மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த திங்களன்று வாஷிங்டனில் இடம்பெற்ற உச்சிமாநாட்டிற்கு வரலாற்று ரீதியாக எந்த சமாந்திர இணைப்பும் கிடையாது. வெறும் 24 மணிநேர அறிவிப்புடன், பொருளாதார ரீதியாக வலிமையான நான்கு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆணையத்தின் தலைவர் மற்றும் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரிக்க அமெரிக்க தலைநகருக்குச் சென்றனர்.
இத்தகைய உயர்மட்ட அரசியல்வாதிகளின் கூட்டமானது, பல மாதங்களுக்கு முன்னரே தயாரிக்கப்படும் வழக்கமான உச்சி மாநாட்டு கூட்டங்களைப் போல் இல்லாமல், பொதுவாக அரசு ரீதியான மரண இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் மட்டுமே காணப்படுகிறது. வாஷிங்டனில் நடந்த இந்தக் கூட்டம் உண்மையில் ஒரு இறுதிச் சடங்கிற்கு முன்னோடியாக இருக்கலாம்: அது, 76 ஆண்டுகளாக அட்லாண்டிக் கடந்த உறவுகளை வடிவமைத்துள்ள நேட்டோவின் இறுதிச் சடங்காகும்.
இந்தக் கூட்டத்தின் விநோதமான தோற்றம், குறிப்பாக ட்ரம்பை போற்றுதல், பணிந்து போவதிற்கான சைகைகள், ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைப்பதற்கான ஐரோப்பியர்களின் பெரும்பிரயத்தன முயற்சிகள், அவர்கள் உடன்பாட்டில் இருப்பதாகவும், அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் உறுதியளித்தல் என்பன, நேட்டோ கூட்டணியில் ஆழமான விரிசல்களை மூடிமறைத்தன. ஆனால் உண்மையில், வேறுபாடுகள் ஒருபோதும் இவ்வளவு கூர்மையாக இருந்ததில்லை.
உலகெங்கும் வெறுக்கப்படும் ட்ரம்பிற்கு முன்னால் ஐரோப்பிய தலைவர்கள் குனிந்து சென்று வணங்கும்போது, பிரெஞ்சு நாடக ஆசிரியரான மோலியரின் நகைச்சுவை நாடகத்தில் வருவது போல, வெள்ளை மாளிகைக்கு முன்னால் ட்ரம்ப் தலைநகருக்கு கொண்டு வந்திருந்த கனரக ஆயுதமேந்திய சிப்பாய்களை அவர்களால் காண முடிந்தது. “இங்கே நான்தான் சர்வாதிகாரி”.
தங்கள் செலவில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஒரு உடன்பாட்டை ட்ரம்ப் எட்டக்கூடும் என்ற அச்சம்தான், ஐரோப்பியத் தலைவர்கள் தங்கள் விடுமுறைகளைக் குறைத்து வாஷிங்டனுக்கு விரைந்ததற்குக் காரணமாகும்.
பல ஆண்டுகளாக, இவர்கள் உக்ரேனை ஆயுதபாணியாக்குவதிலும், ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்பதிலும் பிரமாண்டமான வளங்களை முதலீடு செய்துள்ளனர். ரஷ்ய அதிபர் புட்டினை தீய சக்தியின் அவதாரம் என்றும், அவர் பலத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறார் என்றும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்றும் அவர்கள் பூதாகரமாக சித்தரித்து வந்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஜோ பைடென் வெள்ளை மாளிகையில் இருக்கும் வரையிலாவது அமெரிக்காவுடன் உடன்பாடு இருப்பதாக அவர்கள் நம்பினர். கீல் பயிலகத்தின் (IFW) புள்ளிவிபரங்களின்படி, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனுக்கு மொத்தமாக 167 பில்லியன் யூரோ இராணுவ மற்றும் நிதி உதவியை வழங்கிய ஐரோப்பா, மேலும் 90 பில்லியன் யூரோவை வழங்க உறுதியளித்துள்ளது. 114 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ள அமெரிக்கா, மேலும் 4 பில்லியன் யூரோக்களை வழங்க உறுதியளித்துள்ளது.
ஆரம்பத்தில் உக்ரேனுக்கு உந்து சக்தியாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரேனின் மிகப்பெரிய நன்கொடையாளராக இருந்த ஜேர்மனி, அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களின் அழிப்பு என்பன, வேறு வழியில்லாமல் ரஷ்யாவிலிருந்து மலிவான இயற்கை எரிவாயுவை வாங்குவதை நிறுத்த ஜேர்மனி கூட நீண்ட காலமாக தயங்கியது.
ஆனால் இப்போது, ட்ரம்ப் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு கூர்மையான திருப்பத்தைக் கொண்டு வந்துள்ளார். கடந்த வெள்ளியன்று, அவர் அலாஸ்காவில் புட்டினை இருகரம் நீட்டி வரவேற்றதுடன், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் உடன்பட்டார். இது, ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள மூலோபாய மூலப்பொருட்களை அணுக உதவும் என்றும், ஏற்கனவே தண்டனை சுங்க வரிகளை திணித்துள்ள தனது ஐரோப்பிய போட்டியாளர்களை பலவீனப்படுத்தும் என்றும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டணியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ட்ரம்ப் நம்புகிறார். இதன்மூலம், சீனாவிற்கு எதிரான போருக்குத் தயாராகும் பணியில், அமெரிக்கா தனது இராணுவப் படைகளை முன்பை விட இன்னும் வலுவாகக் குவிக்க முடியும்.
ட்ரம்ப் மற்றும் புட்டின் இடையேயான சந்திப்பிலிருந்து, கீவ், பிரஸ்ஸல்ஸ், பேர்லின், பாரிஸ் மற்றும் லண்டன் இடையேயான எல்லைகள் பரபரப்பாகி வருகின்றன. ஐரோப்பியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். அமெரிக்காவின் ஆதரவுடன் உக்ரேனையும் ரஷ்யாவையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அவர்களின் நோக்கம், ஒரு பேரழிவுகரமான தவறான கணக்கீடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தொடர ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இன்னும் இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளன. சமீபத்தில் பெரும் பிராந்திய இழப்புகளைச் சந்தித்துவரும் உக்ரேன், படையினர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, மேலும் பொதுமக்களின் உணர்வுகளும் மாறி வருகிறது. சமீபத்திய கேலப் கருத்துக் கணிப்பின்படி, 69 சதவீத உக்ரேனியர்கள் விரைவான பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஆதரிப்பதாகவும், 24 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து போரிட விரும்புவதாகவும் தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த விகிதம் தலைகீழாக இருந்தது.
இந்த சூழ்நிலைகளின் கீழ் ஐரோப்பிய சக்திகள், தங்களுக்கு சாதகமாக, அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய கொள்கையை கொண்டிருக்கும் ட்ரம்ப் மீது செல்வாக்கு செலுத்த முயன்று வருகின்றன. வாஷிங்டன் பயணம் இந்த நோக்கத்திற்கு உதவியது. ட்ரம்ப் போரிலிருந்து விலகுவதைத் தடுக்க அவர்கள் தவறினால், ரஷ்யா மீது அழுத்தத்தைத் தக்க வைக்க உக்ரேன் குறைந்தபட்சம் அதிக ஆயுதம் ஏந்திய கோட்டையாக மாற்றப்பட வேண்டும்.
ஆனால், இந்த சந்திப்பில் உடன்பாடுகள் ஏற்படவில்லை. ஐரோப்பியத் தலைவர்கள், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கி வெளியேற்றப்பட்டது போல, அவமானத்துக்கும் உள்ளாகவில்லை என்பதையும், வெள்ளை மாளிகையிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படாததையும் ஒரு வெற்றியாகக் கருதினர். “இது மிகவும் வித்தியாசமாக நடந்திருக்கலாம்” என்று ஜேர்மன் சான்சிலர் பிரெடெரிக் மெர்ஸ் பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா ஒரு போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்ற ஐரோப்பிய தலைவர்களின் கோரிக்கையை கேமராக்களுக்கு முன்னால் மெர்ஸ் மீண்டும் வலியுறுத்திய போது, ட்ரம்ப் அவரை கடுமையாக நிராகரித்தார். “நான் மீண்டும் சொல்கிறேன், நான் தீர்த்து வைத்த ஆறு போர்களில், போர் நிறுத்தம் ஏற்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.
ட்ரம்பும் அவரது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப்பும், உக்ரேனுக்கான மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்களை ஏற்க புட்டின் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா அத்தகைய உத்தரவாதங்களை ஏதேனும் ஒரு வடிவத்தில் ஆதரிக்கும் என்றும் அறிவித்த போது ஐரோப்பிய சக்திகள் நம்பிக்கை அடைந்தன. ஆனால் “பாதுகாப்பு உத்தரவாதங்கள்” என்ற சொல் முற்றிலும் மாறுபட்ட வழிகளில் விளக்கப்படுகிறது என்பது விரைவில் தெளிவாகியுள்ளது.
நேட்டோவில் உக்ரேன் இணைவதை ட்ரம்ப் ஏற்கனவே நிராகரித்துள்ளார். உக்ரேனுக்கான பரஸ்பர பாதுகாப்பு விதி, பிரிவு 5 இன் கீழ், நேட்டோ நாடுகள் ஒருவருக்கொருவர் உதவி வழங்குவது தொடர்பான விடயம் கலந்துரையாடலில் உள்ளது. எவ்வாறாயினும், இராணுவ பலத்தின் ஆதரவு இல்லாவிட்டால் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது.
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஸ்டார்மரும் ரஷ்யாவைத் தடுக்க உக்ரேனில் ஒரு மேற்கத்திய “அமைதிகாக்கும் படையை” நிலைநிறுத்த நீண்டகாலமாக அறிவுறுத்தி வருகின்றனர். வாஷிங்டனில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் பிபிசியிடம் மக்ரோன், “நாங்கள் தரையில் துருப்புக்களுடன் உக்ரேனுக்கு உதவ வேண்டும்” என்று மீண்டும் கூறினார்.
ஆனால், பிரான்சோ அல்லது ஐக்கிய இராச்சியமோ ஒரு வலுவான படைக்கு தேவைப்படும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை எளிதில் அணிதிரட்ட முடியாது. சான்ஸ்லர் மெர்ஸ் முதல் தடவையாக ஜேர்மனிய ஆயுதப் படைகளும் இதில் பங்கு பெறக்கூடும் என்று குறிப்புக் காட்டியுள்ளார். ஆனால் அதற்கு வளங்களும் இல்லை, மேலும் அத்தகைய திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு உள்ளது.
உக்ரேனில் தனது சொந்த துருப்புக்களை நிலைநிறுத்துவதை அமெரிக்கா நிராகரிக்கிறது. வாஷிங்டனில் நடந்த சந்திப்புக்குப் பிறகு ஃபாக்ஸ் நியூஸில் ஜனாதிபதி ட்ரம்ப் இதை மீண்டும் உறுதிப்படுத்தினார். அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ அத்தகைய ஒரு படையில் பங்கேற்காது என்று அவர் கூறினார். அத்தகைய படை உருவாக்கப்பட வேண்டுமானால், அது ஐரோப்பிய நாடுகளிலிருந்து வர வேண்டும்.
ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் நேட்டோவின் தலையீட்டைத் தூண்டும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான சிப்பாய்களைக் கொண்ட “பொறி வைக்கும்” படை பற்றிய பேச்சும் உள்ளது. மூன்றாவது விருப்பத்தேர்வு முற்றிலும் கண்கானிக்கும் படையாகும். இது, உக்ரேன் மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமாக ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நேட்டோவின் கிழக்கு நோக்கிய முன்னேற்றமே காரணம் என்ற நிலையில், உக்ரேனிய மண்ணில் மேற்கத்திய துருப்புகளை எந்த வடிவத்திலும் நிலைநிறுத்துவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் என்பதை கற்பனை செய்வது கடினம். ஆகவே “தரையில் துருப்புக்களை நிலைநிறுத்துவது” என்ற கோரிக்கையானது பேச்சுவார்த்தை மூலமான தீர்வை நாசப்படுத்துவதற்கும் போரைத் தொடர்வதற்கும் கூட சேவையாற்றுகிறது. உக்ரேன் போரில் தோல்வியடைகிறது என்ற செய்திகள் “முற்றிலும் போலியான செய்திகள்” என்று NBC இடம் மக்ரோன் கூறியபோது இதை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவிடம் இருந்து உக்ரேன் எவ்வாறு “பாதுகாப்பு உத்தரவாதங்களை” பெற முடியும் என்பதற்கான மற்றொரு முன்மொழிவு கியேவில் இருந்து வந்தது. அதற்கு பிரதியுபகாரமாக 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்களை வாங்கவும், அமெரிக்காவுடன் இணைந்து 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆளில்லா விமானங்களை தயாரிக்கவும் உக்ரேனிய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்த ஆயுத ஒப்பந்தத்திற்கு ஐரோப்பா பணம் செலுத்த வேண்டும். வாஷிங்டன் உச்சிமாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதை பைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டியது.
ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்த வரையில் இதன் பொருள், அவர்களை ஒதுக்கி வைக்கும் மற்றும் தங்கள் சொந்த ஆயுதத் தொழில்துறையை வளர்க்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு அமெரிக்க சமாதானத்திற்கு விலை கொடுக்க வேண்டும் என்பதாகும்.
தொழிலாள வர்க்கம் இந்த மோதலில் இரு தரப்பையும் ஆதரிக்கக் கூடாது. ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையிலான ஒரு உடன்படிக்கை “சமாதானத்தை” நோக்கிய ஒரு படியாக ஒருபோதும் இருக்காது. மாறாக, மூன்றாம் உலகப் போரை நோக்கி மேலும் தீவிரமடைவதுடன், இது முதன்மையாக சீனாவிற்கு எதிராக இயக்கப்பட்டு மத்திய கிழக்கில் முன்னோக்கி தள்ளப்படுகிறது. ஐரோப்பியர்கள் தங்கள் பங்கிற்கு, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடர தீர்மானகரமாக உள்ளனர். இந்தப் போர், ஏற்கனவே நூறாயிரக் கணக்கானவர்களை பலி கொண்டுள்ளதுடன், அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலாக தீவிரமடைய அச்சுறுத்துகிறது.
இந்த இரண்டு சாத்தியக் கூறுகளுமே தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களின் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும். அமெரிக்காவில், ட்ரம்ப் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதின் மத்தியில் உள்ளார். ஐரோப்பாவில், ஆளும் உயரடுக்குகள் போர் மற்றும் இராணுவவாதத்திற்கான எதிர்ப்பை ஒடுக்கி வருவதுடன், மீள் ஆயுதமயமாக்கலுக்கான பிரம்மாண்டமான செலவுகளை மக்கள் மீது திருப்பி வருகின்றன.
போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிர்ப்பு என்பது சமூக வெட்டுக்கள், பணிநீக்கங்கள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்ப போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் மூலமாக மட்டுமே போர் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த முடியும்.