கோர்பினின் புதிய இடது கட்சி— அதன் அரசியல் பண்பும் மாயைகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜூலை 24 வியாழன்று, ஜெர்மி கோர்பின் இறுதியாக பிரிட்டனில் ஒரு புதிய இடதுசாரி கட்சி உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். இந்த இலையுதிர்காலத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தொடக்க மாநாட்டிற்கு முன்னதாக, மூன்று நாட்களுக்குள், 500,000க்கும் மேற்பட்டவர்கள் “உங்கள் கட்சியை” கட்டியெழுப்புங்கள் என்னும் ஒரு மின்னஞ்சல் பட்டியலில் கையெழுத்திட்டனர்.

இந்த அறிவிப்பானது, தொழிற் கட்சி சிதைந்து கொண்டிருக்கும் நிலையிலுள்ள ஒரு முக்கிய கட்டமாகும். கெயர் ஸ்டார்மரின் தலைமையில், தொழிற் கட்சி மீள முடியாத வலதுசாரி, வணிக சார்பு, காஸாவில் இனப்படுகொலையை பாதுகாக்கும் போர்வெறியர்களைக் கொண்ட கட்சியாகிவிட்டது என்று மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்ப்பு உச்சி மாநாட்டில் ஜெர்மி கோர்பின் பேசுகிறார்

கோர்பின் மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் தொழிற் கட்சி எம்.பி. ஸரா சுல்தானா ஆகியோர் கையெழுத்திட்ட அறிமுக அறிக்கையில், “இது ஒரு புதிய வகை அரசியல் கட்சி உருவாவதற்கான நேரம்—அது உங்களுக்குச் சொந்தமானது” என்று அறிவிக்கிறது. அதில் ‘பெருநிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டுகின்றன’ என்றும், ‘அரசாங்கம் போர்களுக்காக பில்லியன் அளவில் பணம் ஒதுக்குகிறது’ என்றும் குறிப்பிட்டு, வறுமையில் வாழும் மில்லியனைக் கணக்கான மக்களைச் சுட்டிக்காட்டுகிறது; மேலும் ‘மனித இனத்திற்கு எதிரான குற்றங்களில் அரசாங்கத்தின் உடன்பாட்டை’ குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கையானது “செல்வம் மற்றும் அதிகாரத்தின் பாரிய மறுபகிர்வுக்கு” அழைப்பு விடுத்து, “படுகொலைக்கு எதிராக போராடும் உரிமையைப்” பாதுகாப்பதற்காகவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை பலிகடாவாக்குவதையும், “எரிபொருள் பெருநிறுவனங்கள் நமது கிரகத்தின் முன் தங்கள் இலாபங்களை முன்வைத்துள்ளன” என்று குற்றச்சாட்டுகிறது. “சாதாரண மக்கள்தான் செல்வத்தை உருவாக்குகிறார்கள்,” “சாதாரண மக்கள்தான் அதை அது சேர வேண்டிய இடத்தில் மீண்டும் வைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர்,” என்று அது தொடர்கிறது.

இந்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்த புதிய கட்சி தேவை என மில்லியன் கணக்கானோர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் இந்தக் கட்சி அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யாது. ஆனால் இது இந்தக் கட்சி அல்ல. தொழிற் கட்சியில் இருந்து அமைப்புரீதியாக முறித்துக் கொள்ள கோர்பின் நிர்பந்திக்கப்பட்டுள்ள போதிலும், அவரது புதிய கட்சி தொழிற் கட்சிவாதத்தில் இருந்து ஒரு அரசியல் முறிவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அது பாராளுமன்றத்தின் மூலம் பின்பற்றப்பட வேண்டிய வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்காக மட்டுமே வாதிடுகிறது—அதாவது இரண்டாவது தொழிற் கட்சி பதிப்பை அமைப்பதாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக கட்சியின் தன்மை அதன் தலைமையால் வடிவமைக்கப்படுகிறது. இது கடந்த மாதங்களில் கோர்பினின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமல்ல, மாறாக காரி மர்பி (அவரது முன்னாள் பணியாளர்களின் தலைவர்) மற்றும் கோர்பினின் அமைதி மற்றும் நீதி திட்டத்திற்கு தலைமை கொடுக்கும் ஷீலா ஃபிட்ஸ்பாட்ரிக் உட்பட தொழிற் கட்சியின் தலைவராக அவர் இருந்த காலத்தில் இருந்த பல ஊழியர்களின் வழிகாட்டுதலின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த பழைய அணியில், 2017 இல் பாராளுமன்றத்தை எட்டிய கோர்பினிய எம்.பி.க்களின் புதிய தலைமுறையைச் சித்தரிக்கும் சுல்தானாவும் இணைந்துள்ளார். மேலும், காஸா இனப்படுகொலைக்கு எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு (இடதுசாரிப் போராட்ட வரலாறு இல்லாமல்) தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நான்கு எம்.பி.களைச் சேர்த்துள்ள கோர்பினின் சுயாதீன கூட்டணியும் உள்ளது. இவர்களில் ஒருவரான அயூப் கான் எம்.பி., நடப்பிலுள்ள குப்பை சேகரிப்பாளர் வேலைநிறுத்தத்தின் போது பர்மிங்க்ஹாமின் வீதிகளை சுத்தப்படுத்த இராணுவத்தைப் பயன்படுத்தலாமா என தொழிற் கட்சியின் துணை பிரதமர் அஞ்சலா ரெய்னரிடம் கேள்வி எழுப்பி சர்ச்சை கிளப்பியவர்.

2017 மற்றும் 2019 பொதுத் தேர்தல் அறிக்கைகளில் கோர்பின் தலைமையில் முன்வைக்கப்பட்ட மிகவும் குறைந்த சமூக சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் சுருக்கமான ஒரு பொதுத் திட்டத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தொடக்கக் கட்சி மாநாட்டை நடைபெறச் செய்வதற்கு இந்த நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகரமானவை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எண்ணற்ற போலி-இடது போக்குகளால் இந்த முன்முயற்சிக்கு உடனடியாகவும் பொதுவான ஆதரவும் வழங்கப்படுவதால் இவற்றில் எதுவுமே மாற்றப்படப் போவதில்லை, அல்லது எதிர்காலத்தில் மாற்றப்படப் போவதுமில்லை. சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (RCP) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (SP) போன்ற குழுக்களின் பாத்திரமானது இந்தப் புதிய சீர்திருத்தவாத கட்சிக்கு உற்சாகமூட்டுபவர்களாகவும் வக்காலத்து வாங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள்தான் கோர்பினின் அரசியலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வார்கள், அதற்கு நேர்மாறாக அல்ல.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பிரச்சார அமைப்பாளர் ஃபியோனா லாலி, “ஜெர்மி மற்றும் ஜாரா”விற்கு விடுத்த ஒரு வேண்டுகோளில், புதிய கட்சியின் வேலைத்திட்டத்திற்கு புரட்சிகர ஆலோசனையை வழங்குவதாக கூறுகையில், “இப்போது வெறுமனே பின்னோக்கிப் பார்ப்பதற்கான நேரம் அல்ல” என்று வலியுறுத்தினார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டாம். இந்த புதிய கட்சியின் நடைமுறைத் தலைவரின் வரலாறு அவரது வலதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு முன்னால் தொடர்ச்சியான பின்வாங்கலில் ஒன்றாக உள்ளது என்பது தொழிலாள வர்க்கத்திற்கு அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தொழிற் கட்சியின் தலைவராக, கோர்பின் நேட்டோ அங்கத்துவம் மற்றும் பிரிட்டனின் அணு ஆயுதங்களைப் பராமரிப்பதற்கு உறுதிப்பாட்டுடன் இரண்டு தேர்தல்களில் பங்கேற்றார். அவரும் நிழல் சான்சிலர் ஜான் மெக்டொனெல்லும் லண்டன் நகரத்தில் ஆதரவைப் பெறும் “தேநீர் மற்றும் பிஸ்கட் தாக்குதலுடன்” தங்கள் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை இணைத்தனர், அதே நேரத்தில் தேசிய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் கோரிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்த தொழிற் கட்சி கவுன்சில்களுக்கு அறிவுறுத்தினர்.

“இடதுசாரி யூத எதிர்ப்பு” என்ற மாய வேட்டைக்கு எதிராக தனது ஆதரவாளர்களைப் பாதுகாக்க கோர்பின் மறுத்தது, இன்றுவரை பலியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு தாக்குதலுக்கு வழி வகுத்தது.

கோர்பின் ஒரு புதிய கட்சியை அறிவித்ததை வரவேற்று எழுந்த மக்கள் எழுச்சியைப் போலவே முன்பும் ஒரு பெரும் எழுச்சி இருந்தது - அதை இப்படித்தான் அவர் பயன்படுத்தினார்: 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் 600,000 பேர் குறிப்பாக அவரைப் பாதுகாக்கவும் பிளேயரிய வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடவும் தொழிற் கட்சியில் சேர பணம் செலுத்தினார்கள்.

கோர்பினின் பல ஆதரவாளர்கள் இன்று இந்த அனுபவங்களைக் குறிப்பிடும் அளவிற்கு, அவர்கள் எடுக்கும் ஒரே பாடம் என்னவென்றால் - கோர்பினின் நல்ல நோக்கங்கள் வலதுசாரிகளால் நாசப்படுத்தப்பட்டன என்பதும், தொழிற் கட்சியிலிருந்து சுதந்திரமான புதிய கட்சியில் அவரது திட்டங்களை இப்போது நிறைவேற்ற முடியும் என்பதும் மட்டுமே. இதனால்தான் சீரழிந்த சீர்திருத்தவாத கட்சிகளிலிருந்து பிரிந்த இதுபோன்ற இடதுகளில் தொழிலாளர்கள் அடைந்த கசப்பான அனுபவங்கள் மீது அதே வரலாற்று மறதியின் திரை இழுக்கப்படுகிறது: அதாவது ஸ்பெயினில் பொடெமோஸ், போர்த்துகலில் இடது கூட்டணி, ஆனால் முக்கியமாக கிரீஸில் சிரிசா.

2015இல் கோர்பின் இவ்வாறு வெளிப்படையாகக் கூறினார் - தொழிற் கட்சிக்கு தான் தலைமை ஏற்பதால் பிரிட்டனில் சிரிசா அனுபவத்தை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார். கிரீஸின் பழைய சமூக ஜனநாயகக் கட்சியான பாசோக்கின் சரிவை, தொழிற் கட்சியை ஒரு “சோசலிச” அமைப்பாக புத்துயிர் பெறச் செய்வதன் மூலம் பிரிட்டனில் தவிர்க்க முடியும் என்றார். இந்த முயற்சியில் கோர்பினை ஆதரித்த பிறகு, SWP, RCP மற்றும் SP இப்போது அறிவிக்கின்றன - தொழிற் கட்சிக்கு இடதுபுறம் ஒரு கட்சி இறுதியில் தேவைதான் என்றும், அதற்குத் தலைமை தாங்க வேண்டியவர் கோர்பின்தான் என்கின்றன.

சிரிசாவும் அதன் சர்வதேச சகபாடிகளும் தொழிலாள வர்க்கத்தின் மீது நாசகரமான தாக்குதல்களை நடத்தியுள்ள நிலைமைகளின் கீழ் அவை அவ்வாறு செய்கின்றன. ஐரோப்பிய நிதி மூலதனம் கோரிய சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதாக வாக்குறுதியளித்து 2015 இல் கிரீஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிசா, ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், அந்த மக்கள் ஆணையை முற்றிலுமாக காட்டிக்கொடுத்தது.

சோசலிஸ்ட் வொர்க்கரில் எழுதும் டோமாஸ் டெங்கெலி-ஈவன்ஸ் இவ்வாறு கூறுகிறார் - இந்தத் துரோகம் நிகழ்ந்ததற்குக் காரணம், சிரிசா “போராட்டத்தைக் கட்டியெழுப்புவதைவிட தேர்தலில் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை கொடுத்தது” என்கிறார். அதேசமயம், “சோசலிஸ்டுகள் தேர்தல் அரசியலைப் பயன்படுத்தி போராட்டங்களையும் இயக்கங்களையும் ஆதரிக்க வேண்டும், தொழிலாள வர்க்க மக்கள் திருப்பி தாக்கும் நம்பிக்கையை உயர்த்த வேண்டும்” என்கிறார்.

ஆனால் சிரிசாவுக்கு ஒரு பிரம்மாண்டமான மக்கள் “போராட்டம்” ஆதரவளித்தது. சிரிசா பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் அவரது நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் ஆகியோரால் இழிந்த முறையில் அழைக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய “இல்லை” வாக்கை ஆதரித்து நூறாயிரக்கணக்கானோர் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த மக்களின் அழுத்தமானது சிரிசாவின் தலைவர்களை இடதுபக்கத்திற்குத் தள்ளுவதற்கு வெகுதூரத்தில், அது கட்சியை ஏகாதிபத்தியத்துடன் எப்போதையும் விட உறுதியான கூட்டணிக்குள் தள்ளியது.

ஜூலை 2015 சர்வஜன வாக்கெடுப்புக்கு சற்று முன்னதாக ஏதென்ஸின் சின்டக்மா சதுக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பாரிய போராட்டம்

சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அதுபோன்ற அமைப்புகளின் நிலைப்பாடு என்னவென்றால் - தொழிலாளர்கள் இப்போது ஈடுபட்டுள்ள அனுபவத்தில் புரட்சியாளர்களும் கோர்பினின் புதிய கட்சியின் விமர்சனபூர்வ ஆதரவுப் பிரிவாக பங்கேற்க வேண்டும் என்பதே. தொழிற் கட்சியை சோசலிச கட்சியாக மாற்றும் கோர்பினின் திட்டத்தை ஐந்து ஆண்டுகள் ஆதரித்தும், புதிய சீர்திருத்தவாத அமைப்பை உருவாக்குமாறு அவரை நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் வற்புறுத்தியும் செலவிட்ட பிறகு, இப்போது பொதுத் தேர்தல் உட்பட இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு கோர்பினை ஆதரிப்பதாக உறுதியளிக்கிறார்கள்.

இது தொழிலாள வர்க்கத்தை கோர்பினின் சீர்திருத்தவாத அரசியலிலிருந்து புரட்சிகரமாக முறித்துக்கொள்ள தயார்படுத்துவதாகக் கருதப்படுகிறது. நேர்மையாகப் பின்பற்றப்பட்டாலும் கூட, இந்தப் புறநிலைவாத அணுகுமுறை தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் - அதாவது முதலாளித்துவ வர்க்கம் கொடூரமான பதில்தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது, வரவிருக்கும் ஆண்டுகளுக்கு கோர்பினால் தொழிலாளர்கள் செயலிழக்கச் செய்யப்படுவார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சியானது தொடர்ந்து வாதிட்டு வருவது போல், தொழிற் கட்சி சீரழிந்து டோரிகளைப் போலவே பிற்போக்குத்தனமான, அதேபோல் வெறுக்கப்படும் கட்சியாக மாறியது தவறான கருத்துக்களாலோ மோசமான தலைவர்களாலோ அல்ல. இது உலக முதலாளித்துவத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்களில் வேரூன்றியுள்ளது. உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி வளர்ச்சி, சரியும் இலாப விகிதங்கள், பொதுக் கடனால் தாங்கப்படும் அதிகப்படியான நிதிமயமாக்கல் ஆகியவை - முதலாளித்துவ இலாப அமைப்புமுறையைப் பாதுகாப்பதையும் அதே நேரத்தில் சீர்திருத்தங்களை வழங்குவதையும், அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, எந்த சாத்தியத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.

பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் உலகம் ஒன்றாகும், அதாவது மிகப்பெரும் செல்வந்தர்களின் தன்னலக்குழு உலக செல்வத்தின் இன்னும் அதிக சதவீதத்தை ஏகபோகமாக்கிக் கொண்டிருக்கிறது, ஏகாதிபத்திய சக்திகள் நிலப்பரப்பு மற்றும் வளங்களுக்கான போர்களுக்காக தங்கள் இராணுவங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களின் வீழ்ச்சியடையும் வாழ்க்கைத் தரமே இதற்குச் செலுத்த வேண்டிய விலையாகும், எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன, வலதுசாரிக் கட்சிகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

கோர்பினின் கட்சி முன்வைக்கும் எந்த சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் பொருளாதாரப் போர், தீவிர வலதுசாரி மற்றும் இராணுவ வன்முறை ஆகியவற்றின் கூட்டுத் தாக்குதலை எதிர்கொள்ளும். பிரதமர் கோர்பின் என்ற சாத்தியக்கூறு மட்டுமே - அப்போது பெரும்பான்மை பிளேயரிய நாடாளுமன்றக் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் - படுகொலை அச்சுறுத்தல்களையும் இராணுவப் புரட்சிப் பேச்சுகளையும் தூண்டப் போதுமானதாக அன்று இருந்தது.

ஆளும் வர்க்கம் வாழ்க்கைத் தரங்களின் அழிவு மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான எந்தவொரு சவாலுக்கும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக் கொண்டு பதிலளிக்கும். ஸ்டார்மர் அரசாங்கம் நூற்றுக்கணக்கான இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ததிலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கையைத் தடை செய்ததன் மூலமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெற்றியடைவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அணிதிரட்டல் —முக்கிய தொழில்துறைகளை தேசியமயமாக்குவது, பில்லியனர்களின் செல்வவளத்தைப் பறிமுதல் செய்வது மற்றும் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம் ஆகியவை அவசியமாகும்.

அத்தகைய இயக்கத்தைக் கண்டு மரணபயத்துடன் இருக்கும் கோர்பினும் அவரது புதிய கட்சியின் தலைமையும் சிரிசாவின் உதாரணத்தைப் பின்பற்றும்—அநேகமாக இன்னும் அதிக நிலைகுனிந்த பாணியில். SWP, RCP மற்றும் PS யின் பாத்திரம் இந்த அரசியல் உண்மைகளின் முன்னே தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாளர்களை நிலைமை குறித்து எச்சரிக்கவும் அவசியமான வேலைத்திட்டம் மற்றும் தலைமையுடன் அவர்களை ஆயுதபாணியாக்கவும் சாத்தியமான அனைத்தையும் செய்யும். நாங்கள் “உங்கள் கட்சிக்கு” வக்காலத்துவாங்குபவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் இருக்க மாட்டோம். அது நம்முடையது அல்ல. தலைமைக்காக தற்போது கோர்பினை நோக்கும் பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் நாங்கள் ஆற்றலுடன் ஈடுபடுவோம் மற்றும் ஒரு புரட்சிகர, சர்வதேசியவாத மற்றும் சோசலிச முன்னோக்கு மற்றும் கட்சியின் அவசியத்தை சுட்டிக்காட்டும் கடந்த தசாப்தம் மற்றும் அதற்கு அப்பாலான அடிப்படை வரலாற்று அனுபவங்களில் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஈடுபடுவோம்.

எங்கள் நோக்கமானது தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுக்கும் மற்றும் தோல்விக்கு இட்டுச் செல்லும் ஒரு கட்சிக்கான திறனற்ற பிரச்சாரத்தில் அதன் ஆற்றல்களைச் செலவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், வரவிருக்கும் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களுக்கான தயாரிப்பில் கோர்பினிய சீர்திருத்தவாதத்தின் மீதான மாயைகளை விரைவில் அகற்றுவதை உறுதிப்படுத்துவதுமாகும்.

Loading