முன்னோக்கு

காஸாவில் நிலவும் பஞ்சமும், பாரிய மக்கள் படுகொலையும்: சியோனிசம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா போரின் போது அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற ஊடகங்களுடன் பணிபுரிந்த 33 வயதான சுதந்திர பத்திரிகையாளர் மரியம் டாக்கா, ஜூன் 14, 2024 அன்று தெற்கு காஸா பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் நிற்கிறார். கடந்த திங்களன்று கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பல பத்திரிகையாளர்களில் மரியம் டாக்காவும் ஒருவர். [AP Photo/Jehad Alshrafi]

கடந்த திங்களன்று, இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியின் தெற்கில் உள்ள நாசர் மருத்துவமனை மீது ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். முதல் தாக்குதலின் பின்னர் செய்தி சேகரிக்கச்சென்ற ஐந்து பத்திரிகையாளர்களைக் குறிவைத்து இரண்டாவது தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இதில் ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், அல் ஜசீரா மற்றும் இதர பத்திரிகைகளை சேர்ந்த நிருபர்களும் அடங்குவர்.

இதுவரை, காஸா இனப்படுகொலையின் போது இஸ்ரேலிய துருப்புக்கள் 192 பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் துல்லியமான தாக்குதல்களில் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழுவின் கருத்துப்படி, வேறு எந்த நவீன போரையும் விட, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அதிகமான நிருபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஐ.நா. ஆதரவிலான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு அமைப்பினது உணவு கண்காணிப்பாளர், காஸா நகரில் பஞ்சம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, திங்களன்று பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் பஞ்சம் முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டதாகும் என்றும், “ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பால் இதுவரை பதிவு செய்யப்பட்ட பேரழிவு தரும் பசியை எதிர்கொள்ளும் மக்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்” என்றும் அந்த அறிக்கை அப்பட்டமாகக் கூறியது.

அக்டோபர் 2023 முதல் 115 குழந்தைகள் உட்பட 289 பேர் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் இறந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று மட்டும், காஸாவில் ஒரு குழந்தை உட்பட எட்டு பாலஸ்தீனியர்கள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர்.

நவம்பர் 21, 2024 அன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, “பட்டினியை ஒரு போர் வழிமுறையாகக்” மேற்கொள்வது போர்க்குற்றம் என்று இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மீது குற்றஞ்சாட்டியது. நெதன்யாகு அரசாங்கம், அமெரிக்காவின் (பைடென் மற்றும் இப்போது ட்ரம்பின் கீழ்) பகிரங்க ஆதரவுடனும், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் மறைமுக ஆதரவுடனும், காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கான அதன் திட்டத்தில், வேண்டுமென்றே பாரிய பட்டினியை ஒரு கொள்கை கருவியாகப் பயன்படுத்தி வருகிறது என்ற மறுக்க முடியாத உண்மையை இந்த குற்றச்சாட்டு பிரதிபலிக்கிறது.

கடந்த வாரம் தொடங்கப்பட்ட காஸா நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், இந்த முறையான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது காஸாவை முழுவதுமாக ஆக்கிரமித்து, அதன் மக்களை நாட்டின் தெற்கில் உள்ள வதை முகாம்களுக்கு இடம்பெயர்த்து, பின்னர் தெற்கு சூடான் போன்ற பிற நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கடந்த மே மாதம் தெளிவுபடுத்தியது போல்: “ஒரு வருடத்திற்குள்... காஸா முற்றிலுமாக அழிக்கப்படும், பொதுமக்கள்... தெற்கே, ஒரு மனிதாபிமான மண்டலத்திற்கு அனுப்பப்படுவார்கள்... அங்கிருந்து, அவர்கள் மூன்றாம் நாடுகளுக்கு பெருமளவில் வெளியேறத் தொடங்குவார்கள்.”

கடந்த வெள்ளியன்று, பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் நேரடி இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு வெளியே காஸாவில் எஞ்சியிருக்கும் பகுதியான காஸா நகரத்தை ஈவிரக்கமின்றி தாக்க சூளுரைத்தார். “விரைவில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை, முதன்மையாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து அவர்களை நிராயுதபாணியாக்கும் வரை, காஸாவில் ஹமாஸின் கொலைகாரர்கள் மற்றும் வன்புணர்வாளர்களின் தலைகள் மீது நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்” என்று காட்ஸ் சூளுரைத்தார்.

ஆனால் ஒரு நாள் முன்னதாக, நெதன்யாகு ஹமாஸுடன் எந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தாமல் காஸா நகரத்தின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் நடைபெறும் என்று கூறினார். “நாங்கள் எப்படியும் அதைச் செய்வோம். நாங்கள் ஹமாஸை அங்கேயே விட்டுவிடப் போவது என்ற கேள்விக்கே ஒருபோதும் இடமில்லை” என்று நெதன்யாகு ஸ்கை நியூஸிடம் கூறினார்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆயுதங்களைக் கீழே போடுவது உட்பட ஹமாஸ் எதைச் செய்தாலும் “நரகத்தின் வாயில்களை” திறக்க இஸ்ரேல் திட்டமிடுகிறது என்பதாகும். அக்டோபர் 7, 2023 சம்பவங்களை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் “போர்” என்பது, காஸாவை இணைத்துக் கொள்வதற்கும் இனரீதியில் சுத்திகரிப்பதற்குமான ஒரு முயற்சியாக எப்போதும் இருந்து வந்துள்ளது என்பதை இந்த அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

கடந்த வெள்ளியன்று காஸா நகரத்தில் பஞ்சம் பற்றிய அறிவிப்பும், திங்களன்று நாசர் மருத்துவமனையில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதும், பல ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அதிகாரிகளால் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து முற்றிலும் பாசாங்குத்தனமான கண்டனங்களை தூண்டியுள்ளன.

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி எக்ஸ் இல் ஒரு பதிவில், இந்த தாக்குதலால் அவர் “திகிலடைந்துள்ளார்” என்றும், “பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் எழுதினார். உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதே மனிதர்தான், இஸ்ரேல் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து ஆக்கிரமித்து, அது அழித்தொழிக்க முனைந்து வருகின்ற ஒரு நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக “இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான அதன் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று நடைமுறையளவில் ஒவ்வொரு மூச்சிலும் அறிவிக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் இனப்படுகொலைக்கு எதிரான குழுவான பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவை ஒரு “பயங்கரவாத அமைப்பு” என்று அறிவித்துள்ளது மற்றும் இந்தக் குழுவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தும் உள்ளது.

இஸ்ரேல் நிகழ்த்திய இந்த அல்லது அந்த படுகொலைக்கு எதிரான இவர்களின் வாய்மொழி எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் ஆகியவை காஸா இனப்படுகொலையை ஆதரித்து பாதுகாத்து வருகின்றன.

சமீபத்திய அட்டூழியங்களுக்கு பதிலளித்த ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரெஸ், வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் பஞ்சம் “மனிதகுலத்தின் தோல்வி” என்று கூறினார். மேலும் UNRWA மனிதாபிமான உதவி அமைப்பின் தலைவர் லாஸ்ஸாரினி, “உலகின் அலட்சியமும் மற்றும் செயலற்ற தன்மையும் அதிர்ச்சியளிக்கிறது என்று அறிவித்தார். ஹன்னா ஆரெண்ட் கூறியதைப் போல, “மனித அனுதாபத்தின் மரணம் என்பது காட்டுமிராண்டித்தனத்திற்குள் விழவிருக்கும் ஒரு கலாச்சாரத்தின் ஆரம்ப மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்றாகும்.”

ஒருவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். காஸாவில் இழைக்கப்பட்டு வரும் குற்றங்கள் “மனிதகுலத்தின் தோல்வி” அல்ல, அல்லது அவை “உலகின் அலட்சியத்தின்” விளைபொருளும் அல்ல.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் காஸா இனப்படுகொலையை எதிர்க்கின்றனர். பாலஸ்தீன மக்களை பூண்டோடு அழிப்பதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள், வரலாற்றில் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப்பெரிய வெகுஜன எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்றை எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பைப் பணயம் வைத்து காஸா இனப்படுகொலையை எதிர்த்து வருகின்றனர்.

இங்கு பற்றாக்குறையாக இருப்பது “மனிதாபிமானமோ” அல்லது “பச்சாதாபமோ” அல்ல, மாறாக முன்னோக்கு ஆகும். காஸா இனப்படுகொலை “மனிதகுலத்தின் ஒரு தோல்வி” அல்ல, மாறாக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஒரு குற்றமாகும். இது மனித நிலையில் இருந்து, மனித ஆன்மாவில் இருந்து ஊற்றெடுக்கும் ஒரு வகையான இருத்தலுக்கான காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து எழவில்லை, மாறாக ஒரு திட்டவட்டமான மற்றும் ஸ்தூலமான சமூக உறவுகளின் தொகுப்பில் இருந்து எழுகிறது.

2017 ஆம் ஆண்டில், உலகின் எட்டு பணக்கார பில்லியனர்கள், உலக மக்கள்தொகையில் ஏழைகளாக இருக்கும் 3.6 பில்லியன் மக்களின் சொத்துக்களுக்கு சமமான தொகையை வைத்திருப்பதாக ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, உலக பில்லியனர்களின் செல்வவளம் 2023 ஐ விட, 2024 இல் மூன்று மடங்கு வேகமாக உயர்ந்திருப்பதாக ஆக்ஸ்பாம் குறிப்பிட்டுள்ள நிலையில், நிதியியல் தன்னலக்குழுக்கள் செல்வந்தராக மட்டுமே வளர்ந்துள்ளன.

உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் இருந்து செல்வம் பெறப்பட்ட இந்த தன்னலக்குழுவின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் பரந்த விரிவாக்கம்தான் அனைத்து வகையான சமூக காட்டுமிராண்டித்தனத்தின் வெடிப்பிற்கான சமூக அடித்தளத்தை உருவாக்குகிறது.

முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் ஒரு தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரை நடத்தி வருகின்றன. காஸா இனப்படுகொலை அதன் ஒரு பாகமாகவும் ஒரு முன்னுதாரணமாகவும் உள்ளது. காஸா இனப்படுகொலையுடன் சேர்ந்து, முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்திய போரை நடத்துவதில் கடிவாளமற்ற வன்முறையைப் பயன்படுத்துவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கைவிட்டு வருகிறது.

உள்நாட்டு அரசியலில், தன்னலக்குழுவின் மேலாதிக்கமானது பகிரங்கமாக சர்வாதிகாரம் மற்றும் பாரிய ஒடுக்குமுறைக்கு திரும்புவதிலும், முன்னர் உள்நாட்டு அடக்குமுறையைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்தியிருந்த அனைத்து எல்லைகளை கடப்பதிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

காஸா மக்கள் வெளியேற்றப்பட்டு அதன் நகரங்கள் அழிக்கப்பட்டு உழப்பட்ட பின்னர் அது “மத்திய கிழக்கின் களியாட்ட நகராக” மாற்றப்படும் என்று பிரகடனம் செய்யும் அதே ட்ரம்ப், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் பாரிய ஒடுக்குமுறையின் மூலமாக அவர் கட்டமைத்து வரும் அமெரிக்க போலிஸ் அரசை விட “தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்பவோ அல்லது ஒரு நிறுவனத்தை வளர்க்கவோ” “பூமியில் வேறெந்த சிறந்த இடமும் இருக்காது” என்று அறிவிக்கிறார். நெதன்யாகுவும் அவரது பாசிஸ்டுகளின் கும்பலும் பாலஸ்தீனியர்களை விவரிக்கப் பயன்படுத்தும் அதே மொழியை, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க நகரங்களை விவரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவக் கட்சிகளும், காஸா இனப்படுகொலைக்கு உடந்தையாக உள்ளன. அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கன்னைகளும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் உட்பட, இஸ்ரேலை ஆயுதபாணியாக்க மீண்டும் மீண்டும் வாக்களித்துள்ளனர் மற்றும் “இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கு” உள்ள நித்திய உரிமையை பிரகடனம் செய்துள்ளனர்.

காஸா இனப்படுகொலை என்பது ஆரோக்கியமான சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு புற்றுநோய் வளர்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த குரோதத்தின் அறிகுறியாகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு விடுக்கும் தார்மீக முறையீடுகள் என்பது “மழைக்கான பிரார்த்தனைகளை விட சிறந்தவை” அல்ல.

இனப்படுகொலையை நிறுத்துவதற்கு அதை இயக்கும் வேரூன்றிய சமூகப்-பொருளாதார நலன்கள் மீதான நேரடித் தாக்குதல் தேவை. முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் ஏனைய அனைத்து வெளிப்பாடுகளுடன் சேர்ந்து, பாலஸ்தீன மக்கள் நிர்மூலமாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் தகைமை கொண்ட ஒரேயொரு சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும்.

ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது என்ற புரிதலுடன் தொழிலாளர்கள் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடும், அதன் பின்னால் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளையும் சமூகத்தின் இளைஞர்களையும் அணிதிரட்டுவதும் மட்டுமே, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் உலகளாவிய வெடிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழியாகும்.

Loading