முன்னோக்கு

ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய், மக்ரோனைப் பதவியிலிருந்து வீழ்த்து, ஐரோப்பாவில் போர் விரிவாக்கத்தை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் நியூ கலிடோனியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், மையத்தில், பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, இடது, மற்றும் வெளிநாட்டுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் மானுவல் வால்ஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஜூலை 12, 2025, பிரான்ஸ் [AP Photo/Tom Nicholson]

பிரெஞ்சு பிரதம மந்திரி பிரான்சுவா பேய்ரூ, அவரது சிக்கன வரவு-செலவு திட்டத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததன் மூலமாக, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் அரசியல் நெருக்கடியை வெடிக்கச் செய்துள்ளார். அவரது சிறுபான்மை அரசாங்கம் வீழ்ச்சியடையும் நிலையில், புதிய பாராளுமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் அவரது சிறுபான்மை அரசாங்கம், தெளிவான வெற்றி எதிர்பார்க்கப்படாத நிலையில், பிரான்ஸ் முட்டுச்சந்துக்குள் சிக்கியுள்ளது.

தொழிலாள வர்க்கத்திற்கும், முதலாளித்துவ தன்னலக்குழு அதன் போருக்கு ஆழமான சிக்கன நடவடிக்கைகளின் மூலம் நிதியளிப்பதற்கும் இடையே ஒரு சமரசமற்ற மோதல் உருவாகி வருகிறது. ஜேர்மன் சான்சிலர் பிரெடெரிக் மேர்ஸ் 1 ட்ரில்லியன் யூரோ போர் நிதியைத் தயாரித்து, “நலன்புரி அரசுக்கு இனியும் நிதியளிக்க முடியாது” என்று அறிவித்துள்ள நிலையில், பிரெஞ்சு இராணுவச் செலவினங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு விடுமுறை நாட்களையும் 44 பில்லியன் யூரோ சமூக செலவினங்களையும் வெட்டித் தள்ளுவதற்கு பேய்ரூ அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். ஐரோப்பா முழுவதும் பின்பற்றப்படும் இத்தகைய சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவமயமாக்கல் கொள்கைகள், பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.

பிரெஞ்சு மக்களில் 84 சதவீதம் பேர் பேய்ரூவின் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் பேய்ரூ மற்றும் செல்வந்தர்களின் ஜனாதிபதியான ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இருவருமே பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றனர். எரிசக்தி மற்றும் இரயில்வே தொழிலாளர்கள், பல்பொருள் அங்காடி தொழிலாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் மத்தியில் வேலை நிறுத்தங்கள் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 10 அன்று, ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்துடன் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

பிரான்சில் 1968 மே மாதம் நடைபெற்றதைப் போன்ற ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான சாத்தியக்கூறால் அரசியல் நிலைமை சூழப்பட்டுள்ளது. ஆனால் பிரான்சில் ஒரு நாள் தேசிய எதிர்ப்பு வேலைநிறுத்தம் ஒரு ஒத்திகையாக மட்டுமே இருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்காகப் போராட வேண்டும். தொழிலாள வர்க்கம் எழுச்சிபெற்று வரும் சர்வதேசப் போராட்டத்தில் அதன் பணிகள் குறித்த ஒரு புரிதலைக் கொண்டு அரசியல்ரீதியாக ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். அத்துடன், வர்க்கப் போராட்டத்தை தாமதப்படுத்தவும், அதை ஒழுங்கமைக்கவும் முனையும் அதிகாரத்துவங்களால் முன்வைக்கப்படும் முட்டுக்கட்டைகளையும் தொழிலாள வர்க்கம் முறியடித்து வர வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக பிரான்சில், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா  பிரான்ஸ் கட்சியின் (LFI) தலைமையிலான புதிய மக்கள் முன்னணியில் (NFP), பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), பசுமைக் கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஆகியவை உள்ளடங்குகின்றன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பொருளாதாரத்தைத் முடக்குவதற்கான அழைப்புகளை நிராகரிக்கின்றன: CFDT தொழிற்சங்கம் இவை “எங்களது வழிமுறை அல்ல” என்று அழைத்துள்ளது. தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) இவற்றை “தெளிவற்றவை” என்று கூறி உதறித் தள்ளியது. செப்டம்பர் 23 அன்று, மக்ரோனை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில், “பாராளுமன்றத்தில் ஒரு கண்டனத் தீர்மானத்தை முன்வைப்பதுக்கு”, மெலன்சோன் செப்டம்பர் 10 அன்று ஒரு நாள் “பொது முடக்கத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், இந்த நெருக்கடிக்கு எந்த தேசியத் தீர்வும் இருக்கப் போவதில்லை என்பதோடு, வர்க்கப் போராட்டத்தை அவர்களின் நாடாளுமன்ற சூழ்ச்சிகளுக்கு அடிபணிய செய்ய முனையும் அடிபணியா பிரான்ஸ் போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பணி ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது அல்ல. மாறாக போர், இனப்படுகொலை மற்றும் சர்வாதிகாரத்திற்குள் தலைகீழாக மூழ்கும் ஒரு முதலாளித்துவ தன்னலக்குழுவின் கரங்களில் இருந்து அதிகாரத்தை பறிப்பதாக இருக்க வேண்டும்.

பிரெஞ்சு வரவுசெலவுத் திட்ட நெருக்கடியின் வர்க்க வேர்கள்

தொழிலாளர்கள் ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமாக பிரெஞ்சு வரவுசெலவுத் திட்ட நெருக்கடியை தீர்க்க முடியாது. அத்தகைய அரசாங்கம் தவிர்க்க முடியாமல் பேய்ரூவின் கொள்கைகளின் பரந்த வரைவுகளை தொடர முற்படும். தொழிலாளர்கள் இரண்டு தீவிர மாற்றீடுகளை எதிர்கொள்கின்றனர்: முதலாளித்துவ சொத்துக்களை நேரடியாக தாக்குவதன் மூலம் போர்கள் மற்றும் இராணுவ விரிவாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருதல், அல்லது வறுமையில் மூழ்குதல்.

உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் மற்றும் காஸா இனப் படுகொலைக்கு மத்தியில், ஐரோப்பாவின் நேட்டோ சக்திகள் வாஷிங்டனுடன் ஒப்புக்கொண்டபடி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதற்கு நிதியளிப்பதே பேய்ரூவின் வெட்டுக்களின் நோக்கமாகும். பிரான்சின் பொதுக் கடனை அடைக்க முடியும் என்று வங்கிகளுக்கு உறுதியளிக்க, அரசு வரவு செலவுத் திட்டங்களைக் குறைக்கும் அதே வேளையில், இராணுவத்திற்கு ஆண்டுக்கு 100 பில்லியன் யூரோக்களை விடுவிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கடன்களுக்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், பிரான்சின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 சதவீதத்தில் இருந்து 115 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த 47 சதவீத கடனில், மூன்றில் இரண்டு பங்கு யூரோ மண்டலத்தின் பல வங்கி பிணை எடுப்புகளில் இரண்டிற்கு மட்டுமே பிரான்ஸ் நிதியளித்ததால் ஏற்பட்டது: இது, 2009 இல், வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னரும், 2020 இல் COVID19 தொற்றுநோயின் தொடக்கத்தில் நிதியியல் பீதியைத் தடுப்பதற்காகவும் ஏற்பட்டது.

யூரோ மண்டல அரசுகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து கடன் வாங்கி, பங்குச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளுக்கு முட்டுக் கொடுக்கவும் மற்றும் தன்னலக்குழுக்களின் செல்வத்தை ஊதிப் பெருக்க வைக்கவும் தங்கள் வங்கிகளுக்கு அவற்றைக் கொடுத்தன. 2009ல் இருந்து, தொழில்துறையும் வாழ்க்கைத் தரமும் தேக்கமடைந்துள்ளன. ஆயினும், சேலஞ்சஸ் என்ற இதழ் பதிவு செய்தபடி, வெறும் 500 பிரெஞ்சு செல்வந்தர்களின் செல்வ வளம், ஒவ்வொரு வங்கி பிணை எடுப்புக்குப் பிறகும் மிக வேகமாக உயர்ந்தது. 2009 முதல் ஆறு மடங்கிற்கும் மேலாக, 194 யூரோவிலிருந்து 1,228 பில்லியன் யூரோக்களாக இது அதிகரித்துள்ளது. இந்த அருவருப்பான செல்வம் ஜனநாயகத்துடன் பொருந்தாததாக மாறிவிட்டது.

பிரெஞ்சு அரசின் 445 பில்லியன் யூரோக்கள் செயல்பாட்டு வரவுசெலவுத் திட்டத்தில், 25 சதவீதம் ஓய்வூதியங்களுக்கும், 20 சதவீதம் சுகாதாரப் பாதுகாப்புக்கும், 15 சதவீதம் கல்வி மற்றும் பிற நிர்வாகங்களுக்கும், 11 சதவீதம் வேலையின்மை காப்பீடு மற்றும் குடும்ப நலன்களுக்கும் செல்கிறது என்று எலிசே ஜனாதிபதி மாளிகை தெரிவிக்கிறது. பிரான்சின் செயல்பாட்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான வருவாய் 330 பில்லியன் யூரோக்களாக இருக்கையில், அது பெரிய வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையைக் எதிர் கொண்டுள்ளது. இதற்கு வங்கிகள் நிதியளிக்க மாட்டோம் என்று அச்சுறுத்துகின்றன.

பிரான்சின் செயல்பாட்டு வரவு-செலவு திட்டத்தில் 71 சதவீதம் அடிப்படை சேவைகளுக்கு செல்கின்ற நிலையில், போர் எந்திரத்திற்கு 100 பில்லியன் யூரோவையும், பற்றாக்குறையைக் குறைக்க மற்றொரு 100 பில்லியன் யூரோவையும் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி, நலன்புரி சேவைகளை அழித்து ஒழிப்பதாகும். இதன் பொருள், சமூக எதிர்ப்பை நசுக்க ஒரு போலீஸ் அரசு சர்வாதிகாரத்தை அமைப்பதாகும். இதற்கு மாறாக, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கம் போரை நிறுத்தி, முதலாளித்துவ தன்னலக்குழுவின் கட்டளைகளை நசுக்கித்தள்ள வேண்டும்.

தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிய பாதை என்ன?

சமீபத்திய ஆண்டுகளின் போராட்டங்களில் இருந்து அரசியல் படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும். 2023 ஓய்வூதிய போராட்டத்தில், மில்லியன் கணக்கானவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர் மற்றும் மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிராக கலகங்கள் வெடித்தன — மக்ரோன் உத்தரவாணை மூலமாக அவரது வெட்டுக்களை அறிவித்த பின்னர், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை கைவிட்டதை மட்டுமே காண முடிந்தது. 2024 இல், மில்லியன் கணக்கானவர்கள் மெலோன்சோனுக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் முதலாவதாக வந்த NFP க்கும் வாக்களித்தனர். ஆனால், இரண்டாம் சுற்றில் மெலோன்சோன் மக்ரோனின் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காண மட்டுமே முடிந்தது. இதனால் மக்ரோன் தொடர்ச்சியான பலவீனமான, சிறுபான்மை அரசாங்கங்கள் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

ஒரு மையப் படிப்பினை இதுதான்: வர்க்கப் போராட்டமானது NFP அதிகாரத்துவங்களின் இறுகிய பிடியிலிருந்தும், மெலன்சோனின் பாராளுமன்ற சூழ்ச்சிகளுக்கு அடிப்படையான தேசியவாத முன்னோக்கிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக, தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் ஒழுங்கமைக்கவும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்தும் மற்றும் அரசுடனான அவர்களின் “சமூக உரையாடலில்” இருந்தும் சுயாதீனமான, சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டும். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு பொது வேலைநிறுத்தமும் சர்வதேசப் போராட்டமும் உருவாகக்கூடிய நிலைமைகளை உருவாக்க வர்க்கப் போராட்டத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி இன்றியமையாததாகும்.

அத்தகைய அரசியல் தாக்குதலை நடத்துவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த கோரிக்கைகள் தேவைப்படுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி இந்த நோக்கத்திற்காக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

ஏகாதிபத்திய போர் வேண்டாம்! ரஷ்யாவுடனான போரை நிறுத்து, நேட்டோவை கலை! இராணுவக் கட்டமைப்புக்கு முற்றுப்புள்ளி வை!

பரந்த பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நேட்டோவைக் கலைத்து அதன் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போராட்டத்தின் பாகமாக, அணுஆயுத போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தும் ஏகாதிபத்திய நேட்டோ கூட்டணியிலிருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டுமென தொழிலாளர்கள் கோர வேண்டும். “அதிக தீவிரம் கொண்ட போருக்கு”, அதாவது நூறாயிரக் கணக்கான உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களின் உயிர்களைப் பலிகொண்டுவரும் ஒரு பாரிய படுகொலைக்கு, தயாரிப்பு செய்வதற்காக இராணுவ செலவினங்களை அதிகரிப்பதுக்கு ஒரு பைசா கூட செலவிடப்படக் கூடாது.

காஸா இனப்படுகொலையை நிறுத்து! இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை துன்புறுத்தக் கூடாது!

காஸா இனப்படுகொலைக்காக இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதையும் வினியோகிப்பதையும் பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் தடுக்க வேண்டும். காஸா இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது போலியான பயங்கரவாத-எதிர்ப்பு அல்லது யூத-விரோத குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்கு தொடுப்பது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இனப்படுகொலைக்குப் பொறுப்பான இஸ்ரேலிய அதிகாரிகள், அதேபோல் அதற்கு ஆயுதம் கொடுக்க உதவும் அல்லது அதற்கு உடந்தையாக இருக்கும் பிரெஞ்சு, நேட்டோ அதிகாரிகள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்ரோனை வீழ்த்தி, ஐந்தாவது குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழி!

பொலிஸ் ஒடுக்குமுறை மூலமாகவும், வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் போராட்டக்காரர்களை பாரிய அளவில் கைது செய்வதன் மூலமாகவும் மக்ரோன் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார். அவர் தொழிலாள வர்க்கத்தால் அகற்றப்பட வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறொரு முதலாளித்துவ அரசியல்வாதி பதவிக்கு வருவதால், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட போவதில்லை. பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டங்களின் நரம்பு மையமாக விளங்கும் பிரான்சின் 1958 அரசியலமைப்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரைத் துன்புறுத்துவதை நிறுத்து!

சோசலிசப் புரட்சிக்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். புலம்பெயர்ந்தவர்களைத் துன்புறுத்துவதையும், அகதிகளுக்காக பாரிய தடுப்புக்காவல் முகாம்கள் அமைப்பதையும், பிரெஞ்சு பள்ளிகளில் முஸ்லீம் மக்களின் உடைகளைத் தடை செய்வது போன்ற அவமானகரமான சட்டங்களையும் தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களை தேசிய அளவில் பிளவுபடுத்தி, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஐரோப்பிய போராட்டத்தைத் தடுக்கும் முயற்சிகளை முறியடிக்க இது அவசியமாகும்.

பொதுப் பிணையெடுப்பு நிதிகளைப் பறிமுதல் செய், முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்!

சமூக திட்டங்கள் மற்றும் வேலைகளுக்கு பணம் இல்லை என்ற பொய்யை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் தன்னலக்குழுக்களால் ஏகபோகமாக்கப்பட்ட ட்ரில்லியன் கணக்கான யூரோ பொது நிதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, வேலைகள் மற்றும் சமூக திட்டங்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும். தன்னலக்குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, ஐரோப்பாவின் முக்கிய நிறுவனங்களை மக்களின் நலன்களுக்கு சேவை செய்யும் பொது பயன்பாடுகளின் வலைப்பின்னலாக மாற்றுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் இதற்கு அவசியமாகும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

போர், பாசிசம், இனப்படுகொலை மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் மில்லியன் கணக்கான ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர்களிடையே பிரான்சில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் சக்திவாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளனர். அதிகாரத்துவவாதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை எதிர்ப்பார்கள். முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தை, ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கொண்டு பிரதியீடு செய்து, பிரான்சிலும், ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு, தொழிலாளர்கள் தங்களின் சொந்த சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளையும், ஒரு அரசியல் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.

Loading