மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க அரசாங்கம் உலக ஏகாதிபத்தியத்தின் மிகவும் கொடூரமான போர்க் குற்றங்களில் ஒன்றைச் செய்தது: அது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுக் குண்டுவீச்சுக்களாகும். ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945 இல் இடம்பெற்ற இந்த குண்டு வீச்சுக்களில், உடனடியாக கொல்லப்பட்ட 120,000 பேர்களுடன், 250,000 முதல் 300,000 பேர்கள் வரை இறந்தனர்.
இந்த மாதம் 6ம் திகதி, ஹிரோஷிமா குண்டுவீச்சுக்கு சர்வதேச அளவில் எந்தவிதமான நினைவுகூரலும் இல்லை. 9ம் திகதி சனிக்கிழமை, நாகசாகி குண்டுவீச்சுக்கு நினைவுகூரல் இருந்ததிற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆயினும்கூட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானையும் ரஷ்யாவையும் அணு ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்தி வருவதாலும், ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் அணு ஆயுதம் ஏந்திய நாடுகளுக்கு இடையே “அதிக தீவிரமான போருக்கு” தயாராகுமாறு அழைப்பு விடுப்பதாலும், இந்தப் போர்க்குற்றங்கள் பயங்கரமான சமகால முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மிகவும் சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அவை எங்கு இட்டுச் செல்கின்றன என்பது குறித்து உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும்.
ஆகஸ்ட் 6, 1945 அன்று, B-29 குண்டுவீச்சு விமானமான எனோலா கே, ஹிரோஷிமா மீது “சிறிய பையன்” என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியது. சுமார் 15,000 தொன் TNT சக்தியுடன் வெடித்த குண்டினால், உடனடியாக 80,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள், அணுக் குண்டு வெடிப்பால் ஆவியாகியோ, அல்லது அது கட்டவிழ்த்து விட்ட அதிர்ச்சி அலைகள் மற்றும் நெருப்புப் புயல்களாலோ கொல்லப்பட்டனர். இது அந்த நகரத்தையே தரைமட்டமாக்கியது. மூன்று நாட்களுக்குப் பின்னர், மற்றொரு பி-29 விமானமான போக்ஸ்கார், நாகசாகி மீது “கொழுப்பு மனிதன்” என்ற குறியீட்டுப் பெயருடன் வீசிய அணுகுண்டில், மேலும் 40,000 பேர்கள் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டனர்.
ஹிரோஷிமாவில் குண்டுவெடிப்பின் போது நகரத்தின் வெப்பநிலை பல ஆயிரம் டிகிரி செல்சியஸை எட்டியதால், பொதுமக்கள் கொடூரமான தீக்காயங்களுக்கு ஆளானதாக மருத்துவர்கள் சாட்சியமளித்தனர். ஒரு மருத்துவர் “உயிரோடு வேகவைக்கப்பட்டவர்கள் போல் தோன்றும் இறந்த மனிதர்களால் நிரப்பப்பட்ட நெருப்புக் குளங்களைக் கண்டேன்” என்று கூறினார். மற்றொருவர் தான் கண்ட காட்சியை பின்வருமாறு விவரித்தார்.
மனிதனின் உருவத்தில் ஒருவர் இருந்தார். ஆனால், அவர் முற்றிலும் நிர்வாணமாக, இரத்தக்கறை படிந்தவராக, சேற்றில் மூழ்கியிருந்தார். அவரது உடல் வீங்கியிருந்தது. அவரது வெற்று மார்பு மற்றும் இடுப்பில் இருந்து கந்தல்கள் தொங்கின. அவரது கைகள் அவரது மார்பில் வைக்கப்பட்டு, உள்ளங்கைகள் கீழே பார்த்திருந்தன. கந்தல்களிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. உண்மையில், கந்தல்கள் என்று நான் நினைத்தது மனித தோலின் துண்டுகள், நீர்த்துளிகள் என்பது மனித இரத்தம்தான். ... நான் எனக்கு முன்னால் இருந்த சாலையைப் பார்த்தேன். ஆடைகளற்று, வெந்து, எரிந்து, இரத்தக்களரியாக, எண்ணற்ற உயிர் பிழைத்தவர்கள் என் பாதையில் நின்றனர்.
ஒரு வாரத்திற்குப் பின்னர், தப்பிப்பிழைத்த பலர் அதிக காய்ச்சல் மற்றும் கதிர்வீச்சு நச்சுத்தன்மையால், இன்னும் அதிகம் அறியப்படாத நோயால், உட்புற இரத்தப்போக்கு ஆகியவற்றால் இறக்கத் தொடங்கியதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அணுகுண்டுகளிலிருந்து வந்த காமா கதிர்வீச்சு தப்பிப்பிழைத்தவர்களின் எலும்பு மஜ்ஜையைக் கொன்று புதிய இரத்த அணுக்களின் உற்பத்தியை முடிவுக்குக் கொண்டு வந்தது - இதனால் அவர்களின் இரத்தம் ஆபத்தான முறையில் மெல்லியதாகவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட இயலாததாகவும் மாறியது. உயிர்பிழைத்தவர்களில் பலர் பின்னர் புற்றுநோயால் இறந்தனர்.
ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்தக் குண்டு வீச்சுக்களை ஒரு யுத்தக் குற்றம் என கண்டனம் செய்தது. ஸ்ராலினிச முகவர் ரமோன் மெர்க்கடேரால் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1945 ஆகஸ்ட் 22 அன்று, சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கனன் நியூ யோர்க்கில் ஒரு நினைவிடத்தில் பேசினார். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வசித்தவர்கள், “வோல் ஸ்ட்ரீட்டின் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஜப்பானில் உள்ள இதேபோன்ற கும்பலுக்கும் இடையிலான ஒரு சண்டையின் காரணமாக இரண்டு தாக்குதல்களில் இறந்தனர்” என்று அவர் கூறினார். கனன் விடுத்த அந்த எச்சரிக்கை 1945 இல் போலவே இன்றும் உண்மையாக இருக்கிறது:
மனிதகுலத்துக்கு முன்னால் உள்ள மாற்றீடு என்பது சோசலிசமா அல்லது ஒரு புதிய காட்டுமிராண்டித்தனமா என்பதோடு, முதலாளித்துவம் அழிவில் இறங்கி, நாகரிகத்தை அதனுடன் இழுத்துச் செல்ல அச்சுறுத்துகிறது என்று நீண்ட காலத்திற்கு முன்பே புரட்சிகர மார்க்சிஸ்டுகள் கூறினார்கள். ஆனால், இந்தப் போரில் உருவாக்கப்பட்டு எதிர்காலத்திற்காகக் கணிக்கப்பட்டுள்ளவற்றின் வெளிச்சத்தில், ... இதற்கான மாற்றீட்டை இன்னும் துல்லியமாகக் கூற முடியும்: முதலாளித்துவம் இந்தக் கிரகத்தில் தொடர்ந்து உயிர்வாழ அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது மனிதகுலம் இந்தக் கிரகத்தில் தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமா என்பது ஒரு பிரச்சினையாகும்.
கனனின் கருத்துக்கள் இரண்டாம் உலகப் போரில் மட்டுமல்ல, மாறாக எழுந்து வந்த பனிப்போரிலும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஏகாதிபத்திய அல்லது ஸ்ராலினிச போர் பிரச்சாரகர்கள் வாதிட்டதைப் போல, உலகப் போரானது பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு போராக இருக்கவில்லை. முதலாம் உலகப் போரில் இடம்பெற்றது போலவே, முன்னணி முதலாளித்துவ சக்திகள் உலகை தமக்குள் மறுபங்கீடு செய்ய ஈவிரக்கமின்றி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அணுகுண்டுவீச்சுக்குப் பின்னால் உள்ள புவிசார் அரசியல் நலன்கள்: வாஷிங்டன் சோவியத் ஒன்றியத்தின் மீது “ஒரு தாக்குதலை” நடத்துகிறது
பல தசாப்தங்களாக, அணுகுண்டுவீச்சு “உயிர்களைக் காப்பாற்ற” நோக்கமாகக் கொண்டது என்றும், ஜப்பானை சரணடைய கட்டாயப்படுத்துவதற்கான ஒரே வழி அதுதான் என்றும் அமெரிக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பொய் கற்பிக்கப்பட்டது. இந்தக் கதை, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பொசுக்கப்பட்டதால், அமெரிக்கா தலைமையிலான ஜப்பான் மீதான தரைவழிப் படையெடுப்பில் இன்னும் பெரிய இரத்தக்களரி தவிர்க்கப்பட்டது என்று கட்டவிழ்த்துவிடப்பட்டது. உண்மையில் ஜப்பானிய இராணுவம், நேச நாட்டு கடற்படைகளால் இன்றைய இந்தோனேசியாவில் அதன் எண்ணெய் ஆதாரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்ததோடு, யப்பானிய நகரங்கள் இடைவிடாது குண்டுவீச்சுக்கு உள்ளாகிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், ஜப்பான் அப்போது சரணடைய முயன்று கொண்டிருந்தது.
ஜப்பானின் “ஊதா நிறக் குறியீட்டை” உடைத்த அமெரிக்க அதிகாரிகள், சோவியத் ஒன்றியத்திற்கான ஜப்பானிய தூதர் சாடோ நாவோடகே ஏற்கனவே மாஸ்கோவில் சரணடைதல் விதிமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தனர். ஜூன் 30, 1945 அன்று, ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோ போர் “விரைவாக நிறுத்தப்பட வேண்டும்” என்று விரும்புவதாகவும், ஆனால் “இங்கிலாந்தும் அமெரிக்காவும் நிபந்தனையற்ற சரணடைதலை வலியுறுத்தும் வரை” இது சாத்தியமில்லை என்றும் கிரெம்ளினிடம் கூற சாடோவுக்கு உத்தரவுகள் கிடைத்தன. போருக்குப் பிறகு வெற்றி பெற்ற நேச நாடுகள், உள்நாட்டில் புரட்சியைத் தடுப்பதற்காக, யப்பானிய பேரரசரின் குடும்பத்தை அதிகாரத்தில் விட்டுவிடும் என்ற உத்தரவாதங்களை டோக்கியோ விரும்பியது.
ஆனால் ஆகஸ்ட் 2, 1945 அன்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியன் இடையேயான போட்ஸ்டாம் ஒப்பந்தம் ஜப்பானின் “நிபந்தனையற்ற சரணடைதல்” கோரிக்கையை தக்க வைத்துக் கொண்டது. சீனாவில் 20 மில்லியன் உயிர்களைப் பலிகொண்ட ஒரு இனப்படுகொலை ஆக்கிரமிப்புப் போர் உட்பட, கொடூரமான ஜப்பானிய போர்க் குற்றங்களுக்குப் பின்னர் ஜப்பானிய பேரரசரை அதிகாரத்தில் வைத்திருக்க வாஷிங்டன் விரும்பவில்லை என்பது இதன் அர்த்தமல்ல. உண்மையில், போருக்குப் பிந்தைய அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள், இறுதியில் ஜப்பானில் பேரரசர் ஹிரோஹிட்டோவை அதிகாரத்தில் அமர்த்தியிருந்தனர். அதேநேரம், அமெரிக்க அதிகாரிகள் அணுகுண்டைப் பயன்படுத்தி சோவியத் ஒன்றியத்தை மிரட்டுவதற்கு இரக்கமற்ற தன்மையை எடுத்துக்காட்ட நோக்கம் கொண்டிருந்தனர்.
ஜூலை 17-ஆகஸ்ட் 2 போட்ஸ்டாம் மாநாட்டிற்கு அவர்கள் தயாராகி வந்தபோது, அமெரிக்க அதிகாரிகள் மாஸ்கோ மீது அதிகளவில் சீற்றம் கொண்டிருந்தனர். அப்போது உலகின் முன்னணி தொழில்துறை சக்தியாக இருந்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம், மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மீது மேலாதிக்கம் செலுத்தவும், சீனாவைக் கைப்பற்றவும், இந்தியாவில் பிரிட்டனின் சாம்ராஜ்யத்திற்கு போட்டியாக அதை ஒரு காலனியாக பயன்படுத்தவும் நோக்கம் கொண்டிருந்தது. கிழக்கு ஐரோப்பா மற்றும் ஈரானில் செம்படையின் போர்க்கால பிரசன்னமும், சீனாவில் ஜப்பானியப் படைகளுக்கு எதிராக அது தொடங்க இருந்த தாக்குதலும், அமெரிக்க நலன்களுக்கு கடுமையான தடையாக அமைந்தன.
ஜூலை 16, 1945 அன்று அமெரிக்க அணுகுண்டின் வெற்றிகரமான டிரினிட்டி சோதனை அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி ட்ரூமனை உற்சாகப்படுத்தியது. அவர் பின்னர் கூறியது போல், “இந்த இளைஞர்களைத் தோற்கடிக்க இது அவருக்கு ஒரு ஊக்கத்தை” அளித்தது. இந்தக் கருத்து, போட்ஸ்டாம் மாநாட்டிற்கு முன்னதாக பல மூத்த அமெரிக்க அதிகாரிகளின் கருத்தை எதிரொலித்தது.
ரஷ்யர்களை “சமாளிக்க வேண்டிய நேரம் இது” என்று போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சன், அப்போதைய ட்ரூமனின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜோர்ஜ் மார்ஷலுக்கு ஒரு குறிப்பில் எழுதினார். இது “மிகவும் கடினமான மற்றும் யதார்த்தமான முறையில்” செய்யப்படலாம், ஏனென்றால் “நாங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், தனித்துவமான ஒரு ஆயுதம் இதுவாகும்” என்று ஸ்டிம்சன் மேலும் கூறினார்.
ட்ரூமனின் குற்றவியல் அணுக் குண்டு முயற்சி, அமெரிக்கா உலக மேலாதிக்கத்தை நிறுவத் தவறிவிட்டது. தோற்கடிக்கப்பட்ட ஜப்பானிய இராணுவத்தின் ஆயுதங்களை வடக்கு சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் படைகளிடம் சோவியத் செம்படை ஒப்படைத்தது. இது 1949 சீனப் புரட்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாக மாறியது. மேலும், கிழக்கு ஐரோப்பா எங்கிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் எழுந்தன. சோவியத் துருப்புக்கள் ஈரானை விட்டு நீங்கிய அதேவேளை, வாஷிங்டன் அங்கு ஷாவின் குருதி கொட்டும் சர்வாதிகாரத்தை ஆதரித்த நிலையில், அந்த ஆட்சி 1979 ஈரானியப் புரட்சியால் தூக்கியெறியப்பட்டது.
எவ்வாறாயினும், ஒரு அணுஆயுத பேரழிவின் ஆபத்து 1945 முதல் மனிதகுலத்தின் மீது டமோக்கிள்ஸின் வாள் போல தொங்கிக் கொண்டிருக்கிறது. 1950-1953 கொரியப் போரில் வட கொரிய மற்றும் சீன துருப்புக்களுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்தனர். பல முறை, மிகவும் இழிபுகழ்பெற்றது என்னவென்றால், 1962 கியூப ஏவுகணை நெருக்கடியின் போது கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் மீது குண்டுவீச அமெரிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்தபோது, நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அணு ஆயுதப் போர் கிட்டத்தட்ட வெடிக்கும் நிலைக்கு வந்தது.
விரிவடைந்து வரும் மூன்றாம் உலகப் போரில் அணு ஆயுதங்கள்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கள் இடம்பெற்று எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், உலகம் மீண்டும் நேரடியாக அணுஆயுத போர் அபாயத்தை எதிர்கொள்கிறது. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, பனிப்போர் சகாப்தத்தின் புவிசார் அரசியல் மோதல்களை தீர்க்கவில்லை. மாறாக, இறுதியில் அவற்றை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், யூகோஸ்லாவியா மற்றும் சிரியா உட்பட நாடுகளுக்கு எதிராக 1991 இல் இருந்து தொடுக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான போர்கள், யூரேசியா மற்றும் உலகின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான ஒரு புதிய உலகப் போராக விரிவடைந்துள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழிக்க ட்ரூமன் முடிவு செய்தபோது, அவரது கவனத்திலிருந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த நாடுகளாகும்.
ஆனால் இன்று, உலகின் அனைத்து அணுஆயுத சக்திகளும் தங்கள் அணு ஆயுதக் களஞ்சியங்களை மேம்படுத்தவும், ஜப்பானில் வீசப்பட்ட குண்டுகளை விட பலமடங்குகள் ஆயுதங்களை வைத்திருக்கவும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகின்றன. அவர்களின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ICBM) பல போர்முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான டன் TNT சக்தியுடன் வெடிக்கின்றன. ஒரு நகரத்தின் மீது வீசப்பட்டால், ஒவ்வொரு ஆரம்ப வெடிப்பும் பத்தாயிரக் கணக்கானவர்களை அல்ல, மாறாக மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடும். ஆகவே விஞ்ஞானிகள், இப்போது ஒரேயொரு ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மட்டும், பிரான்ஸ் அளவிற்குப் பெரிய ஒரு நாட்டை அழிக்க முடியும் என்று கணிக்கின்றனர்.
பல தசாப்தங்களாக, தேசிய-அரசு அமைப்புமுறையின் பகுத்தறிவின்மை மற்றும் பிற்போக்குத்தனமான தன்மை என்பது, அது பரஸ்பர உறுதி செய்யப்பட்ட அழிவுக் (MAD) கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதன் மூலம் விளக்கப்பட்டது. இந்த வாதமானது, எந்தவொரு பெரிய அணு ஆயுத நாடும் மற்றொன்றை அச்சுறுத்தாது, ஏனெனில் ஒவ்வொன்றும் அணுக் குண்டுகளால் மற்றொன்றை அழிக்க முடியும் என்றளவுக்கு சென்றது. இருப்பினும், அணு ஆயுத பேரழிவு குறித்த பயம் இனி எந்த வகையிலும் ஏகாதிபத்திய சக்திகளை கட்டுப்படுத்தாது என்பது தெளிவாகிறது.
கடந்த வாரம், ரஷ்யாவை அச்சுறுத்த இரண்டு அணுஆயுதமேந்திய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவதாக அறிவித்ததன் மூலமாக, நேட்டோ-ரஷ்யா அணுஆயுதப் போரின் சாத்தியக்கூறை ட்ரம்ப் எடுத்துக்காட்டினார். புலனாய்வு பத்திரிகையாளர் பாப் உட்வார்டின் கணக்கின்படி, உக்ரேனில் ரஷ்யாவுடனான மூன்று ஆண்டுகாலப் போரின் பல்வேறு கட்டங்களில், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை அதிகமாக இருந்தது என்று அமெரிக்க-நேட்டோ உளவுத்துறை அதிகாரிகள் கணக்கிட்டனர். ஆயினும்கூட, ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களை நடத்த ஐரோப்பிய நாடுகள் உக்ரேனிய ஆட்சிக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளன.
இனப்படுகொலைக்கான பொறுப்பற்ற தன்மை ஆளும் தன்னலக்குழுவை ஆக்கிரமித்துள்ள நிலையில், அதன் பிரதிநிதிகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இடம்பெற்ற அணுக் குண்டுவீச்சை, அவர்கள் தீர்வு காண முடியாத அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில், பாரிய படுகொலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான ஒரு உதாரணமாக மகிழ்ச்சியுடன் திரும்பிப் பார்க்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், தனது வழக்கமான மறைமுகமான, மாஃபியா-பாணியிலான அச்சுறுத்தல்களுடன், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியதை ட்ரம்ப் பாராட்டினார். இது ட்ரூமன் அணுகுண்டைப் பயன்படுத்தியதை நினைவூட்டுவதாக அறிவித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:
இது மக்களுக்கு வேறு ஒரு நிகழ்வை நினைவுபடுத்தியது, ஹாரி ட்ரூமனின் உருவப்படம் இப்போது லாபியில், அது இருக்க வேண்டிய இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பல சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது, இன்னும் பல. அது நடந்தபோது, அது முற்றிலும் மாறுபட்ட பந்து விளையாட்டாக இருந்தது.
ஆனால், முதலாளித்துவ அரசாங்கங்கள் அணு ஆயுதங்களுடன் ரஷ்யாவுடன் ஆபத்தான சில்லி (ஒரு பங்கேற்பாளர் ஒரு தோட்டாவை ஒரு ரிவால்வரில் ஏற்றி, அதன் சிலிண்டரைச் சுழற்றி, தனது தலையில் தானே சுடுவது) விளையாட்டை விளையாடுகின்றன. முழு முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண நெருக்கடியின் மத்தியில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட எந்தவொரு குற்றத்திலும் அவை இறங்குவதுக்கு தயாராக உள்ளன.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதங்கள் வீசப்பட்ட எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மனித நாகரிகம் ஏகாதிபத்தியப் போரால் அழிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. முதலாளித்துவ தன்னலக்குழுவின் கைகளில் இருந்து அதிகாரத்தை எடுப்பதற்கும், ஏகாதிபத்தியப் போருக்கு மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு பாரிய சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.