முன்னோக்கு

ட்ரம்ப்-புட்டினின் அலாஸ்கா உச்சிமாநாடும் அமெரிக்க புவிசார் மூலோபாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று அலாஸ்காவின் கூட்டுப் படைத் தளமான எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சனில் சந்தித்தார். [AP Photo/Julia Demaree Nikhinson]

கடந்த வெள்ளிக்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான ட்ரம்பின் அலாஸ்கா உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய ஐரோப்பிய சக்திகளின் தலைவர்களும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான அவசர சந்திப்புகளுக்காக வாஷிங்டன் நோக்கி சென்றுள்ளனர். ட்ரம்ப் புட்டினை அன்புடன் அரவணைத்து உக்ரேனில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த அழைப்பு விடுத்த அலாஸ்கா சந்திப்பு, ஐரோப்பா முழுவதும் ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஜேர்மன் சான்சிலர் பிரெடெரிக் மெர்ஸ், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், இத்தாலிய பிரதம மந்திரி ஜோர்ஜியா மெலோனி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோர் கலந்து கொண்டனர். உக்ரேன் போருக்கான அமெரிக்க ஆதரவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைப்பதை நோக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அவர்கள், ட்ரம்ப் திடீரென தங்கள் முழு நடவடிக்கையையும் இழுத்துவிடுவதைத் தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

திங்கட்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஊடகங்களிலும் அதிகாரிகளிடையேயும் இடம்பெற்ற விவாதம், ஒரு சாத்தியமான ஒப்பந்தம் உக்ரேனுக்கான பிணைப்பு “பாதுகாப்பு உத்தரவாதங்களை” உள்ளடக்குமா என்பதையும், அதே நேரத்தில், உக்ரேன் ரஷ்யாவிடம் தனது பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதையும் மையமாகக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் CNN தொலைக்காட்சியிடம், நேட்டோவின் பரஸ்பர பாதுகாப்பு பிரிவைக் குறிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்கு “பிரிவு 5 போன்ற பாதுகாப்பை” விரிவுபடுத்த அனுமதிப்பதற்கு ரஷ்யா முதல் முறையாக ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

ஜெலென்ஸ்கி இதை “ஒரு வரலாற்று முடிவு” என்று அழைத்தார். மேலும் X இல் எழுதுகையில், ஐரோப்பாவின் முழு பங்கேற்புடன் “தரையிலும், வான்வழியிலும், கடலிலும் பாதுகாப்பு” உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று எழுதினார். அதேநேரத்தில், தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் இல்லாத டோன்பாஸ் பிராந்தியத்தின் பகுதிகள் உட்பட பிராந்தியங்களை கியேவ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற புட்டினின் கோரிக்கையை ஆதரித்ததன் மூலமாக, ட்ரம்ப் உக்ரேன் மற்றும் பிரதான ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து வேறுபட்டுள்ளார்.

அப்படி ஒரு மாற்றம் வரப்போகிறது என்பது சில காலமாகவே தெளிவாகத் தெரிந்தது. அலாஸ்கா உச்சிமாநாடு இதனை உத்தியோகபூர்வமாக்கியது. இதற்கு, ஐரோப்பிய தலைநகரங்களில் ஏற்பட்டுள்ள எதிர்வினை வெறித்தனத்தின் விளிம்பிற்கு சென்றுள்ளது. உக்ரேன் தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளைச் சந்தித்துள்ளது என்பதன் மூலம் இது அதிகரித்துள்ளது. அவர்கள் பகிரங்கமாக என்ன அறிவித்தாலும், அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் உக்ரேனில் போர் தொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும் என்பதே உண்மை. ஜனநாயகக் கட்சியின் பைடென் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு கொள்கையான, ரஷ்யாவை நோக்கிய வாஷிங்டனின் மூர்க்கமான விரோதத்தால் நேட்டோ கூட்டணி இதுவரையில் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், அமெரிக்காவின் நலன்கள் முன்னுரிமை பெற வேண்டும் என்று கருதிய அதிதீவிர வலதுசாரிகளின் “அமெரிக்கா முதலில்” பாரம்பரியத்திற்கு புத்துயிரூட்டும் ட்ரம்ப், பசிபிக் போரையும் சீனாவுடனான மோதலையும் நோக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அடுக்குகளுக்காகப் பேசுகிறார். இந்தக் கண்ணோட்டத்தை அவர் ஐரோப்பிய சக்திகளுக்கு எதிரான சுங்க வரி மற்றும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளுடன் இணைத்துள்ளார். இந்தப் பிரிவினருக்கு, உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடனான மோதலில் இருந்து விலகுவது சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது: குறிப்பாக, ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள முக்கிய ஆதார வளங்களை அணுகுவதைப் பாதுகாப்பது, பெய்ஜிங் உடனான மாஸ்கோவின் கூட்டணியை தளர்த்துவது, மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்துவது ஆகியவைகளாகும்.

ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள் கிஸ்ஸிங்கரின் மூலோபாயத்தை “தலைகீழாக” மாற்றுவதுபற்றி கலந்துரையாடியுள்ளனர். சீனாவின் பொருளாதார எழுச்சியை எதிர்கொண்டு, 1970 களில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர், சோவியத் யூனியனுக்கு எதிராக சீனாவுடன் கூட்டணி வைப்பதற்காக முன்வைத்த கொள்கையைத்தான், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள், இப்போது தலைகீழாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். “ஒரு ‘தலைகீழ் கிஸ்ஸிங்கர்’?” என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில், அமெரிக்கன் நிறுவன சிந்தனைக் குழாம் சீனாவிற்கு எதிராக ரஷ்யாவுடன் கூட்டணி வைக்கும் முயற்சிகளை ஆதரித்தது. ஆனால், உக்ரேன் போர் புட்டினை வெல்வதற்கு ஒரு தடையாக இருந்தது என்று அது குறிப்பிட்டது. மேலும் அது பின்வருமாறு குறிப்பிட்டது:

உக்ரேனில் நடந்துவரும் போரினால் மாஸ்கோவும் பெய்ஜிங்கும் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் உறவுகளை மீண்டும் நிறுவுவது என்பது சீன-ரஷ்ய ஒருங்கிணைப்பை மெதுவாக்கக்கூடும் — அத்துடன் பெய்ஜிங்கைக் கட்டுப்படுத்துவதில் மாஸ்கோவை ஒரு பங்காளியாக கூட ஆக்கக்கூடும். இந்த அபிலாஷை போற்றத்தக்கது. … அது பலனளிக்கவில்லை, ஏனென்றால் புட்டின் உக்ரேனை விழுங்குவதில் உள்ள ஆர்வத்தை காட்டிலும் ஸ்திரத்தன்மையில் குறைவான ஆர்வத்தை காட்டினார்.

அதேநேரத்தில், ரஷ்யாவை நோக்கிய வாஷிங்டனின் கொள்கையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் அமெரிக்க அரசு எந்திரத்திற்குள் கடுமையான மோதல்களைத் தூண்டும். ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளைப் பொறுத்த வரையில், ரஷ்யாவின் தோல்வி என்பது அதனுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. உக்ரேன் போருக்கு பெரும் தொகைகளைக் கொட்டிய பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், மாஸ்கோவிற்கு சலுகைகளை வழங்குவதானது, சீனாவுடனான பரந்த மோதலை பலவீனப்படுத்தும் என்று அவை காண்கின்றன.

வாஷிங்டனை நோக்கி குவிந்து வரும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள், பாதையை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் கால அவகாசம் கிடைக்கும் என்று நம்பி, ட்ரம்புக்கு நேரடியாக அழுத்தமளிக்க மட்டும் முனைந்து வரவில்லை. மாறாக, நேட்டோ போர் உந்துதலில் இருந்து எந்தவொரு பின்வாங்கலையும் தடுக்க, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் கூட்டாளிகளை அணிதிரட்டவும் அவர்கள் முனைந்து வருகின்றனர்.

நிலைமை எப்படியிருந்தாலும், சில அடிப்படைப் பிரச்சினைகள் வலியுறுத்தப்பட வேண்டும். முதலாவதாக, உக்ரேன் மீதான ட்ரம்பின் மாற்றம் என்பது ஒரு “சமாதானத்திற்கான கொள்கை” அல்ல. காஸா இனப்படுகொலைக்கும் ஈரான் மீதான குண்டுவீச்சுக்கும் அவர் அளித்த ஆதரவானது, இதைத் தெளிவாக்குகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் பிளவுகள், உலக மேலாதிக்கத்திற்கான ஒரு பகிரப்பட்ட திட்டத்துடன் தொடர்புடைய தந்திரோபாய பிரச்சினைகளை மையமாகக் கொண்டுள்ளன.

இரண்டாவதாக, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் உலகப் போர் மற்றும் தீவிரமடைந்து வரும் மோதல்களின் கட்டமைப்பிற்குள் ட்ரம்பின் சூழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மோதலுக்கான செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதலின் மூலம் திணிக்கப்படும்.

ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் மீள் இராணுவமயமாக்கலின் ஒரு பரந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதற்கு, மீதமுள்ள சமூகப் பாதுகாப்புகளை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், டிரில்லியன் கணக்கான டாலர்களை இராணுவக் கட்டமைப்பிற்குள் திருப்பிவிடுவதன் மூலமும் மட்டுமே நிதியளிக்க முடியும். அமெரிக்காவில், ட்ரம்ப் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு சமூக எதிர்ப் புரட்சி மற்றும் சர்வாதிகாரத்தை முன்னெடுத்து வருகிறார். மேலும், பணக்காரர்கள் குவித்துவரும் செல்வக் குவிப்பு மீதான ஒவ்வொரு தடையையும் அவர் தகர்த்து வருகிறார். அவரது கணக்கீடுகளின் ஒரு அம்சம், சந்தேகத்திற்கு இடமின்றி, இராணுவ வளங்களை இலத்தீன் அமெரிக்காவில் உள்ள “அருகிலுள்ள நாடுகளை” நோக்கி திருப்பிவிட வேண்டியதன் அவசியத்தையும், அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராகவும் உள்ளது.

மூன்றாவதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உச்சிமாநாட்டில் ட்ரம்பைப் புட்டின் தொடர்ந்து புகழ்ந்து பேசியது ரஷ்ய அரசாங்கத்தின் ஆழமான பிற்போக்குத்தனமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புட்டினின் கேலிக்கூத்தான முகஸ்துதி, ஆகஸ்ட் 1939 இல், ஸ்டாலின்-ஹிட்லர் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை முடிவுக்கு வந்தபோது, ஹிட்லருக்கு ஸ்டாலின் இழிவார்ந்த சிற்றுண்டி வழங்கியதை நினைவூட்டுகிறது: “ஜேர்மன் தேசம் அதன் ஃபியூரரை (நாஜித் தலைவர் - Führer) எந்தளவுக்கு நேசிக்கிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் அவரது உடல்நலத்திற்காக குடிக்க விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார். ஒரு வாரத்திற்குள், இரண்டாம் உலகப் போர் வெடித்தது; இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹிட்லர் 27 மில்லியன் சோவியத் மக்களின் உயிர்களைப் பலியெடுத்த, சோவியத் ஒன்றியத்தின் மீதான தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கினார்.

ஸ்டாலினைப் போலவே, புட்டினும் தொழிலாள வர்க்கத்தை பேரழிவிற்குள் தள்ளும் ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியத்துடன் நாடுகிறார். பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பானது, கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கம் மற்றும் உக்ரேன் மீது பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததன் மூலமாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்டது. எவ்வாறிருப்பினும், இப்படையெடுப்பு தனது சொந்த நலன்களை பாதுகாக்கும் ஒரு முதலாளித்துவ அரசின் நடவடிக்கையாக இருந்தது. இது, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்ய அல்லது உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதுடன் பொதுவானதாக எதையும் கொண்டிருக்கவில்லை.

புட்டினின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தன்மை, ஹங்கேரியில் விக்டர் ஓர்பன், பிரான்சில் மரின் லு பென்னின் தேசிய பேரணிக் கட்சி மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள அதிதீவிர வலதுசாரி சக்திகளுடன் அவர் இணைந்து செயல்படுவதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இப்போது நடந்து வரும் இந்த மறுசீரமைப்பால் இந்த அதிதீவிர வலதுசாரி சக்திகள் பலப்படுத்தப்படுவர்.

வாஷிங்டனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவு நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால், உலகை பேரழிவை நோக்கித் தள்ளும் அடிப்படைப் போக்குகள் நீடிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு இல்லாமல் இந்த நெருக்கடிக்கு எந்த முற்போக்கான தீர்வும் இருக்கப் போவதில்லை.

“எனது எதிரிக்கு எதிரி எனது நண்பன்” என்ற சந்தர்ப்பவாத மந்திரத்தை ட்ரொட்ஸ்கிச இயக்கம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. ட்ரம்பின் சூழ்ச்சிகளோ, அல்லது ஐரோப்பிய சக்திகளின் சூழ்ச்சிகளோ, அல்லது புட்டினின் பிற்போக்குத்தனமான கணக்கீடுகளோ ஒரு முன்னோக்கிய பாதையை ஒருபோதும் வழங்கப் போவதில்லை. இனப்படுகொலை, சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு, அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் முகவர்களுக்கு எதிராக சமரசமின்றி போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான, சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் அவசியமாகும்.

Loading