை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதன் விளைவாக உள்ளது. நமது சமூக வாழ்க்கை, நமது பொருளாதார வாழ்க்கை, இந்தப் பேரழிவுகளைத் தொடர்ச்சியாக உருவாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அவற்றை உருவாக்கும் அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு வழி கண்டுபிடிக்கப்படும் வரை அவை தொடரும்.
அமைப்புமுறை என்றால் என்ன? இந்த சமூக அமைப்புமுறை என்றால் என்ன? இது முதலாளித்துவ அமைப்புமுறை. இத்தனை செல்வம் எங்கிருந்து வருகிறது? விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் பைகளில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் எங்கிருந்து வருகின்றன? உழைப்புச் சக்தி என்றழைக்கப்படுவதை, முதலாளிகள் தொழிலாளர்களிடமிருந்து கூலியின் வடிவில் வாங்குவதை மனிதர்களின் உழைப்பின் உருமாற்றத்திலிருந்து செல்வம் வருகிறது.
இந்த அமைப்புமுறையின் ஒட்டுமொத்த இயக்கமும், மனித உழைப்பை லாபமாக மாற்றுவதில், மார்க்ஸ் அழைத்த உபரி மதிப்பாக மாற்றுவதைச் சார்ந்துள்ளது. அவர்கள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது, முதலாளிகள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்: அந்த தொழிலாளி தங்கள் சொந்த செல்வத்திற்கு எவ்வளவு செல்வத்தை பங்களிக்க முடியும்? இயந்திரங்கள் பணம் சம்பாதிப்பதில்லை. அவற்றை இயக்க வைக்க வேண்டும். தொழிலாளர்களின் உழைப்புதான் அந்த இயந்திரங்களை இயங்க வைக்கிறது, அல்லது இந்த ஒட்டுமொத்த அமைப்பு முறையையும் செயல்பட வைக்கும் உற்பத்தி நிகழ்முறைக்கு ஏதேனும் ஒரு வடிவத்தில் அல்லது மற்றொரு மதிப்பைச் சேர்க்கிறது.
முதலாளித்துவ வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, அனைத்தும் உழைப்பின் உபரி மதிப்பு மற்றும் இலாபமாக மாற்றப்படுவதைச் சார்ந்துள்ளது. அதை அடைவதற்காக, மிக உயர்ந்த அளவிலான சுரண்டலை உத்தரவாதப்படுத்த, ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த அமைப்புமுறைதான் இந்தத் துயரங்களை உருவாக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருநிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்கும் மற்றொரு வர்க்கத்தின் நலன்களுக்காக செயல்படும் ஒரு அமைப்புமுறை, தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து மதிப்பையும் இலாபத்தையும் பெறுகிறது. இதற்கு விடையிறுப்பாக, நாம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். முதலாவதாக, தொழிலாளர்கள் இந்த அமைப்புமுறை குறித்து நனவுடன் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது, வேலையிடங்களில் ஆலை தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவது, பரந்த உழைக்கும் மக்களின் நலன்களுக்காக சமூக அமைப்பின் கட்டுப்பாட்டை எடுக்கும் ஒரு சர்வதேச அளவிலான ஒரு இயக்கத்தை தொடங்குவது அவசியமாகும்.
நாம் அப்பட்டமாக கூறுவோம்: தொழில்துறை மரணங்கள், சுற்றுச்சூழலை விஷமாக்குதல், இப்போது பாலஸ்தீனத்தில் நாம் காண்கிறபடி, ஒட்டுமொத்த மக்கள் மீதான இனப்படுகொலை, போருக்குத் தயாராக டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவுகள் ஆகியவற்றையும், ஒவ்வொரு நாளும் சொல்லொணா பயங்கரங்களைப் பற்றியும் படிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். இந்த அமைப்புமுறையின் கீழ்தான் நாம் பணியாற்றியும் வருகிறோம்.
இந்த அமைப்புமுறை மாற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலையீடும், ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டமும் தேவைப்படுகிறது.
இந்தக் கூட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சியும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC) ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் போராட்டம் தொடர முடியும், இது தொடரும். ஏனெனில், இது ஒரு முன்னோக்கால் வழிநடத்தப்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஆளும் வர்க்கத்தை நாங்கள் நம்பவில்லை. அவர்களால் அதைத் தீர்க்க முடியாது. அவர்கள் விரும்பினாலும், அவர்களின் பொருளாதார அமைப்புமுறையின் செயல்பாடு அவர்களின் செயல்களைத் தீர்மானிக்கிறது.
இன்று நாம் முன்வைக்கும் செய்தி என்னவென்றால், இந்தப் போராட்டத்தை நாம் தொழிற்சாலைகளுக்குள், வேலையிடங்களுக்குள் கொண்டு செல்வது மிகவும் முக்கியமானது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு சக்திவாய்ந்த கருவியாக IWA-RFC ஐ நாம் கட்டியெழுப்ப வேண்டும். மேலும் இந்தப் போராட்டத்தை நாம் வாழும் அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறையின் இயல்பையே மாற்றுவதற்கான ஒரு போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
நீங்கள் முதலாளித்துவத்தை தொழிலாள வர்க்கத்தின் நலன்களுடன் இணைக்க முடியாது. இந்த சமூகப் பிரச்சினைகளில் ஏதேனும் தீர்க்கப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரு சோசலிச இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது.
அடிப்படையில், சோசலிசம் என்றால் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதும், பரந்த வெகுஜனங்களின் நலன்களின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதும் ஆகும்.
நான் ஷமேனியாவையும், உங்கள் குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்கிறேன். நீங்கள் வளர்ந்துவரும் உலகம் இதுபோன்ற கொடூரங்கள் நிகழாத உலகமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். நீங்கள் பெரியவர்களாகும்போது, உங்கள் தாத்தா மற்றும் உங்கள் தந்தைக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசும்போது, தொழிலாள வர்க்கம் எழுந்து நின்று, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, உலகை மாற்றி, அதை வாழ சிறந்த இடமாக மாற்றுவதற்கு முன்பு அது எப்படி இருந்தது என்று நீங்கள் கூறுவீர்கள். அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். எங்களுடன் சேர்ந்து இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள்.