மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவில் வேர்மாண்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், கடந்த சில நாட்களாக விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் இல்லிநோய்ஸ் உட்பட பல மத்திய மேற்கு மாநிலங்கள் வழியாக அவரது “தன்னலக்குழுவை எதிர்த்துப் போராடும்” பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்வுகள் சில ஆயிரம் மக்களையே ஈர்த்துள்ளன. இது ஆண்டின் தொடக்கத்தை விட கணிசமாகக் குறைவு. ஆனால், மக்கள்தொகையின் அடுக்குகளுக்குள் மக்கள் எதிர்ப்பை இது பிரதிபலிக்கிறது.
சாண்டர்ஸின் உரை மேடைகளில் மேலாதிக்கம் செலுத்தி வரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளைப் போலல்லாமல், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் ட்ரம்ப், நிதியியல் செல்வந்த தட்டுக்கள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக போராடுவதற்கான ஒரு மூலோபாயத்தையும் வேலைத்திட்டத்தையும் தேடுகிறார்கள்.
அவர்கள் தேடுவதை அவர்கள் அங்கு கண்டுபிடிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டில், சாண்டர்ஸ் ஒரு “சோசலிஸ்டாக” தன்னை சுய-அடையாளப்படுத்திக் கொண்டதும், “புரட்சி” குறித்த அவரது வாக்குறுதிகளும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் தீவிரவாதத்தின் ஒரு ஒளிவட்டத்தை உருவாக்கியது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கடந்துவிட்டது, மோசமாக வாடிய ரோஜா பூத்துவிட்டது. தன்னலக்குழுக்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் ஆகிவிட்டனர். எதையும் முன்மொழியாமல், தன்னலக்குழுவின் மீதான சாண்டர்ஸின் கண்டனங்கள் ஒரு சடங்குத்தனமான தன்மையைப் பெற்றுள்ளன. தன்னைத் தானே பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்ட சாண்டர்ஸ், அதே பழமையான மற்றும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட கைதட்டல் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
சாண்டர்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், “தன்னலக் குழுக்களை எதிர்த்துப் போராடும்” சுற்றுப்பயணத்தின் நோக்கம் “பில்லியனர் வர்க்கத்திற்கு” முற்றுப்புள்ளி வைப்பதல்ல. மாறாக, நெருக்கடி முன்னேறிய கட்டத்தை அடையும் வரை மக்களுக்கு மயக்க மருந்து கொடுத்து வைத்திருந்து ட்ரம்ப் நிர்வாகம், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பை மீண்டும் ஜனநாயகக் கட்சிக்குள் கட்டிப்போடுவதே அவரது நோக்கமாகும்.
ஜனநாயகக் கட்சியைக் காப்பாற்றுவதற்கான “சாத்தியமற்ற பணியை”, சாண்டர்ஸ் ஏற்றுக்கொண்டது, ஜனநாயகக் கட்சியினருக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வரும் சூழலில் நடைபெறுகிறது. கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ், 2020 மற்றும் 2024 க்கு இடையில் ஜனநாயகக் கட்சியினருக்கான பதிவுகள், கட்சி பதிவைக் கண்காணிக்கும் 30 மாநிலங்களிலும் குறைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. ஜனநாயகக் கட்சியிலிருந்து “மக்கள் விரைவாகவும் கட்டுப்பாடற்ற முறையிலும்” வெளியேறி வருவது, “போட்டி மாநிலங்களிலான, அதிக குடியரசுக் கட்சியினரைக் கொண்ட நீல நிற மாநிலங்களிலும், அதிக ஜனநாயக கட்சியினரைக் கொண்ட சிவப்பு நிற மாநிலங்களிலும் நிகழ்கிறது” என்று டைம்ஸ் கூறுகிறது.
இந்த நிகழ்வு, குடியரசுக் கட்சியினருக்கான ஆதரவின் கூர்மையான அதிகரிப்பால் ஏற்படவில்லை. மாறாக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் பிரிவுகள், வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியை, அதன் இனப்படுகொலை, வலதுசாரிக் கொள்கைகள் மற்றும் ட்ரம்புக்கு முன்னால் அதன் முதுகெலும்பற்ற தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக வெறுக்கின்றனர்.
2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கிளிண்டன் மற்றும் பைடெனை ஆதரித்ததன் மூலமாக, தனது “அரசியல் புரட்சியை” செய்து முடித்த சாண்டர்ஸ், ஜனநாயகக் கட்சிக்கு முற்றிலும் நம்பகமான, அத்தியாவசியமான முண்டுகோலாகவும் கூட பரிணமித்துள்ளார். அவர் சொல்லும் மற்றும் மிக முக்கியமாக, சொல்லாத அனைத்தும் ஜனநாயகக் கட்சியினரின் தேவைகள் மற்றும் நலன்களுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த வாரம் இடம்பெற்ற அவரது உரைகளில், அமெரிக்க தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிக உடனடி அரசியல் ஆபத்தான சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் திட்டமிட்ட முனைவு குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் திட்டமிட்ட உந்துதல். அமெரிக்காவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய நகரத்தையும் ஆக்கிரமிப்பதற்கான அச்சுறுத்தல்களுடன், ட்ரம்ப் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய சிப்பாய்களை வாஷிங்டன் டி.சி.யின் தெருக்களில் நிறுத்தி வருகின்ற சூழ்நிலையில், சாண்டர்ஸ் இராணுவ ஆக்கிரமிப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை.
சிக்காகோவில் அவரது உரைக்கு முன்னதாக, ட்ரம்ப் தேசிய காவல்படையை அந்த நகரத்திற்குள் அனுப்புவதாக வெளிப்படையாக அச்சுறுத்தியிருந்தார். ஆயினும், சாண்டர்ஸ் முன்னெப்போதும் இடம்பெறாத இந்த அபிவிருத்தி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை அல்லது நகரத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இதன் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கவில்லை. இந்த மௌனம், கீழிருந்து எழுந்து வரும் மக்கள் எதிர்ப்பை ஊக்குவிப்பதைக் கண்டு பீதியடைந்துள்ள ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியின் பொதுவான மௌனத்துடன் ஒத்துப்போகிறது.
அமெரிக்காவில் சமத்துவமின்மை பற்றிய தனது நன்கு பழகிப்போன வரிகளான “அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பு” மற்றும் “வாழ்வதற்கான ஊதியம்” ஆகியவற்றிற்கான சம்பிரதாய அழைப்புகளையும் மீண்டும் சாண்டர்ஸ் கூறினார். எலோன் மஸ்க், பெஸோஸ் மற்றும் ஏனையவர்களின் கரங்களில் முன்னொருபோதும் இல்லாத சமத்துவமின்மை மற்றும் தன்னலக்குழுவின் அதிகாரத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு சமூகத்தின் சித்திரத்தை அவர் வரைகிறார்.
இரு அரசியல் கட்சிகளையும் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி) கட்டுப்படுத்தும் இந்த தன்னலக்குழுவின் அதிகாரத்தை எதிர்க்க எந்தவொரு குறிப்பிடத்தக்க கவனத்தையும் நடவடிக்கையையும் அவர் முன்வைக்காததால், இவை அனைத்தும் சிடுமூஞ்சித்தனமான மற்றும் நேர்மையற்ற வாய்வீச்சாகும். அவரது வாதப் பிரதிபலிப்பு, ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிப்பதுக்கான மெல்லிய கூச்சலில் தன்னைத் தீர்த்துக் கொள்கிறது மற்றும் “நிதி சீர்திருத்தப் பிரச்சாரத்துக்கு” அழைப்பு விடுக்கிறது.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரையில், சாண்டர்ஸும் ஜனநாயகக் கட்சியின் வழியையே பின்பற்றுகிறார். முந்தைய நிகழ்வுகளுக்கு மாறாக, தற்போது சாண்டர்ஸின் குழு எந்தவொரு கொடிகளையும் அல்லது கையால் செய்யப்பட்ட அடையாளங்களையும் வைத்திருப்பதை தடை செய்தது. இந்தாண்டு தொடக்கத்தில், இடாஹோவில் நடந்த ஒரு பேரணியில் சாண்டர்ஸ் செய்ததைப் போல, இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்றும் தர்மசங்கடமான நிலைக்கு சாண்டர்ஸை தள்ளுவதைத் தடுப்பதற்காக இது செய்யப்பட்டது.
காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை குறித்த தனது கருத்துக்களில், சாண்டர்ஸ் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மட்டுமே தொடர்ந்து நடைபெறும் படுகொலை தாக்குலுக்கு குற்றம் சாட்டினார். இனப்படுகொலைக்கு நிதியளித்து ஆயுதம் வழங்கியதில் பைடென் மற்றும் ட்ரம்ப் உட்பட அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மைப் பங்கை முற்றிலுமாக விடுவித்து, இஸ்ரேலுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கினார். பாலஸ்தீனத்தில் நடந்துவரும் பாரிய படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு தாக்குதலை “இனப்படுகொலை” என்று சாண்டர்ஸ் குறிப்பிடவில்லை. ஆனால், “நெதன்யாகுவை எதிர்க்க” “கடுமையான நபரான” ட்ரம்புக்கு அழைப்புவிடுத்தார்.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு ஆதரவாக சாண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கைகளும், ஜனநாயகக் கட்சியினருக்கு மிக முக்கியமானவற்றின் நிலைப்பாட்டில் ட்ரம்பை விமர்சித்த வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
சாண்டர்ஸ் அவரது அரசியல் பாத்திரம் குறித்து மிகவும் நனவுபூர்வமாக இருக்கிறார். அதேபோல், அவரது பிரச்சாரங்களை ஆதரித்து அவரை மக்களின் ஒரு தலைவராக தொடர்ந்து ஊக்குவித்து வரும் அமைப்புகளில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற அமைப்புகளும் உள்ளன. சாண்டர்ஸ் மீதான ஈர்ப்பு குறைந்து வருவதால், அதே செயல்பாட்டை நிறைவேற்ற மற்றவர்களும் பதவி உயர்வு பெற்று வருகின்றனர்.
சாண்டர்ஸ் சிக்காகோவில் அவரது பேரணியை நடத்திய அதே நாளில், நியூ யோர்க் நகர மேயர் வேட்பாளரும் DSA உறுப்பினருமான ஜோஹ்ரான் மம்தானி நியூ யோர்க் நகரில் அவரது சொந்த நிகழ்வான “துப்புரவு வேட்டையை” ஏற்பாடு செய்தார். ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம், சமத்துவமின்மை மற்றும் காஸாவில் இனப்படுகொலை ஆகியவற்றிற்கு எதிரான பரந்த மக்கள் எதிர்ப்பை சாதகமாக்கிக் கொண்டு ஜனநாயகக் கட்சி முதனிலைத் தேர்தல்களில் வென்ற மம்தானி, அந்த நகரிலுள்ள பெருவணிக நலன்களுடன் தன்னை இணைத்துக் கொள்ள விரைவாக நகர்ந்துள்ளார்.
ட்ரம்ப் மன்னராக ஆட்சி செய்ய அதிகாரம் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. இப்படியான “எதிர்ப்பு” இருக்கும்போது, அவர் ஏன் இருக்க மாட்டார்?
ஜனநாயகக் கட்சி இல்லாமல் ட்ரம்ப் தனது எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவோ அல்லது வெள்ளை மாளிகைக்குத் திரும்பியிருக்கவோ முடியாது என்பதுதான் உண்மை. ட்ரம்பின் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, பைடென் (”பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டுக்குப் பிறகு மிகவும் முற்போக்கான ஜனாதிபதி” என்று சாண்டர்ஸால் புகழப்பட்டவர்) மற்றும் முன்னாள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் பாசிச குற்றவாளியைத் தண்டிக்க மறுத்த “வலுவான குடியரசுக் கட்சி”க்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தனர்.
கீழிருந்து வரும் எதிர்ப்பைக் கண்டு பீதியடைந்துள்ள ஜனநாயகக் கட்சி, அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மையான நிலை பற்றி மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்க முற்படுகிறது. ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் நிஜமான குணாம்சத்தையும், அதற்கு அடியிலிருக்கும் சமூக நிலைமைகளையும் அம்பலப்படுத்துவது என்பது, அவர்களால் கட்டுப்படுத்த முடியாத பாரிய எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர்.
சாண்டர்ஸ், மம்தானி மற்றும் DSA இன் பாத்திரம் ஒரு “அரசியல் புரட்சியை” வழிநடத்துவதல்ல. மாறாக, முதலாளித்துவத்தை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டிராத, அதனை தூக்கியெறிவதையே நோக்கமாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, பாரிய இயக்கம் வளரும் முன்னரே, தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் சேர்ந்து, வர்க்கப் போராட்டம் மற்றும் பாரிய அதிருப்தியின் தீப்பிழம்புகளை மோப்பம் பிடித்து அணைக்கும், ஒரு தீயணைப்பு வீரராக செயல்படுவதே இவர்களின் நோக்கமாகும்.
சாண்டர்ஸால் கூற முடியாத அல்லது சொல்ல விரும்பாத ஒன்றை சோசலிச சமத்துவக் கட்சி கூறுகிறது: ட்ரம்புக்கு எதிரான போராட்டம் என்பது, செல்வந்த தட்டுக்களான தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும். தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டமாகும்.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் முன்னொருபோதும் கண்டிராத நெருக்கடிக்கு, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பொருளாதார வாழ்க்கையை சோசலிசமாக மறுஒழுங்கமைப்பதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டிய ஒரு பாரிய சமூகப் போராட்டத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் கிடையாது. இந்தப் போராட்டம், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சாண்டர்ஸ் உட்பட ஆளும் வர்க்கத்தின் அத்தனை அரசியல் பிரதிநிதிகளையும் எதிர்த்து நடத்தப்பட வேண்டும்.