முன்னோக்கு

காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வடக்கு காஸா பகுதியிலிருந்து தப்பி இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் உடமைகளுடன் காஸா நகரில் உள்ள கடற்கரை சாலையில் நகர்கின்றனர், திங்கள், செப்டம்பர் 1, 2025 [AP Photo/Jehad Alshrafi]

இஸ்ரேலிய டாங்கிகள் காஸா நகரத்திற்குள் உருண்டு வருகின்றன. காஸாவில் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த கடைசிப் பகுதியின் கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வெடிக்கச் செய்யப்படுகின்றன. துப்பாக்கி முனையில் பட்டினியால் வாடும் மக்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

காஸா நகரத்தில் உள்ள கட்டிடங்களுக்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறிச் சென்றபோது, 80க்கும் மேற்பட்ட வெடிக்கும் ரோபோக்களை பயன்படுத்தி அங்கிருந்த கட்டிடங்கள் வெடிக்கச் செய்யப்பட்டதாக காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை “பூமியை எரிக்கும் கொள்கை” என்று அது விவரித்தது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பட்டினி போட்டு சாகடித்துள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் மத்தியில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

காஸா நகரத்தைக் கைப்பற்றி, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்து, நெதன்யாகு காஸாவில் “இறுதி நகர்வுகள்” என்று எதை அழைத்தாரோ அதற்கான நிலைமைகள் உருவாக்கப்படுகின்றன: அதாவது, பாலஸ்தீனியர்களை கெட்டோ சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்து, பரம்பரையாக அவர்கள் வாழ்ந்த தாயகத்தில் இருந்து அவர்களை வெளியேற்றுவதாகும்.

பாலஸ்தீனியர்களை “மற்ற நாடுகளுக்கு” வெளியேற்றி, அமெரிக்கா காஸாவை “எடுத்துக் கொள்ளும்” மற்றும் அதனை “சொந்தமாக்கி கொள்ளும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த பெப்ரவரியில் அறிவித்தார். அப்போது, அவரது அறிக்கைகள் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் “நம்பத்தகாதவை”, “செயல்படுத்தப்பட முடியாதவை” மற்றும் “யதார்த்தமற்றவை” என்று அவர்களால் நிராகரிக்கப்பட்டன.

ஏழு மாதங்களுக்குப் பின்னர், ட்ரம்பின் திட்டம் மரணகதியிலான தீவிரமானது மட்டுமல்ல, காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலையை வழிநடத்தும் உறுதியான மூலோபாயம் என்பதும் தெளிவாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை, வாஷிங்டன் போஸ்ட் பத்தரிகையானது, ஒரு மூலோபாய ஆவணத்தை வெளியிட்டது. இந்த ஆவணம், வெள்ளை மாளிகையில் செயலூக்கமான விவாதத்தின் கீழ் இருந்ததுடன், இதர ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவின் காஸா திட்டங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது

இந்த ஆவணம், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் நெதன்யாகு அரசாங்கத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “காஸா மனிதாபிமான அறக்கட்டளை” என்றழைக்கப்படுவதன் முன்னணி பிரமுகர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை, உதவி தேடுபவர்களை வேண்டுமென்றே படுகொலை செய்வதற்கான ஒரு வழிமுறையாக, பாலஸ்தீன மக்களுக்கு பட்டினி உணவு விநியோகத்தை பாவித்துள்ளது. மேலும், இஸ்ரேலிய துருப்புக்கள் நிராயுதபாணியான கூட்டத்தின் மீது சுடுவதற்கு வெளிப்படையான அறிவுறுத்தல்களையும் இது வழங்கியுள்ளது. டோனி பிளேயரின் அறக்கட்டளையின் ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நிறுவன ஆலோசனை மற்றும் சிந்தனைக் குழுவான பொஸ்டன் ஆலோசனைக் குழுமத்தின் ஊழியர்களுடன் கலந்தாலோசித்தே இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி, இந்தத் திட்டம், “காஸாவின் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அனைவரையும் குறைந்தபட்சம் தற்காலிகமாக வேறொரு நாட்டிற்கு ‘தானாக முன்வந்து’ வெளியேறுவதன் மூலமாகவோ அல்லது மறுசீரமைப்பின் போது அப்பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்ட, பாதுகாப்பு மண்டலங்களுக்குள் மாற்றுவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளது.”

38 பக்கங்கள் கொண்ட இந்த விளக்கக்காட்சி ஆவணம், பாசிச புராணங்களின் மொழியில் இருந்து வலுக்கட்டாய இனச் சுத்திகரிப்பு பற்றிய கருத்துக்களை பெருநிறுவன வாரிய அறையின் சொற்களில் மொழிபெயர்க்கிறது. இது “ROI” (முதலீட்டின் மீதான வருவாய்), “PPP” (பொது-தனியார் கூட்டாண்மை), “CAPEX” (மூலதனச் செலவு) மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு) போன்ற சொற்களால் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பிற்குள், இத்திட்டம் தனிநபர் மற்றும் கூட்டு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு பாலஸ்தீனியரின் இருப்பும் பாலஸ்தீனத்தின் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அவர்களின் பில்லியனர் முதலீட்டாளர் கூட்டாளிகளுக்கும் எதிர்மறையாகக் கருதப்படுகிறது. காஸாவை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படும் ஒவ்வொரு பாலஸ்தீனியரும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 23,000ம் டாலர்களை மிச்சப்படுத்துகிறார்கள்.

இந்த திட்டத்தின்படி, காஸாவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு 5,000 டாலர் ரொக்கமும், இரண்டு வருட வாடகைக்கு சமமான தொகையும் வழங்கப்படும். ஆனால், இந்தக் கொடுப்பனவுகளைப் பெறாமல் ஒரு பாலஸ்தீனியர் காஸாவில் இருந்து மறைந்துவிட்டால், பாலஸ்தீன ஆக்கிரமிப்பாளர்களுக்கு கிடைக்கும் பொருளாதார நன்மை, காஸாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு பாலஸ்தீனியருக்கும் “சேமிக்கப்பட்ட” 23,000 டாலரை விட அதிகமாக இருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அறிக்கையின் ஆசிரியர்களின் உலகக் கண்ணோட்டத்தின்படி, இறந்த பாலஸ்தீனியர் உயிருள்ள ஒருவரை விட மிகவும் மதிப்புமிக்கவர் ஆவர்.

இந்தத் திட்டம் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சர்வதேச இனப்படுகொலை அறிஞர்கள் சங்கத்தால் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் “இஸ்ரேலிய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான முறையான மற்றும் பரவலான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது” என்று அறிவித்தது.

இந்த இனச்சுத்திகரிப்பு திட்டம் வெறுமனே இன சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் கொண்ட ஒரு பாரிய-இலாபகரமான ஊக முயற்சியாக மட்டும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்காவின் உந்துதலின் ஒரு முக்கிய கூறுபாடாகவும் முன்வைக்கப்படுகிறது.

இந்த ஆவணத்தின்படி, காஸா மீதான இனச் சுத்திகரிப்பால் அமெரிக்காவுக்கு கிடைக்கும் முதல் ஆதாயங்கள், 1) “பாரிய டாலர் ஆதாயங்கள்” மற்றும் 2) இது “இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) துரிதப்படுத்தும்... கிழக்கு மத்தியதரைக் கடலில் பிடியை வலுப்படுத்தும், மேலும் வளைகுடாவிலிருந்து 1.3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அரிய-பூமி கனிமங்களை அமெரிக்க தொழில்துறை அணுகுவதைப் பாதுகாக்கும்.”

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பதன் சுருக்கமான “IMEC”, நேரடி ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய முயற்சியை வழிநடத்தும் மூலோபாய கட்டமைப்பாகும்.

செப்டம்பர் 9, 2023 அன்று, பைடெனின் வெள்ளை மாளிகை “இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்” நிறுவப்படுவதை அறிவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டது. இது சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சிக்கு எதிராக செயல்படும்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய நாடுகள் சபையில் வழங்கிய ஓர் உரையில், “அரேபிய தீபகற்பம் மற்றும் இஸ்ரேல் எங்கிலும் நீண்டு செல்லும் தொலைநோக்கு பாதை” என்று இதைக் குறிப்பிட்டார். அதன்பின் நெதன்யாகு, காஸா பகுதி மற்றும் மேற்குக் கரை இரண்டையும் உள்ளடக்கிய மத்தியதரைக் கடலில் இருந்து ஜோர்டான் ஆறு வரையில் இஸ்ரேல் அரசு நீண்டிருப்பதைக் காட்டும் ஒரு வரைபடத்தை உயர்த்திப் பிடித்தார்.

நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையில் “புதிய மத்திய கிழக்கு” குறித்த அவரது வரைபடத்தை உயர்த்திப் பிடித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், இஸ்ரேல் அக்டோபர் 7 நிகழ்வுகளை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, காஸா மீதான இனப்படுகொலையைத் தொடங்கியது.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட 38 பக்க ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்த திட்டம், இந்த “வழித்தடத்தை” ஒரு கட்டமைப்பாக பயன்படுத்தி, இனச் சுத்திகரிப்பு மற்றும் காஸா பகுதியை இணைத்துக் கொள்வதை “பரந்த IMEC முன்முயற்சி” கட்டமைப்பிற்குள் வைக்கிறது. “காஸா ஒரு ஈரானிய புறக்காவல் நிலையம்... அது IMEC / ஆபிரகாமிய கட்டிடக்கலையை அச்சுறுத்தும்” என்று அறிவிக்கிறது.

இதனை வேறுவிதமாகக் கூறினால், காஸாவை இன ரீதியாக அழிப்பது என்பது மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது. இது ஈரானை மட்டுமல்ல, இறுதியில் ரஷ்யா மற்றும் சீனாவையும் குறிவைக்கும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஒரு மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

ரஷ்ய மார்க்சிசவாதியான விளாடிமீர் லெனின், ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்ற அவரது 1917 ஆம் ஆண்டு வெளிவந்த படைப்பில், “நிதி மூலதனம் சுதந்திரத்திற்காக அல்ல, மேலாதிக்கத்திற்காக பாடுபடுகிறது” என்று எழுதினார். இது “காலனித்துவ ஒடுக்குமுறை மற்றும் உலகின் பெரும்பான்மையான மக்களின் கழுத்தை நெரிக்கும் ஒரு உலக நிதிய அமைப்பு” என்று லெனின் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் நிர்வாகத்தால் இப்போது விவாதிக்கப்பட்டு வருகின்ற இந்த ஆவணத்தில், முதலாளித்துவத்தின் உண்மையான, ஆழமான வெளிப்பாட்டை அதன் ஏகாதிபத்திய வடிவத்தில் நாம் காண்கிறோம். ஷேக்ஸ்பியர், தனது டிமோன் கதாபாத்திரத்தின் வார்த்தைகளில், “தங்கம் தீமையை நீதியானதாகவும், தீமையானதாகவும், தீயதாகவும், உன்னதமானதாகவும் மாற்றும்” என்று கூறினார். முதலாளித்துவம், உலக ஏகாதிபத்தியத்தின் வடிவத்தில், தங்கள் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அல்லது லெவண்டைன் கடற்கரையில் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் மீதும் டாலரின் அடையாளங்களை வைக்கிறது.

காஸாவில் அமெரிக்க மற்றும் சர்வதேச ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்டு வருகின்ற பரந்த குற்றங்கள், முதலாளித்துவம் சேமித்து வைத்திருக்கும் கொடூரங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனான அதன் போர்த் திட்டங்களின் ஆரம்ப மோதலில் மில்லியன் கணக்கானவர்களை நிர்மூலமாக்க தயாராக இருந்தால், முழு அளவிலான போர் சம்பவத்தில் எத்தனை பில்லியன் கணக்கானவர்களை கொல்ல அது தயாராக இருக்கும்? உலகத் தொழிலாளர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியாது.

காஸாவில் கட்டவிழ்ந்து வரும் மிகப்பெரிய குற்றம், அனைத்து ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியின் அரசியல் பொறுப்பைக் காட்டுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக, அவர்கள் இந்த இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்கி, நிதியுதவி அளித்து நியாயப்படுத்தியுள்ளனர். நாட்டுக்கு வெளியே பாலஸ்தீனியர்களை நிர்மூலமாக்கி வரும் அதே முதலாளித்துவ ஆளும் வர்க்கம், உள்நாட்டில் சர்வாதிகாரத்தை கட்டமைத்து, சமூக வேலைத்திட்டங்களை அகற்றி, ஊதியங்கள் மற்றும் வேலைத்தளத்தின் பாதுகாப்புகளை வெட்டி வருவதுடன், எந்தவொரு எதிர்ப்பையும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை மூலமாக நசுக்குவதற்கு நகர்ந்து வருகிறது.

இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் என்பது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாது. ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்தும் அதேவேளையில், வேலைகள், ஊதியங்கள், சுகாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட பாரிய இயக்கத்தின் பாகமாக காஸா இனப்படுகொலையை நிறுத்த தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கையை எடுக்க வேண்டும். காஸாவில் இனச்சுத்திகரிப்பை நிறுத்துவதற்கான போராட்டம், நிதி மூலதனத்தின் உலகளாவிய சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading