மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வார இறுதியில் இங்கிலாந்தில் 530 க்கும் மேற்பட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பயங்கரவாத சட்டத்தின் (2000) கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். நான் பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” என்ற வாசக அட்டைகளை ஏந்தி அமைதியாக அமர்ந்திருந்து போராட்டம் நடத்தியதே போராட்டக்காரர்கள் செய்த குற்றமாகும்.
2ம் உலக யுத்தத்துக்கு பிந்தைய பிரிட்டனின் வரலாற்றில் இது மிக முக்கியமான பாரிய அரசியல் கைது நடவடிக்கையாகும். இது, சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் இனப்படுகொலைக்கான ஆதரவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சி அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்படும் ஒரு போலீஸ் அரசை நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.
தொழிற் கட்சியின் இந்த நடவடிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடுமாறு நாங்கள் கோருகிறோம். பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அடிப்படையாக இருக்கும் நேரடி நடவடிக்கைக்கு, போராட்டக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடையை அகற்றுவதற்கான சட்ட முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
பிரதமர் ஸ்டார்மரின் எதேச்சதிகார ஒடுக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டுமானால், தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு பாரிய அணிதிரட்டல் இருக்க வேண்டும். நாங்கள் இதற்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்:
- இந்த விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு உங்கள் பணியிடங்களிலும் சுற்றுப்புறங்களிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
- போலீஸ் ஒடுக்குமுறையை எதிர்த்தும், அதற்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை தயாரிப்பு செய்ய உறுதியளித்தும் தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுங்கள்.
- காஸா இனப்படுகொலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க நடவடிக்கையை, தொழிற்சங்க அதிகாரத்துவம் தடுப்பதை எதிர்ப்போம்.
கடந்த சனிக்கிழமை, “எங்கள் நியாயத்தை பாதுகாருங்கள்” என்ற அமைப்பு (Defend Our Juries) ஏற்பாடு செய்த போராட்டத்தின் மீதான தாக்குதல், கடந்த புதன்கிழமையே தொடங்கியது: குறிப்பாக, போராடும் உரிமை குறித்த ஆலோசனைகளை வழங்கிய இந்த அமைப்பின் வலைத்தளத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள், Zoom மூலம் இந்தக் குழு நடத்திய இணையவழி சட்ட விளக்க கூட்டமும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டது.
போராட்டம் இடம்பெற்ற கூட்டத்திற்குள் நுழைந்த போலீசார், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள “கைதிகள் சோதனைச் சாவடிகளுக்கு” மக்களை கால்நடையாகவோ அல்லது வாகனத்திலோ கொண்டு சென்றனர். “பாலஸ்தீன நடவடிக்கை அமைப்புக்கு ஆதரவாக இனி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், விவரங்களை உறுதிப்படுத்தக்கூடியவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களில் சக்கர நாற்காலியில் இருந்த ஒருவரும், இனப்படுகொலை “இனி ஒருபோதும் வேண்டாம்” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை ஏந்திய ஒரு யூத போராட்டக்காரரும் அடங்குவர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதில் ஒருவர் பார்வையற்றவராக இருந்தார்.
தேவைப்பட்டால் மேலும் கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஸ்கை நியூஸ் செய்தியின்படி, ஆண்கள் பகுதி சிறைச்சாலை நிரம்பிவிட்டதால், அதிக எண்ணிக்கையிலான கைதுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்துரையாட, ‘கொள்ளளவு தங்கம்’ என்று அழைக்கப்படும் சிறைச்சாலை சேவையில் உள்ள மூத்த தலைவர்கள் கூடினர்.
இதற்காக, லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரபரப்பான சிறைகளில் இருந்து 800 கைதிகள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.
அதிதீவிர வலதுசாரிகள் முழுமையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளனர்
இந்தப் போராட்டங்கள் லண்டனில் நடந்து கொண்டிருந்தபோது, கடந்த கோடையில் படுகொலைகளுடன் இடம்பெற்ற கலவரங்களால் உத்வேகம் பெற்ற அதிதீவிர வலதுசாரிகள், தஞ்சம் கோரும் மக்கள் தங்கியிருந்த கட்டிடங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
தடைசெய்யப்பட்ட தேசிய நடவடிக்கை என்ற அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்ற தேசபக்த மாற்றுக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவான நவ-நாஜிக்களின் தாய்நாடு என்ற கட்சியால் இந்த நிகழ்வு நியூனேட்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், புலம்பெயர்ந்தோர் “தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பு” என்ற கட்சியின் கொள்கையைக் கோரும் ஒரு பதாகை அங்கு பறக்கவிடப்பட்டிருந்தது. இது சமீபத்தில் குடியேறியவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவரும், அவர்கள் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், பெருமளவில் நாடுகடத்தப்படுவதற்கான ஒரு மறைமுகச் சொல்லாகும்.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சரீரத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், குற்றவியல் சேதத்தை ஏற்படுத்த அச்சுறுத்தியதற்காக ஒரே ஒரு நபர் மட்டுமே கைது செய்யப்பட்டார்.
“மக்கள் கோபமாக உள்ளனர்” என்ற விளக்கக் கூற்றுடன், அதிதீவிர வலதுசாரிகளுக்கு அனுதாபங்களை வெளிப்படுத்தி வெளிவந்த ஒருதொகை கட்டுரைகளே இதற்கு பத்திரிகைகளின் விடையிறுப்பாக இருந்தது.
இனப்படுகொலை, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் ஒரு போலீஸ் அரசு
இது, போலீஸ் மற்றும் ஊடகங்களின் இரட்டை அணுகுமுறை விடயம் அல்ல, மாறாக ஒரு பொதுவான வலதுசாரிகளின் அணுகுமுறையாகும்: இது, போர் எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளுக்கு கடுமையான விரோதம் மற்றும் தேசியவெறியர்களின் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்திற்கான ஆதரவாகும்.
தஞ்சம் கோருவோருக்கு எதிரான மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரசாங்கம், தீவிர வலதுசாரிகளின் கூச்சலுக்கு மத்தியில், தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகளை உடனடியாக நாடு கடத்தும் திட்டத்தை அறிவித்தது.
கடந்த தேர்தலில், நெருக்கடியில் சிக்கித் தவித்த பழமைவாதிகளால் முடியாத நடவடிக்கைகளைத் திணிக்க முடியும் என்ற வாக்குறுதியின் பேரில் தொழிற்கட்சி, ஆளும் வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றது: குறிப்பாக இந்த வாக்குறுதிகளானது, காஸா இனப்படுகொலைக்கான தொடர்ச்சியான ஆதரவு, உக்ரேனில் இடம்பெற்றுவரும் நேட்டோவின் போர், ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், மேலும் இந்த இராணுவ வெறியாட்டத்தைத் தூண்டுவதற்கான இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக அதிகரித்தல்; இதற்கு தேவையான நிதியைப் பெறுவதற்காக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போரை நடத்துதல் ஆகியவைகளாகும்.
பிரிட்டிஷ் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு உயிர்நாடியான இந்த பிற்போக்கு செயற்பட்டியலில் இருந்து அவர்கள் பின்வாங்கப் போவதில்லை. இதை ஜனநாயக முறையில் தொடர முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஜெர்மி கோர்பினின் ஆதரவாளர்களை வேட்டையாடும் “இடது யூத-எதிர்ப்புவாதத்தில்” பயிற்சி பெற்ற முன்னாள் பொது வழக்குரைஞரும், இயக்குனருமான பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது தலைமைக் குழு, ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் பாதையை துடைத்தழிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அரசாங்கம் உடந்தையாக இருக்கும் ஒரு இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்காரர்களை துன்புறுத்துவது அனைத்து இடதுசாரி அரசியல் நடவடிக்கைகள் மீதான ஒரு தாக்குதலின் முன்னணியாக ஆக்கப்படும்.
போரை நிறுத்து கூட்டணி, பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் மற்றும் அணுஆயுத ஒழிப்புக்கான பிரச்சாரம் ஆகிய அமைப்புக்களின் தலைவர்கள் மீது பொது ஒழுங்கு குற்றங்களுக்காக நடந்து வரும் வழக்குகளுடன் சேர்ந்து, அரசியல் தலைவர்களின் மேலதிக கைதுகளும் இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்றன. போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் குவாண்டனாமோ விரிகுடா வதைமுகாமில் பாதிக்கப்பட்டவரும், தற்போது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் CAGE இன் அவுட்ரீச் இயக்குநருமான மோஸாம் பெக்கும் இடம்பெறுகிறார். சோசலிச தொழிலாளர் கட்சியின் மூத்த பிரமுகரான சார்லி கிம்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசின் அடக்குமுறையை சிறுமைப்படுத்துவதை நிராகரி!
இந்த அரசியல் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில், நோவாரா மீடியா போன்ற அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் அப்பாவித்தனம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களின் தலைப்புக் கட்டுரை, “பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பின் மீதான தடையை மீறும் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்ய பொலிஸ் தவறிவிட்டது, இது செயல்படுத்த முடியாதது” என்று அறிவித்தது.
உண்மையில், சுலோக அட்டைகளை ஏந்தியவர்களில் பெரும்பான்மையானவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜூலை தொடக்கத்தில் “பாராளுமன்றங்களின் தாய்” என்று அழைக்கப்படும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் மூலம் இந்த தடைக்கு பெரும்பான்மையாக வாக்களிக்கப்பட்டதில் இருந்து மொத்தமாக 700 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட மனசாட்சியின் தனிமனித போராட்டங்களின் கூட்டுச் செயல்கள், பிரதமர் ஸ்டார்மரின் அரசியல் போலீஸை வெல்ல முடியாது.
அரசாங்கத்தின் அடக்குமுறையின் தீவிரத்தன்மையை நமது நியாயத்தை பாதுகாத்தல் அமைப்பினர் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்கள் மீது முதல் வழக்குத் தொடரப்பட்டதை “அச்சுறுத்துவதற்கான பலவீனமான முயற்சிகள்” என்று அது விவரித்தது. அவை, பிரிவு 13 இன் கீழ் மேற்கொள்ளப்பட்டதால், பிரிவு 12 ஐ விட அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முதலாவதாக, அனைத்து வழக்குகளும் பிரிவு 13 இன் கீழ் தொடரப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் ஆகஸ்ட் 7ம் தேதி 58 பேர் 12வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அறிவித்தனர்.
இரண்டாவதாக, பயங்கரவாதக் குற்றச்சாட்டில் எந்தவொரு தண்டனையும் வேலை வாய்ப்புக்களை கடுமையாகப் பாதிக்கிறது. இதில், கல்வித் துறையில் பணியாற்றுவதும் அமெரிக்காவிற்கும் இதர நாடுகளிற்கும் பயணிக்கும் திறனை முடிவுக்குக் கொண்டுவருவதும் அடங்கும்.
மிக அடிப்படையில், இந்தக் கைதுகள் அரசியல் அடக்குமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகின்றன. இதன் காரணமாக, முன்னர் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கண்டனம் செய்யப்பட்ட அனைத்து இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இது வர்க்கப் போராட்டம்! தார்மீக அழுத்தம் அல்ல!
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எங்கள் நியாயங்களை பாதுகாப்போம் போராட்டத்தின் ரோஜா நிற சித்தரிப்புகள், அதே நாளில் சில நூறு மீட்டர்கள் தொலைவில், அதே நகரத்தில் நடத்தப்பட்ட காஸா இனப்படுகொலைக்கு எதிரான 300,000 பேர் பங்கேற்ற தேசிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு அரசியல் மூடுதிரையை வழங்குகின்றன.
பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சார அமைப்பின் பென் ஜமால் மற்றும் போரை நிறுத்து கூட்டணியின் லிண்ட்சே ஜேர்மன் போன்ற மேடையில் இருந்த பேச்சாளர்கள் “வெட்கக்கேடான” பெருந்திரளான கைதுகளைக் கண்டித்ததுடன், வாய்மொழியாக “ஐக்கியத்தை” தெரிவித்தனர். ஆனால் இவர்கள், தார்மீக ரீதியாக உணர்ச்சி மரத்துப்போன ஸ்டார்மருக்கு வழக்கமாக வழங்கும் தார்மீக அழுத்தத்தைத் தவிர, தொழிற்கட்சி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த வேலைத்திட்டத்தையும் வழங்கவில்லை.
தொழிற்சங்க அதிகாரத்துவம், தொழிற்கட்சி “இடதுகள்” மற்றும் புதிய கோர்பைனைட் கட்சி ஆகியவற்றின் முற்றிலும் செயலற்ற தன்மையை மன்னிக்க அவர்கள் எதுவும் கூறவில்லை. “இனப்படுகொலைக்கு எதிராகப் போராடும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தும் ஒரு அறிக்கையுடன் புதிய கோர்பைனைட் கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், அதன் 750,000 பேர் கொண்ட பதிவுப் பட்டியலைத் திரட்டுவதற்கு அது எதுவும் செய்யவில்லை.
இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீதான ஒடுக்குமுறையை ஆழப்படுத்தும் நோக்கில் ஸ்டார்மரின் போலீஸ் பாரிய கைதுகளுக்கு தயாரிப்பு செய்து வருவதாக சோசலிச சமத்துவக் கட்சி சனிக்கிழமைக்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்தது. தொழிற் கட்சியின் ஒடுக்குமுறையில், ஆபத்தில் இருக்கும் முக்கிய வர்க்க நலன்கள் பற்றிய ஒரு புரிதலை நாங்கள் அடித்தளமாகக் கொண்டிருந்தோம்: அதாவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெளிநாடுகளில் அதன் எதிரிகள் மீதும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதும் போர் தொடுக்கும் திறனாகும்.
பாலஸ்தீனீயர்களைப் பாதுகாக்கும் இயக்கம் உலகெங்கிலும் பலம் பெற்று வருகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகின்ற மற்றும் இனப்படுகொலைக்கான எதிர்ப்பைச் சட்டவிரோதமாக்கி வருகின்ற அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையிலான அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இதே கவலைகள் உந்துதலளிக்கின்றன. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும், கிரேக்கம் முழுவதும் பேரணிகளும் இடம்பெற்றன.
பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பின் மீதான தடைக்கு விடையிறுப்பாக சோசலிச சமத்துவக் கட்சி எழுதியதைப் போல, “அடிப்படை ஜனநாயக உரிமைகள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டம் ஆகியவை, போராட்டத்தின் ஒரு புதிய அச்சான சோசலிச சர்வதேசியத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.”
இதன் பொருள், “தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் அமைப்புகளால் நடத்தப்படும் ஸ்டார்மர் அரசாங்கத்திற்கு எதிரான, திட்டமிட்ட தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரள்வு, மற்றும் உண்மையான சோசலிச அடித்தளங்களின் மீது ஒரு புதிய தொழிலாளர் கட்சியை, சோசலிச சமத்துவக் கட்சியை அவசரமாகவும் அவசியமாகவும் உருவாக்குவதாகும்”.