வெனிசுலா மீதான அச்சுறுத்தலை அதிகரிக்கும் வகையில், அமெரிக்கா கடற்படையினரையும் தரையிறக்க கப்பல்களையும் நிலைநிறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடலில் அமெரிக்க வழிகாட்டுதல்-ஏவுகணை நாசகாரி கப்பல்கள் [Photo: US Navy/Specialist 3rd Class Cole Schroeder]

வெனிசுலாவிற்கு 2,200 கடற்படையினரைக் கொண்ட மூன்று நீர்நில தாக்குதல் கப்பல்களை வாஷிங்டன் அனுப்புகிறது என்று பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் கடந்த வியாழனன்று மியாமி ஹெரால்டுக்கு தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை வெனிசுலா கடற்கரைப் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படும் மூன்று அமெரிக்க வழிகாட்டுதல்-ஏவுகணை நாசகாரி கப்பல்கள் அணியில், இவை சேர உள்ளன.

இது, மூன்று நாசகாரி கப்பல்களை வெனிசுலாவிற்கு அனுப்புவதை நியாயப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் முன்னர் முன்வைத்திருந்த அற்பமான சாக்குப்போக்காகும். அதாவது, வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தலை அந்தப் பகுதியில் உள்ள கப்பல்கள் தடுக்கும் என்ற வாதத்தை இது தகர்க்கிறது. அமெரிக்க கடற்படைப் படை ஒரு போதைப்பொருள் எதிர்ப்பு போலீஸ் பிரிவு அல்ல. எண்ணெய் வளம் மிக்க அந்த நாட்டை இலக்காகக் கொண்ட பல தசாப்த கால ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெனிசுலா மீது படையெடுக்க அமெரிக்க அரசாங்கம் தெளிவாக அச்சுறுத்துகிறது.

கடந்த செவ்வாயன்று, அமெரிக்க கடற்படையை வெனிசுலா கடற்பகுதியில் நிலைநிறுத்துவது தொடர்பாக கேட்டபோது, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், வெனிசுலாவுக்கு எதிராக எந்தவொரு மற்றும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். வெனிசுலா அரசாங்கம் ஒரு போதைப்பொருள் கும்பலுக்கான முன்னணி அமைப்பே தவிர வேறில்லை என்று வெனிசுலா மக்களை வெளிப்படையாக அவமதிக்கும் வகையில் ஆத்திரமூட்டும் மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற அமெரிக்க கூற்றுக்களை அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

“ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் தெளிவாகவும், நிலையாகவும் இருந்து வருகிறார். நமது நாட்டிற்குள் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவும், அதற்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும் அமெரிக்காவிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்த அவர் தயாராக உள்ளார்” என்று கரோலின் லீவிட் கூறினார். “மதுரோவின் ஆட்சி வெனிசுலாவின் சட்டப்பூர்வமான அரசாங்கம் அல்ல; அது ஒரு போதைப்பொருள் பயங்கரவாதக் கும்பல். இந்த நிர்வாகத்தின் பார்வையில், மதுரோ ஒரு சட்டப்பூர்வமான ஜனாதிபதி அல்ல என்று கரோலின் லீவிட் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 14 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் அச்சுறுத்தல்களை லெவிட் எதிரொலித்தார். “சூரியர்களின் கூட்டு... என்பது, ஒரு அரசாங்கமாக மாறுவேடத்தில் செயற்பட்டுவரும் ஒரு குற்றவியல் அமைப்பாகும். மதுரோ ஆட்சி ஒரு அரசாங்கம் அல்ல. அது ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் அல்ல. அதை நாங்கள் ஒருபோதும் அப்படி அங்கீகரிக்கவில்லை. அவர்கள் ஒரு தேசிய பிரதேசத்தை, ஒரு நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட ஒரு குற்றவியல் நிறுவனம்.” என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவின் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும், அமெரிக்க அரசாங்கம் “சூரியன்களின் கூட்டு” என்ற அமைப்பின் போதைப்பொருள் கடத்தல் குறித்து நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை அல்லது அப்படி ஒரு அமைப்பு இருப்பது கூட நிரூபிக்கவும் இல்லை. அவர்கள் மதுரோ மற்றும் ஆளும் வெனிசுலாவின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் (PSUV) துணைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் டியோஸ்டாடோ கபெல்லோவை மட்டுமே இந்த கும்பலின் தலைவர்கள் என்று பெயரிட்டுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கமானது, மீண்டும் பாரிய பொய்களை கட்டவிழ்த்துவிடும் வழிமுறையை நாடுவதுடன், மறுக்க முடியாத அளவுக்கு பாரிய பொய்களைச் சொல்லி போருக்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்க முயல்கிறது. 2003 ஆம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான ஈராக் மீதான படையெடுப்பில், ஈராக் அரசாங்கத்திடம் “மக்களை அழிக்கும் பேரழிவு ஆயுதங்கள்” இருப்பதாக பிரமாண்டமான பொய்யை அது கட்டவிழ்த்துவிட்டது. வெனிசுலாவுக்கு எதிரான அதன் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மறைமுக போதைப்பொருள் கும்பலால் ஆளப்படுகிறது என்பதாகும். ஆனால், இதைப் பற்றி எந்தத் தகவலையும் வழங்காத வாஷிங்டன், கடுமையான நடவடிக்கைகள் மூலம் அதை அழிக்க விரும்புகிறது.

வெனிசுவேலா அரசாங்கம், அதன் பங்கிற்கு, “சூரியன்களின் கூட்டு” என்ற அமைப்பு ஒன்று இருப்பதையே மறுத்துள்ளதுடன், அதற்கு எதிராக விடுக்கப்பட்ட போலி சட்ட அமெரிக்க அச்சுறுத்தல்களையும் கண்டித்துள்ளது. ஆகஸ்ட் 7 அன்று, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி, ஜனாதிபதி மதுரோவின் தலைக்கு 50 மில்லியன் டாலர்களை வெகுமதியாக அறிவித்த போது, வெனிசுவேலா வெளியுறவுத்துறை அமைச்சர் யுவான் கில் அதை ஒரு “நயமற்ற அரசியல் பிரச்சார நடவடிக்கை” என்று கண்டனம் செய்தார். மறைந்த பாலியல் கடத்தல்காரன் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ட்ரம்பின் உறவுகளிலிருந்து இது “தீவிரமான திசைதிருப்பல்” என்று கில் குறிப்பிட்டார்

வெனிசுவேலா கடற்கரையில் அமெரிக்க நாசகாரி கப்பல்களை நிலைநிறுத்தியதற்கு மதுரோ தனது அரசாங்கத்திற்கு விசுவாசமான மக்கள் போராளிகள் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க அழைப்பு விடுத்ததன் மூலம் பதிலளித்தார். “இந்த வாரம், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில், 4.5 மில்லியனுக்கும் அதிகமான போராளிகளுடன் ஒரு சிறப்புத் திட்டத்தை நான் செயல்படுத்துவேன். போராளிகள் தயாராக, செயல்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்தியிருப்பார்கள்” என்று மதுரோ கூறினார்.

அமெரிக்க அரசாங்கத்தோடு நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்களைத் தூண்டுவதற்காக இந்த நடவடிக்கை “ஒரு கொடூரமான உளவியல் போர்ப் பிரச்சாரம்” என்று வெனிசுலா உள்துறை அமைச்சர் கபெல்லோ கூறினார். அமெரிக்க அதிகாரிகள் “செப்டம்பர் மாதத்தில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தக் குழுக்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள்” என்று அவர் கூறினார். மதுரோவுக்கு முன்பு பதவியிலிருந்த ஹ்யூகோ சாவேஸுக்கு எதிராக, 2002 இல் அமெரிக்க ஆதரவிலான தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதி போன்ற நிகழ்வுகளை வெளிப்படையாக குறிப்பிட்ட கபெல்லோ, “பொதுமக்கள்-இராணுவம்-போலிஸ் கூட்டணி மீண்டும் ஒருமுறை அவர்களின் செயல்களை அழித்துவிடும் என்பதை நாம் தீவிரவாதிகளுக்குச் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

தற்போதைய அச்சுறுத்தல்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்ட காபெல்லோ, “இந்தப் பொய்கள் அனைத்தும் மற்றும் இந்த நிகழ்ச்சியும் அவர்களே சொல்லும் அளவுக்குப் பொய்யாகிவிடும். … இந்தக் காட்சி ஒன்றும் புதிதல்ல என்பதை ஏமாற்றுக்காரர்களுக்கு நினைவூட்டுவது மதிப்புக்குரியது. அவர்கள் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் இதைச் செய்தனர்” என்று தெரிவித்தார்.

வெனிசுவேலா ஆட்சியின் மதிப்பீடு மலைப்பூட்டும் வகையில் மெத்தனமாக உள்ளது: ட்ரம்ப் நிர்வாகம், ஓர் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ள நிலையில், அது தெளிவாக அமெரிக்காவின் மேற்கு அரைக்கோளத்தில் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முயன்று வருகிறது. குறிப்பாக, லத்தீன் அமெரிக்காவுடனான சீனாவின் அதிகரித்து வரும் வர்த்தகம், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கான 800 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது 518 பில்லியன் டாலர்களாக இருந்தது. இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் “கொல்லைப்புறம்” என்று கருதும் நாடுகளில், அதன் மேலாதிக்கத்தை சீனா குழிபறிக்கக்கூடும் என்று அது குறிப்பாக கவலை கொண்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் கிரீன்லாந்து மற்றும் பனாமாவை இணைக்க அழைப்பு விடுத்து, பிரேசில் மீது அதிக வரிகளை விதித்தது மட்டுமல்லாமல், அப்பகுதியில், குறிப்பாக அதன் தெற்கு அண்டை நாடான மெக்சிகோவிற்கு எதிராக, அதன் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளை விரைவாக தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் கென் கிளிப்பென்ஸ்டீனின் ஒரு அறிக்கை, போதைப்பொருள் கடத்தல் கார்டெல்களை “பயங்கரவாத” அமைப்புகளாக வகைப்படுத்திய பின்னர், அமெரிக்க இராணுவ திட்டமிடலில் விரைவான அதிகரிப்பு இருப்பதை சுட்டிக்காட்டியது. இது அவர்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தை முழுமையாக அணிதிரட்ட அனுமதிக்கிறது.

“டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்றில் பயங்கரவாதிகள் என்று பெயரிட்ட TCO-க்கள் (நாடுகடந்த குற்றவியல் அமைப்புகள், அதாவது, கார்டெல்கள்), மீது தனித்துவமாக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், எதிர்மறையான அரசியல் விளைவுகள் இருந்தபோதிலும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகக் சுட்டிக் காட்டியுள்ளார் என்று ஒரு உளவுத்துறை அதிகாரி கிளிப்பன்ஸ்டீனிடம் கூறினார். “அதாவது மெக்சிகன் அரசாங்கத்தின் ஈடுபாடு அல்லது ஒப்புதல் இல்லாமல், அவரும் பிற ஆதாரங்களும் இராணுவ நடவடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கலாம்” என்று கிளிப்பன்ஸ்டீன் எழுதுகிறார்.

மெக்சிகன் இராணுவத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன், அமெரிக்க ஆயுதப் படைகள், அதன் நாடெங்கிலும் உள்ள இலக்குகள் மீது ஒருதலைப்பட்சமாக குண்டுவீச தயாரிப்பு செய்து வருகின்றன — பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் மெக்சிகோவுடன் போருக்குச் செல்கின்றன என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது. கிளிப்பன்ஸ்டைன் கருத்தின்படி, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகள் மெக்சிகோவில் “சாத்தியமான தாக்குதல்கள் மற்றும் “நேரடி நடவடிக்கை” தாக்குதல்களுக்கான “இலக்கு தொகுப்புகளை” அடையாளம் காணும் உத்தரவுகளைப் பெற்றுள்ளன. “நேரடி தாக்குதல்களில் வான்வழி அல்லது ஆளில்லா விமானத் தாக்குதல்களும் அடங்கும்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

மெக்ஸிகோவில் வாஷிங்டனின் நடவடிக்கைகள் அதன் உலகளாவிய போர்த் திட்டங்களுடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த கணிப்பீடுகளில் சில கடந்த ஆண்டு அமெரிக்க வடக்கு கட்டளையகத்தின் தளபதி ஜெனரல் கிரிகோரி கில்லட்டால் செனட் ஆயுத சேவைகள் குழுவிற்கு அளித்த கருத்துக்களில் வெளிப்படுத்தப்பட்டன. சீனா மற்றும் ரஷ்யாவை லத்தீன் அமெரிக்காவில் செல்வாக்கு செலுத்தும் “போட்டியாளர்கள்” என்று அழைத்த திரு. கில்லட், அமெரிக்க வடக்கு கட்டளை மையம், மெக்சிகன் இராணுவத்துடன் அதன் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நெருக்கமாக பணியாற்ற முயல்கிறது என்று பின்வருமாறு கூறினார்:

ஐக்கிய அமெரிக்க வடக்கு கட்டளை மையம் (USNORTHCOM) மற்றும் எங்கள் மெக்சிகன் இராணுவ பங்காளிகளுக்கு இடையிலான பிணைப்புகள் பரந்தவை, நெகிழ்திறன் கொண்டவை, மேலும் எண்ணற்ற அரசு மற்றும் அரசு அல்லாத அச்சுறுத்தல்களில் இருந்து வட அமெரிக்காவைப் பாதுகாக்கவும், தற்காக்கவும் நமது ஒருங்கிணைந்த திறனை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. பிராந்தியத்தில் போட்டியாளர்களின் செல்வாக்கை எதிர்ப்பது NORTHCOM மற்றும் நமது மெக்சிகன் இராணுவ பங்காளிகளுக்கு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது, இதன் நேரடி விளைவாக, அமெரிக்க மற்றும் மெக்சிகன் இராணுவங்கள் நமது பகிரப்பட்ட வரலாற்றின் எந்தக் கட்டத்தையும் விட செயல்பாட்டு ரீதியாக மிகவும் இணக்கமாக உள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள், இலத்தீன் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த எதிர்ப்பை முகங்கொடுக்கின்றன. இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தைத் தடுப்பதற்கு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் அமெரிக்கா எங்கிலும் மற்றும் அதற்கு அப்பாலும் ஐக்கியப்பட்ட ஒரு சர்வதேச, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading