மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வேலைநிறுத்த உரிமையை திறம்பட ஒழித்துக்கட்டுவதற்கான கனேடிய ஆளும் வர்க்கத்தின் உந்துதலுக்கு சவால் விடும் ஒரு துணிச்சலான நடவடிக்கையில், 10,500 ஏர் கனடா விமானப் பணியாளர்கள் மத்திய கூட்டாட்சி தாராளவாத அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் உத்தரவை மீறி வருகின்றனர்.
அரசாங்கத்தையும் முதலாளித்துவ “சட்டம் மற்றும் ஒழுங்கையும்” தொழிலாளர்கள் மீறுவதானது, உலகளவில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைவதை கட்டியம் கூறுகிறது. வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதல் மூலமாக உலகை பொருளாதார ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் மறுபங்கீடு செய்வதற்கு, தொழிலாள வர்க்கத்தின் முதுகில் நடத்தப்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியானது, தொழிலாள வர்க்கத்தை பாரிய போராட்டத்திற்குள் தள்ளுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட தலைவரான முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னேயின் கீழ், தாராளவாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள், ஒரு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்க இயக்கம் அரசாங்கத்தின் கட்டளையை சவால் செய்து, அதை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.
விமானம் புறப்படுவதற்கு முன்பும் தரையிறங்கிய பிறகும் செய்த வேலைக்கு ஏர் கனடா விமான நிறுவனம் பணம் கொடுக்க மறுப்பதை எதிர்த்தும், —மாதத்திற்கு சராசரியாக 35 மணிநேர ஊதியம் இல்லாத உழைப்பு— 2015 ஆம் ஆண்டு கனேடிய பொது ஊழியர் சங்கம் (CUPE) கட்டாயப்படுத்திய பத்து வருட ஒப்பந்தத்தின் கீழ் விதிக்கப்பட்ட உண்மையான ஊதியங்கள் பல ஆண்டுகளாக வீழ்ச்சியடைவதை எதிர்த்தும், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு விமானப் பணியாளர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வேலைநிறுத்தம் தொடங்கி 12 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், தொழில் அமைச்சர் பாட்டி ஹஜ்டு (Patty Hajdu) சட்டப்பிரிவு 107 ஐப் பயன்படுத்தினார். இந்தப் பிரிவு, ஒரு தெளிவற்ற கனடா தொழிலாளர் சட்ட விதியாகும். அரசாங்கம் சமீபத்தில் பாராளுமன்றத்தை புறக்கணித்து, ஒருதலைப்பட்சமாக வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கும் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்தது. அரசாங்கத்தின் கற்பனையான மறுவிளக்கத்தின்படி, வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், நடுவர் தீர்ப்பை விதிக்கவும் தேர்ந்தெடுக்கப்படாத கனேடிய தொழில்துறை உறவுகள் வாரியத்திற்கு (CIRB) ஹஜ்டு உத்தரவிட்டார்.
முதலில் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இப்போது கார்னேயின் கீழ், தாராளவாத அரசாங்கம் கடந்த பன்னிரண்டு மாதங்களில் தொழிலாளர் வேலை நடவடிக்கையை சட்டவிரோதமாக்க பிரிவு 107 ஐ மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளது. முன்னர் இலக்கு வைக்கப்பட்டவர்களில் இரயில்வே தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் 55,000 கனடா தபால் தொழிலாளர்களும் அடங்குவர். முந்தைய எல்லா சந்தர்ப்பங்களிலும், CUPE உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவ கருவிகள் வேலைநிறுத்தத் தடைகளைச் செயல்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டன.
இந்த முறை, CUPE தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் அரசாங்கத்தின் பணிக்குத் திரும்பும் உத்தரவை மீறுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதிற்கான காரணம், போர்க்குணமிக்க, சீற்றமடைந்த, சாமானிய தொழிலாளர்கள் மீதான அனைத்து நம்பகத்தன்மையையும், அரசியல் கட்டுப்பாட்டையும் அவர்கள் இழக்க நேரிடும் என்ற அச்சமாகும். 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட வேலைநிறுத்த நடவடிக்கைக்கான வாக்களிப்பில், 99 சதவீத ஏர் கனடா விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கனடா தொழில்துறை உறவுகள் வாரியமானது இப்போது உத்தியோகபூர்வமாக தொழிலாளர்களின் பிரிவு 107 வேலைநிறுத்த உத்தரவை மீறுவதை சட்டவிரோத வேலைநிறுத்தமாக அறிவித்துள்ளது. இது அரசாங்கம் மற்றும்/அல்லது ஏர் கனடா வேலைநிறுத்தத்திற்கு எதிராக நீதிமன்ற தடையாணைகளைப் பெறுவதற்கான வழியைத் தெளிவாக்குகிறது. இதன் மூலம் தனிப்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் CUPE ஆகியோர் கடுமையான அபராதங்களுக்கு ஆளாக நேரிடும். தொழிற்சங்கத் தலைவர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
அரசாங்கத்திற்கும் ஏர் கனடா விமானப் பணியாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதல், ஆளும் முதலாளித்துவ உயரடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ள சமரசப்படுத்த முடியாத மோதலை வெளிப்படுத்துகிறது. இது கனடாவிலும் உலகளவிலும் கொதி நிலையை அடைந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கனேடிய ஆளும் வர்க்கமும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஊக்குவிக்கும் “தேசிய ஒற்றுமை” என்ற பொய்யை விமான சிப்பந்திகளின் மீறல் தகர்த்தெறிந்துள்ளது.
2025 முழுவதும், உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கை ஒரு மோசமான தேசியவாத, கொடி அசைக்கும் பிரச்சாரத்தால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தொழிற்சங்க எந்திரம், சமூக-ஜனநாயக புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் போலி-இடதுகள் அனைவரும் ஆளும் வர்க்கத்தின் “கனடா அணி” க்குப் பின்னால் அணிதிரண்டு, “அனைத்துக் கனேடியர்களும்” நாட்டை “காப்பாற்ற” ஒன்றுபடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
பாரம்பரிய அமெரிக்க-கனடா கூட்டாண்மையை ட்ரம்ப் நிராகரித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, கனேடிய ஆளும் வர்க்கத்தின் மூலோபாயத்தை உருவாக்கும் பணியில் மூத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் பிரதமரின் கனடா-அமெரிக்க உறவுகள் கவுன்சிலில் இணைந்துள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்க, சீன மற்றும் பிற தொழிலாளர்களை இலக்கு வைத்து பழிவாங்கும் சுங்க வரிகளை ஆதரிக்க முழு தொழிற்சங்க எந்திரமும் அணிதிரட்டப்பட்டுள்ளது.
ஏர் கனடா விமான வேலைநிறுத்தம் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டுவதைப் போல, தேசியவாதக் குழப்பத்தின் ஆரவாரத்திற்குப் பின்னால், கனேடிய ஆளும் வர்க்கம் ட்ரம்ப் பாணி கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது. இதில் கனேடிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார “போட்டித்தன்மை” மற்றும் இராணுவ-மூலோபாய நிலைப்பாட்டை வலுப்படுத்தவும், அதன் மூலம், கார்னேயின் வார்த்தைகளில், உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீட்டில் அது இரையாக அல்ல, வேட்டையாடும் விலங்கு என்பதை உறுதிப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி முறைகளும் உள்ளடங்கும்.
கார்னேயின் அரசாங்கம் அடுத்த தசாப்தத்தில் இராணுவ செலவினங்களை அதிகரிக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஒதுக்குவதுக்கு உறுதியளித்து, ஒரு கடுமையான சிக்கன நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது மற்றும் அகதிகளின் உரிமைகளை பறிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டுடன் புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு கூட்டணியைப் பெறுவதற்கான நம்பிக்கையில், வருங்கால சர்வாதிகாரி ட்ரம்பை புகழ்ந்து அவருக்கு அரசியல் ஆதரவை வழங்கி ஆதரிக்கிறது.
வேலைநிறுத்த உரிமையின் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை சவால் செய்வதன் மூலம், ஏர் கனடா விமானப் பணியாளர்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு படி முன்னேறியுள்ளனர்.
ஆனால், இந்த போர்க்குணமிக்க போராட்டமானது, ஒரு உண்மையான தொழிலாள வர்க்க எதிர்த் தாக்குதலுக்கு வினையூக்கியாக மாற வேண்டுமென்றால், “கனடா அணியை” நிராகரிப்பதும், இது கனேடிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாய கட்டாயங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதை வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒரு சோசலிச-சர்வதேசியவாத மூலோபாயத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக இது செய்யப்பட வேண்டும்.
போட்டி ஆளும் வர்க்கங்கள், உள்நாட்டில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும், வர்த்தகப் போர்கள் மற்றும் இராணுவ மோதல்களுக்குப் பின்னால் அவர்களை இழுக்கவும், தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரினவாதத்தைத் தூண்டிவிடுகின்றன. ஆனால் பூகோள உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பூகோளம் முழுவதும் செயல்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகடந்த பெருநிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ சக்திகளின் கொள்ளையடிக்கும் போராட்டங்களில் பிரதானமாக பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்களாவர்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு கனடாவில் உள்ள தொழிலாளர்கள் விடுத்த அழைப்புக்கு சக்திவாய்ந்த ஆதரவு கிடைக்கும். ஊதியம் இல்லாத வேலை என்பது அமெரிக்காவில் விமான பணியாளர்களுக்கு ஒரு எரியும் பிரச்சினையாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம், குறிப்பாக வட அமெரிக்காவின் ரயில் வலையமைப்புக்களில் துல்லியமாக திட்டமிடப்பட்ட ரயில் பாதை அல்லது கனடா போஸ்ட் மற்றும் அமெரிக்க விநியோக நிறுவனங்களில் மாறும் வழித்தடம் போன்ற ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழிலாளர்கள் முதலாளித்துவ லாபத்திற்காக விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதற்கு பிரதான தடையாக இருப்பது தேசியவாத, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவமாகும். தொழிற்சங்கத் தலைமைகள் கார்னே அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒத்துழைப்பிற்கு தங்கள் செயற்பாடுகளை இரட்டிப்பாக்கியுள்ளன.
கடந்த ஞாயிறன்று, ஒரு அவசர கூட்டத்தைத் தொடர்ந்து கனேடிய தொழிலாளர் காங்கிரசினர் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அது, வேலைநிறுத்தத் தடையை திரும்பப் பெறவும், பேரம்பேசும் நிகழ்முறையின் மூலமாக ஏர் கனடா விமானத் தொழிலாளர்களுக்கு ஒரு “நியாயமான உடன்பாட்டை” அடையவும் கார்னேயிடம் மன்றாடியது. ஆனால், முதலாளிகளின் சார்பாக வர்க்கப் போரை நடத்தும் ஒரு அரசாங்கத்தை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகள் மூலம் தொழிலாளர்களுக்கு ஒரு “நியாயமான உடன்பாடு” பற்றிப் பேசுவது சாத்தியமற்றது. உண்மையில், விமானப் பணியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மீது மேலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைச் சுமத்துவதில் அவர்களின் பங்கை ஒப்புக்கொள்ளுமாறே தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் கார்னேயிடம் கேட்கிறார்கள்.
நிதியியல் செல்வந்த தட்டுக்களின் ஒரு சேவகனாக தனது ஒட்டுமொத்த இளமைக் காலத்தையும் செலவிட்டுள்ள பிரதமர் கார்னே, “ட்ரம்பிற்கு எதிராகப் போராடவும், ... நமது வேலைகள் மற்றும் சமூகங்களைப் பாதுகாக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அவமானகரமான தேசியவாத கூற்றும், கனேடிய தொழிலாளர் காங்கிரசின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இது ஒரு பொய்யாகும். இது, தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைத் தாக்கும் அதே முதலாளித்துவவாதிகள் மற்றும் அவர்களின் அரசியல் ஊதுகுழல்களால் வழிநடத்தப்படும் ஒரு தேசியவாத வர்த்தகப் போரில் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் தேசியவாத பிரச்சாரத்தைத் தூண்டிவிடுவதில் கனேடிய தொழிற்சங்க எந்திரத்தின் பாத்திரம் தனித்துவமானதல்ல. அமெரிக்காவில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் (UAW), ஏனைய தொழிற்சங்கங்களும் ட்ரம்பின் பிற்போக்குத்தனமான “அமெரிக்கா முதலில்” சுங்கவரி விதிப்புகளுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன. UAW தலைவர் ஷான் ஃபெயின், B-24 குண்டுவீச்சு விமானம் மற்றும் “ஜனநாயகத்தின் ஆயுதக்கிடங்கு” என்ற முழக்கத்தைக் கொண்ட டி-சட்டைகளை அணிந்திருந்தார். இது, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதில் ஆளும் வர்க்கத்துடன் தொழிற்சங்கங்கள் கொண்டிருந்த கூட்டணியைக் குறித்த ஒரு நேரடி குறிப்பாகும்.
ஐரோப்பாவில், தொழிற்சங்க எந்திரம் ஏகாதிபத்திய சக்திகளின் பாரிய மீள் ஆயுதமயமாக்கல் உந்துதலில் முன்னணியில் நிற்கிறது. இது கண்டம் முழுவதும் தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றின் மீதான ஆளும் உயரடுக்கின் தாக்குதலைத் தூண்டுகிறது.
ஏர் கனடா விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தமானது, தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களை உறுதிப்படுத்த போராடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் வெற்றி பெற, அதிகாரத்துவமயமாக்கப்பட்ட தொழிற்சங்க எந்திரத்தை ஒழித்துக்கட்டி, அதிகாரத்தை அது இருக்கவேண்டிய இடமான சாமானிய தொழிலாளர்களிடம் மாற்ற வேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கான அமைப்புரீதியான மற்றும் அரசியல் வழிவகைகளை வழங்குவதற்காக சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்கியுள்ளன. சாமானிய தொழிலாளர் குழுக்களை அபிவிருத்தி செய்வதன் மூலமாக, தொழிலாளர்கள் பெருநிறுவன இலாபத்திற்காக அல்ல, அவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை முன்வைக்க முடியும்; அதிகாரத்துவத்தின் நாசவேலையை எதிர்க்க முடியும்; மேலும் தொழில்கள், எல்லைகள் மற்றும் கண்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டங்களில் அவர்களின் மகத்தான சமூக சக்தியை அணிதிரட்ட முடியும்.
ஏகாதிபத்தியப் போர், சர்வாதிகாரம், தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை வழிநடத்தவும், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சியை ஒரு சோசலிச-சர்வதேசிய வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கும் போராட்டத்தில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் வளர்ச்சியானது ஒரு முக்கிய அங்கமாகும்.