மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
1907 ஆம் ஆண்டில், மாபெரும் சோசலிச எழுத்தாளர் ஜாக் லண்டன் இரும்புக் குதிக்கால் (The Iron Heel) என்ற தலைப்பிலான ஒரு நாவலை எழுதினார். இந்த நாவல், தொழிலாள வர்க்கத்தை நசுக்க தீர்மானகரமாக இருந்த ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுக்களால் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரம் உருவாக்கப்படுவதை சித்தரித்தது. ஜாக் லண்டன் பின்வருமாறு குறிப்பிட்டார்:
அந்த தன்னலக்குழு வன்முறையை விரும்பியது. மேலும், அது ஆத்திரமூட்டும் முகவர்களை வேலையில் அமர்த்தியது. … பதினொரு ஆயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாக்ரமெண்டோவின் தெருக்களில் சுட்டு வீழ்த்தப்பட்டனர் அல்லது அவர்களின் வீடுகளில் கொல்லப்பட்டனர். [அத்தியாயம் 16]
ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் அதிகரித்து வரும் இரும்புக் காலணியின் (Iron Boot) ஆவியுருவை எதிர்கொள்கின்றனர்.
ட்ரம்ப் நிர்வாகம் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அதன் உந்துதலை இடைவிடாமல் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக, அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கைகளை ட்ரம்ப் கட்டவிழ்த்து வருவதால், இதை மறுப்பது குருட்டுத்தனம், சுய-ஏமாற்று அல்லது அப்பட்டமான ஒத்துழைப்பாகும். ஜனாதிபதி வாஷிங்டன் டி.சி.யை ஒரு பொலிஸ்-இராணுவ ஒருங்கிணைக்கப்பட்ட பிரதேசமாக மாற்றி, இந்த வார்ப்புருவை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தி வருகிறார்.
கடந்த திங்களன்று, ட்ரம்ப் “கொலம்பியா மாவட்டத்தில் குற்ற அவசர நிலையை நிவர்த்தி செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகள்” என்ற தலைப்பில் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். மேலும் ஆகஸ்ட் 11 அன்று, ஒரு மோசடியான “குற்ற அவசர நிலையை” அறிவித்து சர்வாதிகாரத்தை நோக்கிய புதிய நடவடிக்கைகளை எடுத்தார். இந்த உத்தரவு, வாஷிங்டன், டி.சி. மற்றும் பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு இழந்த பிற நகரங்களில்” பணியமர்த்துவதற்காக முன்னாள் போலீசார், முன்னாள் படையினர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை நியமிக்க இது ஒரு இணைய தளத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், ட்ரம்ப் மரணகதியிலான பலத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமத்துடன், அவரது தனிப்பட்ட கட்டளையின் பேரில், பாரம்பரிய கட்டமைப்புகளுக்கு வெளியில் செயல்படும் ஒரு துணை இராணுவப் படையை உருவாக்கி வருகிறார்
“கொலம்பியா மாவட்ட தேசிய காவல்படைக்குள் ஒரு சிறப்புப் பிரிவை உடனடியாக உருவாக்கி, பயிற்சி அளித்தல், பணியாளர்களை நியமித்தல், பணியமர்த்தல் மற்றும் ஆயுதம் ஏந்துதல் ஆகியவற்றைத் தொடங்கவும்”, ஒவ்வொரு மாநிலத்திலுள்ள தேசிய காவல்படைக்கு ஆதார வளங்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, நாடு தழுவிய அளவில் விரைவாக அணிதிரட்டப்படுவதை உறுதி செய்யவும், பாதுகாப்புச் செயலாளருக்கு இந்த உத்தரவு அறிவுறுத்துகிறது. நடைமுறையில், இது ஜனாதிபதியின் வசம் ஒரு நிலையான இராணுவ-பொலிஸ் படையை நிறுவுகிறது. இது, நாட்டில் வெடிக்கும் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பை எதிர்த்து கட்டவிழ்த்துவிட தயாராக உள்ளது.
அமெரிக்கா மீது புலம்பெயர்ந்தோர் “படையெடுப்பதன்” காரணமாக நகரங்கள் குற்றங்களால் நிரம்பி வழிகின்றன என்ற குற்றச்சாட்டுகளே, இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குக் கூறப்படும் அப்பட்டமான பொய் காரணங்களாகும். மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு வெறுமனே ட்ரம்பின் தன்முனைப்பு சுயநலவாதம் அல்லது ஹிட்லர் மீதான அவரது நீண்டகால அபிமானத்தை காரணம் காட்ட முடியாது. ட்ரம்ப், அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களுடன் முறித்துக் கொண்டு வருகின்ற ஒரு நிதியியல் தன்னலக்குழுக்களின் சார்பாக செயல்பட்டு வருகிறார்.
அமெரிக்க நகரங்களில் “உள்நாட்டு அமைதியின்மையை” எதிர்த்துப் போரிடுவதற்கு துருப்புக்களை அனுப்புவது அவசியம் என்று ட்ரம்ப் நிர்வாகமும் ஆளும் வர்க்கமும் கருதுவதற்கு என்ன அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும்? இந்தக் கேள்விக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் அடிப்படையில் அல்ல, மாறாக அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் வேரில் உள்ள அடிப்படை வர்க்கப் பிரச்சினைகளின் அடிப்படையில் பதிலளிக்கப்பட வேண்டும்.
முற்றிலும் நிதிய அடிப்படையில், அமெரிக்க முதலாளித்துவம் பொருளாதார ரீதியாக தாங்க முடியாத ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறது. தேசியக் கடன் 37 ட்ரில்லியன் டாலர்கள் ஆக உள்ளது. பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கான ட்ரம்பின் வரி விலக்குகளை விரிவாக்குவதன் மூலம், இது 40 ட்ரில்லியன் டாலர்களைக் கடந்து உயருமென கணிக்கப்பட்டுள்ளது. மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கம், ஏற்கனவே 1.5 டிரில்லியனில் இருந்து 2 டிரில்லியன் டாலர்கள் வரை வருடாந்திர ஆண்டு பற்றாக்குறையைக் கொண்டுள்ளது.
இந்த மலைபோன்ற கடன் தொகைக்கான வட்டி செலுத்துதல்கள் அடுத்த தசாப்தத்திற்குள் மிகப்பெரியளவில், மத்தியிலுள்ள கூட்டாட்சி அரச செலவினங்களாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பிரம்மாண்டமான இராணுவ வரவு-செலவு திட்டத்தையும் விஞ்சுகிறது. கடன் சேவையில் இந்த இடைவிடாத வளர்ச்சி, பல தசாப்தங்களாக செல்வந்தர்களுக்கான வரி குறைப்புகளை மட்டுமல்ல, பிணை எடுப்பு மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு திருப்பி விடப்பட்ட பிரமாண்டமான ஆதார வளங்களையும் பிரதிபலிக்கிறது.
கட்டாய திட்டங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன: சமூகப் பாதுகாப்பு சுமார் 20 சதவீதம், மருத்துவக் காப்பீட்டுக்கு மற்றொரு 15 சதவீதம், மருத்துவ உதவி மற்றும் இதனுடன் தொடர்புடைய திட்டங்கள் மற்றொரு 14 சதவீதமாக இருக்கிறது. “விருப்புரிமை” செலவுகள் —அதாவது, இந்த வேலைத்திட்டங்களுக்கு வெளியிலான அனைத்து செலவினங்களும்— மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே கணக்கிடப்படுகிறது. இராணுவச் செலவுகள் மட்டும் 13 சதவீதத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது, மற்ற அனைத்து திட்டங்களும் சேர்ந்து வெறும் 14 சதவீதம் மட்டுமே உள்ளது.
ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, இராணுவச் செலவினங்களைக் குறைக்க முடியாது, குறைக்கப்படவும் மாட்டாது. உண்மையில், வாஷிங்டன் உலகம் முழுவதும் அதன் உலகளாவிய மோதல்களை தீவிரப்படுத்தி வரும்போது இது மேலும் அதிகரிக்கும். ட்ரம்பின் “பெரிய, அழகான சட்ட மசோதா” பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கூடுதலாக ட்ரில்லியன் கணக்கான பணத்தை ஒப்படைத்துள்ள நிலையில், நிதியியல் பிரபுத்துவம் அதன் செல்வ வளத்தின் மீதான எந்தவொரு ஊடுருவலையும் ஏற்றுக் கொள்ளாது. ட்ரம்ப் நிர்வாகம் செயலூக்கத்துடன் செயல்படுத்தி வருகின்ற பாதுகாப்பு-அல்லாத விருப்புரிமை செலவினங்கள் அனைத்தையும் நீக்குவது என்பது வரவு-செலவு திட்டப் பற்றாக்குறையை தீர்க்கப் போவதில்லை.
எனவே, கோடிக்கணக்கான மக்களுக்கு அடிப்படை வருமானம், சுகாதாரம் மற்றும் கண்ணியத்தை வழங்கும் முக்கிய சமூகத் திட்டங்கள் —சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவி— மீது ஒரு பெரிய தாக்குதல் மட்டுமே எஞ்சியுள்ளது. சமூகப் பாதுகாப்பை ஒருபோதும் தொட மாட்டேன் என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் சபதம் செய்தாலும், இந்தக் கூற்று அவரது மற்ற பொய்களை விட குறைவான நம்பகத்தன்மை கொண்டது அல்ல. வோல் ஸ்ட்ரீட் பில்லியனரான கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட், கடந்த மாதம் ட்ரம்பின் வரவு-செலவு திட்ட மசோதாவில் உள்ள விதிகள் “சமூக பாதுகாப்பை தனியார்மயமாக்குவதற்கான ஒரு கொல்லைப்புறத்தை” வழங்கும் என்று பெருமையாகக் பீற்றிக் கொண்டார்.
இத்தகைய வெட்டுக்களின் தாக்கம் மக்கள்தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகப் பாதுகாப்பு என்பது கோடிக்கணக்கான ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஊனமுற்றோரின் முக்கிய வருமான ஆதாரமாகும்; 25-30 சதவீதக் குறைப்பு என்பது வழக்கமான ஓய்வு பெறுபவரிடமிருந்து ஆண்டுக்கு 6,000–7,000 டாலர்களை பறித்து மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளுகிறது. மருத்துவக் காப்பீட்டு மற்றும் மருத்துவ உதவி வெட்டுக்கள் என்பது முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான மருத்துவச் செலவுகளை உயர்த்துவதுடன், மில்லியன் கணக்கானவர்கள் நம்பியிருக்கும் முதியோர் இல்லங்கள் மற்றும் வீட்டு பராமரிப்புத் திட்டங்களை மூடுவதையும் குறிக்கும். தொழிலாள வர்க்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளைத் தக்கவைக்கும் SNAP, SSI மற்றும் குழந்தை வரிச் சலுகைகள் போன்ற மருத்துவ உதவி மற்றும் வருமான ஆதரவுத் திட்டங்கள் ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்டன.
ட்ரம்பின் வேலைத்திட்டம், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர் போராட்டத்தின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூக முன்னேற்றத்தையும் கிழித்தெறிந்து, நவீன அமெரிக்க வரலாற்றின் ஒட்டுமொத்த போக்கையும் தலைகீழாக மாற்ற தீர்மானகரமாக உள்ள ஒரு ஆளும் வர்க்கத்திற்காக பேசுகிறது. உள்நாட்டுப் போரில் ஆப்ரகாம் லிங்கனின் யூனியன் படைக்கு எதிராக போரிட்ட கூட்டமைப்பு நாயகர்களைப் புகழ்வதை புதுப்பிக்க ட்ரம்ப் முயன்று வருகிறார் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
பல்லாயிரக்கணக்கான மத்திய கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். பொதுக் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வெட்டுக்களுக்கு உள்ளாகி வருகின்றன. புதிய ஒப்பந்தம் மற்றும் மாபெரும் சமூகச் (New Deal and Great Society) சீர்திருத்தங்களில் எஞ்சியிருப்பவையும் தகர்க்கப்பட உள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து பறிக்கப்பட்ட அத்தனை மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையும் இல்லாதொழிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான தவிர்க்க முடியாத பாரிய எதிர்ப்பு வெடிப்பதற்கு முன்பே, அரசாங்கம் முன்கூட்டியே தயாராகி வருகிறது. வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அடிப்படை வாழ்க்கைத் தரங்களை அழிப்பது, குறிப்பாக நகரங்களில், எழுச்சிகளைத் தூண்டும் என்று ஆளும் வர்க்கம் உறுதியாக நம்புகிறது. பல ஆண்டுகளாக, நகர்ப்புற அமைதியின்மையின் அபாயத்தில் அரசு மூழ்கியுள்ளது. மேலும் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகள் அத்தகைய எதிர்ப்பை, இராணுவ பலம் மற்றும் அடக்குமுறை மூலம் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அடிப்படை வர்க்க இயக்கவியல் ஜனநாயகக் கட்சியின் பாத்திரத்தையும் விளக்குகிறது. ட்ரம்பின் வழிமுறைகள் மீது அங்கே சில கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும் என்றாலும், தொழிலாள வர்க்கத்தை விலையாகக் கொடுத்து சமூகக் கொள்கையில் கடுமையான மாற்றங்கள் திணிக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு பெருவணிக கட்சிகளும் ஏற்றுக்கொள்கின்றன. இவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் தந்திரோபாய ரீதியானவை. அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு யார் விலை கொடுப்பார்கள் என்ற மையக் கேள்வியில், அங்கே எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.
பத்திரிகை செய்திகள் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளை அவரது சமீபத்திய விசித்திரமான செயல்களாகவே கருதுகின்றன. ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்பு அரசாங்கத்தை அழிப்பது ட்ரம்பின் ஆளுமை சம்பந்தப்பட்ட விடயம் என்பது போல, நடைமுறையின் மீது அவர்களின் விமர்சனங்களை ஒருமுனைப்படுத்துகின்றனர். ஒரு முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர் கூட ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கிறார் என்று பகிரங்கமாக கூறவில்லை அல்லது அவரது நடவடிக்கைகளை இயக்கும் வர்க்க சக்திகள் பற்றி விளக்கவில்லை. யதார்த்தத்தில், அனைத்திற்கும் மேலாக ட்ரம்பின் ஆணவமான நடவடிக்கைகள் அடிமட்டத்திலிருந்து ஒரு கட்டுப்படுத்தவியலாத இயக்கத்தைத் தூண்டிவிடும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர்.
இந்த யதார்த்தம் கட்டவிழ்ந்து வரும் அரசியல் நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான பாத்திரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் வன்முறைத் தாக்குதல்கள் அல்லது “குற்றத்திற்கு” எதிரான அவரது மோசடியான சிலுவைப் போர் ஆகியவற்றுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பனை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக தவறு விடுகிறார்கள். சர்வாதிகார ஆட்சியை திணிப்பது சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் நீட்டிக்கப்படும்.
சிக்கன நடவடிக்கைகள், ஏகாதிபத்தியப் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான ஆளும் வர்க்க உந்துதலின் முக்கிய இலக்காக தொழிலாள வர்க்கம் —அதன் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், சமூக நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள்— உள்ளது. வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமாக்கப்படும், மேலும் தன்னலக்குழுவின் கட்டளைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் குற்றமாக்கப்படும்.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து முற்போக்கான பிரிவுகளும் எதிர்கொள்ளும் மிக அவசரமான பணி, அரசியல் யதார்த்தத்தை எதிர்கொள்வதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதுமாகும். ஆகஸ்ட் 20 அன்று உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
இப்போதிருக்கும் அரசியல் கட்டமைப்பிற்குள் எதிர்ப்பு இல்லாத நிலையில், ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பின் மையம் தொழிலாள வர்க்கத்தை நோக்கி நகர வேண்டும். பதிலளிக்கப்பட வேண்டிய அடிப்படை அரசியல் கேள்விகள்: அமெரிக்காவில் சர்வாதிகாரம் நிறுவப்படுவதை தடுத்து நிறுத்த, மாணவர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்கான சக்திகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஒரு பொது வேலைநிறுத்தம் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன நடவடிக்கையின் புதிய வடிவங்கள் என்ன? நிதியியல்-பெருநிறுவன தன்னலக்குழுக்களின் அதிகாரத்தை உடைப்பதற்கு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் என்ன மாற்றங்கள் அவசியமாக உள்ளன?
1861ம் ஆண்டு அடிமை ஆட்சியின் கிளர்ச்சியை எதிர்கொண்ட லிங்கன், சுதந்திரப் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்ட ஜனநாயகக் கொள்கைகள், கூட்டமைப்பின் பொருளாதார அடித்தளமாக இருந்த அடிமை முறையை அழித்தொழிக்கும் ஒரு புரட்சியின் மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டார். உள்நாட்டுப் போர் முடிந்து சரியாக 160 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு பாசிச இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலானது, தன்னலக்குழு அதிகாரத்தின் பொருளாதார அடித்தளமான முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அதை தொழிலாளர் அதிகாரம் மற்றும் சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான அவசியத்தை முன்நிறுத்துகிறது.
இந்த ஆய்வுடன் உடன்படும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் சர்வாதிகாரத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.