காஸா நகரம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தெற்கு இஸ்ரேலில் இருந்து பார்க்கும்போது, ​​இஸ்ரேல்-காஸா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு பகுதி வழியாக ஒரு இஸ்ரேலிய டாங்கி நகர்கிறது, புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2025. [AP Photo/Maya Levin]

காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் புதிய மற்றும் இன்னும் கொடிய கட்டத்தில், இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு வெளியே இருக்கும் காஸாவின் கடைசிப் பகுதியான காஸா நகரத்தின் மீது, இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம், காஸா பகுதியின் தெற்கில் உள்ள சித்திரவதை முகாம்களுக்கு மக்களை பலவந்தமாக இடம்பெயர வைப்பதற்கான தயாரிப்பில், காஸா பகுதியின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியை ஒட்டுமொத்தமாக இராணுவ ரீதியாக அடிபணியச் செய்வதாகும். நெதன்யாகு அரசாங்கம் காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை தெற்கு சூடான் உட்பட இதர நாடுகளுக்கு வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது.

“காஸா நகரத்தின் மீதான தாக்குதலின் ஆரம்ப நடவடிக்கைகள் மற்றும் முதல் கட்டங்களை நாங்கள் தொடங்கிவிட்டோம்” என்று இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் புதன்கிழமை தெரிவித்தார். மேலும், காஸா நகரத்தை கைப்பற்றுவதற்காக மேலும் 60,000 ரிசர்வ் படையினரை அணிதிரட்டி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி, இஸ்ரேல் ஏற்கனவே காஸாவின் 90 சதவீதத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் நியூ யோர்க் டைம்ஸிடம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை முதலில் காஸா நகரத்தை சுற்றி வளைத்து, நகரத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் முன் மக்களை தெற்கிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் என்று கூறியுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி நகரின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களை முழுமையாக இடித்து, நகர மையத்திற்கு அருகில் நகர்ந்து வருவதாக குடியிருப்பாளர்கள் டைம்ஸிடம் தெரிவித்தனர்.

“ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதியை முழுமையாக இராணுவம் கைப்பற்றினால்... அது பெருமளவில் கட்டாய இடம்பெயர்வு, அதிக கொலை, தாங்க முடியாத துன்பம், அர்த்தமற்ற அழிவு மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு வழிவகுக்கும்” என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.

காஸாவில் இருந்து வரும் பஞ்சமும், அந்த இடத்தை முழுமையாக இராணுவம் ஆக்கிரமித்துள்ளமையும் மீதமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு மரண தண்டனை என்பதை உணர்ந்த இஸ்ரேலிய அமைச்சர் ஓரட் ஸ்ட்ரோக், “தேசிய நலனை விட பணயக் கைதிகளை திருப்பி எடுப்பதற்கு முன்னுரிமை” அளிப்பவர்களைக் கண்டித்தார்.

கடந்த புதன்கிழமை காஸா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 81 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. அக்டோபர் 2023 இல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து 62,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் புதன்கிழமை, நெத்தென்யாகு அரசாங்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் விரிவாக்கப்படும் என்று அறிவித்தது. இது, முழு பாலஸ்தீனிய நிலப்பகுதியையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ண்டுள்ளது.

மேற்குக் கரையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக திட்டமிடப்பட்ட ஒரு குடியேற்ற கட்டுமானத் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் E1 என அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மேற்குக் கரையில் 20,000 புதிய குடியேற்ற வீடுகளைக் கட்டுவதற்கு மேலதிகமாக வருகிறது. இந்த புதிய குடியேற்றத் திட்டம் மேற்குக் கரையை இரண்டாகப் பிரிக்கும்.

இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், இந்த குடியேற்றத் திட்டம் என்பது பாலஸ்தீனிய அரசு என்ற கருத்து “மேசையில் இருந்து அழிக்கப்படுகிறது” என்று பெருமையாகக் கூறினார். “ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு சுற்றுப்புறமும், ஒவ்வொரு வீட்டுவசதி அலகும் இந்த ஆபத்தான யோசனையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட மற்றொரு ஆணியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

பாலஸ்தீனிய தேசிய முன்முயற்சி கட்சியின் பொதுச் செயலாளரான முஸ்தபா பார்குற்றி அல் ஜசீராவிடம், “இந்தத் திட்டம் மேற்குக் கரையை முற்றிலும் இரண்டு துண்டுகளாக பிரிக்கும். … இது ஜெருசலேமை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய மேற்குக் கரையின் எஞ்சிய பகுதிகளிலிருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்தும்” என்று கூறினார்:

இஸ்ரேலிய குடியேற்றத் திட்டத்தின் அறிவிப்புக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்று நாங்கள் கருதும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்துக் குடியேற்ற நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்று கூறினார்.

காஸா நகரில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், காஸாவில் பெரும் பஞ்சம் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை வெளிவந்த ஒரு அறிக்கையில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம், காஸா நகரில் உள்ள ஒவ்வொரு மூன்று பாலஸ்தீன குழந்தைகளில் ஒருவர் இப்போது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA), “இது ஒரு இயற்கை பேரழிவு அல்ல. இது மனிதனால் உருவாக்கப்பட்ட, தடுக்கக்கூடிய பஞ்சம்” என்று கூறியது.

இஸ்ரேலிய உரிமைகள் குழுவான கிஷா புதன்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், காஸாவில் “மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று திட்டவட்டமாக அறிவித்தது. “முதல் நாளிலிருந்தே உதவிப் பொருட்கள் மீதான தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும், அதில் அழுத்தம் கொடுத்து மக்களை இடப்பெயர வைப்பதற்கான வழிமுறைகளும் அடங்கும்” என்றும் அந்த அமைப்பு கூறியது.

காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து 269 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளதாகவும், அதில் 112 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகவும் கிஷா அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை மாதம், ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) தகவல் மையமானது, “காஸா பகுதியில் மிக மோசமான பஞ்ச சூழ்நிலை உருவாகி வருகிறது” என்று எச்சரிக்கை விடுத்தது.

கடந்த புதன்கிழமை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான தடையாணைகளை அறிவித்தது. இதன் மூலம், காஸா இனப்படுகொலைக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ட்ரம்ப் நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்ட ICC உறுப்பினர்களின் பட்டியலில், இரண்டு ICC நீதிபதிகள் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

டுவிட்டர் X இல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ICC க்கு எதிரான தடையாணைகளுக்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்: “இந்த வரலாற்று நடவடிக்கை இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அசைக்க முடியாத கூட்டணியை பிரதிபலிக்கிறது” என்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு, “காஸாவில் உள்ள அப்பாவி பொதுமக்களின் உயிர் வாழ்விற்கு அவசியம் தேவையான உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பொருட்களை நெதன்யாகு வேண்டுமென்றே, தெரிந்தே பறித்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக” ICC கூறியுள்ளது.

Loading